நாம் வெறும் பிரசங்கிகளாய் இராமல், போதகர்களாய் இருக்க வேண்டும்
1 “யெகோவாவின் சாட்சிகள் சொல்லர்த்தமாகவே பூமி முழுவதையும் தங்கள் சாட்சிகொடுக்கும் வேலையால் நிரப்பிவிட்டார்கள்” என்று கவனிக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வாறு சாத்தியமாகியிருக்கிறது? மனித பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல; ஆனால், பிரசங்கிக்கும் மற்றும் போதிக்கும் வேலையை நிறைவேற்ற பல்வேறு ஏற்பாடுகளை கடவுளுடைய ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ளுகையில், அவர்கள்மீது கடவுளுடைய ஆவி கிரியை செய்வதன் மூலமாகவே சாத்தியமாகியிருக்கிறது.—சக. 4:6; அப். 1:8.
2 அச்சடிக்கப்பட்ட பிரசுரம், நம் பிரசங்க வேலையை நிறைவேற்ற ஒரு திறம்பட்ட கருவியாய் இருக்கிறது. ராஜ்ய நற்செய்தியை அறிவிப்பதில் உதவுவதற்கென்று புத்தகங்கள், சிறுபுத்தகங்கள், சிற்றேடுகள், பத்திரிகைகள், துண்டுப்பிரதிகள் ஆகியவற்றைக் கோடிக்கணக்கில் அச்சிட்டு கடந்த பல ஆண்டுகளாக யெகோவாவின் சாட்சிகள் விநியோகித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட புத்தகங்கள் என்றுமில்லாத அளவுக்கு தயாரிக்கப்பட்டுள்ளன என்பதாக 1997 வருடாந்தர புத்தக (ஆங்கிலம்) அறிக்கைகள் காட்டுகின்றன. இன்றுவரையில், புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) பைபிள் 9 கோடி பிரதிகளுக்கும் மேலாக அச்சிடப்பட்டுள்ளது. ஐக்கிய மாகாணங்களில் அச்சிடப்பட்ட காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் 7.1 சதவீதம் அதிகரித்தது. ஜெர்மனியில், பத்திரிகை அச்சடிப்பு 35 சதவீதம் அதிகரித்தது. அங்கு அச்சிடப்பட்ட பத்திரிகைகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலானவை ரஷ்ய மொழியில் இருந்தன. இந்தியாவில், 1997 ஊழிய ஆண்டில் புத்தக அளிப்புகள், 1995 ஊழிய ஆண்டைக் காட்டிலும் 120 சதவீதம் அதிகமாய் இருந்தன!
3 பிரசுரங்கள் இவ்வளவு அதிகமாய் தேவைப்படுவது ஏன்? ஜனங்கள் எங்கெல்லாம் காணப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சாட்சிகொடுக்கும்படி நமக்கு அளிக்கப்பட்ட உற்சாகத்திற்கு உலகெங்கும் பெருமளவில் பிரதிபலிப்பு இருந்திருக்கிறது. சாட்சிகொடுக்கும் வேலையை, நம்மில் அநேகர் பொதுவிடங்களிலும் தெருக்களிலும் வியாபார ஸ்தலங்களிலும் செய்வதன் மூலம் விஸ்தரித்திருப்பதால், ஓரளவு ஆர்வம் காட்டும் எவரிடமும் பிரசுரங்கள் பெருமளவில் அளிக்கப்படுகின்றன. இவர்களில் பலருக்கு, ராஜ்ய செய்தியை முன்பு கேட்கும் வாய்ப்பு அரிதாகவே கிடைத்திருக்கிறது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஊழியத்தின் எல்லா அம்சங்களிலும் பயன்படுத்தும் வகையில் பல்வேறு பிரசுரங்களை சபைகள் கையிருப்பில் வைத்திருக்கின்றன.
4 பிரசுர விநியோகிப்பில் நம் இலக்கு என்ன? நம் இலக்கு, வெறுமனே பிரசுரத்தை விநியோகிப்பது அல்ல. பிரசங்கிப்பது, போதிப்பது என்ற இரண்டு அம்சங்களும் சீஷராக்க வேண்டிய வேலையில் அடங்கியுள்ளன. முதலாவதாக, ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிக்கும் சிலாக்கியம் நமக்கு இருக்கிறது; அதாவது, இதுவே மனிதகுலத்துக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என ஜனங்கள் உணர்ந்துகொள்ளும்படி செய்வது. (மத். 10:7; 24:14) பைபிள் அடிப்படையிலான நம் பிரசுரம், பலனுள்ளதென வெகுகாலமாகவே நிரூபிக்கப்பட்டு, மற்றவர்களின் ஆர்வத்தைத் தூண்டி, ராஜ்யத்தைப் பற்றிய அறிவை அளிப்பதில் திறம்பட்ட கருவியாக இருக்கிறது.
5 இரண்டாவதாக, சீஷராக்க வேண்டுமென்றால், இயேசு கட்டளையிட்ட எல்லாவற்றையும் நாம் போதிக்க வேண்டும். (மத். 11:1; 28:19, 20) அதோடுகூட, சத்தியத்தை மாணாக்கரின் இதயத்தில் எட்டச் செய்து, அவர்கள் சீஷர்களாகும்படி உதவுவதற்கு பிரசுரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
6 புத்தகங்களை ஏற்றுக்கொள்பவர்கள் ‘சத்தியத்தைக் கேட்கிறவர்களாய்’ இருக்கலாம்; ஆனால், அவர்களுக்கு எவரும் உதவி செய்யாவிடில் அதன்படி செய்கிறவர்களாய் ஆவது சாத்தியமல்ல. (யாக். 1:22-25) யாருமே வழிகாட்டவில்லையென்றால் எவருமே சீஷர்கள் ஆகமுடியாது. (அப். 8:30, 31) பைபிளில் இருக்கும் சத்தியத்தை அவர்களாகவே நிரூபித்துக்கொள்ள உதவும் வகையில் அவர்களுக்கு ஓர் ஆசிரியர் தேவை. (அப். 17:2, 3) ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெறும் நிலை வரையாக அவர்கள் முன்னேற உதவுவதும், மற்றவர்களுக்குப் போதிக்கும் அளவுக்குப் போதுமான தகுதிபெற்றவர்களாய் ஆவதற்கு அவர்களைப் பயிற்றுவிப்பதுமே நம்முடைய இலக்கு.—2 தீ. 2:2.
7 கூடுதலான போதகர்களுக்கான மிகப் பெரிய தேவை: நாம் பிரசங்கிக்கையில், நற்செய்தியை வெளிப்படையாக அறிவிக்கிறோம். ஆனால் போதிப்பதானது, ஒருவருக்கு படிப்படியாக அறிவுறுத்துவதை உட்படுத்துகிறது. பிரசங்கிப்பது ராஜ்ய செய்தியை மற்றவர்கள் அறியும்படி செய்தாலும், போதிப்பது நற்செய்தியை ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்பட தனிநபர்களுக்கு உதவுகிறது. (லூக். 8:15) ஒரு போதகர் அறிவிப்பதைக் காட்டிலும் அதிகத்தை செய்கிறார்; அவர் விளக்கமளிக்கிறார், நல்ல விவாதக் குறிப்போடு நியாயங்காட்டிப் பேசுகிறார், நிரூபணம் காட்டுகிறார், தூண்டுதலும் அளிக்கிறார்.
8 நம்மில் எத்தனை பேருக்கு முடியுமோ, அத்தனை பேரும், வெறும் பிரசங்கிகளாய் இல்லாமல் போதகர்களாய் இருக்க வேண்டும். (எபி. 5:12அ) பிரசுரங்களை விநியோகிப்பது நம் வேலையின் மிக முக்கிய பாகமாய் இருக்கிறது; ஆனால், நம் இரண்டாவது குறிக்கோளை அடைவதோ, போதகர்களாக நாம் என்ன செய்கிறோமோ அதன்பேரில் முடிவாக சார்ந்திருக்கிறது. பிரசுரங்களை அளிக்கையில் நாம் மகிழ்ச்சியடைந்தாலும், நம் ஊழியத்தை முழுமையாய் நிறைவேற்ற, ஏதாவது ஒரு பிரசுரத்தை அளிப்பதுதானே நம் இலக்கு என்று நாம் நினைத்துவிடக்கூடாது. (2 தீ. 4:5) மற்றவர்களுக்கு சத்தியத்தைப் போதிக்க வாய்ப்பளிக்கும் திறம்பட்ட கருவிகளாய் பிரசுர அளிப்புகள் இருக்கின்றன.
9 வேதப்படிப்புகளை ஆரம்பிக்க மறுசந்திப்புகள் செய்யுங்கள்: நாம் அனைவருமே ஏராளமான புத்தகங்களையும் சிற்றேடுகளையும் பத்திரிகைகளையும் அளித்திருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை; அதனால் மறுசந்திப்புகளின் ஒரு பட்டியலும் கிடைத்திருக்கும். மறுபடியும் சென்று ஆர்வத்தைத் தூண்டுவதற்காக ஒழுங்காக நேரத்தை நாம் ஒதுக்க வேண்டும். திரும்பிச்செல்வதற்கான நம்முடைய முக்கிய நோக்கம், வெறுமனே கூடுதலான புத்தகத்தை அளிப்பதாக இல்லாமல் அவர்களிடம் ஏற்கெனவே இருக்கும் புத்தகத்தை வாசித்து பலனடைய அவர்களை உற்சாகப்படுத்துவதாக இருக்க வேண்டும். திருத்தமான அறிவை அடைய நமக்கு உதவுவதற்காக ஒருவர் திரும்பத்திரும்ப வராது இருந்திருந்தால் நாம்தாமே எந்தளவுக்கு முன்னேறியிருப்போம்?—யோவா. 17:3.
10 கொஞ்சநஞ்சம் ஆர்வம் காட்டியிருந்தாலும், கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? சிற்றேட்டில் அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் எண்ணத்துடன் மறுபடியும் செல்லுங்கள். இவ்விரண்டு பிரசுரங்களும் ராஜ்ய செய்தியை எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் அளிக்கின்றன. தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில், பைபிளின் அடிப்படை போதனைகளை உள்ளடக்கிய, நன்கு திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட படிப்பு முறை அடங்கியுள்ளது. அறிவு புத்தகமோ, சத்தியத்தை அதிக நுட்ப விவரமாகவும், அதே சமயத்தில் எளிதாகவும், தெளிவாகவும், குறுகிய காலத்திற்குள்ளும் போதிக்க ஒருவருக்கு உதவுகிறது.
11 ஜூன் 1996 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையில் விவரிக்கப்பட்டிருந்தபடி, எளிதாக்கப்பட்ட இந்தப் போதனைத் திட்டம், ஆசிரியர் போதிப்பதையும் மாணாக்கர் கற்றுக்கொள்வதையும் எளிதாக்குகிறது. பலன்தருவதாய் நிரூபித்திருக்கும் போதனா முறைகளையும் உத்திகளையும் மறுபார்வையிடுவதற்காக அந்த உட்சேர்க்கையின் ஒரு பிரதியை தயாராக எப்போதும் கைவசம் வைத்திருங்கள். அதில், மாணாக்கரில் உண்மையான, தனிப்பட்ட அக்கறை காட்டுவது எப்படி என்றும், ஒரு படிப்பில் எவ்வளவு விஷயத்தை முடிக்க வேண்டும் என்றும், அந்தப் பொருளுக்கு சம்பந்தமில்லாத கேள்விகள் கேட்கப்படும்போது எவ்வாறு கையாளுவது என்றும், ஆசிரியர், மாணாக்கர் ஆகிய இருவருமே படிப்பிற்கு முன்னதாக எவ்வாறு தயாரிக்கலாம் என்றும், மாணாக்கரை யெகோவாவின் அமைப்பினிடம் எவ்வாறு வழிநடத்துவது என்றும் தெரியப்படுத்தும் சில ஆலோசனைகள் அடங்கியுள்ளன. இந்த ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம், நம்மில் புதியவர்கள் உட்பட அநேகர் முன்னேறும் படிப்புகளை நடத்த முடியும்.
12 ஊழியத்தில் கிடைத்த நற்பலன் பற்றிய அறிக்கைகள்: சீஷராக்கும் வேலையை தீவிரமாய் நடப்பிப்பதற்கு, தேவைப்படுத்துகிறார் சிற்றேடு மற்றும் அறிவு புத்தகம் மதிப்பு வாய்ந்த பிரசுரங்களாக நிரூபித்திருக்கின்றன. பொலிவியாவில் ஒரு சகோதரர், தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைப் பெற்றதும், ஒருவருடன் படிப்பை ஆரம்பிக்க உடனே அதைப் பயன்படுத்தினார். நான்கு மாதங்களுக்குப் பின்பு மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்ற மகிழ்ச்சியான நபர்களில் இந்த மாணாக்கரும் ஒருவர்!
13 அறிவு புத்தகத்தில் படிப்பை முடித்த பிறகு தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க பலர் உந்துவிக்கப்படுகின்றனர். அங்கோலாவிலுள்ள ஒரு சபையில், அந்தப் பிராந்தியத்தில் அறிவு புத்தகத்தைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு நான்கே மாதங்களில், பிரஸ்தாபிகளால் நடத்தப்படும் பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை 190-லிருந்து 260-ஆக அதிகரித்தது; கூட்டத்துக்கு வருவோரின் எண்ணிக்கையும் 180-லிருந்து 360 என இரு மடங்கானது. அதையடுத்து சீக்கிரத்தில், மற்றொரு சபையை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.
14 அறிவு புத்தகத்தில் தனது முதல் படிப்பை ஆரம்பித்த பிறகு, “படிப்பு நடத்துபவர் வெறுமனே கேள்விகளைக் கேட்டு, பொருத்தமான வசனங்கள் சிலவற்றை வாசித்து, மாணாக்கர் புரிந்துகொள்கிறாரா இல்லையா என்று உறுதிப்படுத்திக்கொள்ளும்போது, அது எளிதாக” இருக்கிறது என்று ஒரு சகோதரர் சொன்னார். எப்பொழுதுமே அவர், மிகவும் திறம்பட்ட பிரஸ்தாபிகளால் மட்டுமே முன்னேறும் பைபிள் படிப்புகளை நடத்த முடியும், தன்னால் ஒருபோதும் நடத்த முடியாது என்று நினைத்தபோதிலும், தன்னாலுங்கூட நடத்த முடியும் என்பதைப் புரிந்துகொண்ட அவர் பின்வருமாறு சொன்னார்: “என்னாலேயே முடிகிறதென்றால், வேறு எவராலும் முடியும்.”
15 நம் ஊழியத்தின் ஒரு பாகமாக பைபிள் படிப்புகளை நடத்துவதன் மூலமாகவே சீஷராக்கும் குறிக்கோளை நாம் நிறைவேற்றுகிறோம். ஊழியத்தின் இந்த அம்சத்தில் பங்குபெறும் திறமையை வளர்த்திருப்பவர்கள், உண்மையிலேயே இதை திருப்தியளிப்பதாயும் அபரிமிதமாய் பலனளிப்பதாயும் காண்கின்றனர். நம்மைப் பற்றியும், “மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து . . . உபதேசித்துக்கொண்டிரு[க்கிறோம்]” என்று சொல்லப்படுவதாக.—அப். 28:31.