துணைப்பயனியர் ஊழியம் செய்ய உங்களால் முடியுமா?
1 ஊழியத்தில் தங்களையே தாராளமாக அளிக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றினவர்களை உற்சாகப்படுத்தினார். இப்போக்கை பின்பற்றுவது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், அநேக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் கொண்டு வரும் என்று அவர் உறுதியளித்தார். (மத். 10:8பி; அப். 20:35) சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 877 நபர்கள் துணைப் பயனியர்களாக அதிகரிக்கப்பட்ட வேலையின் சந்தோஷத்தை நேரடியாக அனுபவித்தனர். இந்த வருடம் நீங்கள் ஒரு துணைப்பயனியராக ஏப்ரல் அல்லது மே மாதத்தின் போது அல்லது ஒருவேளை இரண்டு மாதங்களும் இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களில் பங்குகொள்ள முடியுமா?—சங். 34:8.
2 உங்களுடைய சூழ்நிலைமைகளை ஆராய்தல்: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அனுபவங்களை நீங்கள் சிந்திக்கையில், நீங்கள் உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இப்படிப்பட்ட உதாரணங்களில் ஏதாவது ஒன்றில் நான் என்னைக் காண்கிறேனா? துணைப்பயனியர் ஊழியம் செய்வதற்கு வழியை திறந்து வைப்பதற்கு தேவைப்படும் மாற்றங்களை நான் எவ்விதம் செய்யக்கூடும்?’
3 ஒரு சகோதரிக்கு ஐந்து பிள்ளைகளும், உலகப்பிரகாரமான வேலையும் இருந்தபோதிலும் அவர்களால் துணைப்பயனியர் ஊழியம் செய்ய முடிந்தது. அந்தச் சகோதரி எவ்வாறு பலனளிக்கப்பட்டார்? அவருடைய கணவரும் பிள்ளைகளும் அதிகமாக உதவி செய்தனர். அந்தச் சகோதரியின் நல்ல முன்மாதிரியின் காரணமாக, அதற்கு அடுத்த மாதம் அச்சகோதரியின் கணவர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆனார்.
4 ஒரு சபையில் எல்லா மூப்பர்களும் உதவி ஊழியர்களும் ஒரு மாதத்தின் போது துணைப்பயனியராக சேவித்தனர். அவர்களில் அநேகருக்கு உலகப்பிரகாரமான வேலைகள் இருந்தன, ஆனால் வார இறுதி நாட்களில் அவர்கள் ஆவிக்குரிய வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். பிரசங்கிப்பதிலும், வெளி ஊழியத்தை ஒழுங்கமைப்பதிலும் அவர்கள் சிறப்பாக முதன்மை தாங்கி நடத்தியது முழு சபைக்கும் பயனளித்தது. 77 பிரஸ்தாபிகளில், 73 பேர் அந்த மாதத்தின் போது ஏதாவது ஒரு வகையான பயனியர் சேவையில் பங்குகொண்டனர்.
5 ஒரு 15 வயது பள்ளி மாணவி துணைப்பயனியர் ஊழியத்தில் பங்குகொள்வதற்கு தனது இரண்டு-வார கோடை விடுமுறையை உபயோகித்தாள். அவள் இவ்வாறு சொல்கிறாள்: “நான் உண்மையிலேயே வித்தியாசத்தைக் காண முடிகிறது. விசேஷமாக சம்பாஷணை செய்வதில் ஒரு முன்னேற்றம் இருக்கிறது. வீடுகளில் ஜனங்களோடு இன்னும் கூடுதலான சம்பாஷணைகளை என்னால் கொண்டிருக்க முடிந்தது.”
6 உலகப்பிரகாரமான வேலையிலிருந்து ஓய்வுபெற்றிருப்பவர்கள் ராஜ்ய அக்கறைகளை தொடருவதற்கு மிகச் சிறந்த வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றனர். 84 வயதான சகோதரி தன் கணவன் மரித்த பிறகு இவ்வாறு எழுதினார்: “என்னுடைய பிள்ளைகள் எல்லாரும் பெரியவர்களாகி திருமணம் செய்துகொண்டு குடும்பங்களைக் கொண்டிருந்தனர். அவர்கள் என்னை புறக்கணிக்கவில்லை, ஆனால் அவருடைய வருகைகள் இழப்பையும் தனிமையாக இருக்கும் உணர்ச்சிகளையும் மேற்கொள்ளவில்லை. பிறகு, என்னுடைய சபையிலிருக்கும் மூப்பர்களில் ஒருவர் துணைப்பயனியர் ஊழியம் செய்து பார்க்கும்படி ஆலோசனை கொடுத்தார். நான் முதலில் தயங்கினேன். ஆனால் இறுதியில் முயற்சி செய்து பார்க்க தீர்மானித்தேன். எப்படிப்பட்ட மகிழ்ச்சி! நான் துணைப்பயனியர் ஊழியம் செய்வதற்காக இந்த வயது வரை நான் உயிரோடிருப்பதற்கு யெகோவா என்னை அனுமதித்திருக்கிறார் என்பதாக நான் உணர்ந்தேன். அது முதற்கொண்டு நான் ஒவ்வொரு மாதமும் துணைப்பயனியராக தொடர்ந்து சேவித்து வந்திருக்கிறேன்.”
7 வீடுகளையும் வீட்டு மனைகளையும் விற்பனை செய்யும் ஒரு சகோதரர் பயனியர் ஊழியம் செய்வதற்காக நேரத்தை ஒதுக்குவதற்கு, வீடுகளைக் காண்பிக்கும் தன் அட்டவணையை மாற்றிக்கொண்டார். இப்படிப்பட்ட அதிகரிக்கப்பட்ட வேலைக்காக நேரத்தை ஒதுக்குவதற்கு மற்றவர்கள் தங்கள் வேலைகளில் அதே போன்ற மாற்றத்தைச் செய்திருக்கின்றனர்.
8 இப்போதே திட்டமிடுங்கள்: ஏப்ரல், மே மாதங்களின் போது துணைப்பயனியர் ஊழியம் செய்வதற்கு உடன்பாடான திட்டங்களை இப்போதே ஏன் போடக்கூடாது? வெற்றிகரமாக இருப்பதற்கு, கவனமான திட்டமிடுதல் தேவைப்படுகிறது. குடும்ப உத்தரவாதங்கள், முழு-நேர உலகப்பிரகாரமான வேலைகள், மற்ற வேதப்பூர்வ கடமைகள் ஆகியவற்றை உடையவர்களாய் இருந்தபோதிலும் துணைப்பயனியர் ஊழியம் செய்ய முடிந்தவர்களின் அனுபவங்களிலிருந்து இது தெளிவாக இருக்கிறது. பயனியர் ஊழியம் வெற்றிகரமாக செய்தவர்களின் அனுபவத்திலிருந்து பயனடைவதற்கு அவர்களோடு பேசுங்கள். மேலும் யெகோவாவை ஜெபத்தில் அணுகுங்கள், அவருடைய உதவிக்காக கேளுங்கள்.—ஏசா. 40:29-31; யாக். 1:5.
9 துணைப்பயனியராக சேவிப்பதற்கு தங்கள் அலுவல்களை ஒழுங்கு செய்பவர்களுக்கு அதிக சந்தோஷம் கிடைக்கும் என்பதைக் குறித்ததில் எந்தக் கேள்வியும் இல்லை. நீங்கள் இப்போது முழு-நேர சேவையில் இல்லாவிட்டால், இந்தச் சிலாக்கியத்தை நீங்கள் அனுபவிக்க முடியுமா? மற்றவர்களோடு நற்செய்தியை பகிர்ந்துகொள்ளும் உங்களுடைய சிலாக்கியத்தை விரிவாக்க நீங்கள் முயற்சி செய்தால், நிச்சயமாகவே யெகோவா உங்கள் மீது செழுமையான ஆசீர்வாதத்தை பொழிந்தருளுவார்.—மல். 3:10.