“பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்”
நீங்கள் ஒரு விளையாட்டு அரங்கில் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த அரங்கம் ரசிகர்களின் உற்சாக கரகோஷத்தால் அதிருகிறது. விளையாட்டு வீரர்கள் களத்தில் அணிவகுத்து செல்கின்றனர். தங்களுடைய ஹீரோக்கள் கடந்து செல்கையில் விண்ணைப் பிளக்கும் அளவுக்கு கரவொலி எழுப்புகின்றனர். விளையாட்டில் விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய நடுவர்கள் உள்ளனர். விளையாட்டு துவங்கிய பின் வெற்றியைப் பார்த்து குதூகலிக்கும் கூட்டத்தாரின் கோஷமும் தோல்வியைப் பார்த்து மனமுடைந்து புலம்பும் கூட்டத்தாரின் புலம்பலும் சேர்ந்து காதைப் பிளக்கிறது. வெற்றி வீரருக்கு விசேஷ ஆரவார கரவொலி எழுப்பப்படுகிறது!
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது நவீன நாளைய விளையாட்டு போட்டி அல்ல. அது, கொரிந்துவில் பூசந்தியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விளையாட்டு. இங்கே பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பொ.ச. நான்காம் நூற்றாண்டு வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரபலமான இஸ்திமியன் விளையாட்டுகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சி நடைபெறும் காலத்தில் கிரீஸிலுள்ள அனைவரின் கவனமும் மனமும் இதில்தான் லயித்திருந்தன. இந்த விளையாட்டுகள் சாதாரண போட்டி விளையாட்டுகள் இல்லை. இந்தப் போட்டியாளர்கள் தேவை ஏற்பட்டால் தாங்கள் போர்க் களத்தில் இறங்குவதற்குத் தயார் என்பதை சுட்டிக்காட்டினர். வெற்றி பெறும் ஹீரோக்களுக்கு ஏகபோக வரவேற்பு அளிக்கப்பட்டது, இலைகளால் தயாரிக்கப்பட்ட கிரீடங்கள் சூட்டப்பட்டன. ஏராளமான பரிசுகள் வந்து குவிந்தன, சாகும்வரை அவர்களுக்கு தாராளமாக ஓய்வூதியமும் வழங்கப்பட்டது.
அப்போஸ்தலனாகிய பவுலுக்கு கொரிந்துவுக்கு அருகில் நடைபெற்று வந்த இந்த இஸ்திமியன் விளையாட்டுகள் அத்துப்படி. எனவேதான் அவர் ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையை போட்டி விளையாட்டுக்கு ஒப்பிட்டு பேசினார். ஓட்டப்பந்தயம், மல்யுத்தம், குத்துச் சண்டை ஆகியவற்றில் ஈடுபடும் வீரர்களைப் பற்றி குறிப்பிட்டு இவர்களுக்கு நல்ல பயிற்சியும், சரியாக குறிவைத்து எடுக்கும் முயற்சிகளும், சகிப்புத்தன்மையும் எத்தனை அவசியம் என்பதை அவர் பொருத்தமாக விளக்கினார். அதோடு அந்தக் கடிதத்தை அவர் யாருக்கு எழுதினாரோ அவர்களும் இந்த விளையாட்டுகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தவர்களே. அவர்களில் சிலர் அவ்விளையாட்டுக்களின் போது பார்வையாளர் திடலில் இருந்து கரகோஷம் எழுப்பியவர்களாகவும் இருந்திருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே பவுலின் உதாரணங்களை அவர்களால் உடனடியாக புரிந்துகொள்ள முடிந்தது. இது நமக்கு எப்படி பொருந்தும்? ஒருவிதத்தில் நாமும்கூட ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டிருக்கிறோம் எனலாம்; அது ஜீவனுக்கான ஓட்டப் பந்தயம். எனவே போட்டிகளைப் பற்றிய பவுலின் குறிப்புகளிலிருந்து நாம் எவ்வாறு பயன் பெறலாம்?
‘விதிமுறைகளின்படி விளையாடுதல்’
பண்டைய காலத்தில் போட்டி விளையாட்டுகளில் கலந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல; அதில் நிபந்தனைகள் கறாராக பின்பற்றப்பட்டன. ஒவ்வொரு விளையாட்டு வீரனும் பார்வையாளர்கள் முன் நிறுத்தப்படுவார். அவரை அறிவிப்பாளர் அறிமுகப்படுத்துகையில், ‘இவன் மேல் ஏதேனும் குற்றச்சாட்டுகள் உண்டா? இவன் திருடனா, பொல்லாதவனா? வாழ்க்கையிலும் நடத்தையிலும் மோசமானவனா?’ என கேள்வி கேட்பார். ஆர்கியாலஜியா கிரீக்கா-வின் பிரகாரம் “பிரபல குற்றவாளியோ அவனுடைய [நெருங்கிய] சொந்த பந்தங்களோ போட்டி விளையாட்டுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.” அதைப் போலவே விளையாட்டு விதிமுறைகளை மீறினால் கடும் தண்டனை வழங்கப்பட்டது; அவ்வாறு மீறினவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டனர்.
“விளையாட்டு வீரர் எவரும் விதி முறைகளுக்குட்பட்டு விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியும்” என்று பவுல் ஏன் சொன்னார் என்பதை நம்மால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. (2 தீமோத்தேயு 2:5, பொ.மொ) அது நம் விஷயத்திலும் உண்மை அல்லவா? ஜீவனுக்கான ஓட்டத்தில் ஓடுவதற்கு யெகோவாவின் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும், பைபிளில் அவர் கொடுத்திருக்கும் உயர்ந்த ஒழுக்க தராதரங்களை கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது” என பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (ஆதியாகமம் 8:21) நமக்கு யெகோவாவின் அங்கீகாரம் எப்போதும் கிடைக்க வேண்டும்; நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும். எனவே, ஓட்டப் பந்தயத்தில் ஓட ஆரம்பித்த பின்னர், விதிமுறைகளுக்கு ஏற்ப ஓடுகிறோமா என கவனமாய் சரிபார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
கடவுள்மீது நமக்கிருக்கும் அன்பே இவ்வாறு ஓட நமக்கு பெரிதும் கைகொடுக்கும். (மாற்கு 12:29-31) அந்த அன்பே யெகோவாவை பிரியப்படுத்தவும், அவருடைய சித்தத்திற்கு இசைவாக நடக்கவும் உதவும்.—1 யோவான் 5:3.
‘பாரமான யாவற்றையும் . . . தள்ளிவிடுங்கள்’
பண்டைய காலங்களில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுகிறவர்கள் தங்களை பாரமாக்கிக் கொள்ளவில்லை; அதாவது ஏகப்பட்ட ஆடைகளை அணியவுமில்லை, எந்தக் கருவிகளையும் சுமந்துகொண்டு ஓடவுமில்லை. “ஓட்டப்பந்தயங்களில், . . . போட்டியாளர்கள் முழுக்க முழுக்க நிர்வாணமாக இருந்தனர்” என்று கிரேக்கரும் ரோமரும் வாழ்ந்த வாழ்க்கை என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. ஆடை பாரமாக இல்லை, எனவே அவர்களால் விரைவாகவும் சுலபமாகவும் திறமையாகவும் ஓட முடிந்தது. அநாவசியமான பாரம் சக்தியை விரயமாக்கும். இதை மனதில் வைத்தே பவுல் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதியிருக்க வேண்டும்: ‘பாரமான யாவற்றையும் . . . தள்ளிவிட்டு, . . . நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.’—எபிரெயர் 12:1.
ஜீவனுக்கான ஓட்டத்தில் நமக்கு என்னென்ன விதமான சுமைகள் தடையாக அமையலாம்? தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்க வேண்டும் அல்லது சொகுசான வாழ்க்கை வாழ வேண்டும் போன்ற ஆசை தடையாக இருக்கலாம். செல்வமே பாதுகாப்புக்கும் மகிழ்ச்சிக்கும் வழிகாட்டி என்று சிலர் நினைக்கலாம். இப்படி தேவைக்கு அதிகமான ‘பாரம்’ ஓடுகிறவரின் வேகத்தை மெல்ல மெல்ல குறைக்கலாம்; கடைசியில் கடவுளைப் பற்றிய நினைப்பே இல்லாமல் போக செய்யலாம். (லூக்கா 12:16-21) அப்போது நித்திய ஜீவ நம்பிக்கையும் எட்டாக் கனியாக மாறலாம். ‘புதிய உலகம் என்றைக்கோ வரப்போகிறது, அதற்குள் இந்த உலகத்தையும் கொஞ்சம் அனுபவித்து பார்ப்பதில் என்ன தப்பு?’ என்பதாக ‘தப்புக்கணக்கு’ போட ஆரம்பிக்கலாம். (1 தீமோத்தேயு 6:17-19) இப்படி பொருளாசை எனும் காந்த விசையால் ஈர்க்கப்படுகையில் ஒருவர் ஜீவனுக்கான பந்தய பாதையை விட்டுவிட்டு பக்க பாதைக்கு வெகு எளிதில் திசை மாறலாம் அல்லது அவர் ஜீவ பாதையில் ஓட ஆரம்பிக்காமலே இருந்துவிடலாம்.
மலைப்பிரசங்கத்தில் இயேசு, “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது” என்று சொன்னார். அதற்குப்பின், பட்சிகளையும் புஷ்பங்களையும் யெகோவா கவனித்துக் கொள்ளும் விதத்தை சுட்டிக்காட்டி, மனிதர்கள் அவற்றைவிட மேலானவர்கள் என்றார். பின்னர், “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” என அறிவுரை கூறினார்.—மத்தேயு 6:24-33.
‘பொறுமையோடே ஓடுங்கள்’
பண்டைய காலங்களில், எல்லா ஓட்டப் பந்தயங்களுமே குறுகிய தூரத்தை வேகமாக கடக்கும் ஓட்டப் பந்தயங்கள் அல்ல. உதாரணத்திற்கு, டோலிஹாஸ் என்றழைக்கப்பட்ட ஓட்டப் பந்தயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் ஓட வேண்டும். அது சக்திக்கும் பொறுமைக்கும் பெரும் சோதனை. இந்த ஓட்டப் பந்தயத்தில், பொ.ச.மு. 328-ல் ஆயீயஸ் என்பவர் வெற்றி பெற்ற கையோடு அச்செய்தியை அறிவிப்பதற்காக தன் சொந்த ஊரான ஆர்காஸுக்கு அப்படியே ஓடினதாக பாரம்பரியம் கூறுகிறது. அப்படி பார்த்தால் அன்று மட்டும் அவர் ஏறக்குறைய 110 கிலோமீட்டர் ஓடியிருக்கிறார்!
கிறிஸ்தவ ஓட்டமும் அப்படிப்பட்டதுதான். அது நீண்டதூர ஓட்டம்; நம் பொறுமையை சோதிக்கும் ஓட்டம். யெகோவாவின் அங்கீகார புன்னகையையும் நித்திய ஜீவன் என்ற பரிசையும் பெற வேண்டுமென்றால், முடிவுவரை இந்த ஓட்டத்தில் பொறுமையோடு ஓட வேண்டும். பவுல் அப்படிப்பட்ட ஓட்டக்காரரே; அதனால்தான் தன் வாழ்க்கையின் முடிவில், “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது” என அவரால் சொல்ல முடிந்தது. (2 தீமோத்தேயு 4:7, 8) பவுலைப் போல நாமும் ஓட்டத்தை ‘முடிக்க’ வேண்டும். நாம் எதிர்பார்த்ததைவிட ஓட்ட தூரம் நீண்டதாக இருப்பதைக் கண்டு பொறுமையை இழந்தால் பரிசையும் இழக்க வேண்டியதுதான். (எபிரெயர் 11:6) எல்லை கோட்டை நெருங்கிவிட்டதைப் பார்த்த பின்னும் இது சம்பவித்தால் பரிதாபமோ பரிதாபம்!
பரிசு
பண்டைய கிரேக்க விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுகிறவர்களுக்கு மலர்க் கிரீடங்கள் சூட்டப்பட்டன. இவை பெரும்பாலும் மரங்களிலுள்ள இலைகளால் வேயப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டவை. டெல்ஃபியில் நடைபெற்ற பைத்தியன் விளையாட்டுகளில் வெற்றிபெற்றவர்கள் புன்னை இலை கிரீடத்தைப் பரிசாக பெற்றனர். ஒலிம்பியன் விளையாட்டுகளில் காட்டொலிவ இலை கிரீடமும் இஸ்திமியன் விளையாட்டுகளில் பைன் இலை கிரீடமும் பரிசாக அளிக்கப்பட்டன. “போட்டியாளர்களை ஊக்குவிப்பதற்காக ஸ்டேடியத்தில் ஒரு மேசையில் அல்லது முக்காலியில் அவர்களுடைய கண்களில் படும் விதத்தில் கிரீடங்கள், வெற்றி பரிசுகள், குருத்தோலைகள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன” என்கிறார் ஒரு பைபிள் கல்விமான். வெற்றி வீரருக்கு கிரீடம் அணிவிப்பது கெளரவ சின்னமாக கருதப்பட்டது. அவர் வெற்றிவாகை சூடியவராய் இரதத்தில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்.
இதை மனதில் வைத்து கொரிந்திய வாசகர்களிடம் பவுல் இவ்வாறு கேட்டார்: “பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். . . . அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.” (1 கொரிந்தியர் 9:24, 25; 1 பேதுரு 1:3, 4) என்னே வேறுபாடு! பண்டைய போட்டி விளையாட்டுகளில் ஈடுபட்டவர்களுக்கு காத்திருந்த பரிசு வாடிப்போகும் கிரீடங்கள்; ஆனால் ஜீவனுக்கான ஓட்டத்தில் இறுதி வரை ஓடுகிறவர்களுக்கு காத்திருக்கும் பரிசோ வாடாது.
மேன்மை பொருந்திய இந்தக் கிரீடத்தைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு எழுதினதாவது: “அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.” (1 பேதுரு 5:4) இந்த உலகம் தர முன்வரும் எந்த பரிசையாவது, கிறிஸ்துவோடு பரலோக மகிமையில் அழியா வாழ்க்கை என்ற பரிசோடு ஒப்பிட முடியுமா?
இன்று, கிறிஸ்தவ ஓட்டத்தில் ஏராளமானோர் ஓடுகின்றனர்; இவர்களில் பெரும்பாலானவர்கள் பரலோக வாழ்க்கைக்காக ஆவிக்குரிய குமாரர்களாக கடவுளால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் அல்ல. எனவே சாவாமை என்ற பரிசை எதிர்பார்த்து அவர்கள் ஓடவில்லை. ஆனால் அவர்களுக்கும் ஒப்பற்ற பரிசை தர கடவுள் காத்திருக்கிறார். பரலோக ஆட்சியில் பூங்காவனம் போன்ற பரதீஸிய பூமியில் பரிபூரணமான வாழ்க்கை—நித்திய வாழ்க்கை—என்பதே அந்தப் பரிசு. எனவே, பரலோகத்திலோ பூமியிலோ எந்தப் பரிசை பெறுவதற்காக ஒரு கிறிஸ்தவன் பிரயாசப்பட்டாலும் சரி, போட்டி விளையாட்டுகளில் ஈடுபடுபவரை விடவும் அதிக மன உறுதியோடு, சுறுசுறுப்பாக ஓட வேண்டும். ஏன்? ஏனென்றால் அந்தப் பரிசு ஒருபோதும் வாடாதது; “நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.”—1 யோவான் 2:25.
ஜீவ ஓட்டப் பந்தயத்திலுள்ள கிறிஸ்தவருக்கு இப்படிப்பட்ட ஒப்பற்ற பரிசு காத்திருப்பதனால் இந்த உலகத்தின் கவர்ச்சிகளை அவர் எவ்வாறு கருத வேண்டும்? பவுலின் மனநிலை அவருக்குத் தேவை. “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். . . . அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்” என அவர் சொன்னார். அவர் சொன்ன விதமாகவே எவ்வளவு பிரயாசப்பட்டு ஓடினார்! “சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, . . . பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” (பிலிப்பியர் 3:8, 11, 13, 14) பவுலின் கண்கள் பரிசின்மீதே நோக்கமாக இருந்தது. நாமும் அப்படியே செய்வோமாக.
நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரி
பண்டைய விளையாட்டுகளில் வெற்றி வீரர்களுக்கு பாராட்டுகள் வந்து குவிந்தன. கவிஞர்கள் அவர்களைப் புகழ்ந்து பாடினர். சிற்பிகள் அவர்களை சிலை வடித்தனர். அவர்கள் “புகழ் மழையில் நனைந்தனர், பொது மக்களின் மத்தியில் அதிக பிரபலமானவர்களாக திகழ்ந்தனர்” என்று சரித்திராசிரியர் வையேரா ஓலிவோவா கூறுகிறார். வெற்றிவீரர்களாக விளங்கும் இளைய தலைமுறையினருக்கு அவர்கள் இலட்சிய புருஷர்கள்.
அப்படியென்றால் கிறிஸ்தவர்கள் பார்த்து பின்பற்றும் முன்மாதிரியானவர், ‘வெற்றிவீரர்’ யார்? அவரை அடையாளம் காட்டுபவராய் பவுல், “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையை சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்” என கூறினார். (எபிரெயர் 12:1, 2) நமக்கு முன்மாதிரியாய் திகழ்பவர் இயேசு கிறிஸ்துவே. நித்திய ஜீவனுக்காக ஓடும் பந்தயத்தில் நாம் வெற்றிவாகை சூட அவரை அச்சுப்பிசகாமல் பின்பற்றுவது அவசியம். அதற்கு சுவிசேஷ பதிவுகளை தவறாமல் வாசித்து, அவருடைய வழிகளை எவ்வாறு பின்பற்றலாம் என்பதை தியானிப்பது உதவும். அப்போது இயேசு கிறிஸ்து எப்படி கடவுளுக்கு கீழ்ப்படிந்திருந்தார், தம்முடைய பொறுமையின் மூலம் விசுவாசத்தை எப்படி நிரூபித்தார் என்பதை சரிவர புரிந்துகொள்வோம். அவருடைய பொறுமைக்குக் கிடைத்த பரிசு: யெகோவா தேவனின் அங்கீகாரமும் அநேக ஒப்பற்ற சிலாக்கியங்களும்.—பிலிப்பியர் 2:9-11.
இயேசுவிடம் உயர்ந்தோங்கி நிற்கும் குணம் அவருடைய அன்பே என்பதில் சந்தேகமில்லை. “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” என்றார் அவர். (யோவான் 15:13) நம்முடைய சத்துருக்களையும் சிநேகிக்கும்படி சொல்லி “அன்பு” என்ற வார்த்தைக்கு அவர் புதிய இலக்கணம் வகுத்தார். (மத்தேயு 5:43-48) தம்முடைய பரம தந்தையிடம் அவருக்கிருந்த அன்பு, அவருடைய சித்தத்தை சந்தோஷத்தோடு செய்ய அவருக்கு உதவியது. (சங்கீதம் 40:9, 10; நீதிமொழிகள் 27:11) ஜீவனுக்கான இக்கடினமான ஓட்டத்தில், இயேசுவை நம் முன்மாதிரியாக வைத்து, அவர் ஓடிய வேகத்திலேயே நாமும் ஓடினால், கடவுளையும் நம்முடைய அயலாரையும் நேசிப்போம், நம் பரிசுத்த சேவையில் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடைவோம். (மத்தேயு 22:37-39; யோவான் 13:34; 1 பேதுரு 2:21) முடியாததை செய்யும்படி இயேசு நம்மிடம் கேட்க மாட்டார் என்பதை மனதில் வைக்க வேண்டும். “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; . . . உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது” என அவர் நமக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார்.—மத்தேயு 11:28-30.
முடிவு வரை பந்தயத்தில் ஓடும் அனைவருக்கும் பரிசு உண்டு; அப்பரிசின்மீது இயேசுவைப் போல நாமும் நம் மனதையும் இதயத்தையும் ஒருமுகப்படுத்த வேண்டும். (மத்தேயு 24:13) சட்டதிட்டங்களைக் கடைப்பிடித்து, பாரமான எல்லாவற்றையும் களைந்துபோட்டு, பொறுமையோடே ஓடினால் வெற்றி நமதே; அதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். நம் கண் முன் உள்ள பரிசு இருகரம் நீட்டி வா என அழைக்கிறது! அதனால் நம்மில் பொங்கும் சந்தோஷத்தால் புதுபலம் கிடைக்கிறது, இச்சந்தோஷம் ஓட்டப் பாதையில் தொடர்ந்து ஓடுவதை சுலபமாக்குகிறது.
[பக்கம் 29-ன் படம்]
கிறிஸ்தவ ஓட்டமும் நீண்ட தூரம் ஓட்டம், அதற்கு பொறுமை தேவை
[பக்கம் 30-ன் படம்]
வாடும் கிரீடத்தைப் பெற்ற விளையாட்டு வீரர்களைப் போல் இல்லாமல், கிறிஸ்தவர்கள் வாடாத பரிசை எதிர்நோக்கலாம்
[பக்கம் 31-ன் படம்]
முடிவு வரை சகிக்கும் அனைவருக்கும் பரிசு உண்டு
[பக்கம் 28-ன் படத்திற்கான நன்றி]
Copyright British Museum