பைபிளின் கருத்து
கர்வப்படுவது தவறா?
ஏழு கொடிய பாவங்களில் கர்வமே முதன்மையானது என வழிவழியாக வந்த ஒரு பழமொழி குறிப்பிடுகிறது. இருந்தாலும், இப்படிப்பட்டக் கருத்து மிகவும் பழமையானது என அநேகர் இன்று நம்புகின்றனர். 21-ம் நூற்றாண்டின் நுழைவாயிலில் நிற்கும் இந்த சமயத்தில், கர்வம் ஒரு பாவமாக அல்ல, சொத்தாகவே கருதப்படுகிறது.
ஆனால், பைபிள் கர்வத்தைப் பற்றி பேசும்போதெல்லாம், பாதகமாகத்தான் பேசுகிறது. பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளில் மாத்திரமே கர்வத்தைக் கண்டனம் செய்யும் ஏராளமான கூற்றுகளைக் காணலாம். உதாரணமாக, “பெருமையையும், அகந்தையையும், [“கர்வத்தையும்,” NW] தீய வழியையும், புரட்டு வாயையும் நான் வெறுக்கிறேன்” என நீதிமொழிகள் 8:13 சொல்கிறது. “மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு [“யெகோவா,” NW] அருவருப்பானவன்” என்று நீதிமொழிகள் 16:5 குறிப்பிடுகிறது. மேலும் வசனம் 18, “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” என எச்சரிக்கிறது.
கேடு விளைவிக்கும் கர்வம்
பைபிளில் கண்டனம் செய்யப்பட்டுள்ள கர்வத்திற்கு, அளவுக்கு மிஞ்சிய சுயமரியாதை, தன்னுடைய திறமைகள், அழகு, செல்வம், படிப்பு, பதவி போன்றவற்றால் வரம்புக்குமீறி தன்னையே உயர்வாக நினைத்தல் என்று விளக்கம் கொடுக்கலாம். இது, பெருமையடித்துக் கொள்வது, கர்வமாக நடந்து கொள்வது, செருக்கான, திமிரான நடத்தை ஆகியவற்றால் வெளிப்படையாக காண்பிக்கப்படலாம். தன்னைப் பற்றியே மட்டுக்குமீறி நினைத்துக் கொள்வதால், தேவையான திருத்தங்களை ஏற்றுக்கொள்ள ஒருவர் மறுக்கிறார். தவறுகளை ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கேட்க முன்வருவதில்லை. தன் நிலையை மாற்றிக்கொள்ள மறுக்கிறார். தன்மானத்தையே பெரிதாக நினைக்கிறார். அல்லது யாரோ ஒருவர் சொன்னதற்காக அல்லது செய்ததற்காக அளவுக்கதிகமாக கொதித்தெழுகிறார்.
காரியங்கள் எப்போதும் தான் நினைக்கும் விதமாகத்தான் செய்ய வேண்டும், இல்லையெனில் அவற்றை செய்யாமலே இருந்து விடுவது என விடாப்பிடியாக இருப்பார் கர்வமான ஒருவர். இப்படிப்பட்ட மனப்பான்மை பெரும்பாலும் ஏதாவதொரு வகையான தனிப்பட்ட தகராறில்தான் போய் முடிவடையும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. இனப் பெருமை அல்லது தேசப் பெருமை, கணக்கிலடங்கா போர்களையும் இரத்தம் சிந்துதலையும் தூண்டியிருக்கிறது. கடவுளுடைய ஆவிக்குமாரர்களில் ஒருவன் கலகம் செய்து, தன்னைப் பிசாசாகிய சாத்தானாக மாற்றிக் கொண்டதற்கு கர்வமே முக்கிய காரணம் என பைபிள் குறிப்பிடுகிறது. கிறிஸ்தவ மூப்பர்களுக்கான தகுதிகளைப் பற்றி குறிப்பிடும்போது, “அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, சபையில் புதிதாகச் சேர்ந்த ஒருவராயிருக்கக்கூடாது” என பவுல் புத்திமதி கொடுக்கிறார். (1 தீமோத்தேயு 3:6, NW; ஒப்பிடுக: எசேக்கியேல் 28:13-17.) இவைதான் கர்வத்தின் பலாபலன்கள் என்றால், கடவுள் இதைக் கண்டனம் செய்வதில் ஆச்சரியம் ஏதுமுண்டோ? இருந்தாலும், ‘நியாயமான கர்வத்திற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன அல்லவா?’ என ஒருவேளை நீங்கள் கேட்கலாம்.
நியாயமான கர்வமா?
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், காஃப்காவோமே என்ற வினைச்சொல், “பெருமைப்படுதல், களிகூருதல், பெருமிதம் கொள்ளுதல்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது, சாதகமாகவும் பாதகமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, நாம் “தேவ மகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மை” பாராட்டலாம் என பவுல் குறிப்பிடுகிறார். மேலும், “மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே [“யெகோவா,” NW] மேன்மைபாராட்டக்கடவன்” என பரிந்துரைக்கிறார். (ரோமர் 5:2; 2 கொரிந்தியர் 10:17) யெகோவா நம்முடைய கடவுள் என்பதில் பெருமைப்படுவதை இது அர்த்தப்படுத்துகிறது. அவருடைய மகிமையான நாமத்தைக் குறித்தும் அவருக்கிருக்கும் நற்பெயரைக் குறித்தும் நாம் களிகூருவதற்கு வழிநடத்தும் ஓர் உணர்ச்சியாகும்.
உதாரணமாக, ஒருவருடைய நல்ல பெயர் தூஷிக்கப்படும்போது அவருடைய நற்பெயரை காப்பதற்காக வாதிடுவது தவறா? இல்லை. உங்கள் குடும்ப அங்கத்தினர்களைப் பற்றியோ அல்லது நீங்கள் நேசிக்கும், மதிப்பு வைத்திருக்கும் ஒருவரைப் பற்றியோ மற்றவர்கள் அநியாயமாக பேசும்போது, நீங்கள் கோபப்பட்டு, அவர்களுக்காக பரிந்து பேசுவீர்கள் அல்லவா? “திரண்ட செல்வத்தைவிட நற்பெயரைத் தெரிந்துகொள்வது மேல்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:1, பொது மொழிபெயர்ப்பு) ஒரு சந்தர்ப்பத்தில், சர்வ வல்லமையுள்ள கடவுள், கர்வம் நிறைந்த எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம், “என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்” என்று சொன்னார். (யாத்திராகமம் 9:16) எனவே, கடவுள் தம்முடைய நற்பெயரை நிலைநாட்டுவதிலும் நன்மதிப்பை நிலைநிறுத்துவதிலும் களிகூருகிறார். அதுமட்டுமல்ல, அதற்காக அவர் வைராக்கியத்தையும் காண்பிக்கிறார். நாமும் நம்முடைய நற்பெயரை காத்துக் கொள்வதிலும் நன்மதிப்பை தக்க வைத்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்டலாம். ஆனால், வீண் தற்பெருமையினால் அல்லது மேட்டிமையினால் தூண்டப்பட்டு அவ்வாறு செய்யக்கூடாது.—நீதிமொழிகள் 16:18.
பலன்தரும் எந்தவொரு உறவுக்கும், மரியாதை மிக அவசியம். நம்முடைய கூட்டாளிகள் மீதிருக்கும் நம்பிக்கையை நாம் இழந்தால், நம்முடைய சமூக வாழ்க்கையும் வியாபாரத் தொடர்புகளும் வெகுவாக பாதிக்கப்படும். இதைப் போலவே, சிலர் ஒன்று சேர்ந்து செய்யும் தொழில் அல்லது கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளில் ஒருவர், மற்றவர்கள்மீது அவப்பெயரைக் கொண்டு வரும் விதத்தில் ஏதாவது செய்தால் ஒட்டுமொத்தமாக வியாபாரமே நலிவடையலாம். ஒரு குறிக்கோளை அடைவதிலும், அது எதுவாக இருந்தாலும்சரி, நன்மதிப்பை காத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவ சபைகளில் இருக்கும் கண்காணிகள், சபைக்கு வெளியே உள்ளவர்களிடமும் “நற்சாட்சி” பெற்றவர்களாய் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு காரணம். (1 தீமோத்தேயு 3:7) நற்பெயர் பெறுவதற்கான அவர்களுடைய ஆவல், அகந்தையோடுகூடிய தற்பெருமையால் அல்லாமல், மதிப்பும், போற்றுதலும் நிறைந்த வகையில் கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்யும் நோக்கத்தால் தூண்டப்பட வேண்டும். வெளியே உள்ளவர்களிடம் கெட்டப் பெயரை சம்பாதித்துக் கொண்டவர் எந்தளவு நம்பிக்கைக்குரிய ஓர் ஊழியராக இருக்க முடியும்?
தனிப்பட்ட சாதனைகளைக் குறித்து பெருமைப்படுவதைப் பற்றி என்ன? உதாரணமாக, பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தால் பெற்றோர் சந்தோஷத்தில் மிதப்பார்கள். இப்படிப்பட்ட சாதனை, தகுதிவாய்ந்த திருப்திக்கு ஊற்றுமூலம். தெசலோனிக்கேயாவில் உள்ள உடன் கிறிஸ்தவர்களுக்கு எழுதும்போது, அவர்களுடைய சாதனைகளில் தான் சந்தோஷப்படுவதாக பவுல் குறிப்பிட்டார்: ‘சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகத் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது. நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக் குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மை பாராட்டுகிறோம்.’ (2 தெசலோனிக்கேயர் 1:3, 4) ஆம், நாம் நேசிப்பவர்களின் சாதனைகளில் சந்தோஷப்படுவது இயற்கையே. எனவே, தவறான கர்வத்தையும் நியாயமான பெருமிதத்தையும் வித்தியாசப்படுத்துவது எது?
தனிப்பட்ட நன்மதிப்பைக் காத்துக் கொள்வது, வெற்றி அடைவது, அடைந்த சாதனைகளில் பெருமிதம் கொள்வது தவறல்ல. இருந்தாலும், தன்னைப் பற்றியோ அல்லது மற்றவர்களைப் பற்றியோ தற்பெருமை, அகந்தை, வீண்ஜம்பம் அடித்துக் கொள்வதையே கடவுள் வெறுக்கிறார். யாராவது கர்வத்தால் “இறுமாப்படைய” அல்லது ‘எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ண’ ஆரம்பித்தால், அது வருந்தத்தக்கதே. கிறிஸ்தவர்கள், எந்தவொரு காரியத்தை அல்லது எந்தவொரு நபரைக் குறித்து கர்வம் அல்லது வீண்பெருமை கொள்ள எந்தக் காரணமும் இல்லை. மாறாக, யெகோவாவைக் குறித்தும் அவர் நமக்கு செய்திருக்கும் எல்லா நன்மைகளைக் குறித்தும் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். (1 கொரிந்தியர் 4:6, 7; ரோமர் 12:3) நாம் பின்பற்ற வேண்டிய மிகச் சிறந்த நியமத்தை தீர்க்கதரிசியாகிய எரேமியா கொடுக்கிறார்: “மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் [“யெகோவா,” NW] நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைப்பாராட்டக்கடவன்.”—எரேமியா 9:24.
[பக்கம் 20-ன் படம்]
“பத்தாம் போப் இன்னொஸன்ட்” Don Diego Rodríguez de Silva Velázquez வரைந்தது
[படத்திற்கான நன்றி]
Scala/Art Resource, NY