‘உங்களில் ஞானியும் விவேகியுமாய் இருப்பவர் யார்?’
“உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.” —யாக். 3:13.
1, 2. ஞானிகளாய் கருதப்படுகிற அநேகரைக் குறித்து என்ன சொல்லலாம்?
உங்கள் கண்ணுக்கு பெரிய ஞானியாகத் தெரிபவர் யார்? உங்கள் பெற்றோரா, வயது முதிர்ந்த ஒருவரா அல்லது கல்லூரிப் பேராசிரியரா? உங்களுடைய குடும்பம், கல்வி, வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றைப் பொறுத்து நீங்கள் ஒருவரை ஞானமுள்ளவராகக் கருதலாம். என்றாலும், கடவுளுடைய பார்வையில் யார் உண்மையிலேயே ஞானமுள்ளவர் என்பதற்குத்தான் அவருடைய ஊழியர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.
2 இந்த உலகின் பார்வையில் ஞானிகளாக இருக்கிற எல்லாருமே கடவுளுடைய பார்வையில் ஞானிகள் அல்லர். உதாரணமாக, யோபுவைப் பார்க்க வந்த மூன்று நண்பர்கள் ஞானமாகப் பேசுவதாய் நினைத்துக்கொண்டார்கள். ஆனால் அவர்களிடம் பேசிய யோபு, “உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன்” என்று முடிவாகச் சொன்னார். (யோபு 17:10) கடவுளைப் பற்றிய அறிவை அறவே ஒதுக்கித்தள்ளிய சிலரைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரரானார்கள்.’ (ரோ. 1:22) அதுமட்டுமல்ல, ‘தங்கள் பார்வைக்கு ஞானிகளாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ’ என்று யெகோவாதாமே ஏசாயா தீர்க்கதரிசி மூலமாய் தெள்ளத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.—ஏசா. 5:21.
3, 4. ஒருவர் உண்மையிலேயே ஞானமுள்ளவராய் இருப்பதற்கு என்ன தேவைப்படுகிறது?
3 உண்மையிலேயே ஞானமுள்ளவராக இருப்பவர் கடவுளுடைய தயவைப் பெற்றுக்கொள்வார். அத்தகைய ஞானத்தை ஒருவர் எப்படி பெறுகிறார் என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். அதை நன்கு அறிந்துகொள்வதற்கு நீதிமொழிகள் 9:10 நமக்கு உதவுகிறது. “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு” என அது சொல்கிறது. அப்படியென்றால், கடவுள்மீது தகுந்த பயமும் அவருடைய நெறிமுறைகள்மீது மதிப்புமரியாதையும் உடைய ஒருவரே உண்மையில் ஞானமுள்ளவர். என்றாலும், கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதையும் அவர் நெறிமுறைகளை வகுத்திருக்கிறார் என்பதையும் நம்பினால் மட்டும் போதாது. இதைக் குறித்து சீஷனாகிய யாக்கோபு குறிப்பிட்டுள்ள விஷயம் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. (யாக்கோபு 3:13-ஐ வாசியுங்கள்.) “[அவன்] தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்” என்று அவர் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். ஆகவே, உண்மையான ஞானம் ஒவ்வொரு நாளும் நாம் பேசும் பேச்சிலும் செய்யும் செயலிலும் வெளிப்பட வேண்டும்.
4 விவேகத்துடன் காரியங்களைச் சீர்தூக்கிப்பார்ப்பதும், அறிவையும் புரிந்துகொள்ளும் திறனையும் சிறந்த முறையில் பயன்படுத்துவதும் உண்மையான ஞானத்தில் உட்பட்டிருக்கின்றன. நமக்கு அப்படிப்பட்ட ஞானம் இருக்கிறது என்பதைக் காட்டும் செயல்கள் யாவை? ஞானமுள்ளவர்களுடைய செயலில் பளிச்சென தெரியும் பல காரியங்களை யாக்கோபு இங்கு பட்டியலிடுகிறார்.a சக விசுவாசிகளிடத்திலும் மற்றவர்களிடத்திலும் நல்ல முறையில் நடந்துகொள்வதற்கு நமக்கு உதவுகிற எத்தகைய காரியங்களை அவர் குறிப்பிட்டார்?
ஞானிகளை அடையாளங்காட்டும் செயல்கள்
5. உண்மையிலேயே ஞானமுள்ள ஒருவர் எப்படி நடந்துகொள்வார்?
5 ஞானத்தை நன்னடத்தையோடு யாக்கோபு தொடர்புபடுத்திப் பேசுவதை நாம் மீண்டும் சிந்தித்துப் பார்க்கலாம். யெகோவாவுக்குப் பயப்படுவது ஞானத்தின் ஆரம்பமாக இருப்பதால், ஞானமுள்ள நபர் கடவுளுடைய வழிகளுக்கும் நெறிமுறைகளுக்கும் இசைவாக நடக்க முயலுகிறார். தெய்வீக ஞானம் நமக்குப் பிறவியிலேயே வந்துவிடுவதில்லை. இருந்தாலும், தவறாமல் பைபிள் படித்து, படித்தவற்றை தியானித்துப் பார்ப்பதன்மூலம் நாம் அத்தகைய ஞானத்தைப் பெறலாம். அப்படிச் செய்வது எபேசியர் 5:1-ல் சொல்லப்பட்டுள்ளபடி ‘தேவனைப் பின்பற்றுகிறவர்களாவதற்கு’ நமக்கு உதவும். நாம் எந்தளவுக்கு யெகோவாவைப் பின்பற்றுகிறோமோ அந்தளவுக்கு ஞானமுள்ளவர்களாகச் செயல்படுவோம். யெகோவாவின் வழிகள் மனிதனின் வழிகளைவிட மிக மிக உயர்ந்தவை. (ஏசா. 55:8, 9) ஆகவே, யெகோவா காரியங்களை எப்படிச் செய்கிறாரோ அப்படியே நாமும் செய்தால், நாம் மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்டவர்கள் என்பதை சத்தியத்தில் இல்லாத ஆட்கள் புரிந்துகொள்வார்கள்.
6. சாந்த குணத்தைக் காட்டும் ஒருவர் யெகோவாவைப் பின்பற்றுகிறார் என்று எப்படிச் சொல்லலாம், ஒரு கிறிஸ்தவர் இக்குணத்தை எப்படிக் காட்டுகிறார்?
6 யெகோவாவைப் பின்பற்றி நடப்பதற்கு ஒரு வழி, ‘ஞானத்திற்குரிய சாந்தத்தை’ பெற்றிருப்பதே என யாக்கோபு குறிப்பிடுகிறார். சாந்த குணத்தைக் காட்டும் ஒரு கிறிஸ்தவர் மென்மையாக நடந்துகொள்கிறார்; அதே சமயத்தில், பைபிளின் நெறிமுறைகளையும் நியமங்களையும் கடைப்பிடிப்பதில் உறுதியாயும் இருக்கிறார்; இது சமநிலையுடன் நடந்துகொள்ள அவருக்கு உதவுகிறது. யெகோவா வல்லமையில் ஈடிணையற்றவராக இருந்தாலும்கூட சாந்தமுள்ளவராய் இருக்கிறார்; எனவே, அவரை அணுகுவதற்கு நாம் பயப்படுவதில்லை. அவருடைய மகனும்கூட அவரது சாந்த குணத்தை அப்படியே பிரதிபலித்தார். அதனால்தான், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்” என்று அவரால் சொல்ல முடிந்தது.—மத். 11:28, 29; பிலி. 2:5-8.
7. மோசேயை சாந்த குணத்திற்கு சிறந்த மாதிரியாக நாம் ஏன் கருத வேண்டும்?
7 சாந்த குணத்தைக் காட்டுவதில் தலைசிறந்து விளங்கிய இன்னும் சிலரைப்பற்றி பைபிள் சொல்கிறது. அவர்களில் மோசேயும் ஒருவர். அவரிடம் எக்கச்சக்கமான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. என்றபோதிலும், அவர் ‘பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவராயிருந்தார்’ என பைபிள் விவரிக்கிறது. (எண். 11:29; 12:3) அதுமட்டுமல்ல, தம்முடைய சித்தத்தைச் செய்துமுடிப்பதற்கு யெகோவா அவருக்குக் கொடுத்த தைரியத்தையும் சிந்தித்துப் பாருங்கள். ஆம், யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற சாந்த குணமுள்ளவர்களைப் பயன்படுத்த விரும்பினார்.
8. அபூரண மனிதரால் ‘ஞானத்திற்குரிய சாந்தத்தை’ எப்படி வெளிக்காட்ட முடியும்?
8 அபூரண மனிதரால் ‘ஞானத்திற்குரிய சாந்தத்தை’ வெளிக்காட்ட முடியும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. நம்மைப்பற்றி என்ன சொல்லலாம்? சாந்த குணத்தைக் காட்டுவதில் நாம் எப்படி முன்னேறலாம்? சாந்த குணம், யெகோவாவுடைய பரிசுத்த ஆவியின் கனியில் ஒரு பாகமாகும். (கலா. 5:22, 23) ஆகவே, அவருடைய ஆவிக்காக நாம் ஜெபிக்கலாம்; அதோடு, ஆவியின் கனியை வெளிக்காட்ட நாம் மும்முரமாக முயற்சிக்கலாம். சாந்த குணத்தைக் காட்டுவதில் முன்னேற கடவுள் நமக்கு உதவுவார் என்ற நம்பிக்கையுடன் இவ்வாறு செய்யலாம். சங்கீதக்காரன் அளித்துள்ள உறுதி இதைச் செய்ய நமக்குத் தூண்டுகோலாய் இருக்கிறது. ‘சாந்த குணமுள்ளவர்களுக்கு [கடவுள்] தமது வழியைப் போதிக்கிறார்’ என்று அவர் கூறினார்.—சங். 25:9.
9, 10. ஆவியின் கனியான சாந்த குணத்தை வெளிக்காட்ட எப்படிப்பட்ட முயற்சி தேவைப்படுகிறது, ஏன்?
9 இருந்தாலும், இந்த விஷயத்தில் முன்னேற ஊக்கமான முயற்சி தேவைப்படலாம். நம்முடைய கலாச்சாரம், வளர்ப்புச் சூழல் ஆகியவற்றின் காரணமாக, நம்மில் சிலருக்கு சாந்த குணத்தைக் காட்டும் இயல்பு இல்லாமல் இருக்கலாம். அதுமட்டுமல்ல, நம்மோடு பழகுகிற ஆட்கள், சாந்த குணத்தை ஆமோதிக்காமல் இருக்கலாம்; “முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்” என்பது போன்ற கருத்துகளை அவர்கள் தெரிவிக்கலாம். ஆனால், இது ஞானமான கருத்து என்று நினைக்கிறீர்களா? உங்களுடைய வீட்டில் சிறியதாக தீப்பிடித்துவிட்டது என வைத்துக்கொள்ளுங்கள். அதை அணைத்துப்போட எண்ணெய் ஊற்றுவீர்களா அல்லது குளிர்ந்த நீரை ஊற்றுவீர்களா? எண்ணெய் ஊற்றினால் நிலைமை இன்னும் மோசமாகும்; ஆனால், குளிர்ந்த நீரை ஊற்றினால் ஒருவேளை தீயை அணைத்துப்போட முடியும். பைபிளும்கூட அவ்வாறே நமக்கு ஆலோசனை தருகிறது. “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழும்பும்” என்று அது சொல்கிறது. (நீதி. 15:1, 18) அடுத்த முறை சபையில் உள்ளவர்களோ மற்றவர்களோ கோபத்தைத் தூண்டுமளவுக்கு உங்களிடம் நடந்துகொண்டால், சாந்தமாக நடந்துகொள்வதன்மூலம் நாம் உண்மையிலேயே ஞானமுள்ளவர்கள் என்பதைக் காட்ட முடியுமா?—2 தீ. 2:24.
10 மேற்குறிப்பிட்டுள்ளபடி, உலகத்தின் மனப்பான்மையை வெளிக்காட்டுகிற அநேகர், மென்மையாகவும் சமாதானமாகவும் சாந்தமாகவும் நடந்துகொள்வதில்லை; மாறாக, கடுகடுப்பாகப் பேசுகிறவர்களாயும் கர்வம் கொண்டவர்களாயும் இருக்கிறார்கள். யாக்கோபு இதை அறிந்திருந்தார். அப்படிப்பட்ட மனப்பான்மை சபையிலுள்ளவர்களையும் தொற்றிக்கொள்ளக்கூடாது என்பதற்காக அவர் எச்சரிப்புகளைக் கொடுத்தார். அவர் கொடுத்த எச்சரிப்புகளிலிருந்து இன்னும் என்னென்ன விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்?
ஞானமற்றவர்களை அடையாளங்காட்டும் குணங்கள்
11. தெய்வீக ஞானத்திற்கு நேர்மாறான குணங்கள் யாவை?
11 தெய்வீக ஞானத்திற்கு நேர்மாறான குணங்களைப்பற்றி யாக்கோபு ஒளிவுமறைவின்றி எழுதினார். (யாக்கோபு 3:14-ஐ வாசியுங்கள்.) வைராக்கியமும் விரோதமும் மாம்சத்திற்குரிய குணங்கள், அவை ஆன்மீக குணங்கள் அல்ல. மாம்சத்திற்குரிய சிந்தை மேலோங்கினால் என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ள இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எருசலேமிலுள்ள பரிசுத்த கல்லறை சர்ச்சின் சில பகுதிகளை ஆறு “கிறிஸ்தவ” பிரிவினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இந்த சர்ச், இயேசு கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப் பிரிவினருக்கிடையே விரோதம் என்பது ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது. அங்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தைப்பற்றி 2006-ல் டைம் பத்திரிகை இவ்வாறு சொன்னது: அங்குள்ள துறவிகள் “ஒருவரையொருவர் பெரிய பெரிய மெழுகுவர்த்தி ஸ்டாண்டினால் அடித்து . . . மணிக்கணக்காக கூச்சல் போட்டுக்கொண்டிருந்தார்கள்.” அவர்களுக்கிடையே அந்தளவுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் அந்த சர்ச்சின் சாவி ஒரு முஸ்லீம் நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
12. ஞானமாக நடந்துகொள்ளாவிட்டால் என்ன நேரிடலாம்?
12 உண்மையான கிறிஸ்தவ சபையில் இந்தளவுக்கு விரோதத்தை யாருமே வெளிக்காட்டக் கூடாது. இருந்தாலும், அபூரணத்தின் காரணமாக, சில சமயங்களில் சிலர் தங்களுடைய கருத்துகளில் விடாப்பிடியாக இருக்கலாம். இது சிற்சில சண்டை சச்சரவுகளுக்கு வழிவகுக்கலாம். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை கொரிந்து சபையில் கவனித்த அப்போஸ்தலன் பவுல், இவ்வாறு எழுதினார்: “பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?” (1 கொ. 3:3) முதல் நூற்றாண்டிலிருந்த இச்சபையில் இப்படிப்பட்ட வருந்தத்தக்க சூழ்நிலை கொஞ்ச காலத்திற்கு நீடித்தது. ஆகவே, இன்று சபைக்குள் இப்படிப்பட்ட மனப்பான்மை நுழைந்துவிடாதபடி நாம் கவனமாய் இருப்பது அவசியம்.
13, 14. மாம்சத்திற்குரிய மனப்பான்மை சபையை எப்படிப் பாதிக்கலாம் என்பதற்கு உதாரணங்களைக் கொடுங்கள்.
13 அப்படிப்பட்ட மனப்பான்மை சபைக்குள் எப்படி மெதுமெதுவாக நுழைந்துவிடலாம்? சின்னச் சின்ன விஷயங்களில்தான் இது ஆரம்பமாகிறது. உதாரணமாக, ஒரு ராஜ்ய மன்றம் கட்டப்படுகையில், காரியங்களை எப்படிச் செய்வது என்பதில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஒரு சகோதரருடைய கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போகையில் அவருடைய மனதில் விரோதம் தலைதூக்கலாம்; ஒருவேளை, அவர்களுடைய தீர்மானங்கள் தவறானவை என்று அடித்துக்கூறி அவற்றை ஏற்றுக்கொள்ள அவர் மறுக்கலாம். கட்டுமான வேலையில் தொடர்ந்து ஈடுபடவும்கூட அவர் மறுத்துவிடலாம்! அவ்வாறு நடந்துகொள்பவர், சபை சம்பந்தப்பட்ட ஒரு வேலையைச் செய்யும்போது, ஒரு குறிப்பிட்ட முறையைப் பயன்படுத்துவது அல்ல, சபையின் சமாதானத்தைக் கட்டிக்காப்பதுதான் முக்கியம் என்பதை மறந்துவிடலாம். விரோதத்தை அல்ல, சாந்த குணத்தையே யெகோவா ஏற்றுக்கொள்கிறார்.—1 தீ. 6:4, 5.
14 மற்றொரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சபையிலுள்ள ஒரு சகோதரர் பல வருடங்களாக மூப்பராய் சேவை செய்துவந்திருக்கலாம். ஆனால், இப்போது மூப்பருக்குரிய வேதப்பூர்வ தகுதிகள் அவரிடம் இல்லாதிருப்பதை மற்ற மூப்பர்கள் கவனிக்கலாம். அவருக்கு ஏற்கெனவே ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருந்தும் அதை அவர் கடைப்பிடிக்காமல் இருப்பதை வட்டாரக் கண்காணியும் கவனிக்கிறார். பிறகு, மற்ற மூப்பர்கள் சொல்கிறபடி அவரை மூப்பர் என்ற பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கிறார். அதை அந்த நபர் எப்படிக் கருதுவார்? மூப்பர்களின் ஒருமித்த தீர்மானத்தையும் அவர்கள் தரும் வேதப்பூர்வ ஆலோசனையையும் தாழ்மையோடும் சாந்தத்தோடும் அவர் ஏற்றுக்கொள்வாரா? அதோடு, மீண்டும் மூப்பராக சேவை செய்வதற்கு ஏற்ற வேதப்பூர்வ தகுதிகளை எட்டுவதற்கு அவர் முயலுவாரா? அல்லது தன்னுடைய விசேஷித்த பொறுப்பை இழந்துவிட்டதை நினைத்து மனதில் வன்மம் கொள்வாரா, பொறாமையால் கொதிப்பாரா? ஒரு மூப்பருக்குரிய தகுதி அவருக்கு இல்லை என்று மற்ற எல்லா மூப்பர்களும் சொல்லும்போது, தனக்கு தகுதி இருக்கிறது என அவர் ஏன் முரண்டுபிடிக்க வேண்டும்? மனத்தாழ்மையைக் காட்டுவதும் புரிந்துகொள்ளுதலோடு நடப்பதும் எவ்வளவு ஞானமானது!
15. யாக்கோபு 3:15, 16-ல் கொடுக்கப்பட்டுள்ள ஏவப்பட்ட ஆலோசனை மிகவும் முக்கியமானதென நீங்கள் கருதுவதற்குக் காரணம் என்ன?
15 வேறு பல சூழ்நிலைகளிலும் ஒருவர் இப்படிப்பட்ட மனப்பான்மையைக் காட்டலாம். ஆனால், எப்படிப்பட்ட சூழ்நிலை உருவானாலும், இத்தகைய சுபாவத்தைத் தவிர்ப்பதற்கு நாம் கடுமையாக முயல வேண்டும். (யாக்கோபு 3:15, 16-ஐ வாசியுங்கள்.) இப்படிப்பட்ட சுபாவம் “லெளகிக சம்பந்தமானது” என சீஷனாகிய யாக்கோபு சொல்கிறார்; ஏனெனில், அது தெய்வீக ஞானத்தோடு எந்தத் தொடர்பும் அற்றது. அது, ‘ஜென்ம சுபாவத்துக்குரியது’ என்று விவரிக்கப்படுவதால், புத்தியற்ற மிருகங்களின் சுபாவத்திற்கு ஒத்ததாயும் இருக்கிறது. அப்படிப்பட்ட மனப்பான்மை ‘பேய்த்தனமானது’; ஏனெனில், கடவுளுடைய எதிரிகளான பேய்களின் சுபாவத்தையே அது பிரதிபலிக்கிறது. ஒரு கிறிஸ்தவர் இத்தகைய சுபாவத்தை வெளிக்காட்டுவது எவ்வளவு மோசமாக இருக்கும், அல்லவா?
16. என்னென்ன மாற்றங்களை நாம் செய்ய வேண்டியிருக்கலாம், அதை எப்படி வெற்றிகரமாகச் செய்யலாம்?
16 சபையிலுள்ள ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட சுபாவம் தங்களிடம் இருக்கிறதா என பரிசோதித்துப் பார்த்து, அதை விட்டொழிக்க முயல வேண்டும். சபையில் போதிப்பவர்களான கண்காணிகள் இத்தகைய கெட்ட சுபாவத்தை விட்டொழிப்பது அவசியம் என்பதை உணர வேண்டும். நம்முடைய அபூரணத்தின் காரணமாகவும் இந்த உலகத்தினுடைய செல்வாக்கின் காரணமாகவும் இச்சுபாவத்தை மாற்றிக் கொள்வது சுலபமல்ல. அப்படிச் செய்வது, சேறும் சகதியும் நிறைந்த ஒரு மேட்டுப் பகுதியில் ஏற முயல்வதைப்போல் இருக்கலாம். பிடித்துக்கொள்வதற்கு எதுவும் இல்லையெனில் நாம் சரிந்து கீழே விழுந்துவிடலாம். என்றாலும், பைபிளில் காணப்படுகிற ஆலோசனைகளை அச்சுப்பிசகாமல் பின்பற்றுவதன் மூலமும், உலகெங்குமுள்ள கடவுளுடைய சபை அளிக்கிற உதவியின் மூலமும் நாம் முன்னோக்கிச் செல்ல முடியும்.—சங். 73:23, 24.
ஞானமுள்ளவர்கள் வெளிக்காட்ட வேண்டிய குணங்கள்
17. அசுத்தமான காரியங்களைச் செய்வதற்கான ஆசை ஏற்படுகையில் ஞானமுள்ளவர்கள் பொதுவாக எப்படி நடந்துகொள்கிறார்கள்?
17 யாக்கோபு 3:17-ஐ வாசியுங்கள். ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ பெற்ற ஒருவரிடம் காணப்படுகிற குணங்கள் சிலவற்றை நாம் இப்போது சிந்தித்துப் பார்ப்பது பயனுள்ளது. சுத்தமாயிருப்பதற்கு அதாவது, கற்புடன் இருப்பதற்கு, நம்முடைய செயல்களும் எண்ணங்களும் தூய்மையானதாக, கறைபடாததாக இருக்க வேண்டும். இதற்கு, அசுத்தமான காரியங்களை உடனடியாக ஒதுக்கித்தள்ளுவது அவசியம். இது தானாகவே செய்கிற ஒரு காரியத்தைப்போல் இருக்க வேண்டும். உங்களுடைய கண்ணுக்கு நேராக ஒருவர் விரலை நீட்டுகிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுடைய தலையைச் சட்டென்று திருப்பிக்கொள்வீர்கள், அல்லது அவருடைய கையை உடனடியாகத் தடுப்பீர்கள். இது நீங்கள் தானாகவே செய்கிற செயல், ஆறஅமர யோசித்துச் செய்கிற செயலல்ல. அசுத்தமான காரியங்களைச் செய்வதற்கான ஆசை ஏற்படுகையிலும் இதையே நாம் செய்ய வேண்டும். கற்பைக் காத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியும் அசுத்தமான காரியங்களை ஒதுக்கித்தள்ளும்படி தானாகவே நம்மைத் தூண்ட வேண்டும். (ரோ. 12:9) இவ்வாறு செயல்பட்டவர்களைப் பற்றிய உதாரணங்கள் பைபிளில் உள்ளன. உதாரணமாக, யோசேப்பும் இயேசுவும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய் திகழ்ந்தவர்கள்.—ஆதி. 39:7-9; மத். 4:8-10.
18. (அ) சமாதானமுள்ளவர்கள் (ஆ) சமாதானத்தை நடப்பிக்கிறவர்கள் ஆகியவற்றின் அர்த்தம் என்ன?
18 தெய்வீக ஞானத்தை வெளிக்காட்டுவதற்கு நாம் சமாதானமுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். அப்படியானால், நாம் தொட்டதற்கெல்லாம் சண்டை போடுகிறவர்களாக, வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்குச் செல்கிறவர்களாக, அல்லது சமாதானத்தைக் குலைத்துப்போடுகிற ஏதாவதொரு காரியத்தைச் செய்கிறவர்களாக இருக்கக்கூடாது என்பதையும் இது குறிக்கிறது. இந்தக் குறிப்பை மேலுமாக விளக்கி யாக்கோபு இவ்வாறு சொல்கிறார்: “நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.” (யாக். 3:18) ‘சமாதானத்தை நடப்பிக்கிறவர்கள்’ என இங்கு சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். சபையில் சமாதானத்தைக் காத்துக்கொள்கிறவர்கள் என்று பேரெடுத்திருக்கிறோமா அல்லது சமாதானத்தைக் குலைத்துப்போடுகிறவர்கள் என்று பேரெடுத்திருக்கிறோமா? மற்றவர்களுக்கும் நமக்கும் இடையே அடிக்கடி மனஸ்தாபங்கள் ஏற்படுகின்றனவா? நாம் எளிதில் புண்பட்டுவிடுகிறோமா அல்லது மற்றவர்களைப் புண்படுத்திவிடுகிறோமா? ‘இதுதான் என் குணம், இதைப் புரிந்துகொண்டு மற்றவர்கள் என்னிடம் நடந்துக்கொள்ளட்டும்’ என்று நாம் நினைக்கிறோமா, அல்லது மற்றவர்களை எளிதில் புண்படுத்தி விடுகிற நம் சுபாவத்தை விட்டுவிட தாழ்மையோடு முயலுகிறோமா? மற்றவர்களிடம் நாமே வலியச் சென்று சமாதானமாவதற்கு முயலுகிறவர்களாகவும் அவர்களுடைய தவறுகளைப் பெரிதுபடுத்தாமல், மன்னிக்கத் தயாராய் இருக்கிறவர்களாகவும் அறியப்படுகிறோமா? இந்த விஷயத்தில் தெய்வீக ஞானத்தைக் காட்ட வேண்டியுள்ளதா என்பதை அறிய நம்மை நாமே எதார்த்தமாய்ச் சீர்தூக்கிப்பார்ப்பது உதவும்.
19. ஒருவர் எப்போது நியாயமாக நடப்பவர் என்ற பெயரெடுக்கிறார்?
19 சாந்தமாய், அதாவது நியாயமாய் நடந்துகொள்வதும்கூட தெய்வீக ஞானத்தை வெளிக்காட்டுகிறது என யாக்கோபு குறிப்பிட்டார். பைபிள் நியமங்களை மீறாத விஷயத்தில், மற்றவர்களுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்கிறவர்கள் என நாம் அறியப்படுகிறோமா அல்லது நம்முடைய சொந்த நெறிமுறைகளை மற்றவர்கள்மீது திணிப்பவர்களாக அறியப்படுகிறோமா? மென்மையானவர், எளிதில் அணுக முடிந்தவர் என்று நம்மைப்பற்றி எல்லாரும் சொல்கிறார்களா? இவையாவும் நாம் நியாயமாக நடந்துகொள்ளக் கற்றுக்கொண்டவர்கள் என்பதைக் காட்டுகின்றன.
20. இப்போது சிந்தித்த தெய்வீக குணங்களை வெளிக்காட்டுவதால் என்ன பயன்?
20 சகோதர சகோதரிகள் யாக்கோபு எழுதியுள்ள இத்தகைய குணங்களை வெளிக்காட்ட ஊக்கமாய் முயலும்போது சபையில் எவ்வளவு இனிமையான சூழல் நிலவும்! (சங். 133:1-3) சாந்தமாயும் சமாதானமாயும் நியாயமாயும் நடந்துகொள்ளும்போது ஒருவரோடொருவர் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடியும்; அது, நாம் ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தைப்’ பெற்றிருக்கிறோம் என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டும். மற்றவர்களை யெகோவா பார்க்கும்விதமாக நாமும் பார்க்கக் கற்றுக்கொள்வது இவ்விஷயத்தில் நமக்கு எப்படி உதவும் என்பதை அடுத்தக் கட்டுரையில் காணலாம்.
[அடிக்குறிப்பு]
a மூப்பர்களை, அதாவது சபையின் ‘போதகர்களை’ மனதில் வைத்தே யாக்கோபு இதை எழுதியிருக்கிறார் என்பதைச் சூழமைவு காட்டுகிறது. (யாக். 3:1) இவர்கள் தெய்வீக ஞானத்தைக் காட்டுவதில் மாதிரிகளாகத் திகழ்வது அவசியம்; என்றாலும் இந்த ஆலோசனையிலிருந்து நாம் எல்லாருமே பயனடையலாம்.
உங்களால் விளக்க முடியுமா?
• ஒரு கிறிஸ்தவரை எது உண்மையிலேயே ஞானமுள்ளவராக ஆக்குகிறது?
• தெய்வீக ஞானத்தைக் காட்டுவதில் நாம் எப்படி முன்னேறலாம்?
• ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ வெளிக்காட்டாதவர்களிடத்தில் காணப்படுகிற சுபாவம் என்ன?
• எந்தெந்த குணங்களை இன்னும் நன்கு வளர்த்துக்கொள்ள நீங்கள் தீர்மானித்திருக்கிறீர்கள்?
[பக்கம் 23-ன் படம்]
இன்று சண்டை சச்சரவுகள் எப்படித் தலைதூக்கலாம்?
[பக்கம் 24-ன் படம்]
அசுத்தமான காரியங்களை உடனடியாக ஒதுக்கித்தள்ளுவது நீங்கள் தானாகவே செய்கிற காரியமா?