உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 டிசம்பர் பக். 20-25
  • யெகோவாவை மகிமைப்படுத்தும் கல்யாணங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவை மகிமைப்படுத்தும் கல்யாணங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • ஏன் யெகோவாவை மகிமைப்படுத்த வேண்டும்?
  • எப்படி யெகோவாவை மகிமைப்படுத்தலாம்?
  • சவால்களைத் தவிர்ப்பதும் சமாளிப்பதும்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 டிசம்பர் பக். 20-25

படிப்புக் கட்டுரை 51

பாட்டு 132 என் உயிர் நீ!

யெகோவாவை மகிமைப்படுத்தும் கல்யாணங்கள்

“எல்லா காரியங்களும் கண்ணியமாகவும் ஒழுங்காகவும் நடக்க வேண்டும்.”—1 கொ. 14:40.

என்ன கற்றுக்கொள்வோம்?

கல்யாணம் செய்யப்போகிறவர்கள் தங்களுடைய கல்யாண நிகழ்ச்சியில் எப்படி யெகோவாவுக்கு மகிமை சேர்க்கலாம் என்று கற்றுக்கொள்வோம்.

1-2. கல்யாண நிகழ்ச்சி எப்படி நடக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார்?

உங்களுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறதா? வாழ்த்துக்கள்! கல்யாண ஏற்பாடுகளை நீங்கள் மும்முரமாகச் செய்துகொண்டு இருப்பீர்கள். உங்கள் கல்யாணம் நன்றாக நடக்க வேண்டும் என்றுதான் யெகோவாவும் ஆசைப்படுகிறார். கல்யாண நாள்a அன்றும் சரி, எதிர்காலத்திலும் சரி, நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்.—நீதி. 5:18; உன். 3:11.

2 கல்யாண நிகழ்ச்சியில் யெகோவாவுக்கு மகிமை சேர்ப்பது ரொம்ப முக்கியம். ஏன் அப்படிச் சொல்கிறோம்? அதை நீங்கள் எப்படிச் செய்யலாம்? அவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இந்தக் கட்டுரை முக்கியமாக கல்யாணம் செய்துகொள்ளப்போகும் நபர்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும், இதில் இருக்கிற நியமங்கள் யெகோவாவை மகிமைப்படுத்த நம் எல்லாருக்குமே உதவும். ஒருவருடைய கல்யாணத்தில் கலந்துகொள்ளும்போது அல்லது கல்யாணம் செய்யப்போகிறவர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்கும்போது இதில் இருக்கிற நியமங்கள் உங்களுக்கு உதவும்.

ஏன் யெகோவாவை மகிமைப்படுத்த வேண்டும்?

3. கல்யாண ஏற்பாடுகளைத் திட்டமிடும்போது எப்படி யோசிப்பது முக்கியம், ஏன்?

3 கல்யாணம் செய்யப்போகிற கிறிஸ்தவர்கள், அது சம்பந்தமாக யெகோவா கொடுத்திருக்கிற நியமங்களுக்கு ஏற்ற மாதிரி திட்டமிட வேண்டும். ஏன்? ஏனென்றால், கல்யாணம் என்ற ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்ததே யெகோவாதான். முதல் கல்யாணத்தை அவர்தான் ஏற்படுத்தி வைத்தார். ஆதாமையும் ஏவாளையும் கணவன்-மனைவியாக சேர்த்து வைத்தார். (ஆதி. 1:28; 2:24) அதனால், கல்யாணம் செய்யப்போகிறவர்கள் தங்களுடைய கல்யாண நிகழ்ச்சிக்காகத் திட்டமிடும்போது யெகோவாவைப்போல் யோசிப்பது முக்கியம்.

4. கல்யாணம் செய்யப்போகிறவர்கள், கல்யாண நிகழ்ச்சியில் ஏன் யெகோவாவுக்கு மகிமை சேர்க்க வேண்டும்?

4 கல்யாண ஏற்பாடுகளைச் செய்யும்போது யெகோவா யோசிப்பதுபோல் யோசிக்க வேண்டும் என்பதற்கு இன்னொரு காரணம்: அவர் உங்கள் பரலோக அப்பாவாகவும் நெருங்கிய நண்பராகவும் இருக்கிறார். (எபி. 12:9) அந்த உறவு என்றுமே நீடிக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்கள். உங்கள் கல்யாண நாளில் அல்லது வேறொரு நாளில் உங்கள் நண்பரைக் காயப்படுத்த வேண்டும் என்று நினைக்க மாட்டீர்கள். (சங். 25:14) யெகோவா உங்களுக்காக இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறார், இனிமேல் என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்பதை யோசித்துப் பார்த்தால் உங்கள் கல்யாண நிகழ்ச்சியில் யெகோவாவுக்கு மகிமை சேர்ப்பதுதான் சரி என்று உங்களுக்கே தோன்றும்.—சங். 116:12.

எப்படி யெகோவாவை மகிமைப்படுத்தலாம்?

5. கல்யாண நிகழ்ச்சியை நல்ல விதத்தில் திட்டமிட பைபிள் நியமங்கள் எப்படி உதவும்?

5 ஒரு கல்யாணமோ அதைத் தொடர்ந்து நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பைபிளில் சட்டங்கள் இல்லை. அதனால், கல்யாணம் செய்யப்போகிறவர்கள் தங்களுடைய சூழ்நிலைக்கும், கலாச்சாரத்துக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ற மாதிரி திட்டம் போடலாம். அதேசமயத்தில், கல்யாணம் சம்பந்தப்பட்ட அரசாங்க சட்டங்களை உண்மைக் கிறிஸ்தவர்கள் மதிக்கிறார்கள். (மத். 22:21) கல்யாணத்தை எப்படி நடத்த திட்டம் போட்டிருந்தாலும் சரி, பைபிள் நியமங்களுக்கு ஏற்ற மாதிரி அது இருந்தால், அது கண்டிப்பாக யெகோவாவை மகிமைப்படுத்தும், சந்தோஷப்படுத்தும். அப்படியென்றால், எந்தெந்த நியமங்கள் உங்களுக்கு உதவும்?

6. கல்யாணம் சம்பந்தப்பட்ட அரசாங்க சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது ஏன் முக்கியம்?

6 அரசாங்க சட்டங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். (ரோ. 13:1, 2) நிறைய நாடுகளில், கல்யாணம் செய்யப்போகிறவர்கள் சட்டப்படி சில விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அதனால், நீங்கள் வாழ்கிற இடத்தில், கல்யாணம் சம்பந்தமாக என்னென்ன சட்டங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால், மூப்பர்களிடம் நீங்கள் தாராளமாகக் கேட்கலாம்.b

7. திருமண நிகழ்ச்சி எப்படி இருக்க வேண்டும்?

7 நிகழ்ச்சி கண்ணியமாக நடக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். (1 கொ. 10:31, 32) நிகழ்ச்சியில் உலகத்தின் மனப்பான்மை தெரியாமல், கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள் தெளிவாகத் தெரிவதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள். (கலா. 5:19-26) மாப்பிள்ளைதான் புதிதாக உருவாகும் குடும்பத்தின் தலைவராக இருப்பதால், கல்யாண நிகழ்ச்சி கண்ணியமாகவும் சந்தோஷமாகவும் நடக்கும்படி பார்த்துக்கொள்வது அவருடைய பொறுப்பு. அதற்கு என்னவெல்லாம் செய்யலாம்? பைபிள் அடிப்படையில் ஒரு திருமண பேச்சு அன்பாக, பாசமாக, கண்ணியமாகக் கொடுக்கப்படும்போது கடவுள் செய்திருக்கும் திருமண ஏற்பாட்டின்மீது மதிப்பு அதிகமாகும். வந்திருக்கிற எல்லாரும் அந்த நிகழ்ச்சி எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்வார்கள். இந்தக் காரணத்துக்காக, நிறைய பேர் ராஜ்ய மன்றத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்கிறார்கள். ஒருவேளை, நீங்கள் ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்த விரும்பினால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மூப்பர் குழுவுக்கு ஒரு கடிதத்தை எழுதிக்கொடுங்கள்.

8. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கண்ணியமாக நடக்க நீங்கள் என்ன செய்யலாம்? (ரோமர் 13:13)

8 ரோமர் 13:13-ஐ வாசியுங்கள். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நீங்கள் வைக்க நினைத்தால், அதில் இந்த உலகத்தின் மனப்பான்மை இல்லாத மாதிரி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்? “குடித்துக் கும்மாளம் போடுதல்” என்பதற்கான கிரேக்க வார்த்தை, அளவுக்கு அதிகமாகக் குடித்து, ராத்திரி ரொம்ப நேரம்வரை இசை இசைக்கப்படும் நிகழ்ச்சிகளைக் குறிக்கிறது. (ரோமர் 13:13-ன் “வைல்டு பார்டீஸ்” என்ற ஆங்கில ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) ஒருவேளை, நீங்கள் நிகழ்ச்சியில் மதுபானத்தைப் பரிமாற நினைத்தால், அளவுக்கு அதிகமாக யாரும் குடிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று முன்பே யோசித்து வையுங்கள்.c நிகழ்ச்சியில் இசையைப் பயன்படுத்த நினைத்தால் அதன் சத்தம், வந்திருக்கிறவர்கள் பேசுவதற்கு இடைஞ்சலாக இல்லாத மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள். என்ன மாதிரி இசையைப் போடப் போகிறீர்கள்... பாட்டின் வரிகள் எப்படி இருக்கின்றன... என்பதையெல்லாம் கவனமாகப் பாருங்கள். அது யாருடைய மனசுக்கும் இடறலாக இல்லாத மாதிரியும் பார்த்துக்கொள்ளுங்கள்.

9. வரவேற்பு நிகழ்ச்சியில் மற்றவர்கள் ஏதாவது பேசப் போகிறார்கள் என்றாலோ நீங்கள் ஏதாவது பொழுதுபோக்குக்கு ஏற்பாடு செய்கிறீர்கள் என்றாலோ, எதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்?

9 வரவேற்பு நிகழ்ச்சியில் மற்றவர்கள் சுருக்கமாக ஏதாவது சொல்வார்களா? ஏதாவது படங்களையோ வீடியோக்களையோ நீங்கள் போட்டுக் காட்ட நினைக்கிறீர்களா? வேறு ஏதாவது பொழுதுபோக்குக்கு ஏற்பாடு செய்ய நினைக்கிறீர்களா? இதுபோன்ற விஷயங்கள் அந்தத் தருணத்தை விசேஷமாக ஆக்கும் என்பது உண்மைதான். ஆனால், அவையெல்லாம் மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற மாதிரி இருக்குமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். (பிலி. 4:8) உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் மற்றவர்களை மதிக்கிறேன் என்பதை அது காட்டுமா? கல்யாண நிகழ்ச்சியின் கண்ணியத்தை அது கெடுத்துவிடுமா?’ இந்த முக்கியமான கேள்வியையும் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அது யெகோவாவுக்கு மகிமை சேர்க்குமா?’ நகைச்சுவையாக சில விஷயங்களைச் சொல்வதில் தவறில்லை. ஆனால், அவை ஆபாசமாக, அதாவது செக்ஸ் சம்பந்தப்பட்ட எண்ணங்களைத் தூண்டுகிற மாதிரி இருக்கக் கூடாது. (எபே. 5:3) உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்களோ நண்பர்களோ வரவேற்பு நிகழ்ச்சியில் ஏதாவது பேசப் போகிறார்கள் என்றால், எதைப் பற்றியெல்லாம் பேச வேண்டாம் என்று முன்பே சொல்லி வையுங்கள்.

10. திருமணத்தை ஏன் எளிமையாக நடத்த வேண்டும்? (1 யோவான் 2:15-17)

10 எளிமையாக நடத்துங்கள். (1 யோவான் 2:15-17-ஐ வாசியுங்கள்.) மற்றவர்களுடைய கவனத்தை நம்மேல் ஈர்ப்பதற்குப் பதிலாக, யெகோவாவுக்கு நாம் மகிமை சேர்த்தால் அவர் ரொம்ப சந்தோஷப்படுவார். அதனால், அடக்கம் என்ற குணத்தைக் காட்டும் கிறிஸ்தவர்கள், எக்கச்சக்கமாக பணத்தைக் கொட்டி கல்யாணம் செய்வதற்குப் பதிலாக அதை எளிமையாக நடத்த விரும்புகிறார்கள். அதேசமயத்தில், தங்களிடம் இருக்கும் பொருள் வசதிகளை ‘பகட்டாகக் காட்டிக்கொள்வதையும்’ தவிர்க்கிறார்கள். கல்யாணத்தை இப்படி எளிமையாக வைத்துக்கொள்வதால் என்ன நன்மை? நார்வேயில் இருக்கிற மைக் என்ற சகோதரருக்குக் கிடைத்த அதே நன்மை உங்களுக்கும் கிடைக்கும். அவர் சொல்கிறார்: “நாங்கள் கல்யாணத்துக்காக எந்தக் கடனும் வாங்கவில்லை. அதனால், எங்களால் தொடர்ந்து பயனியர் செய்ய முடிந்தது. எங்களுடைய கல்யாணம் ரொம்ப எளிமையாக அதேசமயத்தில், ரொம்ப அழகாக நடந்தது. அந்த அருமையான தருணம் இன்றுவரை எங்கள் மனதைவிட்டு நீங்கவில்லை.” இந்தியாவில் இருக்கிற தபித்தா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “எங்களுடைய கல்யாணத்தை நாங்கள் எளிமையாக வைத்துக்கொண்டதால், நிறைய விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கவில்லை. எங்கள் குடும்பங்களுக்கு நடுவில் கருத்துவேறுபாடுகளும் வரவில்லை.”

படத்தொகுப்பு: உலகத்தின் வெவ்வேறு இடங்களில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் சகோதர சகோதரிகள் சந்தோஷமாக கலந்துகொள்கிறார்கள். 1. ராஜ்ய மன்றத்தில் திருமண பேச்சைக் கொடுக்கும் ஒரு சகோதரர் முன், மாப்பிள்ளையும் பொண்ணும் உட்கார்ந்திருக்கிறார்கள். 2. திறந்தவெளியில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் ஒரு தம்பதி வாழ்த்து சொல்கிறார்கள். 3. உணவு சாப்பிடும் இடத்தில், மாப்பிள்ளையும் பொண்ணும் விருந்தாளிகளோடு சேர்ந்து சாப்பாடு எடுக்கிறார்கள். 4. திறந்தவெளியில் நடக்கும் திருமணத்தில் ஒரு சகோதரர் பேச்சு கொடுக்கிறார்; மாப்பிள்ளையும் பொண்ணும் அவர் முன் நிற்கிறார்கள்.

நாம் எங்கே வாழ்ந்தாலும் சரி, கல்யாணத்தை எளிமையாகவும், அழகாகவும், மனதைவிட்டு நீங்காத விதத்திலும் நடத்த முடியும் (பாராக்கள் 10-11)


11. உடை மற்றும் அலங்காரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மாப்பிள்ளையும் பொண்ணும் எப்படி அடக்கத்தைக் காட்டலாம்? (படங்களையும் பாருங்கள்.)

11 கல்யாணத்துக்கு என்ன உடை உடுத்த முடிவு செய்திருக்கிறீர்கள்? கண்டிப்பாக, அழகாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பீர்கள். பைபிள் காலங்களில்கூட, கல்யாணப் பொண்ணும் மாப்பிள்ளையும் பார்ப்பதற்கு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். (ஏசா. 61:10) கல்யாணத்துக்கு நீங்கள் போடுகிற உடைகள், மற்ற சமயங்களில் போடுவதைவிட வித்தியாசமாக இருந்தாலும், அது அடக்கமாக இருப்பது முக்கியம். (1 தீ. 2:9) நீங்கள் அணியும் உடையோ மற்ற விஷயங்களோ அல்லது உங்கள் அலங்காரமோ எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்காத மாதிரி... கல்யாணத்திலேயே ரொம்ப முக்கியமானதாக ஆகிவிடாத மாதிரி... பார்த்துக்கொள்ளுங்கள்.—1 பே. 3:3, 4.

12. உங்கள் பகுதியில் பொதுவாகச் செய்யப்படும் பைபிளுக்கு எதிரான பழக்கவழக்கங்களைத் தவிர்ப்பது ஏன் முக்கியம்?

12 பைபிளுக்கு எதிரான பழக்கவழக்கங்களைத் தவிர்த்திடுங்கள். (வெளி. 18:4) கல்யாண நிகழ்ச்சிகளில், பொய்மத சடங்குகளையும், பேய்களோடு சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்களையும், மூடநம்பிக்கைகளையும் சாத்தானுடைய உலகம் திணித்திருக்கிறது. ஆனால், இந்த மாதிரியான அசுத்தமான விஷயங்களைவிட்டு நாம் தூரமாக விலகியிருக்க வேண்டும் என்று யெகோவா எச்சரித்திருக்கிறார். (2 கொ. 6:14-17) ஒருவேளை, உங்கள் கலாச்சாரத்தில் அல்லது பாரம்பரியத்தில் இருக்கிற சில பழக்கவழக்கங்களை செய்யலாமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், அவை எப்படி ஆரம்பித்தன என்று ஆராய்ச்சி செய்யுங்கள். உங்கள் கல்யாண நிகழ்ச்சியில் அவை இருக்க வேண்டுமா என்ற முடிவை எடுக்க உதவும் பைபிள் நியமங்களை நன்றாக யோசித்துப் பாருங்கள்.

13. பரிசுகளை வாங்குகிற விஷயத்தில் ஒரு தம்பதி எப்படி யெகோவா மாதிரி நடந்துகொள்ளலாம்?

13 நீங்கள் வாழும் ஊரில், தம்பதிகளுக்குப் பரிசு கொடுக்கும் வழக்கம் இருக்கிறதா? ஒவ்வொருவருடைய பொருளாதார நிலையும் வித்தியாசமாக இருக்கும் என்பதால், வந்திருக்கிற எல்லாரும் ஒரே அளவுக்கு பரிசுகளைக் கொடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டும் என்பதும் அதனால் சந்தோஷம் கிடைக்கும் என்பதும் உண்மைதான். (நீதி. 11:25; அப். 20:35) இருந்தாலும், கல்யாணத்துக்கு வருகிற எல்லாரும் கண்டிப்பாக ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்பதுபோல் உணர வைக்காதீர்கள். சிறிய பரிசு கொடுக்கிறவர்களைத் தர்மசங்கடமாக உணர வைக்காதீர்கள். மற்றவர்கள் நமக்கு எதைக் கொடுத்தாலும் அதற்கு நன்றியோடு இருப்பதன் மூலம் நாம் யெகோவா மாதிரி நடந்துகொள்வதைக் காட்டுகிறோம். கட்டாயத்தால் இல்லாமல், ஆசைப்பட்டு மனதார மற்றவர்கள் பரிசுகளைக் கொடுக்கும்போது நாம் சந்தோஷப்படுகிறோம்.—2 கொ. 9:7.

சவால்களைத் தவிர்ப்பதும் சமாளிப்பதும்

14. கல்யாணம் செய்யப்போகிற சிலர் என்ன சவால்களைச் சந்திக்கிறார்கள்?

14 யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிற மாதிரி கல்யாண நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கும்போது நிறைய சவால்கள் வரலாம். உதாரணத்துக்கு, கல்யாணத்தை எளிமையாக நடத்துவதே சவாலாக இருக்கலாம். சாலமன் தீவுகளைச் சேர்ந்த சார்லி இப்படிச் சொல்கிறார்: “என்னுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு யாரையெல்லாம் கூப்பிடலாம் என்று முடிவு செய்வதே ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஏனென்றால், எங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதுவும் எங்கள் கலாச்சாரத்தில், எல்லாருக்கும் அழைப்பிதழைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.” முன்பு பார்த்த தபித்தா சொல்கிறார்: “நான் இருக்கிற இடத்தில் பொதுவாக கல்யாணத்தை ரொம்ப பெரிதாக நடத்துவார்கள். ஆனால், கிட்டத்தட்ட 100 பேரை மட்டும் கூப்பிட நாங்கள் முடிவு பண்ணினோம். எங்களுடைய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள எங்கள் அப்பா-அம்மாவுக்குக் கொஞ்சம் நாள் எடுத்தது.” இந்தியாவில் இருக்கிற சாரா இப்படிச் சொல்கிறார்: “சமுதாயத்தில் இருக்கும் அந்தஸ்தை சிலர் ரொம்ப உயர்வாக நினைப்பார்கள். என் சொந்தக்காரர்கள் எல்லாம், பயங்கரமாக செலவு செய்து ஓகோவென்று கல்யாணத்தை நடத்தினார்கள். அதனால், அவர்களைவிட நான் ஜாம் ஜாம் என கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று சிலர் எதிர்பார்த்தார்கள்.” இந்த மாதிரி சவால்களையும் மற்ற சவால்களையும் சமாளிக்க உங்களுக்கு எது உதவும்?

15. கல்யாண ஏற்பாடுகளைச் செய்யும்போது ஜெபம் செய்வது ஏன் ரொம்ப முக்கியம்?

15 கல்யாண ஏற்பாடுகளை செய்யும்போது அடிக்கடி ஜெபம் செய்யுங்கள். உங்களுக்கு எவையெல்லாம் சவாலாக இருக்கிறது... உங்கள் மனதில் என்னவெல்லாம் ஓடுகிறது... என்பதையெல்லாம் யெகோவாவிடம் வெளிப்படையாகச் சொல்லுங்கள். (பிலி. 4:6, 7; “எல்லா விண்ணப்பங்களையும்” என்ற ஆங்கில ஆராய்ச்சிக் குறிப்பு) நல்ல தீர்மானங்களை எடுக்க உதவ சொல்லி அவரிடம் கேளுங்கள். பதட்டமாக இருக்கும்போது நிதானமாக யோசிக்கவும்... தேவைப்படும் சமயத்தில் தைரியத்தைக் காட்டவும்... அவரிடம் உதவி கேளுங்கள். (1 பே. 5:7) யெகோவா உங்களுக்காகச் செயல்படுவதைப் பார்க்கும்போது அவர்மேல் இருக்கிற நம்பிக்கை அதிகமாகும். நாம் முன்பு பார்த்த தபித்தா சொல்கிறார்: “கல்யாணத்தைப் பற்றித் திட்டம் போடும்போது எங்களுக்குள் ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ அல்லது எங்கள் குடும்பங்களுக்குள் ஏதாவது கருத்துவேறுபாடு வந்துவிடுமோ என்று நானும் நான் கல்யாணம் செய்யப்போகிறவரும் கவலைப்பட்டோம். அதனால், ஒவ்வொரு தடவையும் ஜெபம் செய்துவிட்டுத்தான் அந்த ஏற்பாடுகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். யெகோவா உதவி செய்ததை எங்களால் உணர முடிந்தது. எங்களால் சமாதானமாகவும் இருக்க முடிந்தது.”

16-17. கல்யாண ஏற்பாடுகளைச் செய்யும்போது நல்ல பேச்சுத்தொடர்பு எப்படி உதவி செய்யும்?

16 தெளிவாகவும் மரியாதையாகவும் பேசுங்கள். (நீதி. 15:22) நீங்கள் இருவரும் உங்கள் கல்யாணத்தைப் பற்றி நிறைய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். கல்யாண தேதி... கல்யாணத்துக்கு எவ்வளவு செலவு பண்ண வேண்டும்... யாரையெல்லாம் கூப்பிட வேண்டும்... இந்த மாதிரி நிறைய விஷயங்களை முடிவு பண்ண வேண்டியிருக்கும். ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பு உங்கள் இரண்டு பேருடைய கருத்துகளைப் பற்றியும் கலந்துபேசுங்கள். அந்தச் சூழ்நிலைக்குப் பொருந்தும் பைபிள் நியமங்களை யோசித்துப் பாருங்கள். அனுபவமுள்ள கிறிஸ்தவர்கள், ஏதாவது ஆலோசனை கொடுத்தால் அதையும் யோசித்துப் பாருங்கள். தனிப்பட்ட விருப்பங்கள் ஏதாவது இருந்தால் ஒருவரிடம் ஒருவர் அதை அன்பாகச் சொல்லுங்கள். வளைந்துகொடுங்கள், மாற்றிக்கொள்ள தயாராக இருங்கள். உங்கள் குடும்பத்தாருக்கு—ஒருவேளை உங்கள் அப்பா-அம்மாவுக்கு—நியாயமான சில எதிர்பார்ப்புகள் இருந்தால் அதைச் செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். ஏனென்றால், இது அவர்களுக்கும் ஒரு விசேஷமான தருணம். ஒருவேளை, அவர்கள் கேட்டுக்கொண்ட மாதிரி உங்களால் செய்ய முடியவில்லை என்றால் அதற்கான காரணத்தை மரியாதையோடு விளக்குங்கள். (கொலோ. 4:6) யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் சந்தோஷமான நிகழ்ச்சியாக உங்கள் திருமணம் அமைய வேண்டும் என்பதுதான் உங்களுடைய குறிக்கோள் என்பதை குடும்பத்தில் இருப்பவர்களுக்குப் புரிய வையுங்கள்.

17 உங்களுடைய அப்பா-அம்மா யெகோவாவை வணங்கவில்லை என்றால், உங்கள் தீர்மானத்தை அவர்களிடம் விளக்குவது சவாலாக இருக்கலாம். ஆனால், கவலைப்படாதீர்கள்! உங்களால் அதைச் செய்ய முடியும். இந்தியாவில் இருக்கிற சந்தோஷ் என்ற சகோதரர் சொல்கிறார்: “எங்கள் குடும்பத்தில் இருந்தவர்கள், எங்கள் கல்யாணத்தில் நிறைய இந்து மத சடங்குகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால், எங்களுடைய தீர்மானத்தை அவர்களுக்கு விளக்கிச் சொல்ல எங்கள் இரண்டு பேருக்கும் நிறைய நேரம் எடுத்தது. நாங்கள் அவர்களுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்களைச் செய்தோம். ஆனால் அதேசமயம், அவையெல்லாம் யெகோவாவை வருத்தப்படுத்தாத மாதிரியும் பார்த்துக்கொண்டோம். உதாரணத்துக்கு, உணவு ஏற்பாடுகளை அவர்களுக்குப் பிடித்த மாதிரி வைத்துக்கொண்டோம். பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது போன்ற விஷயங்களுக்கெல்லாம் அவர்கள் பழக்கப்படாததால் அவற்றை செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்தோம்.”

18. கல்யாண நிகழ்ச்சியில் எல்லாமே நன்றாக நடப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? (1 கொரிந்தியர் 14:40) (படத்தையும் பாருங்கள்.)

18 நன்றாகத் திட்டம் போடுங்கள். எல்லாவற்றையும் திட்டம் போட்டு ஒழுங்காகச் செய்யும்போது உங்களுடைய கல்யாண நாள் அன்று அரக்கப்பரக்க ஓடிக்கொண்டு, பதட்டமாக இருக்க மாட்டீர்கள். (1 கொரிந்தியர் 14:40-ஐ வாசியுங்கள்.) தைவானைச் சேர்ந்த வேயின் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “எங்கள் கல்யாணத்துக்கு ஒருசில நாட்களுக்கு முன்பு, எங்களுக்கு உதவி செய்ய முன்வந்தவர்களோடு சேர்ந்து ஒரு சின்ன கூட்டத்தை நடத்தினோம். கல்யாண ஏற்பாடுகளைப் பற்றி அவர்களோடு கலந்துபேசினோம். பிறகு, கல்யாண நாள் அன்று எல்லாமே சுமுகமாக நடப்பதற்காக அன்று நடக்கப்போகும் சில விஷயங்களை நடித்துப் பார்த்தோம்.” வந்திருக்கிறவர்களுக்கு மரியாதை காட்டும் விதமாக, கல்யாண நிகழ்ச்சியில் எதுவும் தாமதிக்காமல் சரியான நேரத்தில் நடக்கிற மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.

நிச்சயமாகியிருக்கும் ஒரு தம்பதி, திருமண ஏற்பாடுகளைப் பற்றி அவர்களுக்கு உதவி செய்யப்போகும் சில நண்பர்களோடு கலந்துபேசுகிறார்கள். அந்தச் சகோதரர் டேப்லெட்டைக் காட்டி வரவேற்பு நிகழ்ச்சியில் இருக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார்.

கல்யாணத்துக்கு முன்பே எல்லாவற்றையும் நன்றாகத் திட்டமிட்டால், எல்லா விஷயங்களும் சரியாக நடக்கும் (பாரா 18)


19. வரவேற்பு நிகழ்ச்சியில் நீங்கள் திட்டமிட்ட மாதிரி எல்லாமே நடப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

19 முன்பே யோசித்தால் நிறைய பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். (நீதி. 22:3) உதாரணத்துக்கு, அழையா விருந்தாளிகளாகக் கல்யாணத்துக்கு வரும் பழக்கம் உங்கள் ஊரில் இருந்தால், அதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று முன்பே திட்டம் போடுங்கள். உங்கள் கல்யாணத்தை எப்படிச் செய்ய முடிவு செய்திருக்கிறீர்கள்... கல்யாணத்தில் பொதுவாகச் செய்யப்படுகிற சில பழக்கவழக்கங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்... போன்றவற்றை சத்தியத்தில் இல்லாத சொந்தக்காரர்களிடம் தெளிவாகச் சொல்லுங்கள். “யெகோவாவின் சாட்சிகளுடைய திருமணங்கள் எப்படி நடக்கும்?” என்ற கட்டுரையைக்கூட jw.org-ல் இருந்து அவர்களுக்குக் காட்டலாம். வரவேற்பு நிகழ்ச்சியில், திட்டமிட்ட மாதிரி எல்லாமே நடப்பதற்காக ஒரு முதிர்ச்சியுள்ள சகோதரரை ‘விருந்தின் மேற்பார்வையாளராக’ நியமியுங்கள். (யோவா. 2:8) கல்யாணத்தைப் பற்றி நீங்கள் போட்டிருக்கும் திட்டங்களை அவரிடம் தெளிவாகச் சொன்னால், கல்யாணம் கண்ணியமாக நடப்பதற்கும் திட்டம் போட்ட மாதிரி நடப்பதற்கும் அவர் உதவி செய்வார்.

20. கல்யாணம் செய்ய நினைப்பவர்கள் எதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?

20 கல்யாண ஏற்பாடுகளைச் செய்வதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று நினைத்து உங்களுக்குத் தலையே சுற்றலாம். ஆனால், இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: உங்கள் கல்யாணம் வெறும் ஒருநாள் நிகழ்ச்சிதான். யெகோவாவின் ஊழியர்களாக நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து செய்யப்போகும் அழகான பயணத்தின் முதல் நாள்தான் அது. அதனால், உங்கள் கல்யாணத்தை எளிமையாகவும் கண்ணியமாகவும் நடத்துங்கள். யெகோவாவை முழுமையாக நம்புங்கள். அவருடைய வழிநடத்துதல் இருந்தால், உங்களால் கல்யாணத்தை நல்ல விதத்தில் ஒழுங்கமைக்க முடியும். பிற்பாடு அதைப் பற்றி யோசிக்கும்போது, கசப்பான நினைவுகள் அல்ல, இனிமையான நினைவுகள் உங்கள் மனதில் நிறைந்திருக்கும்.—சங். 37:3, 4.

உங்கள் பதில் என்ன?

  • கல்யாண நிகழ்ச்சியில் தம்பதிகள் ஏன் யெகோவாவுக்கு மகிமை சேர்க்க வேண்டும்?

  • கல்யாண நிகழ்ச்சியில் எல்லாமே சந்தோஷமாக, கண்ணியமாக நடக்க என்ன செய்யலாம்?

  • எளிமையாக கல்யாணம் செய்வதால் என்ன நன்மை கிடைக்கும்?

பாட்டு 107 கடவுள் காட்டும் அன்பின் வழி

a வார்த்தைகளின் விளக்கம்: நிறைய கலாச்சாரங்களில், கல்யாணம் என்பது கடவுளுக்குமுன் தம்பதிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியைக் குறிக்கிறது. சிலர் அதற்குப் பிறகு ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை வைக்கிறார்கள். சில கலாச்சாரங்களில், கல்யாணம் ஒரு நிகழ்ச்சியாகச் செய்யப்படுவதில்லை; வரவேற்பு நிகழ்ச்சிகளும் வைக்கப்படுவதில்லை. அப்படிப்பட்ட கலாச்சாரங்களில் இருப்பவர்களும் இந்தக் கட்டுரையில் இருக்கும் பைபிள் நியமங்களிலிருந்து நன்மை அடையலாம்.

b திருமணம் சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் சட்டப்பூர்வமாக செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள, அக்டோபர் 15, 2006 காவற்கோபுரத்தில் வந்த “கடவுளாலும் மனிதராலும் மதிக்கப்படுகிற திருமணங்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

c மதுபானம் பரிமாறலாமா? என்ற வீடியோவை jw.org-ல் பாருங்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்