பிள்ளைகளுக்கு உண்மையான நம்பிக்கை
“சில நாட்களே வாழ்ந்திருக்கும் குழந்தை . . . அங்கே இனி ஒருபோதும் இருப்பதில்லை . . . அவர்கள் வீணாக உழைப்பதில்லை அல்லது இடர்ப்பாடுகளை அனுபவிப்பதற்கென விதிக்கப்பட்ட பிள்ளைகளைப் பெறுவதில்லை; ஏனென்றால் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.”—ஏசாயா 65:20, 23, நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்.
காரியங்களை மேம்படுத்துவதற்கான மனிதனின் போற்றத்தக்க முயற்சிகள் இருந்திருக்கின்றன. இருப்பினும், லட்சக்கணக்கான சிசுக்கள் இன்னும் ‘இடர்ப்பாடுகளை அனுபவிப்பதற்கென விதிக்கப்பட்டிருக்கின்றன.’ இது என்றென்றும் அவ்வாறு இராது. ஏசாயாவின் தீர்க்கதரிசனம் ஒவ்வொரு பிள்ளையும் என்றாவது ஒருநாள் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தைக் கொண்டிருக்கும் என்று உறுதியளிப்பது மட்டுமல்லாமல், அத்தகைய ஒரு குறிக்கோள் எவ்வாறு நிறைவேற்றப்படலாம் என்பதையும் விவரிக்கிறது.
ஏசாயா 65:17-ல் கடவுள் சொல்கிறார்: “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” உலக பிள்ளைகளைத் தகுந்தமுறையில் பராமரிக்க ‘புதிய வானங்கள்,’ “புதிய பூமி” ஆகிய இரண்டும் தேவையாய் இருக்கின்றன.
இந்த “புதிய பூமி” என்பது இயேசு கிறிஸ்து போதித்த நியமங்களைக் கடைப்பிடிக்கும் புதிய மக்கள் சமுதாயமாகும். அந்த நியமங்களில் ஒன்று “இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்,” என்பதாக இயேசு விளக்கினார். (மாற்கு 9:37) ஒவ்வொரு சிறு பிள்ளையையும் கிறிஸ்துவாகக் கருதி நடத்திய ஒரு சமுதாயாமே “புதிய பூமி” ஆகும்! ஏற்கெனவே லட்சக்கணக்கான மக்கள் இதைச் செய்யவே கடுமையாக முயற்சித்து வருகின்றனர். மேலும் அவர்கள் இந்த உலகின் பிள்ளைகளில் சிலருக்கு நம்பிக்கையூட்டுவதில் வெற்றியடைந்தும் இருக்கின்றனர்.
இப்பொழுது நம்பிக்கை கொண்டிருக்கும் பிள்ளைகள்
ட்செபா, தன்னுடைய அண்ணன்மார், அக்காமாராகிய நான்கு பேரோடு, தென் ஆப்பிரிக்காவின் குடிசைப் பகுதிகள் மிகுந்த ஒரு நகரத்தில் வாழ்ந்துவந்தான். அவனுக்கு ஒரு வயதாயிருந்தபோது, அவனுக்கு ஏற்கெனவே ஊட்டச்சத்துக்குறைவுள்ள ஒரு பிள்ளைக்கே உரிய உப்பிய வயிறு இருந்தது. அவனுடைய பெற்றோர் அவர்களுக்குக் கிடைத்த குறைந்த வருமானத்தின் பெரும்பகுதியை பியர் குடிப்பதில் விரயம் செய்தனர். அது அவர்களுடைய மனக்கவலைகளை மறப்பதற்கான ஒரு வீணான முயற்சியாக இருந்தது. ட்செபாவுக்கு சூடான சாப்பாடு கிடைப்பது அபூர்வமாகவே இருந்தது. வீட்டைச்சுற்றி சிதறிக்கிடந்த குப்பைக்கூளங்களிலும் பியர் டப்பாக்களிலும் விளையாடும்படி விடப்பட்டான்.
ட்செபாவின் பெற்றோர் சிந்திக்கும் முறையை மாற்ற ஏதோ ஏற்பட்டதுவரை அவனுடைய எதிர்காலம் இருண்டதாய் தோன்றிற்று. ஜார்ஜ் என்ற பெயருடைய அயலகத்தார் ஒருவர் அவர்களுக்கு ஒரு இலவச பைபிள் படிப்பை நடத்தினார். அதன் விளைவுகள் மனதில் ஆழப்பதிபவையாய் இருந்தன. குடிப் பிரச்னை மறைந்துபோயிற்று, வீடு சுத்தப்படுத்தப்பட்டது, குடும்பத்தினர் தினமும் சூடான சாப்பாடு சாப்பிட்டனர், ட்செபாவும் அவனுடைய அண்ணன்மாரும் அக்காமாரும் பார்ப்பதற்கு சுத்தமாயும் சுத்தமான துணிமணிகளை உடுத்துக்கொண்டும் மகிழ்ச்சியாயும் இருக்கத் தொடங்கினர்.
யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக, ஜார்ஜ் அதிக வாழ்க்கைநல வாய்ப்புகள் இல்லாதவரையும் உட்பட்ட எல்லாரையும்குறித்து பொறுப்புள்ளவராக உணர்ந்தார். இதன் காரணமாகவே அவர் ட்செபாவின் குடும்பத்திற்கு உதவினார். சந்தேகமின்றி, அந்தக் குடும்பத்தினர் தங்களுடைய வாழ்க்கை-பாணியை மாற்றுவதற்கு உதவவும், கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையிலான புதிய மதிப்பீடுகளைப் போதிக்கவும் நீண்ட காலமும் அதிக பொறுமையும் தேவைப்பட்டது. ஆனால் முக்கியமாக பிள்ளைகளுக்கு அது எப்படிப்பட்ட வித்தியாசத்தை உண்டுபண்ணியிருக்கிறது என்று பார்க்கும்போது, அந்த முயற்சி பெரும்பயன் விளைவித்ததாகவே ஜார்ஜ் உணருகிறார்.
சான் சால்வடார் ஆடன்கோ என்ற மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த நகரத்தில் ஹோசே என்ற பெயருடைய ஒரு விவசாயி வாழ்ந்தார். அவருக்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தனர். அவர் ஒரு மொடாக்குடியனாக இருந்தார். அவருடைய பிள்ளைகள் அவரைக்கண்டு அதிகம் பயந்தனர். ஏனென்றால் அவர் போதையில் இருக்கும்போது வன்முறையாய் நடந்துகொண்டார். அவர்களுடைய வீடு எப்போதும் அழுக்கடைந்ததாகவே இருந்துவந்தது. வீட்டைச் சுற்றியுள்ள இடம் குடும்பத்தாரின் கழுதைகளுக்கும் பன்றிகளுக்கும் தொழுவமாக இருந்துவந்தது. அவை இஷ்டம்போல வீட்டிற்குள் உலாவித் திரிந்தன. அதன் பின்விளைவாக, பிள்ளைகள் இரைப்பை-குடல் நோய்களினால் துன்புற்றனர். சில சமயங்களில் அவர்களுடைய உடல் முழுவதும் அழுகிய புண்களால் மூடப்பட்டிருந்தன.
ஹோசே யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது காரியங்கள் மாறின. அவர் அளவுக்குமீறி குடிப்பதை நிறுத்திவிட்டு தன்னுடைய பிள்ளைகளுக்கு உண்மையான ஒரு அப்பாவாக ஆனார். “நாங்கள் இப்போது எங்களுடைய அப்பாவிடம் விளையாடக்கூட முடிகிறது!” என்று இளைய பிள்ளைகளில் ஒருவன் பெருமையோடும் வியப்போடும் கூறுகிறான். அவர்களுடைய வீடு இப்போது நகரத்திலேயே மிகவும் அழுக்கான வீடுகளில் ஒன்றாக இருப்பதற்குப் பதிலாக மிகவும் சுத்தமான வீடுகளில் ஒன்றாக திகழ்கிறது. பன்றிகளும் கழுதைகளும் ஒரு விளைநிலத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. குடும்பத்தினர் ஒழுங்காக குடிநீரைக் கொதிக்கவைக்கின்றனர். மேம்படுத்தப்பட்ட தூய்மைநிலை, பிள்ளைகள் மிக ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை அர்த்தப்படுத்திற்று.
இந்த இரண்டு உதாரணங்களும் காண்பிக்கிறதுபோல, அடிக்கடி பிள்ளைகளுக்கு உதவுவதற்கான வழியானது பெற்றோருக்கு உதவுவதேயாகும். “பிள்ளைகளைப் பேணிவளர்த்து பாதுகாக்கும் தலையாய கடமை குடும்பத்திற்கே இருக்கிறது,” என்பதை பிள்ளைகளுக்கான உலக மாநாட்டின் அறிக்கை அங்கீகரித்தது. குடும்பங்கள் தங்களுடைய பிள்ளைகளைப் பேணிவளர்த்து பாதுகாக்கின்றனவா இல்லையா என்பது எந்தளவு வருமானத்தை சார்ந்ததாய் இருக்கிறதோ அதே அளவு கல்வியையும் சார்ந்திருக்கிறது.
ஒரு தெருப்பிள்ளையை மாற்றுதல்
பிரேஸிலில், தன்னுடைய அப்பா இறக்கும்போது டோமெங்ஙோஸ் ஒன்பதே வயதுள்ளவனாய் இருந்தான். அவனுடைய அம்மா மறுமணம் செய்துகொண்டபோது அவன் ஒரு அனாதை ஆசிரமத்தில் விடப்பட்டான். அனாதை ஆசிரமத்தில் அவன் கொடுமையாக நடத்தப்பட்டது, தப்பித்து ஓட திட்டம்தீட்டிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தோடு சேரும்படி அவனை தீர்மானிக்கவைத்தது. அவனுடைய திட்டங்களைக் கேள்விப்பட்டு அவனுடைய அம்மா அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். ஆனால் அவனுடைய மாற்றாந்தகப்பன் அவனை பலமுறை அடித்தது அவன் வீட்டைவிட்டு ஓடிவிட தீர்மானிக்கச்செய்தது. அவன் சாவோ பாலோவின் ஆயிரக்கணக்கான தெருப்பிள்ளைகளில் ஒருவன் ஆனான். அவர்கள் பிழைப்புக்காக ஷூ பாலிஷ் போட்டும், இனிப்புப் பண்டங்கள் விற்றும், அல்லது போதைப் பொருட்களை விநியோகித்தும்கூடவருகின்றனர்.
டோமெங்ஙோஸ் முதன்முதலாக யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு ராஜ்ய மன்றத்திற்கு சென்றபோது, அவன் சந்தேகக் கண்ணுடையவனாகவும், பாங்கற்றவனாகவும் இருந்தான். அவனுடைய வளர்ப்புப் பின்னணியைப் பார்க்கும்போது இதில் ஆச்சரியமொன்றும் இல்லை. இருந்தபோதிலும் வயதுவந்தவர்களான சாட்சிகள் அவனுடைய நன்னம்பிக்கையைப் பெற்றனர். ஒரு தனிப்பட்ட பைபிள் படிப்பின் மூலம் புதிய மதிப்பீடுகளைப் பெற்றுக்கொள்ள அவர்கள் அவனுக்கு உதவினர். இறுதியில் அவன் கடவுள்மீதும் மற்றவர்கள்மீதும் நம்பிக்கை வைக்கலாம் என்பதைக் கற்றுக்கொண்டான். அவன் தொடக்கத்தில் ஒரு செங்கல்சூளை முதலாளியின் உதவியாளனாகவும் பின்னர் ஒரு ஆபீஸ் பையனாகவும் வேலைசெய்யும்படி ஒரு வேலையைப் பெற சாட்சிகள் உதவினர். பல வருடங்கள் கழித்து, இப்போது அவன் ஒரு முழுநேர கிறிஸ்தவ ஊழியனாக சேவை செய்துவருகிறான்.
ஒரு கரிசனையுள்ள மக்கள் சமுதாயம் உலக பிள்ளைகளின் துன்பத்தை ஓரளவு துடைத்தொழிக்கலாம் என்பதையே இந்த உதாரணங்கள் காட்டுகின்றன. சந்தேகமின்றி, மனித முயற்சிகள் இடர்ப்பாடுகள் முழுவதற்கும் ஒருபோதும் பரிகாரம் அளிக்காது என்பதை யெகோவாவின் சாட்சிகள் அறிந்திருக்கின்றனர். உலக பிள்ளைகளின் பிரச்னைகளுக்கான தீர்வான பரிகாரத்திற்கு மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சக்தியும், அளவிலா வளங்களும், உலகளாவிய அதிகாரமும் தேவைப்படுகின்றன.
ஒரு மேம்பட்ட உலகத்திற்கான ‘புதிய வானங்கள்’
கடவுளால் மட்டுமே ஒரு பூரண பரிகாரம் கொண்டுவர முடியும். இந்தக் காரணத்தினிமித்தம், “புதிய பூமி,” ‘புதிய வானங்கள்’ உடன் சேர்ந்து நிலவுவதாக ஏசாயாவின் தீர்க்கதரிசனம் விளக்குகிறது. ‘ஒரு புதிய வானம்’ அல்லது ‘புதிய வானங்கள்’ ஸ்தாபிக்கப்படப்போவதாக அநேகம் தடவைகள் பைபிள் வாக்களிக்கிறது. (ஏசாயா 65:17; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1) ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த ‘புதிய வானங்கள்’ ஸ்தாபிக்கப்படுவதுதானே துன்பத்தை நீக்கி பூமிக்கு நீதியைக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய படி என்பதாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த ‘புதிய வானங்கள்’ என்றால் சரியாகவே என்ன?
பைபிள் அடிக்கடி ‘வானங்கள்’ என்ற வார்த்தையை, கடவுளால் அல்லது மனிதனால் நடத்தப்படும் ஆட்சியைக் குறிக்கும் ஒருபொருட்பன்மொழியாக பயன்படுத்துகிறது. (தானியேல் 4:25, 26-ஐ ஒப்பிடவும்.) இந்தப் புதிய அரசாங்கமானது ஒரு பரலோக ராஜ்யமாக, கடவுளுடைய ராஜ்யமாக இருக்கிறது. இதற்காக ஜெபிக்கும்படிதான் இயேசு தன்னுடைய சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:10) கடவுளுடைய ராஜ்யம் உலக பிள்ளைகளை அச்சுறுத்தும் எந்த இடர்ப்பாடுகளையும் நீக்குவதற்கான வல்லமையுடையதாய் இருக்கும். மேலும் அவ்வாறு செய்ய அது தீர்மானமாய் இருக்கும்.
அதைப்பற்றி நாம் ஏன் அவ்வளவு நிச்சயமாக இருக்கலாம்? ஏனென்றால் ஒரு அரசாங்கம் அதன் ஆட்சியாளர்களின் ஆளுமையைப் பிரதிபலிக்கிறது. ஆகவே கடவுளுடைய ராஜ்யம் கடவுளுடைய தராதரங்களுக்கும் அவருடைய குமாரனும் நியமிக்கப்பட்ட ராஜாவுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் தராதரங்களுக்கும் இசைவாக ஆட்சிசெய்யும். இவர்கள் இருவருமே பிள்ளைகளின் நலனில் அனலான அக்கறையை வெளிக்காட்டியிருக்கின்றனர்.—சங்கீதம் 10:14; 68:5; மாற்கு 10:14.
வாக்களிக்கப்பட்ட இந்த ராஜ்யத்திற்காக, அல்லது ‘புதிய வானங்களுக்காக’ நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, நம் அயலகத்தில் இருக்கும் பிள்ளைகளின் நிலைமைகளை மேம்படுத்த நாம் உழைக்கலாம். பிள்ளைகளுக்கான உலக மாநாடு பொருத்தமாக முடிவுக்கு வந்ததுபோலவே, “ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு மேம்பட்ட எதிர்காலத்தைத் தருவதைவிட உயர்ந்த வேலை வேறு ஒன்றும் இருக்க முடியாது.”
[பக்கம் 11-ன் பெட்டி]
பிள்ளைகளுக்கு உதவ நடைமுறையான ஒரு திட்டம்
யெகோவாவின் சாட்சிகளுடைய கல்விபுகட்டும் வேலை பிள்ளைகளுக்கு நடைமுறையான மற்றும் நீடித்த உதவியை அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் சில அம்சங்களாவன:
முதியோர் கல்வி. எழுத படிக்கத் தெரியாத பெற்றோருக்கான ஒரு கல்விபுகட்டும் திட்டத்தை இது உட்படுத்துகிறது. இதோடுகூட பிள்ளைகளைத் தகுந்தமுறையில் பராமரித்துப் பேணுவதற்கு அவசியமான மதிப்பீடுகளை மனதில் பதியவைப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு விரிவான பைபிள் போதனையையும் உட்படுத்துகிறது.
குடும்ப வழிநடத்துதல். பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் சிலரை உறவினர்களோடு வாழும்படி அனுப்பாமல் பிள்ளைகள் அனைவரையும் பேணிக்காக்கும்படி பெற்றோருக்கு—பரம ஏழையாய் இருக்கும் பெற்றோருக்கும்கூட—பைபிள் அறிவுரை கூறுகிறது. விசேஷித்த பிரச்னைகள் உள்ள குடும்பங்களுக்கு உதவி செய்வதில் உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகம் பயனுள்ளதாக நிரூபித்துள்ளது.a
பிள்ளையை ஈடுபடுத்துதலும் தகவமைத்தலும். கல்வி, உடல்நல பராமரிப்பு, சுகாதாரம் போன்றவற்றில் பிள்ளைகள் தாங்களே ஈடுபடும்போது பலன்கள் மிக அதிகமாக இருக்கின்றன. சாட்சிகள் அடிக்கடி பிள்ளைகளுடன் பைபிளைப் படிக்கின்றனர். இதற்கு என்னுடைய பைபிள் கதை புத்தகம், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் போன்ற பொருத்தியமைக்கப்பட்ட பிரசுரங்களை உபயோகிக்கின்றனர். இவை வீட்டில் பிரச்னைகளைக் கையாளவும் தங்களுடைய சொந்த தூய்மையை மேம்படுத்தவும் அவர்களுக்கு உதவுகின்றன.b
சுகாதார மற்றும் உடல்நல பராமரிப்பின் பேரில் போதனை. யெகோவாவின் சாட்சிகள் விழித்தெழு! பத்திரிகையை 74 மொழிகளில் பிரசுரிக்கின்றனர். இந்தப் பத்திரிகை முறையாக உடல்நல பராமரிப்பின் பேரில் கட்டுரைகளை வெளியிடுகிறது.
இடருதவி வேலை. அவசர காலங்களில், சேதம் நடந்த இடத்திற்கே நேரடியாக உதவி சென்றுசேர, யெகோவாவின் சாட்சிகள் அவசர இடருதவி வேலைகளை ஒழுங்கமைக்கின்றனர்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
b உவாட்ச்டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 10-ன் படங்கள்]
உலக பிள்ளைகளின் பிரச்னைகளுக்கான தீர்வான பரிகாரத்திற்கு மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சக்தி தேவைப்படுகிறது. கடவுளால் மட்டுமே அத்தகைய பரிகாரத்தைக் கொண்டுவரமுடியும்