‘நான் உங்களுக்குக் கட்டளையிட்ட காரியங்களை உபதேசம்பண்ணுங்கள்’
1 சீஷராக்குவது போதிப்பதை உட்படுத்துகிறது. ஒரு நபர் கிறிஸ்துவின் சீஷராக ஆவதற்கு முன்பு இயேசு கட்டளையிட்ட “யாவையும் . . . கைக்கொள்ள” அவருக்குக் கற்பிக்கவேண்டும். (மத். 28:19, 20) இதைச் செய்வதற்கு மிகச் சிறந்த வழி ஒரு வீட்டு பைபிள் படிப்பைக் கொண்டிருப்பதன் மூலமாகும்.
2 பைபிள் படிப்புகளைத் துவங்குவது எப்போதும் அவ்வளவு சுலபமல்ல. ஒரு பைபிள் படிப்பைக் கண்டடைய உங்களுக்குக் கடினமானதாயிருக்கிறதென்றால், மனம் தளர்ந்துவிடாதீர்கள். பைபிள் படிப்புகளைத் துவங்குவதில் வெற்றியடைவது, உறுதியாயிருப்பதையும் மற்றவர்களுக்குச் சத்தியத்தைப் பகர்ந்தளிப்பதில் உண்மையான விருப்பத்தைக் கொண்டிருப்பதையும் அவசியப்படுத்துகிறது.—கலாத். 6:9.
3 அக்கறையை வளர்ப்பது: உங்களுடைய முதல் சம்பாஷணை குறைந்தளவான அக்கறையையே உண்டுபண்ணும். சூழ்நிலைமைகளைப் பொருத்து, ஒரு துண்டுப்பிரதியையோ சிற்றேட்டையோ பத்திரிகைகளையோ வீட்டுக்காரரிடம் விட்டுவரலாம். இவற்றில் ஏதாவதொன்றை உபயோகித்து ஒரு வீட்டு பைபிள் படிப்பை நீங்கள் துவங்கக்கூடும். வீட்டுக்காரர் செய்தியினிடம் அதிகமான அக்கறையைக் காட்டுவாரேயானால், மற்றொரு சந்திப்பின்போது வேறொரு பொருத்தமான பிரசுரத்தை அவருக்கு அளிக்கலாம்.
4 தயாரிப்பு வெற்றிக்குத் திறவுகோலாயிருக்கிறது. அந்தத் துண்டுப்பிரதியிலோ சிற்றேட்டிலோ பத்திரிகையிலோ எடுத்துக் கூறப்பட்டுள்ள வேதவசனத்தை ஏன் முன்கூட்டியே தெரிந்தெடுத்து வைத்துக்கொள்ளக்கூடாது? இப்படியாக நீங்கள் உங்களுடைய சம்பாஷணையோடு அந்தப் பிரசுரத்திலுள்ள குறிப்புகளை இணைத்துப் பேசமுடியும். அந்தப் பிரசுரத்திலிருந்து நேரடியாக ஓரிரண்டு பத்திகளை நீங்கள் வாசித்துக் காட்டவுங்கூடும்.
5 நீங்கள் இதைச் சொல்லலாம்:
◼ “தற்போது நிறைவேற்றமடைந்து வரும் ஒரு குறிப்பிடத்தக்க தீர்க்கதரிசனத்தைப்பற்றிய தகவலை நாங்கள் பகர்ந்துவருகிறோம்.” மத்தேயு 24:3 வாசித்தப் பிறகு “நம்முடைய பிரச்னைகள்” சிற்றேட்டில், 13 முதல் 15 பக்கங்களிலுள்ள படங்களையும் குறிப்புகளையும் இணைத்துப் பேசுங்கள். சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியை அளிக்கையிலும் இதுபோன்ற ஓர் அணுகுமுறையை உபயோகிக்கலாம்.
6 உண்மையான அக்கறை காட்டப்படுகிறது என்பது கண்டறியப்பட்டவுடன், தவறாமல் மீண்டும் சென்று சந்திக்கவேண்டும். கடந்தமுறை சிந்தித்தது வீட்டுக்காரருடைய மனதில் மறக்காமல் இருக்குமாதலால், ஒரு வாரத்துக்குள் மறுபடியும் சென்று சந்திக்க முயலுங்கள். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும், நீங்கள் விட்டுவந்த பிரசுரத்திலிருந்து ஒருசில பத்திகளைச் சிந்தியுங்கள். பிறகு, பொருத்தமான சமயத்தில், அதே முறையைப் பின்பற்றி என்றும் வாழலாம் புத்தகத்தை நீங்கள் அறிமுகப்படுத்தலாம்.
7 இயேசு முன்னுரைத்த பெரிய அறுவடையில் இன்று இன்னும் அதிக வேலை செய்யவேண்டியதாயிருக்கிறது. (மத். 9:37, 38) நாம் விடாது உண்மைமனமுள்ள ஆட்களிடம் போதிக்கையில், ‘உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நம்மோடேகூட’ இயேசு இருக்கிறார் என்ற அவருடைய பலப்படுத்தும் உறுதிமொழி நமக்கு இருக்கிறது.