உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w07 3/15 பக். 12-14
  • அற்புத ஒளியைப் பாருங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அற்புத ஒளியைப் பாருங்கள்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய்”
  • ‘நம்மை விடுதலையாக்குகிற சத்தியம்’
  • நம் பாதைக்கு வெளிச்சம்
  • உலகில் சுடர்களாகப் பிரகாசியுங்கள்
  • ‘உன் கண்களில் தடவிக்கொள்ள மருந்தை விலைக்கு வாங்கிக்கொள்’
  • இருளைப் போக்கும் தெய்வீக ஒளி!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • ஒளி கொண்டுசெல்வோர்—என்ன நோக்கத்துக்காக?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • ‘உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது’
    நம் ராஜ்ய ஊழியம்—2001
  • நம்முடைய ஒளியைத் தொடர்ந்து பிரகாசிக்கச் செய்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—1995
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
w07 3/15 பக். 12-14

அற்புத ஒளியைப் பாருங்கள்!

எப்போதாவது இருட்டில் வழி தெரியாமல் தட்டுத்தடுமாறியிருக்கிறீர்கள் என்றால் அது எந்தளவு நிலைகுலைய வைத்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். ஒளியைப் பார்த்ததும் அடைகிற ஆனந்தத்திற்கு அளவே இருப்பதில்லை! அவ்வாறே, முழுக்க முழுக்க இருளில் விடப்பட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலையில் நீங்கள் இருந்திருக்கலாம். ஒருவேளை ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டு வெளியேற வழிதெரியாமல் திண்டாடியபோது அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்திருக்கலாம். அந்தச் சமயத்தில் மெல்ல மெல்ல ஒளியைப் பார்த்தீர்கள், அதாவது அந்தப் பிரச்சினையைச் சரிசெய்வதற்கான வழியை அறிந்துகொண்டீர்கள். இத்தகைய இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வருவது அற்புதமான ஓர் அனுபவம்.

முதல் நூற்றாண்டில், பெரும்பாலோர் ஆன்மீக இருளில் இருந்தார்கள். தங்களுடைய மத நம்பிக்கைகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு, கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட நபர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: ‘உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான [“அற்புதமான,” பொது மொழிபெயர்ப்பு] ஒளியினிடத்திற்கு [கடவுள்] வரவழைத்தார்.’ (1 பேதுரு 2:9) அவர்கள் செய்த இந்த மாற்றம், கும்மிருட்டிலிருந்து பிரகாசமான ஒளியினிடம் வந்ததைப் போல இருந்தது. எந்த நம்பிக்கையும் இல்லாமல் தன்னந்தனியாக இருந்தவர்கள், பாதுகாப்பான எதிர்கால நம்பிக்கை உடைய குடும்பத்தின் அங்கத்தினர்களாவதைப் போலவும் இருந்தது.​—⁠எபேசியர் 2:1, 12.

“நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய்”

ஆரம்பகால கிறிஸ்தவர்கள் “சத்தியத்தை,” அதாவது உண்மைக் கிறிஸ்தவ விசுவாசத்தைக் கண்டுபிடித்தார்கள். (யோவான் 18:37) அவர்கள் சத்தியத்தின் அற்புத ஒளியைப் பார்த்தார்கள், ஆன்மீக இருளிலிருந்து பிரகாசிக்கும் ஒளியிடம் வர மாற்றங்களைச் செய்தார்கள். எனினும் காலப்போக்கில், சில கிறிஸ்தவர்களிடம் ஆரம்பத்திலிருந்த பக்திவைராக்கியம் தணிந்துவிட்டது. உதாரணத்திற்கு, முதல் நூற்றாண்டின் முடிவில், எபேசு சபையில் முக்கிய பிரச்சினை ஒன்று தலைதூக்கியது. உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து அந்தப் பிரச்சினையை அடையாளம் கண்டுகொண்டு இவ்வாறு சொன்னார்: “நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக.” (வெளிப்படுத்துதல் 2:4, 5) கடவுளிடமும் சத்தியத்திடமும் தங்களுக்கு இருந்த அன்பெனும் தணலை எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் மீண்டும் கொழுந்துவிட்டு எரியும்படி செய்ய வேண்டியிருந்தது.

நம்மைப்பற்றி என்ன சொல்லலாம்? நாமும்கூட ஒளியைப் பார்த்த சமயத்தில், அதாவது கடவுளுடைய வார்த்தையிலுள்ள அற்புதமான சத்தியத்தை அறிந்துகொண்ட சமயத்தில், மகிழ்ச்சி அடைந்தோம். சத்தியத்தை நேசிக்க ஆரம்பித்தோம். ஆனால், பொதுவாக எல்லாருக்கும் வருகிற பிரச்சினைகளை நாமும் சந்திக்கிறபோது சத்தியத்திடமுள்ள நம் அன்பு தணிந்துபோகலாம். இது போதாதென்று, ‘கடைசி நாட்களுக்கே’ உரிய பிரச்சினைகள் வேறு நம்மை வாட்டி வதைக்கலாம். ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்கள்’ நிலவும் உலகில் நாம் வாழ்கிறோம்; அதாவது, “தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்” இருப்பவர்கள் மத்தியில் வாழ்கிறோம். (2 தீமோத்தேயு 3:1, 2; NW) அவர்களுடைய செல்வாக்கு நம்முடைய பக்திவைராக்கியத்தையும் கடவுள்மீதுள்ள அன்பையும் தணித்துவிடலாம்.

ஆரம்பத்திலிருந்த அன்பு நமக்கு இப்போது இல்லாதிருந்தால், ‘நாம் இன்ன நிலைமையிலிருந்து விழுந்தோமென்பதை நினைத்து, மனந்திரும்புவது’ அவசியம். முன்புபோல் ஆன்மீக காரியங்களில் ஆர்வம் காட்டுவது அவசியம். அதோடு, சத்தியத்திடமுள்ள அன்பு தணியாதபடி பார்த்துக்கொள்ளவும் வேண்டும். ஆகவே, எப்போதும் நம்பிக்கையான மனநிலையோடு, சந்தோஷமாய் இருப்பதும், கடவுளிடமும் அவருடைய சத்தியத்திடமும் உள்ள அன்பு தணிந்துவிடாதபடி பார்த்துக்கொள்வதும் நம்மெல்லாருக்கும் எவ்வளவு முக்கியம்!

‘நம்மை விடுதலையாக்குகிற சத்தியம்’

வேதப்பூர்வ சத்தியத்தின் ஒளி அற்புதமானது; ஏனெனில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதகுலத்தைக் குழப்பிக்கொண்டிருந்த முக்கியமான கேள்விகளுக்கு பைபிள் பதில் அளிக்கிறது. அத்தகைய கேள்விகளில் சில: நாம் ஏன் இவ்வுலகில் வாழ்கிறோம்? வாழ்க்கையின் நோக்கமென்ன? ஏன் தீமை இருக்கிறது? மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறதா? பைபிள் கோட்பாடுகள் சம்பந்தமாக அற்புதமான சத்தியங்களை யெகோவா நமக்குக் கற்பித்திருக்கிறார். அதற்கு நாம் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டாமா? நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை மறந்துவிட்டு நன்றிகெட்டவர்களாய் ஒருபோதும் ஆகாதிருப்போமாக!

“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என இயேசு தம் சீஷர்களிடம் சொன்னார். (யோவான் 8:32) இயேசுவின் தியாக பலி, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்கு வழிசெய்திருக்கிறது. அதோடு, அருமையான இந்தச் சத்தியங்கள், இருள் போர்த்திய இந்த உலகின் அறியாமையிலிருந்தும் அநிச்சயமான காரியங்களிலிருந்தும்கூட நம்மை விடுதலை செய்திருக்கின்றன. நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை நன்றியோடு எண்ணிப் பார்ப்பது, யெகோவாவிடமும் அவருடைய வார்த்தையிடமும் உள்ள நம் அன்பைப் பலப்படுத்திக்கொள்ள உதவும்.

தெசலோனிக்கேயிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்[டீர்கள்] . . . அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.” (1 தெசலோனிக்கேயர் 2:13) தெசலோனிக்கேயர்கள், ‘சந்தோஷத்தோடே திருவசனத்தைக்’ கேட்டு, ‘ஏற்றுக்கொண்டார்கள்.’ அவர்கள் இனிமேலும் ‘அந்தகாரத்தில்,’ அதாவது, இருளில் இருக்கவில்லை. மாறாக, ‘வெளிச்சத்தின் பிள்ளைகளாக’ ஆகிவிட்டார்கள். (1 தெசலோனிக்கேயர் 1:4-7; 5:4, 5) அந்தக் கிறிஸ்தவர்கள், யெகோவாதாமே படைப்பாளர் என்பதையும் அவர் சர்வவல்லவர், ஞானமுள்ளவர், அன்புள்ளவர், இரக்கமுள்ளவர் என்பதையும் தெரிந்துகொண்டார்கள். கிறிஸ்துவைப் பின்பற்றின மற்றவர்களைப் போலவே இவர்களும், தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் தியாக பலியின் மூலம் அவர்களுடைய பாவங்களைத் துடைத்துப்போட கடவுள் செய்திருந்த ஏற்பாட்டைப்பற்றித் தெரிந்துகொண்டார்கள்.​—⁠அப்போஸ்தலர் 3:19-21.

தெசலோனிக்கேயருக்கு பைபிள் சத்தியம் முழுமையாகத் தெரியாதிருந்தது; எனினும், அந்த அறிவை எங்கிருந்து பெற முடியும் என்பது தெரிந்திருந்தது. கடவுளுடைய வழிநடத்துதலால் எழுதப்பட்ட வேதாகமம், தேவனுடைய மனிதனை “தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி” மாற்றும் சக்தி படைத்தது. (2 தீமோத்தேயு 3:16) தெசலோனிக்கேயிலிருந்த கிறிஸ்தவர்களால் தொடர்ந்து கருத்தூன்றிப் படிக்கவும், கடவுள் தரும் அறிவொளியின் வெளிச்சம் உண்மையிலேயே அற்புதமானது என்பதை மீண்டும் மீண்டும் பரிசோதித்தறியவும் முடிந்தது. எனவே, எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க அவர்களுக்குக் காரணமிருந்தது. (1 தெசலோனிக்கேயர் 5:16) நமக்கும்கூட அவ்வாறே மகிழ்ச்சியாய் இருக்க காரணமிருக்கிறது.

நம் பாதைக்கு வெளிச்சம்

ஒளி அற்புதமாய் இருப்பதற்கான ஒரு காரணத்தைக் குறிப்பிடுபவராய் சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 119:105) கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாம் பெறுகிற வழிநடத்துதல், நம் வாழ்க்கையை ஞானமாய்த் திட்டமிடவும், அர்த்தமுள்ள வாழ்க்கையை அனுபவிக்கவும் நமக்கு உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட இலக்கின்றி அலைகிற கப்பலைப்போல் நாம் இருக்க வேண்டியதில்லை. பைபிள் சத்தியங்களை அறிவதும் அவற்றைப் பின்பற்றுவதும், ‘போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராதபடி’ நம்மைப் பாதுகாக்கிறது.​—⁠எபேசியர் 4:14.

“பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்” என்று பைபிள் குறிப்பிடுகிறது. “யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான் [அதாவது, சந்தோஷமுள்ளவன்]” என்றும் அது குறிப்பிடுகிறது. (சங்கீதம் 146:3, 5) மேலும், யெகோவாமீது நம்பிக்கை வைப்பது, பயத்தையும் கவலையையும் சமாளிக்க நமக்கு உதவுகிறது. அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) கடவுளுடைய வார்த்தை தரும் ஒளியால் வழிநடத்தப்படுவது உண்மையிலேயே நமக்குப் பயன் அளிக்கிறது.

உலகில் சுடர்களாகப் பிரகாசியுங்கள்

கடவுளுடைய வார்த்தை தரும் ஒளி அற்புதமாய் இருப்பதற்கான மற்றொரு காரணம், அது மிக முக்கியமான வேலையை மனிதர் செய்வதற்கு வழியைத் திறக்கிறது. “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” என இயேசு தம் சீஷர்களுக்கு உறுதி அளித்தார். பின்னர் அவர்களுக்கு இவ்வாறு கட்டளை கொடுத்தார்: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.”​—⁠மத்தேயு 28:18-20.

சகல தேசத்தாருக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலும் பைபிள் சத்தியங்களைக் கற்பிப்பதிலும் உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு யார் உதவிக்கரம் நீட்டுகிறார் என்பதைக் கவனியுங்கள். தாம் அவர்களுடன் இருப்பதாக சீஷர்களுக்கு இயேசு வாக்குறுதி அளித்தார். ஊழியத்தில் தங்கள் ‘வெளிச்சம் பிரகாசிக்க’ செய்தபோதும், பிற ‘நற்கிரியைகளை’ செய்தபோதும் அவர்களுக்கு உதவியையும் ஆதரவையும் அளித்திருந்திருக்கிறார். (மத்தேயு 5:14-16) இந்தச் சுவிசேஷ வேலையில் தேவதூதர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:6) யெகோவா தேவனைக் குறித்து என்ன சொல்லலாம்? அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச் செய்தார்.” ‘தேவனுக்கு உடன்வேலையாட்களில்’ ஒருவராய் இருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!​—⁠1 கொரிந்தியர் 3:6, 9.

கடவுள் கொடுத்த வேலையைச் செய்ய நாம் முயற்சி எடுக்கும்போது அது எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறது என்பதையும் சற்று எண்ணிப் பாருங்கள். ‘உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கும்படி,’ கடவுள் கொடுத்திருக்கும் ஆசீர்வாதமிக்க இந்த வேலைக்கு எதுவும் ஈடாகாது. கடவுளுடைய வார்த்தை தரும் ஒளியைச் சொல்லிலும் செயலிலும் வெளிக்காட்டுவதன் மூலம் நல்மனமுள்ளவர்களுக்கு உண்மையான உதவியை நாம் அளிக்க முடியும். (பிலிப்பியர் 2:14) ஊக்கமாய் ஊழியத்தில் ஈடுபட்டு, கற்பிக்கும்போது சந்தோஷப்படலாம், ஏனெனில், ‘நம் கிரியையையும், . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல.’​—⁠எபிரெயர் 6:10.

‘உன் கண்களில் தடவிக்கொள்ள மருந்தை விலைக்கு வாங்கிக்கொள்’

முதல் நூற்றாண்டிலிருந்த லவோதிக்கேயா சபைக்கு இயேசு சொன்ன செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘நீ பார்வை பெறும்பொருட்டு உன் கண்களில் தடவிக்கொள்ள மருந்தை என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள் . . . நான் யார்மீது அன்பு செலுத்துகிறேனோ அவர்களைக் கடிந்து தண்டித்துத் திருத்துகிறேன்.’ (வெளிப்படுத்துதல் [திருவெளிப்பாடு] 3:18, 19, பொது மொழிபெயர்ப்பு) இயேசுவின் போதனைகளும் சிட்சையும் ஆன்மீகக் குருட்டுத்தனத்தை அடியோடு அகற்றும் மருந்தாகும். ஆன்மீக ரீதியில் சரியான நோக்குநிலையோடு எப்போதும் செயல்பட விரும்பினால் நாம் அவருடைய புத்திமதியை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதோடு, அந்தப் புத்திமதிக்கும் பைபிளில் காணப்படும் வழிநடத்துதலுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். கிறிஸ்துவின் சிந்தையை ஏற்றுக்கொள்ளவும், அவருடைய மாதிரியைப் பின்பற்றவும் வேண்டும். (பிலிப்பியர் 2:5; 1 பேதுரு 2:21) கண் மருந்தைப்பற்றி இயேசு பின்வருமாறு சொன்னார்: ‘என்னிடமிருந்து [அதை] விலைக்கு வாங்கிக் கொள்.’ எனவே, கண் மருந்தை இலவசமாகப் பெறமுடியாது, அதற்கு நம் நேரத்தையும் முயற்சியையும் விலையாகக் கொடுக்க வேண்டும்.

இருண்ட பகுதியைவிட்டு வெளியேறி வெளிச்சமான அறைக்குள் நுழையும்போது நம் கண்கள் அந்தச் சூழலுக்குப் பழகிக்கொள்ள சற்று நேரமெடுக்கிறது. அவ்வாறே, கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் சத்தியத்தின் ஒளியைப் பார்ப்பதற்கும் நேரம் எடுக்கிறது. நாம் கற்றவற்றைத் தியானிப்பதற்கும், அந்தச் சத்தியம் எவ்வளவு அருமையானது என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதற்கும் நேரம் எடுக்கிறது. எனினும் அதற்காகக் கொடுக்கிற ‘விலை’ மிகப் பெரியதல்ல. ஏன்? ஏனெனில் அந்த ஒளி அற்புதமானது!

[பக்கம் 14-ன் படம்]

‘நீ பார்வை பெறும்பொருட்டு உன் கண்களில் தடவிக்கொள்ள மருந்தை என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்