நம் பத்திரிகைகளை மிக நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்
1 நீங்கள் ஒரு செய்தி-ஸ்டேண்ட் பக்கத்தில் செல்லும்போது எதைப் பார்க்கிறீர்கள்? பத்திரிகைகள். தெருவோரக்கடையில் உங்கள் கண்ணைக் கவருவது எது? பத்திரிகைகள். தபால்காரருக்கு தன்னுடைய தபால் பையின் பாரத்தை தாங்க முடியாததாக்குவது எது? பத்திரிகைகள். ஆகவே, அநேகர் எதை வாசிக்கிறார்கள்? பத்திரிகைகள். 10 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 10 இளைஞர்களுக்கு 9 பேர், வயதுவந்த ஆட்களிலும் அதே சதவிகிதத்தினர், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஒரு பத்திரிகையாவது வாசிப்பதாக சுற்றாய்வுகள் காண்பித்திருக்கின்றன. இவ்வுலகம் பத்திரிகை அக்கறையுடையதாய் இருக்கிறது.
2 நேர்மை இருதயமுள்ள ஆட்களை காவற்கோபுரம், விழித்தெழு! அக்கறையுடையோராக்க முடியுமா? ஆம், காவற்கோபுரம், விழித்தெழு! அக்கறையுடையோராக நாம் இருந்தால், அவ்வாறு செய்ய முடியும். எது உதவிசெய்யக்கூடும்? பின்வரும் ஆலோசனைகளைச் சிந்தியுங்கள்:
◼ அந்தப் பத்திரிகைகளை வாசியுங்கள்: பிரயாணக் கண்காணி ஒருவர் அறிக்கை செய்கிறார், அவருடைய வட்டாரத்தில் சராசரியாக, 3 பிரஸ்தாபிகளில் ஒருவர் மட்டுமே காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகையின் ஒவ்வொரு வெளியீட்டையும் முதலிலிருந்து கடைசிவரையாக வாசிக்கிறார். நீங்கள் வாசிக்கிறீர்களா? நீங்கள் ஒவ்வொரு கட்டுரையையும் வாசிக்கையில், உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்தத் தகவலை யார் போற்றுவார்—ஒரு தாயாரா, அறியொணாமைக் கொள்கைக்காரரா, ஒரு வணிகரா, ஒரு இளைஞரா?’ உங்களுடைய தனிப்பட்ட பிரதியில், பத்திரிகைகளை அளிக்கையில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஓரிரண்டு குறிப்புகளை குறித்துக்கொள்ளுங்கள். பின்பு, அந்தப் பொருளின்பேரில் ஓரிரண்டு வாக்கியங்களில் நீங்கள் எவ்வாறு அக்கறையைத் தூண்டலாம் என்பதை யோசித்துப் பாருங்கள்.
◼ திட்டவட்டமான பத்திரிகை ஆர்டரை வைத்திருங்கள்: ஒவ்வொரு வெளியீட்டிலும் தேவைப்படும் திட்டவட்டமான பிரதிகளின் எண்ணிக்கைக்காக, பத்திரிகைகளைக் கையாளுகிற சகோதரரிடம் நடைமுறையான அளவில் ஆர்டர் செய்யுங்கள். இந்த முறையில், நீங்களும் உங்களுடைய குடும்பத்தினரும் பத்திரிகைகளை ஒழுங்கான ரீதியிலும் போதுமான அளவிலும் பெறுவீர்கள்.
◼ ஒழுங்கான பத்திரிகை நாளுக்காக அட்டவணையிடுங்கள்: அநேக சபைகள் பத்திரிகை ஊழியத்துக்கென்றே திட்டவட்டமான ஒரு நாளை ஒதுக்கிவைத்திருக்கின்றன. சபையினுடைய பத்திரிகை நாளை நீங்கள் ஆதரிக்க முடியுமா? இல்லையென்றால், வீடு வீடாகவும் பத்திரிகை மார்க்கமாகவும் ஒழுங்கான கால இடைவெளியில் பத்திரிகை தெரு ஊழியம் மற்றும் தனிப்பட்ட பத்திரிகைகள் விநியோகிப்பு செய்ய சிறிதளவு ஊழிய நேரத்தைப் பயன்படுத்த முயற்சிசெய்யுங்கள்.
◼ “காவற்கோபுரம்,” “விழித்தெழு!” அக்கறையுடையவராய் இருங்கள்: பிரயாணம் செய்யும்போதும் கடைக்கு செல்லும்போதும் பத்திரிகைகளை உங்களுடன் கொண்டு செல்லுங்கள். உடன் வேலை செய்வோர், அயலகத்தார், பள்ளித் தோழர்கள், அல்லது ஆசிரியர்களிடம் நீங்கள் பேசும்போது அவற்றை அளியுங்கள். அடிக்கடி பிரயாணம் செய்யும் ஒரு தம்பதியினர், தங்களுக்கு அடுத்தாற்போல் அமர்ந்திருக்கிற பிரயாணியிடம் ஒரு சம்பாஷணையை ஆரம்பிப்பதற்கு தற்போதைய பத்திரிகையில் உள்ள ஒரு குறிப்பைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அநேக உற்சாகமான அனுபவங்களை மகிழ்ந்தனுபவித்திருக்கிறார்கள். சில இளைஞர்கள் தங்களுடைய ஆசிரியர்கள் அல்லது உடன் படிக்கும் மாணாக்கருக்கு அக்கறையூட்டும் என்பதாக நினைக்கிற கட்டுரைகளை தவறாமல் பள்ளிக்கு எடுத்துச் செல்கிறார்கள். அருகாமையிலுள்ள கடைகளுக்குச் செல்கையிலும் பிரதிகளை உங்களுடன் கொண்டுசெல்லுங்கள், நீங்கள் பொருட்களை வாங்கிய பிறகு வியாபாரிகளிடம் அவற்றை அளியுங்கள். நம்மில் அநேகர் தவறாமல் பெட்ரோல் நிரப்புகிறோம்; பெட்ரோல் நிலையத்திலுள்ள வேலையாளிடம் பத்திரிகைகளை ஏன் அளிக்கக்கூடாது? உறவினர்கள் சந்திக்க வரும்போது, பொதுமக்களுக்கான போக்குவரத்தில் செல்லும்போது, அல்லது ஒருவரை சந்திப்பதற்காக காத்துக்கொண்டிருக்கும்போது அவற்றை நீங்கள் பயன்படுத்துவதற்கு சௌகரியமான இடத்தில் வைத்திருங்கள். பொருத்தமான மற்ற சந்தர்ப்பங்களை உங்களால் யோசித்துப் பார்க்க முடிகிறதா?
◼ சுருக்கமான பத்திரிகை பிரசங்கம் ஒன்றை தயார்செய்யுங்கள்: கொஞ்சமே பேசுவதற்கு திட்டமிடுங்கள், ஆனால் அதை நன்றாக சொல்லுங்கள். ஆர்வமுள்ளவராய் இருங்கள். இருதயத்தைக் கவர்ந்திழுங்கள். குறிப்பாக பேசுங்கள். ஒரு கட்டுரையிலிருந்து ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு, அதை ஒருசில வார்த்தைகளில் தெரிவியுங்கள், பின்பு அந்தப் பத்திரிகைகளை அளியுங்கள். அவற்றை அளிப்பதற்கான மிகச் சிறந்த வழி என்னவென்றால், அக்கறையூட்டும் ஒரு பொருளின்பேரில் கேள்வி ஒன்றை எழுப்பி, பின்பு அதற்கான வேதப்பூர்வமான பதிலை அளிக்கிற ஒரு கட்டுரையை சுட்டிக்காட்டுவதாகும். இதை எவ்வாறு செய்யலாம் என்பதற்கு ஒருசில உதாரணங்களை கவனியுங்கள்:
3 அதிகரித்துவரும் குற்றச்செயல் விகிதத்தின் பேரில் ஒரு கட்டுரையை சிறப்பித்துக் காண்பிப்பீர்களானால், நீங்கள் இவ்வாறு கேட்கலாம்:
◼ “குற்றச்செயல் பயமில்லாமல் நாம் இரவில் தூங்குவதை சாத்தியமாக்குவதற்கு என்ன தேவை?” காரியங்கள் சீராகிக்கொண்டு வருவதைக் குறித்து நம்பிக்கையற்ற மனநிலையை வீட்டுக்காரர் கொண்டிருக்கலாம். பெரும்பாலான மக்கள் அதேபோலவே உணருகிறார்கள் என்பதாக நீங்கள் பதிலளித்து, நீங்கள் நம்புகிற ஒரு தகவல் அவருக்கு அக்கறையூட்டுவதாக இருக்கும் என்பதையும் அதோடு சொல்லுங்கள். பின்பு அந்தக் கட்டுரையிலுள்ள பொருத்தமான ஒரு குறிப்பை எடுத்துக்காட்டுங்கள்.
4 குடும்ப வாழ்க்கையின் பேரிலுள்ள ஒரு கட்டுரையை அளிக்கும்போது, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼“வாழ்க்கைக்கு தேவையானவற்றை சம்பாதிப்பதும் இந்த நாட்களில் ஒரு குடும்பத்தை கட்டிக்காப்பதும் ஓர் உண்மையான சவாலாக இருப்பதை பெரும்பாலான மக்கள் காண்கிறார்கள். இந்தப் பொருளின்பேரில் எண்ணற்ற புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன, ஆனால் நம்முடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளின்பேரில் வல்லுநர்களும்கூட ஒத்துப்போவதில்லை. நம்பகரமான வழிநடத்துதலைப் பெறுவதற்கு நாம் போகக்கூடிய இடம் வேறெதாவது இருக்கிறதா?” பின்பு, பத்திரிகையில், திட்டவட்டமான குறிப்பை சுட்டிக்காட்டுங்கள்.
5 சமூகப் பிரச்சினையின் பேரிலுள்ள ஒரு கட்டுரையை சிறப்பித்துக் காண்பிக்கையில் நீங்கள் இந்த அணுகுமுறையை கையாளலாம்:
◼ “இன்று பெரும்பாலான மக்கள் அழுத்தத்தின்கீழ் இருக்கிறார்கள். நாம் இப்படி வாழும்படி கடவுள் ஒருபோதும் எண்ணவில்லை.” இப்பொழுது இருக்கிற வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சமாளிக்க, அந்தக் கட்டுரையிலுள்ள பொருள் எவ்வாறு உதவிசெய்யக்கூடும் என்பதைக் காண்பித்து, எதிர்காலத்தில் வரும் நிரந்தரமான ஒரு தீர்வுக்கான நம்பிக்கையை அளியுங்கள்.
6 தெரு ஊழியம் பலன்தருவதாய் இருக்கிறது: ஜனவரி 1940 இன்ஃபார்மண்ட் (நம் ராஜ்ய ஊழியம்) இதழில், பத்திரிகைகளைப் பயன்படுத்தி தெரு ஊழியம் செய்வதற்காக ஒவ்வொரு வாரமும் ஒரு விசேஷ நாளை அட்டவணையிடும்படி முதல்முறையாக பிரஸ்தாபிகள் உற்சாகப்படுத்தப்பட்டார்கள். அவ்வப்பொழுது நீங்கள் தெரு ஊழியத்தில் ஈடுபடுகிறீர்களா? ஈடுபடுகிறீர்கள் என்றால், நீங்கள் பயன்படுத்துகிற முறை உண்மையில் பலன்தருவதாய் இருக்கிறதா? பிரஸ்தாபிகளில் சிலர் சந்தடியான தெரு முனையில் நின்றுகொண்டு, அநேக மக்கள் கவனிக்கப்படாமல் கடந்து செல்கையில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருப்பது கவனிக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளைப் பிடித்துக்கொண்டு பக்கம் பக்கமாக நின்றுகொண்டிருப்பதற்குப் பதிலாக, தனியே பிரிந்து நின்றுகொண்டு மக்களை அணுகுவது அதிக பலன்தருவதாய் இருக்கிறது. அந்நியர்களை ஒரேவொரு நபர் அணுகினால், அவர்கள் ஒருவேளை நின்று சற்று செவிகொடுத்துக் கேட்கலாம், ஆனால் சம்பாஷணையில் மூழ்கியிருக்கும் ஒரு தொகுதியை வெகு சிலரே அணுக முதற்படியெடுப்பார்கள். தெருவில் உள்ளவர்கள்மீது நாம் அதிக கவனத்தை ஈர்ப்பதால், கடவுளுடைய ஊழியர்களுக்குப் பொருத்தமாக நன்கு சிகையலங்காரம் செய்தவர்களாகவும், அடக்கமான உடை உடுத்தியவர்களாகவும் இருப்பது விசேஷமான ஒன்றாகும்.—1 தீ. 2:9, 10.
7 பத்திரிகைகளை வீடுகளில் விநியோகிப்பது: தெரு ஊழியம் பத்திரிகைகளை அளிப்பதற்கான ஒரே வழி அல்ல. வீட்டுக்கு வீடு ஊழியத்திலும்கூட இவற்றை அளிக்கமுடியும் அளிக்கவும்வேண்டும். ஜனங்களை அவர்களுடைய வீட்டில் சந்திக்கும்போது மூன்றிலிருந்து எட்டு நிமிடங்கள் வரை பேசி, ஓரிரண்டு வசனங்களை பகிர்ந்துகொண்டு, அந்த மாதத்திற்கான குறிப்பிடப்பட்ட அளிப்பு ஒரு புத்தகமோ, ஒரு சிறுபுத்தகமோ, அல்லது சந்தாவோ எதுவாயிருந்தாலும் அதை அவர்களுக்கு அளிக்க பொதுவாக நாம் திட்டமிடுகிறோம். ஆனால் சபையானது பத்திரிகை ஊழியத்திற்கென்று ஒரு நாளை ஒதுக்கும்போது, (அநேக சபைகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவ்வாறு செய்கின்றன,) பிற்பகலில் தெரு ஊழியம் செய்து, ஆனால் காலையில் பத்திரிகைகளை மட்டும் அளித்து வீட்டுக்குவீடு ஊழியம் செய்வதை நீங்கள் ஒருவேளை தெரிவுசெய்யலாம். அப்படிப்பட்ட பத்திரிகை ஊழியத்தின்போது, வீடுகளில் நம்முடைய அளிப்பு சுருக்கமாயிருக்கும்—வெறுமனே 30-லிருந்து 60 நொடிகள் நீடித்ததாயிருக்கும்—ஒரு வசனம் காண்பிக்கப்படாமலேயே பத்திரிகைகள் பொதுவாக அளிக்கப்படும். காண்பிக்கப்பட்ட அக்கறை குறித்துவைக்கப்பட்டு, அக்கறை காண்பிக்கும் நபர்கள் மறுபடியும் சென்று சந்திக்கப்பட வேண்டும். அல்லது அதே பிராந்தியம் வேறொரு நாளில், மெதுவான வேகத்தில், விசேஷித்த பிரசுர அளிப்பைப் பயன்படுத்தி செய்து முடிக்கலாம். ஆனால் வேகமாக செய்யப்படும் வீட்டுக்குவீடு பத்திரிகை ஊழியத்தின் மதிப்பை எப்போதும் குறைவாக மதிப்பிடக்கூடாது. உண்மையில், தெரு ஊழியத்தோடு ஒப்பிடும்போது, வீடுகளில் பத்திரிகைகளை அளிப்பது சம்பாஷணையைத் துவங்குவதை அடிக்கடி வெகு சுலபமாக்குகிறது:
8 பத்திரிகை மார்க்கங்கள்: பிராந்தியங்கள் ஒழுங்கான விதத்தில் செய்துமுடிக்கப்பட்டாலும் பத்திரிகை மார்க்கத்தை உடையவர்கள் அநேக பத்திரிகைகளை அளிக்கின்றனர். சாத்தியமான வீட்டு பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு பத்திரிகை மார்க்கங்கள் மிகச் சிறந்த ஓர் ஊற்றுமூலமாக இருக்கின்றன.
9 பத்திரிகைகளைக் கொடுப்பதற்காக நீங்கள் தவறாமல் மறுசந்திப்புகள் செய்யும்போது, உங்களுக்கும் வீட்டுக்காரருக்கும் இடையே அனலான, சிநேகப்பான்மையான உறவு வளருவதைக் காண்பீர்கள். நீங்கள் எந்தளவுக்கு நன்றாக பழக்கப்பட்டவர்களாக ஆகிறீர்களோ, அந்தளவுக்கு வேதப்பூர்வமான பேச்சுப் பொருள்களைப் பற்றி கலந்துரையாடுவது மிக எளிதாக இருக்கும். பலன்தரும் வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை ஆரம்பிப்பதற்கு இது வழிநடத்தக்கூடும். பத்திரிகைகளுக்கான போற்றுதல் தெளிவாக காணப்படுகிற மறுசந்திப்புகளின்போது, சந்தாவை அளியுங்கள். மேலும், அந்த வீட்டுக்காரரை சந்திக்கிற ஒவ்வொரு முறையையும் ஒரு மறுசந்திப்பாக அறிக்கை செய்யலாம் என்பதை நினைவில் வையுங்கள்.
10 ஒரு சகோதரி தவறாமல் ஒரு பெண்மணிக்கு பத்திரிகைகளைக் கொண்டு சென்றார்; அவர் எப்பொழுதும் அதைப் பெற்றுக்கொண்டார், ஆனால் அந்தப் பெண்மணி சொன்னார்: “நீங்கள் சொல்வதை நான் நம்புவதில்லை.” பிற்பாடு சந்திக்கையில், வீட்டில் அவருடைய கணவர் இருப்பதை அந்தச் சகோதரி கண்டார். சிநேகப்பான்மையான பேச்சுக்குப் பின்பு, ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்தப் படிப்பில் கலந்துகொண்ட மகன்கள் மூவரையும் அந்தச் சகோதரி நண்பர்களாக்கிக்கொண்டார். முடிவில், அந்தத் தாயும் அவருடைய மகன்கள் மூவரும் தங்களுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றனர். இந்நாள் வரையாக, அந்தக் குடும்பத்திலுள்ள 35 அங்கத்தினர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவையனைத்திற்கும் காரணம் அந்தச் சகோதரி தன்னுடைய பத்திரிகை மார்க்கத்தை தொடர்ந்து செய்ததுதான்!
11 பத்திரிகை மார்க்கம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு அநேக வழிகள் உள்ளன. வெறுமனே உங்களுடைய அளிப்புகளை பதிவுசெய்து வைத்துக்கொண்டு இரண்டு வாரங்களுக்கு ஒவ்வொரு முறையும் புதிய வெளியீடுகளுடன் மீண்டும் செல்வதன் மூலம் நீங்கள் ஒரு மார்க்கத்தை ஆரம்பிக்க முடியும். ஒரு வழியானது, “எமது அடுத்த இதழில்” என்ற தலைப்பின்கீழுள்ள தகவலைப் பயன்படுத்துவதாகும். நீங்கள் திரும்பிச் செல்லும்போது, முன்பு குறிப்பிட்ட கட்டுரையை வைத்திருப்பதாக சொல்லுங்கள். அல்லது, மறுசந்திப்பு செய்யும்போது, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “நான் இந்தக் கட்டுரையை வாசித்தபோது, இது . . . உங்களுக்கு அதிக அக்கறையூட்டுவதாக இருக்கும் என்று நினைத்தேன்.” பின்பு, அந்தக் கட்டுரையின் பேரில் சுருக்கமான குறிப்புகள் ஒருசிலவற்றை சொல்லி அதை அளியுங்கள். நீங்கள் அந்தச் சந்திப்பை முடித்த பிறகு, உங்களுடைய வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டில் பின்வரும் ஐந்து எளிய குறிப்புகளைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்: (1) வீட்டுக்காரருடைய பெயர், (2) வீட்டுக்காரருடைய விலாசம், (3) சந்தித்த தேதி, (4) அளித்த வெளியீடுகள், (5) சிறப்பித்துக் காட்டிய கட்டுரை. பிரஸ்தாபிகள் சிலர் தங்களுடைய பட்டியலில் 40 அல்லது அதற்கும் மேலான சந்திப்புகள் வரையாக பெறுமளவுக்கு பத்திரிகை மார்க்கங்களை உருவாக்குவதில் அதிக வெற்றிபெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்!
12 வியாபார பிராந்தியம்: அநேக பத்திரிகைகள் வியாபார பிராந்தியத்தில் வேலைசெய்கிற பிரஸ்தாபிகளால் அளிக்கப்படுகின்றன. கடைக்குக் கடை ஊழியத்தை நீங்கள் முயற்சித்துப் பார்த்தீர்களா? சில சபைகளில், ஊழியத்தின் இந்த அம்சத்தில் பங்குகொள்வது அதிக மட்டாக இருக்கிறது. வணிகர்களை சந்திப்பதைப் பற்றி முதலில் சிலர் பயப்படுகிறவர்களாக இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதை ஒருசில தடவைகள் முயற்சிசெய்து பார்த்த பிறகு, அது ஆர்வமூட்டுவதாகவும் பலனளிப்பதாகவும் இருப்பதைக் காண்கிறார்கள். நீங்கள் ஆரம்பிப்பதற்கு வேண்டிய உதவிக்காக அனுபவம்வாய்ந்த பிரஸ்தாபி அல்லது பயனியர் ஒருவரை ஏன் கேட்டுப்பார்க்கக்கூடாது?
13 கடைக்குக் கடை ஊழியம் செய்வதில் அநேக நன்மைகள் இருக்கின்றன. தொழில் நேரங்களிலாவது பெரும்பான்மையர் வெளியில் செல்லாமல் அங்கேயே இருக்கின்றனர். வணிகர்களும் கடைக்காரர்களும் முக்கியமாக ஆர்வம்காட்டாதவர்களாக இருக்கிறபோதிலும்கூட பொதுவாக மரியாதை காண்பிப்பவர்களாக இருக்கிறார்கள். அந்த நாளில் சீக்கிரமாகவே ஆரம்பித்துவிடுங்கள்; நீங்கள் ஒருவேளை நன்றாக வரவேற்கப்படலாம். உங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பிறகு, வணிகர்களை வீட்டில் அபூர்வமாகவே காண்பதாக நீங்கள் சொல்லக்கூடும்; ஆகவே, காவற்கோபும், விழித்தெழு! பத்திரிகைகளின் சமீபத்திய வெளியீட்டை அளிப்பதற்கு, அவர்களுடைய வேலைசெய்யும் இடத்தில் நீங்கள் அவர்களை ஒருசில நிமிடங்களுக்கு சந்திக்கிறீர்கள். அநேக வணிகர்கள் நம்முடைய பத்திரிகைகளைப் போற்றுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுங்கள், ஏனெனில் உலக சம்பவங்களைப் பற்றிய தற்போதைய நடப்பு செய்திகளை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும், ஆனால் அவர்களுக்கு வாசிப்பதற்கு அதிக நேரமில்லை. இந்தப் பத்திரிகைகள் சிந்தனையைத் தூண்டும் தகவலை, மதம், அரசியல், அல்லது வியாபாரம் சம்பந்தமாக பேசாமல் புதுப்பொலிவான நோக்குநிலையில் அளிக்கின்றன. வியாபார பிராந்தியத்தில் காணப்படுகிற அக்கறைகாட்டும் ஆட்களுடன் பத்திரிகை மார்க்கத்தை முன்னேற்றுவிக்கலாம்.
14 குடும்பமாக தயார் செய்யுங்கள்: உங்களுடைய பிராந்தியத்தில் பயன்படுத்துவதற்குப் பொருத்தமாக இருக்கும் தற்போதைய பத்திரிகைகளில் உள்ள கட்டுரைகளை உங்கள் குடும்பப் படிப்பின்போது கலந்தாலோசிப்பதற்கு சிறிது நேரம் ஒதுக்கிவைக்கப்படலாம். குடும்ப அங்கத்தினர்கள்—பிள்ளைகள் உட்பட—தங்களுடைய பிரசங்கங்களை ஒருவர் மாற்றி ஒருவர் பழகிப்பார்த்துக்கொண்டு, “நான் அதிக வேலையாக இருக்கிறேன்,” “எங்களுக்கு எங்களுடைய சொந்த மதம் இருக்கிறது” அல்லது “எனக்கு விருப்பமில்லை” போன்ற பொதுவாக எழுப்பப்படுகிற ஆட்சேபணைகளை சமாளிக்கலாம். நல்ல ஒத்துழைப்பு, முழு குடும்பமும் பத்திரிகை விநியோகிப்பில் ஓர் ஒழுங்கான பங்கைக் கொண்டிருப்பதற்கு சாத்தியமாக்கக்கூடும்.
15 புத்தகப் படிப்பு நடத்துனர்கள் உதவலாம்: நடைமுறையாக இருக்கிற சமயங்களில், பத்திரிகை நாளில் வெளி ஊழியக் கூட்டங்களுக்காக முழு சபையினரும் ராஜ்ய மன்றத்தில் கூடுவதற்குப் பதிலாக, புத்தகப் படிப்பு மையங்களில் அல்லது பிராந்தியத்தின் அருகாமையிலுள்ள ஒரு பிரஸ்தாபியின் வீட்டில் கூடிவருவதற்காக திட்டமிடுங்கள். வெளி ஊழியத்திற்கான கூட்டங்களை நடத்துபவர்கள் அந்தத் தொகுதிக்காக திட்டவட்டமான குறிப்புகளுடன் நன்கு தயார்செய்தவர்களாக இருக்க வேண்டும். இது, மாதிரி பிரசங்கம் ஒன்றையும் உள்ளூர் பிராந்தியத்தில் அக்கறையைத் தூண்டுவதற்கு பயன்படுத்தக்கூடிய தற்போதைய வெளியீடுகளிலிருந்து எடுக்கப்பட்ட ஓரிரண்டு குறிப்புகளையும் உட்படுத்தலாம். வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்—தொகுதியை ஒழுங்கமைத்தல் உட்பட—சுருக்கமாக இருக்க வேண்டும், 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது. வெளி ஊழிய நேரம் முழுவதும் தொகுதி சுறுசுறுப்பாக இருப்பதற்காக, போதுமான பிராந்தியம் இருப்பதைக் குறித்து படிப்பு நடத்துனர்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
16 பத்திரிகைகளுக்கான போற்றுதலைக் காண்பியுங்கள்: ஜூலை 1993 நம் ராஜ்ய ஊழிய இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள “காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வை நன்றாய் பயன்படுத்துதல்” என்ற கட்டுரை இந்த முக்கியமான குறிப்பைக் கொடுத்தது: “காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு-வை அவற்றின் இதழ் தேதியின் ஓரிரண்டு மாதத்திற்குள் அவை அனைத்தும் அளிக்கப்படாவிட்டாலுங்கூட, அவற்றினுடைய மதிப்பை இழந்துவிடுவதில்லை என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அவற்றில் அடங்கியிருக்கிற தகவல் காலவோட்டத்தினால் குறைந்த முக்கியத்துவமுடையதாக ஆகிறதில்லை, . . . பழைய பத்திரிகைகளைக் குவித்துவைக்க அனுமதித்து அவற்றை ஒருபோதும் பயன்படுத்தாமல் இருப்பது, இந்த மதிப்புவாய்ந்த கருவிகளுக்கான போற்றுதல் குறைவுபடுவதைக் காட்டுகிறது. . . . பழைய இதழ்களை புறம்பாக ஒதுக்கி வைத்துவிட்டு அவற்றைக் குறித்து மறந்துவிடுவதற்குப் பதிலாக, அக்கறையுள்ள மக்களின் கைகளில் அவற்றைக் கொடுப்பதற்கு ஒரு விசேஷித்த முயற்சி செய்வது அல்லது குறைந்தபட்சம் மக்கள் வீட்டில் இல்லாதபோது ஓர் ஒதுக்கமான இடத்தில் விட்டுவருவது சிறந்ததாக இருக்குமல்லவா?”
17 சத்தியத்திற்காக தேடுகிற நேர்மை இருதயமுள்ள ஆட்கள் இன்றைக்கு அநேகர் இருக்கிறார்கள். ஒரு பத்திரிகையில் அடங்கியுள்ள தகவல், அவர்களை சத்தியத்திற்கு வழிநடத்த அவசியமானது எதுவோ சரியாக அதுவாகவே இருக்கக்கூடும்! அறிவிப்பதற்கு யெகோவா நமக்கு கிளர்ச்சியூட்டும் செய்தியைக் கொடுத்திருக்கிறார், மற்றவர்களுக்கு செய்தியைக் கொண்டுசெல்வதில் நம்முடைய பத்திரிகைகள் ஓர் இன்றியமையா பங்கை வகிக்கின்றன. எதிர்காலத்தில் பத்திரிகையை விநியோகிப்பதில் நீங்கள் அதிக அக்கறையுடையவராய் இருப்பீர்களா? இந்த வார இறுதியிலேயே இந்த ஆலோசனைகள் சிலவற்றை நீங்கள் பொருத்திப் பயன்படுத்துவீர்களா? நீங்கள் செய்வீர்களானால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
நடைமுறையான ஆலோசனைகள்:
◼ பத்திரிகைகளை முன்கூட்டியே வாசியுங்கள், கட்டுரைகளை நன்கு தெரிந்துவைத்திருங்கள்.
◼ உங்களுடைய சமுதாயத்திலுள்ளவர்களுக்கு பொதுவாக அக்கறையூட்டும் ஒன்றைக் கலந்தாராய்கிற கட்டுரையை தெரிந்தெடுங்கள்.
◼ ஆண்களாக இருந்தாலும்சரி, பெண்களாக இருந்தாலும்சரி, இளைஞர்களாக இருந்தாலும்சரி, பலதரப்பட்ட ஆட்களுக்கு பொருத்தமாயிருக்கும் பிரசங்கம் ஒன்றை தயார்செய்யுங்கள். பத்திரிகை வீட்டுக்காரருக்கு எவ்வாறு பொருந்துகிறது, அந்த முழுக் குடும்பமும் எவ்வாறு அதை அனுபவித்து மகிழும் என்பதை காண்பியுங்கள்.
◼ பெரும்பாலான மக்கள் வீட்டில் இருக்கிற சமயத்தில் உங்களுடைய வெளி ஊழிய நடவடிக்கையில் ஈடுபட திட்டமிடுங்கள். சில சபைகள் பத்திரிகைகளைக் கொண்டு மாலைநேர ஊழியம் செய்வதற்காக திட்டமிடுகின்றன.
◼ உங்களுடைய பிரசங்கத்தை சுருக்கமாகவும் குறிப்பாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
◼ அதிக வேகமாக பேசாதீர்கள். உங்களுக்கு செவிசாய்ப்பவருக்கு விருப்பம் இல்லையென்றால், வேகமாக பேசுவது உதவியளிக்காது. தளர்ந்த நிலையிலிருக்க முயலுங்கள், வீட்டுக்காரர் பேசுவதற்கு வாய்ப்பளியுங்கள்.
பத்திரிகைகளை வீட்டுக்கு வீடு அளித்தல்:
◼ சிநேகப்பான்மையான புன்முறுவலையும் அன்பான குரல் தொனியையும் கொண்டிருங்கள்.
◼ பத்திரிகைகளைக் குறித்து ஆர்வமுள்ளவராயிருங்கள்.
◼ மெதுவாகவும் தெளிவாகவும் பேசுங்கள்.
◼ ஒரேவொரு பொருளின்பேரில் பேசுங்கள்; வீட்டுக்காரருடைய அக்கறையைத் தூண்டி, அதன் மதிப்பை அவருக்கு சுருக்கமாக கூறுங்கள்.
◼ ஒரேவொரு கட்டுரையை மட்டும் சிறப்பித்துக் காட்டுங்கள்.
◼ ஒரேவொரு பத்திரிகையை மட்டும் முக்கியப்படுத்திக் காண்பித்து, மற்றதை துணைப்பிரதியாக அளியுங்கள்.
◼ பத்திரிகையை வீட்டுக்காரருடைய கையில் கொடுத்துவிடுங்கள்.
◼ நீங்கள் மறுபடியும் வருவதற்கு திட்டமிட்டிருக்கிறீர்கள் என்பதை வீட்டுக்காரருக்குத் தெரியப்படுத்துங்கள்.
◼ பத்திரிகைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், சிநேகப்பான்மையான, சாதகமான முடிவுரையைக் கொண்டிருங்கள்.
◼ அக்கறைகாட்டிய அனைவரையும் அளிப்புகள் அனைத்தையும் வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டில் குறித்துக்கொள்ளுங்கள்.
பத்திரிகைகளை அளிப்பதற்கு வாய்ப்புகள்:
◼ வீட்டுக்கு வீடு சாட்சிகொடுத்தல்
◼ தெரு ஊழியம்
◼ கடைக்குக் கடை ஊழியம்
◼ பத்திரிகை மார்க்கம்
◼ மாலைநேர சாட்சிகொடுத்தல்
◼ மறுசந்திப்புகள் செய்கையில்
◼ முன்னாள் பைபிள் மாணாக்கர்களை சந்தித்தல்
◼ பயணம் செய்யும்போது, கடையில் பொருட்களை வாங்கும்போது
◼ உறவினர், உடன் பணிபுரிவோர், அயலகத்தார், பள்ளித் தோழர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடத்தில் பேசும்போது
◼ பொது மக்கள் போக்குவரத்தில், ஓய்வறைகளில்