தைரியத்தை ஒன்றுதிரட்டி மறுசந்திப்புகள் செய்யுங்கள்
1 மறுசந்திப்புகள் செய்வது உங்களுக்கு சந்தோஷமளிக்கிறதா? அநேக பிரஸ்தாபிகளுக்கு அது சந்தோஷமளிக்கிறது. நீங்கள் முதலில் பயப்பட்டிருக்கலாம், அதுவும் முதல் சந்திப்பில் அதிக அக்கறை காட்டாத வீட்டுக்காரர்களை மறுபடியும் சந்திக்கையில் நீங்கள் பயந்திருக்கலாம். ஆனால் மறுசந்திப்புகள் செய்கையில் ‘நமது கடவுளின் உதவியால், நற்செய்தியைச் சொல்வதற்கு தைரியத்தை ஒன்றுதிரட்டும்போது,’ இந்த வேலை எவ்வளவு சுலபமானது என்பதையும் எவ்வளவு பலன்தரத்தக்கது என்பதையும் அறிந்து நீங்கள் ஒருவேளை ஆச்சரியப்படுவீர்கள். (1 தெ. 2:2, NW) எப்படி?
2 உண்மையில் மறுசந்திப்பிற்கும் முதல் சந்திப்பிற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. ஏற்கெனவே சந்தித்தவரைதான் மறுசந்திப்பு செய்கிறீர்கள், ஒரு அன்னியரை அல்ல; மேலும் ஒரு அன்னியரிடம் பேசுவதைக் காட்டிலும் ஏற்கெனவே அறிமுகமானவரிடம் பேசுவது பொதுவாக சுலபமானது. இந்த வேலையில் பங்குகொள்வதால் கிடைக்கும் திருப்திகரமான பலன்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால், மறுசந்திப்புகள் செய்வது பலன்தரும் வீட்டு பைபிள் படிப்புகளுக்கு வழிநடத்தலாம்.
3 வீட்டுக்குவீடு ஊழியம் செய்வது, முன்பு அக்கறை காட்டாத நபர்களை மீண்டும் சந்திப்பதையும் உட்படுத்துகிறது. அப்படியென்றால் நாம் ஏன் திரும்பத் திரும்ப அவர்களைச் சந்திக்கிறோம்? மக்களின் சூழ்நிலை மாறும் என்பதையும் முன்பு அக்கறை காண்பிக்காத அல்லது எதிர்ப்பு தெரிவித்த ஒரு நபரை மறுபடியும் சந்திக்கையில் அவர் ஒருவேளை அக்கறை காட்டலாம் என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். அதை மனதில்கொண்டவர்களாய், நாம் நன்கு தயாரித்து வீட்டுக்காரரை நல்ல விதத்தில் செயல்படத் தூண்டும் ஏதோவொன்றை இந்த முறை நாம் சொல்வதற்கு யெகோவாவின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்கிறோம்.
4 வீட்டுக்குவீடு ஊழியத்தில் முன்பு சிறிதும் அக்கறைகாட்டாத நபர்களிடமே மீண்டும் சென்று மனமுவந்து பிரசங்கிக்கும்போது, ராஜ்ய செய்தியில் சிறிது அக்கறை காட்டும் எவரையும் நாம் அதைக்காட்டிலும் அதிகமாய் மனமுவந்து மறுபடியும் சந்திக்க வேண்டுமல்லவா?—அப். 10:34, 35.
5 ஒரு பிரஸ்தாபி பொறுமையோடு நம்மை மீண்டும் மீண்டும் சந்தித்ததால்தான் நம்மில் அநேகர் இன்று சத்தியத்தில் இருக்கிறோம். நீங்கள் இப்படிப்பட்டவர்களில் ஒருவரானால், உங்களை நீங்களே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘அந்தப் பிரஸ்தாபிக்கு முதன்முதலில் என்னைப் பற்றி என்ன அபிப்பிராயம் ஏற்பட்டது? நான் ராஜ்ய செய்தியை முதன்முதலில் கேட்டபோது அதை உடனடியாக ஏற்றுக்கொண்டேனா? நான் ஒருவேளை அக்கறைகாட்டாதிருந்தேனா?’ நம்மை மறுபடியும் சந்தித்த அந்தப் பிரஸ்தாபி, நாம் மறுசந்திப்புக்கு தகுதியானவர்கள் என முடிவுசெய்து, ‘கடவுளின் உதவியால் தைரியத்தை ஒன்றுதிரட்டி,’ நம்மை சந்தித்து, நமக்கு சத்தியத்தைக் கற்பிக்க ஆரம்பித்ததற்கு நாம் சந்தோஷப்பட வேண்டும். முதலில் சிறிது அக்கறை காண்பித்து ஆனால் பிற்பாடு நம்மைத் தவிர்ப்பதாகத் தோன்றும் நபர்களைப் பற்றியதென்ன? பின்வரும் அனுபவம் காட்டும் விதமாக, ஒரு நம்பிக்கையான மனநிலை முக்கியமானது.
6 ஒருநாள் அதிகாலையில் தெரு ஊழியம் செய்துகொண்டிருக்கையில், தள்ளுவண்டியில் ஒரு குழந்தையை தள்ளிக்கொண்டு சென்ற இளவயது பெண் ஒருத்தியை இரண்டு பிரஸ்தாபிகள் சந்தித்தனர். அந்தப் பெண் ஒரு பத்திரிகையை ஏற்றுக்கொண்டு, அந்த வார ஞாயிற்றுக்கிழமையன்று வீட்டிற்கு வரும்படி அந்தச் சகோதரிகளை அழைத்தார்கள். சொன்ன நேரத்திற்கு சரியாக அவர்கள் சென்றனர், ஆனால் பேசுவதற்கு நேரமில்லை என்பதாக அந்தப் பெண் சொன்னார்கள். ஆனாலும், அதற்கடுத்த வாரம் வீட்டில் காத்திருப்பதாக அவர்கள் வாக்களித்தார்கள். சொன்னபடியே வீட்டில் இருப்பாரா என அந்தச் சகோதரிகள் சந்தேகித்தார்கள், ஆனால் அவர்கள் மீண்டும் சென்றபோது அந்தப் பெண் அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, அந்தப் பெண் காண்பித்த முன்னேற்றம் ஆச்சரியப்படத்தக்கதாய் இருந்தது. சிறிது காலத்திற்குள், அவர்கள் கூட்டங்களிலும் வெளி ஊழியத்திலும் தவறாமல் பங்குகொள்ள ஆரம்பித்தார்கள். இப்போது அவர்கள் முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள்.
7 முதல் சந்திப்பில் அடித்தளம் போடுங்கள்: பெரும்பாலும் முதல் சந்திப்பில் பலன்தரும் மறுசந்திப்பிற்கான அடித்தளம் போடப்படுகிறது. வீட்டுக்காரர் சொல்வதை கவனமாக செவிகொடுத்துக் கேளுங்கள். அவை உங்களுக்கு எதைத் தெரிவிக்கின்றன? அவர் மதப் பற்றுள்ளவரா? சமூக பிரச்சினைகளைக் குறித்து அவர் அக்கறையுள்ளவராய் இருக்கிறாரா? அவர் அறிவியலில் அல்லது சரித்திரத்தில் அல்லது சுற்றுச்சூழலில் அக்கறையுள்ளவரா? இறுதியில், நீங்கள் சிந்தனையைத் தூண்டும் ஒரு கேள்வியைக் கேட்டு, அதற்கு பைபிள் தரும் பதிலை அடுத்தமுறை கலந்தாலோசிப்பதாக வாக்களிக்கலாம்.
8 உதாரணத்திற்கு, பரதீஸ் பூமியைக் குறித்து பைபிள் தரும் வாக்குறுதியின்பேரில் வீட்டுக்காரர் அக்கறை காண்பித்தால் அதே பொருளின்பேரில் கூடுதலாக கலந்தாலோசிப்பது பொருத்தமானதாய் இருக்கும். அங்கிருந்து விடைபெறுவதற்கு முன்னர் நீங்கள் இவ்வாறு கேட்கலாம்: “இந்த வாக்குறுதியை கடவுள் நிறைவேற்றுவார் என்பதில் நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?” பின் இவ்வாறு சொல்லுங்கள்: “வேண்டுமானால் உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்கள் வீட்டில் இருக்கும்போது நான் மீண்டும் வருகிறேன், அப்போது இந்தக் கேள்விக்கு பைபிள் தரும் பதிலை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்.”
9 எந்த ஒரு குறிப்பிட்ட பொருளின்பேரிலும் வீட்டுக்காரர் அக்கறை காட்டவில்லையென்றால், நம் ராஜ்ய ஊழியத்தின் கடைசிபக்க அளிப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் ஏதாவதொரு கேள்வியைக் கேட்டு, அதை அடுத்த கலந்தாலோசிப்பிற்கு அடித்தளமாக பயன்படுத்தலாம்.
10 பிழையில்லாமல் திருத்தமாக எழுதி வையுங்கள்: உங்களது வீட்டுக்குவீடு பதிவுச்சீட்டு பிழையில்லாமலும் அனைத்து விவரங்கள் அடங்கியதுமாய் இருக்க வேண்டும். அங்கிருந்து விடைபெற்றவுடனேயே அந்த வீட்டுக்காரரின் பெயரையும் விலாசத்தையும் எழுதிவையுங்கள். வீட்டு நம்பரையோ தெருவின் பெயரையோ நீங்களே ஊகித்து எழுதாதீர்கள்—சரியாக இருக்கிறதாவென்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். அந்த நபரைப் பற்றிய குறிப்புகளை விவரமாக எழுதுங்கள். நீங்கள் கலந்து பேசிய தலைப்பையும், நீங்கள் வாசித்துக் காட்டிய வேதவசனங்களையும், விட்டுவந்த பிரசுரங்களையும், மறுசந்திப்பு செய்யும்போது நீங்கள் பதிலளிக்கப்போகும் கேள்வியையும் குறித்துவையுங்கள். முதன்முறை எந்தக் கிழமையில் எந்த நேரத்தில் அவரை சந்தித்தீர்கள் என்பதையும் எப்போது மீண்டும் வருவதாக சொன்னீர்கள் என்பதையும் எழுதிவையுங்கள். இப்போது உங்கள் பதிவு முழுமையாயிருக்கிறது, அதைத் துலைத்துவிடாதீர்கள்! நீங்கள் பிற்பாடு எடுத்துப் பார்ப்பதற்கு ஏற்ற பத்திரமான இடத்தில் வையுங்கள். அந்த நபரைப் பற்றியும் அடுத்த முறை எவ்வாறு மறுசந்திப்பைக் கையாளுவதென்பதைப் பற்றியும் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருங்கள்.
11 உங்களது குறிக்கோள்களை அறிந்துவைத்திருங்கள்: அன்பாகவும் சிநேகப்பான்மையாகவும் இருப்பதன் மூலம் வீட்டுக்காரரை அமைதியான மனநிலையில் இருக்க வையுங்கள். அவரோடு அளவுக்கதிகமாக உறவாடாமலேயே நீங்கள் அவரில் அக்கறைகொண்டிருக்கிறீர்கள் என்பதைக் காண்பியுங்கள். அடுத்ததாக, முந்திய சந்திப்பில் நீங்கள் எழுப்பிய கேள்வியைப் பற்றி அவருக்கு நினைப்பூட்டுங்கள். அவரது அபிப்பிராயத்தைக் கவனமாக கேளுங்கள், அவரது குறிப்புகளுக்காக மனமார போற்றுதல் தெரிவியுங்கள். அதன்பின், பைபிளின் கருத்து ஏன் நடைமுறையானது என்பதைக் காட்டுங்கள். முடிந்தால், நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் அறிவு என்ற புத்தகத்தில் அது சம்பந்தமாக கொடுக்கப்பட்டுள்ள பொருளைக் காண்பியுங்கள். நீங்கள் மறுசந்திப்புகள் செய்வதற்கான முக்கிய நோக்கம் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கே என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
12 பைபிள் படிப்பவர்களை கூட்டங்களுக்கு வருவதற்கும் யெகோவாவின் அமைப்போடு கூட்டுறவுகொள்வதற்கும் உற்சாகப்படுத்துவதற்கு ‘தைரியத்தை ஒன்றுதிரட்ட’ நம்மில் அநேகரை அறிவு புத்தகத்திலுள்ள ஒளிவுமறைவற்ற தன்மை தூண்டியிருக்கிறது. கடந்த காலத்தில், நம்மோடு சிறிது காலத்திற்கு பைபிளைப் படித்த பிறகுதான் நபர்களை நம்மோடு கூட்டுறவு கொள்ளும்படி அழைப்போம். இப்போது, அநேகர் பைபிளைப் படிக்க ஆரம்பித்தவுடனேயே கூட்டங்களுக்கு வர ஆரம்பித்திருக்கின்றனர், அதன் காரணமாக மிக வேகமாகவும் முன்னேறிவருகின்றனர்.
13 ஒரு திருமணத் தம்பதியினர் தங்களோடு வேலைபார்த்த ஒருவரிடம் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தனர். அவர் சத்தியத்தில் அக்கறை காண்பித்தபோது, அறிவு புத்தகத்தின் உதவியோடு பைபிளைப் படிக்க அவரை அழைத்தனர். அதேசமயத்தில், அவர் கூட்டங்களுக்கு வரவேண்டுமென்பதாகவும் அங்கு அவரது அநேக கேள்விகளுக்கு பதிலளிக்கப்படுமென்பதாகவும் அவரிடம் சொன்னார்கள். அந்த நபர் பைபிளைப் படிக்க ஒப்புக்கொண்டது மாத்திரமல்லாமல் வாரத்திற்கு இருமுறை படித்து, கூட்டங்களுக்காக ராஜ்ய மன்றத்திற்கு தவறாமல் செல்லவும் ஆரம்பித்தார்.
14 கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டைப் பயன்படுத்துங்கள்: “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாடுகளில் கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை நாம் பெற்றுக்கொண்டோம். எவ்வளவு படித்தவர்களாய் இருந்தாலும் தேவபயமுள்ள நபர்களோடு பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதற்கு இந்தச் சிற்றேடு உதவும். அது விரிவாக பைபிளைப் படிக்க உதவுகிறது, பைபிளின் அடிப்படை போதனைகளைக் கொண்டிருக்கிறது. தேவனுடைய அறிவைப் புகட்ட இந்தப் பிரசுரம் அதிக பலன்தரத்தக்க ஒரு கருவியாக இருக்கும். அது சத்தியத்தை அவ்வளவு தெளிவாகவும் எளிய விதத்திலும் விளக்குவதால் நாம் அனைவருமே கடவுள் தேவைப்படுத்தும் காரியங்களைக் குறித்து மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்கு அதைப் பயன்படுத்த முடியும். இந்தச் சிற்றேட்டிலிருந்து ஒரு பைபிள் படிப்பை நடத்தும் சிலாக்கியத்தை அநேக பிரஸ்தாபிகள் ஒருவேளை கொண்டிருப்பார்கள்.
15 அறிவு புத்தகத்தைப் படிக்க நேரமில்லையென நினைக்கும் சில நபர்கள் தேவைப்படுத்துகிறார் என்ற சிற்றேட்டிலிருந்து சுருக்கமான கலந்தாலோசிப்புகளைக் கொண்டிருக்க விரும்பலாம். அவர்கள் கற்றுக்கொள்ளும்போது புல்லரித்துப்போவார்கள்! வெறுமனே இரண்டு அல்லது மூன்று பக்கங்களில், பல நூற்றாண்டுகளாக மக்கள் சிந்தித்துவரும் கேள்விகளுக்கு பதில்களைத் தெரிந்துகொள்வார்கள்: கடவுள் யார்? பிசாசு யார்? பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன? கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? உண்மை மதத்தை நீங்கள் எப்படி கண்டறியலாம்? அந்தச் சிற்றேடு சத்தியத்தை எளிய நடையில் அளித்தாலும், அதன் செய்தி மிகவும் வல்லமைமிக்கது. முழுக்காட்டுதல் பெற விரும்புவோருடன் மூப்பர்கள் மறுபார்வை செய்யும் முக்கிய குறிப்புகள் இதில் அடங்கியிருக்கின்றன; அறிவு புத்தகத்தில் இன்னும் ஆழமாக பைபிளைப் படிக்க இது ஒரு மைல்கல்லாக இருக்கிறது.
16 மறுசந்திப்பின்போது பைபிள் படிப்பை அளிக்க நீங்கள் வெறுமனே இவ்வாறு சொல்லலாம்: “வெறுமனே ஒருசில நிமிடங்கள் மாத்திரமே செலவிட்டால் ஒரு முக்கிய கேள்விக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியுமென்பது உங்களுக்குத் தெரியுமா?” அதன்பின், அந்தச் சிற்றேட்டின் பாடங்கள் ஏதாவதொன்றின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கேள்வியைக் கேளுங்கள். உதாரணத்திற்கு, கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த ஒருவரை நீங்கள் மீண்டும் சந்திக்கையில் ஒருவேளை இவ்வாறு சொல்லலாம்: “கடந்த காலத்தில் இயேசு மக்களைக் குணப்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் எதிர்காலத்தில் இயேசு வியாதியஸ்தர்களுக்கு, வயதானவர்களுக்கு, இறந்தவர்களுக்கு என்ன செய்வார்?” 5-வது பாடத்தில் அதற்கான பதில்கள் காணப்படுகின்றன. எந்த மதப்பற்றுள்ள நபரும் இந்தக் கேள்வியால் ஆர்வம் தூண்டப்படலாம்: “கடவுள் எல்லா ஜெபங்களுக்கும் செவிகொடுக்கிறாரா?” அதற்கு 7-வது பாடத்தில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது. “பெற்றோரிடமிருந்தும் பிள்ளைகளிடமிருந்தும் கடவுள் எதைத் தேவைப்படுத்துகிறார்?” என்பதை குடும்ப அங்கத்தினர்கள் தெரிந்துகொள்ள விரும்புவர். 8-வது பாடத்தை அவர்கள் படிக்கையில் அதைத் தெரிந்துகொள்வார்கள். மற்ற கேள்விகள் பின்வருமாறு: “இறந்தவர்கள் உயிரோடிருப்பவர்களுக்குக் கேடு செய்ய முடியுமா?” 11-வது பாடத்தில் விளக்கப்பட்டிருக்கிறது; “கிறிஸ்தவமாக உரிமைபாராட்டக்கூடிய அத்தனை அநேக மதங்கள் ஏன் இருக்கின்றன?” 13-வது பாடத்தில் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கிறது; “கடவுளுடைய ஒரு நண்பராவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?” 16-வது பாடத்தில் கையாளப்பட்டிருக்கிறது.
17 வேறொரு மொழி பேசுவோருக்கு உதவுங்கள்: வேறொரு மொழி பேசும் வீட்டுக்காரர்களைக் குறித்து என்ன? முடிந்தால், அவர்களுக்கு நன்றாய் தெரிந்த மொழியில் கற்பிக்க வேண்டும். (1 கொ. 14:9) அந்த வீட்டுக்காரரது மொழியில் பேசும் பிரஸ்தாபிகள் உங்கள் சபையில் ஒருவரோ அதற்கு அதிகமானவரோ இருந்தால் அவர்களில் ஒருவரை அழைத்துச்சென்று அந்த வீட்டுக்காரரிடம் அறிமுகப்படுத்தி, பின் அந்தப் பைபிள் படிப்பை அவர்களிடமே ஒப்படைத்துவிடலாம். ஒருவேளை அந்த மொழியில் ஒரு சபையோ ஒரு புத்தகப் படிப்பு குழுவோகூட அருகாமையில் இருக்கலாம். பக்கத்தில் எந்தவிதமான சபையோ தொகுதியோ இல்லாவிட்டாலும், வீட்டுக்காரரது மொழி தெரிந்த பிரஸ்தாபிகள் உள்ளூரில் எவரும் இல்லாவிட்டாலும் அந்தப் பிரஸ்தாபி இருவரது மொழிகளிலுமுள்ள தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைப் பயன்படுத்தி அந்த வீட்டுக்காரரோடு படிக்க முயற்சிக்கலாம்.
18 ஆங்கிலம் பேசும் ஒரு பிரஸ்தாபி, வியட்நாமி பேசும் ஒரு ஆளோடும் தாய் என்ற மொழி பேசும் அவரது மனைவியோடும் பைபிள் படிப்பை ஆரம்பித்தார். ஆங்கிலம், வியட்நாம், தாய் ஆகிய மொழிகளிலுள்ள பிரசுரங்களும் பைபிள்களும் படிப்பின்போது பயன்படுத்தப்பட்டன. மொழி தெரியாதிருந்தது முதலில் ஒரு சவாலாக இருந்தபோதிலும், அந்தப் பிரஸ்தாபி இவ்வாறு எழுதுகிறார்: “அந்தத் தம்பதியினர் ஆவிக்குரிய விதத்தில் விரைவில் முன்னேற்றம் காண்பித்திருக்கின்றனர். அவர்களது இரு பிள்ளைகளோடும் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியத்தை அவர்கள் கண்டிருக்கின்றனர், மேலும் அவர்கள் பைபிளை குடும்பமாக ஒவ்வொரு இரவும் வாசிக்கின்றனர். அவர்களது ஆறுவயது மகள் சொந்தமாக ஒரு பைபிள் படிப்பு நடத்துகிறாள்.”
19 வேறொரு மொழி பேசும் நபர்களோடு பைபிளைப் படிக்கையில், மெதுவாக பேசுங்கள், தெள்ளத்தெளிவாக உச்சரியுங்கள், எளிய வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் பயன்படுத்துங்கள். ஆனாலும் வேறொரு மொழி பேசும் மக்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டுமென்பதை நினைவில் வையுங்கள். அவர்களை சிறுகுழந்தைகளைப்போல் நடத்தக்கூடாது.
20 தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலுள்ள அழகான படங்களை நன்கு பயன்படுத்துங்கள். “ஒரு படம் ஓராயிரம் வார்த்தைகள் பேசும்,” என்பது உண்மையானால் இந்தச் சிற்றேட்டிலுள்ள எண்ணற்ற படங்கள் வீட்டுக்காரரிடம் பேரளவில் பேசும். வீட்டுக்காரரை அவரது சொந்த பைபிளில் வேதவசனங்களை வாசிக்கச் சொல்லுங்கள். நீங்கள் பேசும் மொழியை மொழிபெயர்க்கத் தெரிந்த ஒரு குடும்ப அங்கத்தினர் வீட்டில் இருக்கும்போது படிப்பு நடத்துவது பலனளிப்பதாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.—ஆங்கில நம் ராஜ்ய ஊழியம், நவம்பர் 1990, பக்கங்கள் 3, 4; ஏப்ரல் 1984, பக்கம் 8 ஆகியவற்றைக் காண்க.
21 தாமதமில்லாமல் மறுசந்திப்புகள் செய்யுங்கள்: மறுசந்திப்பு செய்வதற்கு நீங்கள் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? சில பிரஸ்தாபிகள் முதல் சந்திப்பிற்குப்பின் ஓரிரு நாட்களிலேயே மறுசந்திப்பு செய்கின்றனர். மற்றவர்கள் அதே நாளில்தானே வேறொரு நேரத்தில் சந்திக்கச் செல்கின்றனர்! அது ரொம்ப சீக்கிரமா? பொதுவில், வீட்டுக்காரர்கள் ஆட்சேபிப்பது கிடையாது. சந்திக்கச்செல்லும் பிரஸ்தாபிதான் பெரும்பாலும் சிறிது தைரியத்தை ஒன்றுதிரட்டுவதோடு அதிக நம்பிக்கையான மனநிலையையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. பின்வரும் அனுபவங்களைக் கவனியுங்கள்.
22 13 வயது பிரஸ்தாபி ஒருவன் வீட்டுக்குவீடு ஊழியம் செய்கையில் இரு பெண்கள் நடந்துசெல்வதைக் கவனித்தான். ஜனங்களை எங்கு பார்த்தாலும் பிரசங்கிக்க வேண்டுமென உற்சாகப்படுத்தப்பட்டதை நினைவில் கொண்டவனாய், தெருவிலிருந்த அந்தப் பெண்களிடம் பேச அவன் சென்றான். அவர்கள் ராஜ்ய செய்தியில் அக்கறை காண்பித்து ஆளுக்கொரு அறிவு புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அந்த இளம் சகோதரன் அவர்களது விலாசங்களை பெற்றுக்கொண்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் சென்றான், அவர்கள் ஒவ்வொருவருடனும் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்தான்.
23 ஒரு சகோதரி ஒரு வாரம் கழித்து மறுசந்திப்புகள் செய்கிறார். ஆனால் முதல் சந்திப்பிற்கு ஓரிரு நாட்களுக்குப்பின் அவர் வீட்டுக்காரரைச் சந்தித்து அவர்கள் முந்தி கலந்தாலோசித்த பொருளின்பேரிலுள்ள ஒரு பத்திரிகையை அளிப்பார். அவர் வீட்டுக்காரரிடம் இவ்வாறு சொல்வார்: “நான் இந்தக் கட்டுரையைப் பார்த்தபோது நீங்கள் வாசிக்க விரும்புவீர்கள் என நினைத்தேன். இப்போது எனக்கு நேரமில்லை, ஆனால் நாம் ஏற்கெனவே திட்டமிட்டபடி புதன்கிழமை மத்தியானம் நான் மீண்டும் வருகிறேன். அந்த நேரத்தில் வருவது உங்களுக்கு சௌகரியம்தானே?”
24 ஒரு நபர் சத்தியத்தில் அக்கறை காண்பித்தால், ஒரு விதத்தில் இல்லையென்றாலும் இன்னொரு விதத்தில் அவர் எதிர்ப்பை எதிர்ப்படுவாரென்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம். முதல் சந்திப்பிற்குப் பிறகு ஒருசில நாட்களிலேயே மறுசந்திப்பு செய்வது, உறவினர்களிடமிருந்தும் நெருங்கிய நண்பர்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் அவர் எதிர்ப்படும் எந்த விதமான எதிர்ப்பையும் சமாளிக்க அவரைப் பலப்படுத்தும்.
25 பொதுவிடங்களில் காணப்படுவோரின் அக்கறையைத் தூண்டுங்கள்: தெருக்களில், வாகனங்கள் நிற்கும் இடங்களில், பயணம் செய்கையில், ஷாப்பிங் சென்ட்டர்களில், பூங்காக்களில், மேலும் இது போன்ற இடங்களில் பிரசங்கிப்பதை நம்மில் அநேகர் விரும்புகிறோம். பிரசுரங்களை அளிப்பதோடுகூட நாம் அவர்களது அக்கறையையும் தூண்ட வேண்டும். அந்தக் குறிக்கோளோடு, நாம் சந்திக்கும் அக்கறையுள்ள நபர் ஒவ்வொருவரது பெயரையும் விலாசத்தையும் முடிந்தால் தொலைபேசி எண்ணையும் பெற்றுக்கொள்ள எல்லா முயற்சியும் நாம் எடுக்க வேண்டும். இந்த விவரங்களைப் பெற்றுக்கொள்வது நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமானதல்ல. பேச்சை முடிக்கும் முன் உங்களது குறிப்புப் புத்தகத்தை வெளியே எடுத்து இவ்வாறு கேளுங்கள்: “திரும்பவும் நாம் இந்தப் பேச்சைத் தொடர்வதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா?” அல்லது இவ்வாறு சொல்லுங்கள்: “உங்களுக்கு நிச்சயமாகவே பிடிக்குமென நான் நினைக்கும் ஒரு கட்டுரையை நீங்கள் வாசிக்க வேண்டுமென விரும்புகிறேன். உங்களது வீட்டிற்கோ அலுவலகத்திற்கோ நான் அதைக் கொண்டுவந்து தரட்டுமா?” ஒரு சகோதரர் வெறுமனே இவ்வாறு கேட்கிறார்: “உங்களை எந்த டெலிஃபோன் நம்பரில் தொடர்புகொள்ளலாம்?” மூன்று மாதங்களில் மூன்று பேரைத் தவிர மற்ற அனைவரும் அவர்களது தொலைபேசி எண்ணை சந்தோஷமாக கொடுத்ததாக அவர் சொல்கிறார்.
26 அக்கறைகாட்டுவோரை கண்டுபிடிப்பதற்கும் அக்கறையைத் தூண்டுவதற்கும் தொலைபேசியைப் பயன்படுத்துங்கள்: பலத்த பாதுகாப்புவசதியுள்ள கட்டிடங்களில் வசிப்போருக்கு சாட்சிகொடுக்க ஒரு பயனியர் சகோதரி தொலைபேசியைப் பயன்படுத்துகிறார். அதே முறையில்தான் அவர் மறுசந்திப்புகளும் செய்கிறார். முதல் சந்திப்பில் அவர் இவ்வாறு சொல்கிறார்: “உங்களுக்கு என்னைத் தெரியாதுதான். பைபிளிலிருந்து ஒரு செய்தியை பகிர்ந்துகொள்வதற்காக உங்களது பிராந்தியத்திலுள்ள மக்களை தொடர்புகொள்ள நான் விசேஷ முயற்சி எடுக்கிறேன். உங்களால் ஒருசில நிமிடம் ஒதுக்க முடியுமானால், . . .-ல் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதியை உங்களுக்கு வாசித்துக் காண்பிக்க விரும்புகிறேன்.” வசனத்தை வாசித்தப் பிறகு அவர் இவ்வாறு சொல்கிறார்: “அப்படிப்பட்ட ஒரு காலம் வருவதைப் பார்ப்பது அருமையாக இருக்குமல்லவா? இதை உங்களுக்கு வாசித்துக் காட்டியதில் எனக்கு அதிக சந்தோஷம். உங்களுக்கும் விருப்பமென்றால், நான் மறுபடியும் உங்களுக்கு ஃபோன் செய்து வேறொரு வசனத்தைப் பற்றி கலந்துபேச விரும்புகிறேன்.”
27 மறுபடியும் ஃபோன் செய்யும்போது, முன்பு பேசியதை அவர் வீட்டுக்காரருக்கு நினைவுபடுத்துகிறார்; மேலும் துன்மார்க்கம் நீக்கப்படுகையில் நிலைமைகள் எவ்வாறிருக்குமென்பதை பைபிளிலிருந்து வாசித்துக் காட்ட விரும்புவதாக அவர் சொல்வார். பின் அந்த வீட்டுக்காரரோடு சுருக்கமாக பைபிளைக் கலந்தாலோசிப்பார். பலமுறை இவ்வாறு தொலைபேசியில் பேசியதால், 35 பேர் அவரை தங்களது வீட்டிற்கு அழைத்திருக்கிறார்கள், ஏழு வீட்டு பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன! சொதசொதவென இருக்கும் மழைக்காலங்களில் சேறு அல்லது சாக்கடைத் தண்ணீர் நிரம்பிய சாலைகளினாலோ வியாதியினாலோ அக்கறைகாட்டுவோரை மீண்டும் சந்திப்பதை நீங்கள் சிலசமயங்களில் கடினமாகக் காண்கிறீர்களா? அப்படியென்றால், அந்தச் சமயங்களில் நீங்கள் ஏன் ஃபோன் செய்து அவர்களிடம் பேசக்கூடாது?
28 வியாபார இடங்களில் அக்கறைகாட்டுவோரை மறுபடியும் சந்தியுங்கள்: கடைக்குக்கடை ஊழியம் செய்வதில் வெறுமனே பத்திரிகைகளை அளிப்பதைக் காட்டிலும் அதிகம் உட்பட்டிருக்கிறது. அநேக கடைக்காரர்களுக்கு சத்தியத்தில் உண்மையிலேயே ஆர்வம் இருக்கிறது, அந்த ஆர்வத்தை நாம்தானே தூண்ட வேண்டும். சில சமயங்களில் அந்த வியாபார இடத்திலேயே பைபிளைக் கலந்தாலோசிப்பதோ பைபிள் படிப்பு நடத்துவதோ சாத்தியமாயிருக்கலாம். மற்ற சமயங்களில், நீங்களும் அக்கறைகாட்டும் நபரும் மதிய இடைவேளையின்போதோ வேறொரு சௌகரியமான நேரத்திலோ ஒருவேளை சந்திக்கலாம்.
29 ஒரு பயணக் கண்காணி ஒரு சிறிய மளிகைக் கடைக்காரரை சந்தித்து பைபிள் படிப்பு எவ்வாறு நடத்தப்படுமென்பதை செய்துகாண்பிப்பதாகச் சொன்னார். எவ்வளவு நேரம் எடுக்குமென கேட்டபோது, வெறுமனே 15 நிமிடங்கள்தான் எடுக்குமென அந்தப் பயணக் கண்காணி சொன்னார். உடனே அந்தக் கடைக்காரர் “20 நிமிடங்களில் மீண்டும் செயல்படும்” என பலகையில் எழுதி கதவில் தொங்கவிட்டார், பின் நாற்காலிகளை இழுத்துப்போட்டு இருவரும் அறிவு புத்தகத்திலுள்ள முதல் ஐந்து பாராக்களை கலந்தாலோசித்தார்கள். இந்த உண்மையுள்ள ஆள் தான் கற்றுக்கொண்ட காரியங்களால் அந்தளவு கவரப்பட்டதால் பொதுப் பேச்சிற்கும் காவற்கோபுர படிப்பிற்கும் அந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்கு சென்றார், அதற்கடுத்த வாரமும் படிப்பைத் தொடர்ந்திட ஒப்புக்கொண்டார்.
30 வியாபார இடத்தில் பைபிள் படிப்பு நடத்த நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “நாங்கள் எவ்வாறு பைபிள் படிப்பை நடத்துகிறோமென்பதை செய்துகாண்பிக்க வெறுமனே 15 நிமிடங்கள்தான் எடுக்கும். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால், அதைச் செய்து காண்பிப்பதில் மகிழ்ச்சியடைவேன்.” அதன்பின், சொன்ன நேரத்தை சரியாக கடைப்பிடியுங்கள். வியாபார இடத்தில் வெகு நேரம் கலந்தாலோசிக்க முடியவில்லையென்றால், அந்தக் கடைக்காரரை அவரது வீட்டிற்குச் சென்று சந்திப்பது அதிக பொருத்தமானதாக இருக்கலாம்.
31 பிரசுரங்கள் அளிக்கப்படாவிட்டாலும் மறுபடியும் சந்தியுங்கள்: பிரசுரம் அளிக்கப்பட்டிருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி, அக்கறை இருப்பதுபோல் தோன்றினாலே மறுசந்திப்பு செய்ய வேண்டும். வீட்டுக்காரருக்கு உண்மையிலேயே ராஜ்ய செய்தியில் அக்கறையில்லை என்பது தெளிவாக தெரியவந்தால், உங்களது முயற்சிகளை வீணாக்காமல் மற்றவர்களுக்காக பயன்படுத்துவது சிறந்தது.
32 வீட்டுக்குவீடு ஊழியத்தில், மிகவும் சிநேகப்பான்மையாய் இருந்த ஆனால் பத்திரிகைகளை கண்டிப்புடன் மறுத்துவிட்ட ஒரு பெண்ணை ஒரு சகோதரி சந்தித்தார்கள். அந்தச் சகோதரி இவ்வாறு எழுதுகிறார்கள்: “பல நாட்களுக்கு எனக்கு அவர்கள் ஞாபகமாகவே இருந்தது, அவர்களிடம் மறுபடியும் பேச வேண்டுமென விரும்பினேன்.” கடைசியில், அந்தச் சகோதரி ஜெபம் செய்து, தைரியத்தை ஒன்றுதிரட்டி, அந்தப் பெண்ணின் கதவைத் தட்டினார்கள். சந்தோஷமளிக்கும் விதத்தில், அந்தப் பெண் அவரை உள்ளே அழைத்தார்கள். ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, அதற்கடுத்த நாள் மறுபடியும் நடத்தப்பட்டது. இறுதியில் அந்தப் பெண் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
33 அதிகத்தை நிறைவேற்ற முன்கூட்டியே திட்டமிடுங்கள்: மறுசந்திப்புகள் செய்வதற்கு ஒவ்வொரு வாரமும் சிறிது நேரம் செலவிட வேண்டுமென சிபாரிசு செய்யப்படுகிறது. நல்லவிதத்தில் திட்டமிடுவதன் மூலம் அதிகத்தை சாதிக்கலாம். வீட்டுக்குவீடு ஊழியம் செய்யும் அதே பகுதியில் மறுசந்திப்புகள் செய்ய ஏற்பாடு செய்யுங்கள். ஒவ்வொரு முறை வெளி ஊழியம் செய்யும்போதும் மறுசந்திப்புகள் செய்வதற்கு சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். மற்றவர்களோடு சேர்ந்து வெளி ஊழியம் செய்யும்போது அவர்களை மறுசந்திப்புகளுக்கு உங்களுடன் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள், அவர்களது மறுசந்திப்புகளுக்கும் நீங்கள் செல்லுங்கள். அப்போதுதான் ஒவ்வொருவரும் மற்றவரது திறமைகளிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் எதையாவது கற்றுக்கொள்ளலாம்.
34 மறுசந்திப்புகள் செய்வதிலும் வீட்டு பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதிலும் நன்கு திறமைபெற்றவர்கள், மக்களில் ஆழ்ந்த தனிப்பட்ட அக்கறை காண்பிப்பதும் சந்தித்த பிறகும் அவர்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதும் முக்கியமானதென்பதாக சொல்கின்றனர். பிடித்தமான பைபிள் பொருளில் கலந்தாலோசிப்பு செய்வதும் முதல் சந்திப்பில் மறுசந்திப்பிற்கான அடித்தளத்தை போடுவதும்கூட அவசியம். மேலும், அக்கறை காண்பித்தவர்களை காலதாமதமின்றி சென்று சந்திப்பதும் மிக முக்கியம். ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்.
35 மறுசந்திப்புகள் செய்வதில் வெற்றிபெற அவசியமான ஒரு முக்கிய குணம் தைரியமாகும். அதை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்? மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க ‘நமது கடவுளின் உதவியால் தைரியத்தை ஒன்றுதிரட்ட வேண்டும்’ என சொல்வதன் மூலம் அப்போஸ்தலனாகிய பவுல் அதற்கு பதிலளிக்கிறார். இந்த அம்சத்தில் நீங்கள் முன்னேறவேண்டியதாய் இருந்தால், யெகோவாவிடம் உதவிக்காக ஜெபியுங்கள். அதன்பின், உங்களது ஜெபங்களுக்கு இசைவாக அக்கறை காண்பித்த அனைவரையும் மீண்டும் சந்தியுங்கள். உங்களது முயற்சிகளை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார்!
[பக்கம் 3-ன் பெட்டி]
மறுசந்திப்புகளில் வெற்றி காண்பதற்கான இரகசியம்
■ ஆட்களிடம் தனிப்பட்ட உள்ளப்பூர்வமான அக்கறை காண்பியுங்கள்.
■ மனதைக் கவரும் ஒரு பைபிள் பொருளை கலந்தாலோசிப்பிற்காக தேர்ந்தெடுங்கள்.
■ ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் அடுத்த சந்திப்பிற்கு அடித்தளம் போடுங்கள்.
■ சந்திப்பிற்குப் பிறகு அந்த நபரைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருங்கள்.
■ அக்கறை காண்பித்தவர்களை ஓரிரு நாட்களுக்குள் மறுபடியும் சந்தியுங்கள்.
■ ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க வேண்டுமென்பதே உங்கள் குறிக்கோள் என்பதை மனதில் வையுங்கள்.
■ இந்த ஊழியத்துக்காக தைரியத்தை ஒன்றுதிரட்டுவதற்கு உதவியைக் கேட்டு ஜெபியுங்கள்.