உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 டிசம்பர் பக். 14-19
  • யெகோவாவைப் போல் மனத்தாழ்மையாக இருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவைப் போல் மனத்தாழ்மையாக இருங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சுலபமாக அணுக முடிந்தவர்
  • நியாயமானவர், வளைந்துகொடுப்பவர்
  • பொறுமையுள்ளவர்
  • தாழ்மையானவர்களை யெகோவா கௌரவப்படுத்துகிறார்
  • யெகோவாவையும் இயேசுவையும் போல யோசியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • கொடுப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 டிசம்பர் பக். 14-19

படிப்புக் கட்டுரை 50

பாட்டு 48 யெகோவாவுடன் தினம் நடப்போம்

யெகோவாவைப் போல் மனத்தாழ்மையாக இருங்கள்

“அன்பான பிள்ளைகளைப் போல் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.”—எபே. 5:1.

என்ன கற்றுக்கொள்வோம்?

யெகோவா மாதிரி மனத்தாழ்மையாக இருக்க என்ன நான்கு விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்வோம்.

1. யெகோவாவுடைய மனத்தாழ்மையைப் பற்றி யோசிக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?

அதிகாரத்தில் இருக்கிற யாரையாவது பார்த்து, ‘இவர் எவ்வளவு மனத்தாழ்மையாக இருக்கிறார்!’ என்று யோசித்திருக்கிறீர்களா? பெரும்பாலும் வாய்ப்பில்லை. ஏனென்றால், நிறைய பேர் இன்று அப்படி இல்லை. ஆனால், யெகோவா சர்வவல்லமையுள்ள கடவுளாக இருந்தாலும் மனத்தாழ்மையாக இருக்கிறார். (சங். 113:5-8) அவர் மனத்தாழ்மையின் சிகரமாக இருக்கிறார். தலைக்கனத்தின் சுவடே அவரிடம் இல்லை. யெகோவாவின் அழகான சுபாவத்தின் நான்கு முக்கியமான அம்சங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அவை ஒவ்வொன்றிலும் யெகோவாவின் மனத்தாழ்மை எப்படித் தெரிகிறது என்று பார்ப்போம். இயேசு எப்படி அவருடைய அப்பா மாதிரியே மனத்தாழ்மையாக இருந்தார் என்பதையும் பார்ப்போம். யெகோவாவுடைய சுபாவத்தின் நான்கு அம்சங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கும்போது நாம் யெகோவாவிடம் இன்னும் நெருங்கிப் போவோம். அவரை மாதிரி இன்னும் அதிகமாக மனத்தாழ்மையாக இருக்க கற்றுக்கொள்வோம்.

சுலபமாக அணுக முடிந்தவர்

2. சங்கீதம் 62:8-லிருந்து யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்? (படத்தையும் பாருங்கள்.)

2 பொதுவாக, பெருமைபிடித்தவர்களிடம் சுலபமாகப் பேசவோ நெருங்கிப் போகவோ முடியாது. அவர்கள் தலைக்கனத்தோடு இருப்பதால் மற்றவர்களை அன்பே இல்லாமல் நடத்துவார்கள். அதனால், அவர்களிடம் நெருங்கிப் போக வேண்டும் என்ற எண்ணமே மற்றவர்களுக்கு வராது. ஆனால், யெகோவா எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார்! அவர் மனத்தாழ்மையாக இருப்பதால் தன்னிடம் நெருங்கிவர நம்மை அழைக்கிறார். நம் மனதையும் இதயத்தையும் பாரமாக்கும் விஷயங்களை அவரிடம் சொல்லும்படி கேட்கிறார். (சங்கீதம் 62:8-ஐ வாசியுங்கள்.) எப்படி ஒரு அன்பான அப்பா, தன்னுடைய பிள்ளையின் கவலைகள் எல்லாவற்றையுமே கேட்பாரோ அதேமாதிரி யெகோவா தன் ஊழியர்களுடைய மனதில் இருப்பதையெல்லாம் தன்னிடம் கொட்டும்படி சொல்கிறார். சொல்லப்போனால், தன் ஊழியர்கள் செய்த நிறைய ஜெபங்களை அவர் பைபிளில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். எந்தளவுக்கு அவர் அணுக முடிந்தவராக இருக்கிறார் என்பதை அவை காட்டுகின்றன. (யோசு. 10:12-14; 1 சா. 1:10-18) ஆனால், ஏதோவொரு காரணத்தால் அவரிடம் நெருங்கிப்போக நமக்குத் தகுதியில்லை என்று தோன்றினால் என்ன செய்யலாம்?

பொம்மை விமானத்தை வைத்து விளையாடும்போது தெரியாமல் பூந்தொட்டியை உடைத்துவிட்டதைப் பற்றி ஒரு மகன் சொல்வதை ஒரு அப்பா பொறுமையாகக் கேட்கிறார்.

விளையாடும்போது பூந்தொட்டியை உடைத்துவிட்ட ஒரு மகன் சொல்வதை, யெகோவா மாதிரியே மனத்தாழ்மையாக ஒரு அப்பா கேட்கிறார் (பாரா 2)


3. தன்னிடம் அடிக்கடி ஜெபம் செய்ய வேண்டுமென யெகோவா ஆசைப்படுகிறார் என்று எதை வைத்து சொல்லலாம்?

3 யெகோவாவுடைய அன்பைப் பெற நமக்குத் தகுதியில்லை என்று தோன்றினாலும் நாம் தாராளமாக அவரிடம் ஜெபத்தில் நெருங்கிப் போகலாம். ஏன்? காணாமல்போன மகனைப் பற்றி இயேசு சொன்ன கதையை யோசித்துப் பாருங்கள். அதில் வரும் இளகிய மனசுள்ள அப்பா மாதிரிதான் யெகோவா இருப்பதாக இயேசு சொன்னார். அந்தக் கதையில் வரும் மகன், அப்பா தன்னை திரும்ப ஏற்றுக்கொள்வதற்கு தனக்குத் தகுதியில்லை என்று யோசித்தான். ஆனால், அவன் திரும்பி வந்தபோது அந்த அப்பா எப்படி நடந்துகொண்டார்? தூரத்தில் அவனைப் பார்த்த உடனேயே அந்த அப்பா “ஓடிப்போய் அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.” (லூக். 15:17-20) யெகோவா அப்படிப்பட்ட ஒரு அப்பாதான். குற்ற உணர்ச்சியால் அல்லது வேறு ஏதாவது கவலையால் மனம் உடைந்துபோய் இருக்கிறவர்கள் அவரைக் கூப்பிடும்போது அவர் உடனடியாகக் கேட்கிறார். மனத்தாழ்மையாக இருப்பதால் யெகோவா அவர்களுக்கு முழு கவனம் செலுத்துகிறார். (புல. 3:19, 20) யெகோவா கரிசனையோடு இருப்பதால்தான் அந்தக் கதையில் பார்த்த மாதிரி, ஒருவிதத்தில் அவர்களிடம் ஓடிப்போகிறார். அவர்கள்மேல் இரக்கமும் அன்பும் வைத்திருப்பதை ஞாபகப்படுத்தவும் அவர்களை ஆறுதல்படுத்தவும் அப்படிப் போகிறார். (ஏசா. 57:15) இன்று யெகோவா நம்மிடம் எப்படி ‘ஓடி வருகிறார்’? மூப்பர்கள், சத்தியத்தில் இருக்கிற குடும்பத்தார் மற்றும் சகோதர சகோதரிகள் மூலம் பெரும்பாலும் அதைச் செய்கிறார். (யாக். 5:14, 15) நாம் அவரிடம் நெருங்கி வரவேண்டும் என்று ஆசைப்படுவதால்தான் யெகோவா நமக்கு இப்படியெல்லாம் உதவுகிறார்.

4. மற்றவர்கள் தன்னிடம் சுலபமாக நெருங்கி வருகிற மாதிரி இயேசு எப்படி நடந்துகொண்டார்?

4 இயேசு எப்படி யெகோவா மாதிரி நடந்துகொண்டார்? தன் அப்பா மாதிரியே இயேசுவும் மனத்தாழ்மையாக நடந்துகொண்டார். அதனால்தான் அவர் பூமியில் இருந்தபோது மக்களால் அவரைச் சுலபமாக அணுக முடிந்தது; அவர்களுடைய மனதில் இருந்த கேள்விகளையும் தயக்கமில்லாமல் கேட்க முடிந்தது. (மாற். 4:10, 11) சில விஷயங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று இயேசு கேள்வி கேட்டபோது, மனதில் இருப்பதை அவர்களால் வெளிப்படையாகச் சொல்ல முடிந்தது. (மத். 16:13-16) தவறு செய்தபோது, இயேசுவைப் பார்த்து அவர்கள் பயந்து நடுங்கவில்லை. ஏனென்றால், இயேசு பொறுமையாக, பாசமாக, இரக்கத்தோடு நடந்துகொள்வார் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. (மத். 17:24-27) இயேசு அவருடைய அப்பா மாதிரி அப்படியே நடந்துகொண்டதால், அவரைப் பார்த்தே சீஷர்களால் யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. (யோவா. 14:9) அன்றிருந்த மதத் தலைவர்களை மாதிரி யெகோவா கடுமையானவராக, கறாரானவராக, பெருமைபிடித்தவராக இல்லை என்பதையும் மனத்தாழ்மையாக, அணுக முடிந்தவராக இருக்கிறார் என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

5. மனத்தாழ்மையாக இருக்கிற ஒருவரிடம் மற்றவர்கள் நெருங்கி வருவார்கள் என்று ஏன் சொல்லலாம்?

5 நாம் எப்படி யெகோவா மாதிரி நடந்துகொள்ளலாம்? நாம் எந்தளவுக்கு மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்கிறோமோ, அந்தளவுக்கு மற்றவர்கள் நம்மிடம் நெருங்கி வர ஆசைப்படுவார்கள். மனத்தாழ்மை இல்லையென்றால் நாம் பொறாமைப்படுவோம், பெருமைபிடித்தவர்களாக இருப்போம், மற்றவர்களை மன்னிக்கவும் மாட்டோம். இப்படிப்பட்ட ஒருவரிடம் யாரும் நெருங்கி வர நினைக்க மாட்டார்கள். ஆனால் நாம் மனத்தாழ்மையாக இருந்தால் பொறுமையாகவும் பாசமாகவும் இருப்போம், மற்றவர்களைத் தாராளமாக மன்னிப்போம். இப்படிப்பட்ட ஒருவரிடம் மற்றவர்கள் நெருங்கி வர ஆசைப்படுவார்கள். (கொலோ. 3:12-14) முக்கியமாக மூப்பர்கள், மற்றவர்கள் தங்களிடம் நெருங்கி வருகிற மாதிரி நடந்துகொள்ள வேண்டும். அதற்கு, அடிக்கடி மற்றவர்கள் கண்ணில்படுகிற மாதிரி அவர்கள் இருக்க வேண்டும். முடிந்தளவு கூட்டங்களில் நேரில் கலந்துகொள்வது அதற்கு உதவும். நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டும்தான் அவர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக அதில் கலந்துகொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, சூழ்நிலை அனுமதிக்கும்போதெல்லாம் சகோதர சகோதரிகளோடு வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கிறார்கள். இப்படியெல்லாம் சகோதர சகோதரிகளோடு நெருக்கமாகப் பழகும்போது, அவர்கள் மூப்பர்களிடம் மனம் திறந்து பேசுவார்கள். முக்கியமாக, கஷ்டங்கள் வரும்போது!

நியாயமானவர், வளைந்துகொடுப்பவர்

6-7. தன் ஊழியர்கள் ஜெபம் செய்தபோது, அதற்கேற்ற மாதிரி யெகோவா வளைந்துகொடுத்தார் என்பதற்கு உதாரணம் சொல்லுங்கள்.

6 பெருமைபிடித்த நிறைய பேர், தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைப்பார்கள்; வளைந்துகொடுக்க தயாராக இருக்க மாட்டார்கள். ஆனால், யெகோவா அப்படியில்லை. அவர் மனத்தாழ்மையாக இருப்பதால் நியாயமானவராக நடந்துகொள்கிறார்; விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறார். எல்லாரையும்விட எல்லா விதத்திலும் உயர்ந்தவராக இருந்தாலும், அவர் வளைந்துகொடுக்கிறார். மோசேயின் சகோதரி மிரியாமிடம் அவர் எப்படி நடந்துகொண்டார் என்று யோசித்துப் பாருங்கள். மிரியாம், ஆரோனோடு சேர்ந்து யெகோவாவின் பிரதிநிதியாக இருந்த மோசேக்கு எதிராக முணுமுணுத்தாள். அது யெகோவாவையே அவமதித்த மாதிரி இருந்தது. அதனால், யெகோவாவுக்கு அவள்மேல் பயங்கர கோபம் வந்தது; தொழுநோயை வரவைத்து அவளைத் தண்டித்தார். ஆனால், ஆரோன் அவளுக்காக மோசேயிடம் கெஞ்சினார். அதனால் மோசே, தன்னுடைய சகோதரியைக் குணப்படுத்த சொல்லி யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டார். அப்போது யெகோவா எப்படி நடந்துகொண்டார்? ‘எடுத்த முடிவை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன்!’ என்று யெகோவா பெருமையாகச் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, மனத்தாழ்மையாக இருந்ததால் வளைந்துகொடுக்க தயாராக இருந்தார்; மிரியாமைக் குணப்படுத்தினார்.—எண். 12:1-15.

7 எசேக்கியா ராஜாவிடம் யெகோவா எப்படி மனத்தாழ்மையாக நடந்துகொண்டார் என்று கவனியுங்கள். ஒருசமயம், தன்னுடைய தீர்க்கதரிசியை அனுப்பி, எசேக்கியா சாகப்போகிறார் என்று யெகோவா சொன்னபோது தன்னைக் குணப்படுத்த சொல்லி அவர் யெகோவாவிடம் அழுது கெஞ்சினார். அதனால், யெகோவா இரக்கத்தோடு அவருடைய வாழ்நாளை இன்னும் 15 வருஷங்களுக்குக் கூட்டினார். (2 ரா. 20:1, 5, 6) யெகோவா மனத்தாழ்மையாக இருப்பதால்தான் கரிசனையாக நடந்துகொள்கிறார், வளைந்துகொடுக்க தயாராக இருக்கிறார்.

8. இயேசு நியாயமானவர் என்பதற்கு உதாரணம் சொல்லுங்கள். (மாற்கு 3:1-6)

8 இயேசு எப்படி யெகோவா மாதிரியே நடந்துகொண்டார்? பூமியில் இருந்தபோது, மற்றவர்களுக்கு நல்லது செய்ய கிடைத்த வாய்ப்புகளை இயேசு நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். அப்படிச் செய்வதில் நியாயமானவராகவும் வளைந்துகொடுப்பவராகவும் இருந்தார். உதாரணத்துக்கு, கல்நெஞ்சக்காரர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஓய்வுநாளில் அவர் மக்களைக் குணப்படுத்தினார். (மாற்கு 3:1-6-ஐ வாசியுங்கள்.) இன்றும், கிறிஸ்தவ சபையின் தலைவராக அவர் தொடர்ந்து நியாயமானவராக நடந்துகொள்கிறார். உதாரணத்துக்கு, சபையில் இருக்கிற ஒருவர் ஏதாவது பெரிய பாவத்தைச் செய்துவிட்டால், அவரிடம் பொறுமையாக இருக்கிறார். அவர் திருந்துவதற்கு போதுமான அளவு வாய்ப்பு கொடுக்கிறார்.—வெளி. 2:2-5.

9. யோசிக்கும் விதத்திலும் நடந்துகொள்ளும் விதத்திலும் நாம் எப்படி நியாயமானவர்களாக இருக்கலாம்? (படங்களையும் பாருங்கள்.)

9 நாம் எப்படி யெகோவா மாதிரி நடந்துகொள்ளலாம்? யோசிக்கிற விதத்திலும் நடந்துகொள்கிற விதத்திலும் யெகோவா மாதிரியே நியாயமானவர்களாக இருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். (யாக். 3:17) உதாரணத்துக்கு, நியாயமானவர்களாக நடக்கும் பெற்றோர்கள், பிள்ளைகளிடமிருந்து அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்க மாட்டார்கள். அதற்காக, அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுக்கவும் மாட்டார்கள். ஒரு அப்பாவாக யாக்கோபு, வளைந்துகொடுப்பதில் நல்ல உதாரணமாக இருக்கிறார். அதைத்தான் ஆதியாகமம் 33:12-14-ல் நாம் பார்க்கிறோம். மனத்தாழ்மையாகவும், நியாயமானவர்களாகவும் இருக்கிற பெற்றோர்கள், ஒரு பிள்ளையை இன்னொரு பிள்ளையோடு ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள். மூப்பர்களும் நியாயமானவர்களாக இருக்க வேண்டும். அப்படியிருக்கும் ஒரு மூப்பர், மூப்பர்களின் கூட்டத்தில் தன்னுடைய கருத்தையே பிடித்துக்கொண்டு இருக்க மாட்டார். பைபிள் நியமங்களை மீறாதவரைக்கும், பெரும்பாலான மூப்பர்கள் எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார். (1 தீ. 3:2, 3) நாம் எல்லாருமே மற்றவர்கள் யோசிக்கும் விதத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக, நாம் யோசிப்பதும் அவர்கள் யோசிப்பதும் வித்தியாசமாக இருக்கும்போது, அவர்கள் ஏன் அப்படி யோசிக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும். (ரோ. 14:1) இப்படி, சபையில் இருக்கிற ஒவ்வொருவரும், தாங்கள் ‘நியாயமானவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிகிற மாதிரி’ நடந்துகொள்ள வேண்டும்.—பிலி. 4:5.

படத்தொகுப்பு: ஒரு அப்பா தன் பிள்ளைகளோடு சந்தோஷமாக வீட்டுக்கு வீடு ஊழியத்தைச் செய்கிறார். 1. தன் மகன் “இன்றும் என்றும் சந்தோஷம்!” சிறுபுத்தகத்தை ஒருவரிடம் கொடுப்பதைப் பார்த்து அந்த அப்பா சந்தோஷப்படுகிறார். 2. பிறகு, தன் மகள் jw.org கான்டாக்ட் கார்டை ஒரு பெண்ணிடம் கொடுப்பதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.

பிள்ளைகளால் எந்தளவு ஊழியத்தில் பேச முடியும் என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் ஒரு அப்பா நியாயமானவராக நடந்துகொள்கிறார் (பாரா 9)


பொறுமையுள்ளவர்

10. யெகோவா எப்படியெல்லாம் பொறுமையைக் காட்டியிருக்கிறார்?

10 பெருமையாக இருக்கிற ஒருவர் பொறுமையாக இருக்க மாட்டார். எல்லாமே அவர் நினைத்த நேரத்தில் நடக்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால், யெகோவா எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார்! அவர் பொறுமையின் சிகரமாக இருக்கிறார். உதாரணத்துக்கு, நோவாவின் காலத்தில் 120 வருஷங்களில் கெட்டவர்களை அழிக்கப்போவதாக யெகோவா சொன்னார்; அதுவரை பொறுமையாகக் காத்திருக்க முடிவுசெய்தார். (ஆதி. 6:3) அதனால்தான், நோவாவுக்குத் தன் பிள்ளைகளை வளர்க்கவும், குடும்பமாகச் சேர்ந்து பேழையைக் கட்டவும் போதுமான நேரம் கிடைத்தது. ஆபிரகாமின் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். யெகோவாவின் பிரதிநிதியாக வந்த ஒரு தேவதூதரிடம் சோதோம், கொமோராவின் அழிவைப் பற்றி ஆபிரகாம் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தபோது, அந்தத் தேவதூதர் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்டார். அந்த இடத்தில் மட்டும் பெருமையான ஒரு நபர் இருந்திருந்தால், ‘என்ன தைரியம் இருந்தால் என்னிடமே கேள்வி கேட்பாய்!’ என்று சொல்லியிருப்பார். ஆனால், இந்தத் தேவதூதர் யெகோவாவைப் போலவே ஆபிரகாமிடம் பொறுமையாக இருந்தார்.—ஆதி. 18:20-33.

11. இரண்டு பேதுரு 3:9 சொல்கிற மாதிரி, நம் காலத்தில் யெகோவா ஏன் பொறுமையாக இருக்கிறார்?

11 நம் காலத்தில்கூட யெகோவா பொறுமையாக இருக்கிறார். முடிவுக்கான நாளைக் குறித்து வைத்து, அதற்காகப் பொறுமையாகக் காத்துக்கொண்டு இருக்கிறார். ஏன்? ஏனென்றால், “ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.” (2 பேதுரு 3:9-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் பொறுமை வீணாகிவிட்டதா? இல்லை. லட்சக்கணக்கான நல்மனமுள்ள ஆட்கள் அவரிடம் நெருங்கி வந்திருக்கிறார்கள். இனியும்கூட லட்சக்கணக்கான ஆட்கள் வருவார்கள் என்று நம்புகிறோம். ஆனால், யெகோவாவின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. மக்களை யெகோவா நேசிக்கிறார்; ஆனால் அதற்காக, அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்று அப்படியே விட்டுவைக்க மாட்டார். அநியாய அக்கிரமத்துக்கு அவர் சீக்கிரத்தில் முற்றுப்புள்ளி வைப்பார்.—ஆப. 2:3.

12. இயேசு எப்படி யெகோவா மாதிரி பொறுமையாக இருக்கிறார்?

12 இயேசு எப்படி யெகோவா மாதிரியே நடந்துகொண்டார்? இயேசு ஆயிரக்கணக்கான வருஷங்களாக யெகோவா மாதிரியே பொறுமையாக இருக்கிறார். சாத்தான், யெகோவாவைப் பற்றியும் அவருடைய உண்மை ஊழியர்களைப் பற்றியும் பொய்களைப் பரப்புவதை அவர் பார்த்திருக்கிறார். (ஆதி. 3:4, 5; யோபு 1:11; வெளி. 12:10) எத்தனையோ மக்கள் படும் அவஸ்தைகளைப் பார்த்திருக்கிறார். “பிசாசின் செயல்களை ஒழிப்பதற்காக” அவர் ஏங்கிக்கொண்டு இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை! (1 யோ. 3:8) ஆனாலும், பிசாசின் செயல்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கு யெகோவாவிடமிருந்து அனுமதி கிடைக்கும்வரை அவர் பொறுமையாக இருக்கிறார். ஏன்? ஒரு காரணம், அவர் மனத்தாழ்மையாக இருக்கிறார். எப்போது முடிவைக் கொண்டுவர வேண்டும் என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும் என்பதைப் புரிந்துவைத்திருக்கிறார்.—அப். 1:7.

13. இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களிடம் எப்படிப் பொறுமையாக நடந்துகொண்டார், ஏன்?

13 இயேசு பூமியில் இருந்தபோது, தன்னுடைய அப்போஸ்தலர்களிடமும் பொறுமையாக நடந்துகொண்டார். உதாரணத்துக்கு, தங்களில் யார் பெரியவர் என்று அவர்கள் திரும்பத் திரும்ப சண்டை போட்டார்கள். அப்போது, ‘இவர்களெல்லாம் திருந்தவே மாட்டார்கள்’ என்று இயேசு நினைக்கவில்லை. தொடர்ந்து அவர்களிடம் பொறுமையாக இருந்தார். (லூக். 9:46; 22:24-27) ஒருநாள் கண்டிப்பாக மாறுவார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்தார். நீங்களும் ஒரு தவறைத் திரும்பத் திரும்பச் செய்திருக்கிறீர்களா? அப்படியென்றால், மனத்தாழ்மையாகவும் பொறுமையாகவும் நடந்துகொள்கிற ஒரு ராஜா நமக்குக் கிடைத்திருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!

14. நாம் எப்படிப் பொறுமையை வளர்த்துக்கொள்ளலாம்?

14 நாம் எப்படி யெகோவா மாதிரி நடந்துகொள்ளலாம்? ‘கிறிஸ்துவின் சிந்தையை’ வளர்த்துக்கொண்டால் நம்மால் யெகோவா மாதிரியே யோசிக்கவும் நடந்துகொள்ளவும் முடியும். (1 கொ. 2:16) சரி, கிறிஸ்துவின் சிந்தையை எப்படி வளர்த்துக்கொள்வது? அதற்குக் குறுக்கு வழி எதுவும் கிடையாது. சுவிசேஷங்களைப் படித்தால் மட்டும்தான் அதைச் செய்ய முடியும். அதில் இருக்கிற ஒவ்வொரு பதிவையும் படிக்கப் படிக்க, இயேசு எப்படி யோசித்தார் என்பதை நேரமெடுத்து யோசித்துப் பார்க்க வேண்டும். அதற்குப் பிறகு, இயேசு மாதிரியே யோசிப்பதற்கும் நடந்துகொள்வதற்கும் யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டும். எந்தளவுக்கு நாம் கிறிஸ்துவின் சிந்தையை வளர்த்துக்கொள்கிறோமோ அந்தளவுக்கு யெகோவா மாதிரியே பொறுமையைக் காட்டுவோம்—நம்மிடமும் சரி, சகோதர சகோதரிகளிடமும் சரி!—மத். 18:26-30, 35.

தாழ்மையானவர்களை யெகோவா கௌரவப்படுத்துகிறார்

15. சங்கீதம் 138:6 சொல்வது போல் யெகோவா நடந்திருக்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்?

15 சங்கீதம் 138:6-ஐ வாசியுங்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கே பேரரசராக இருக்கிற யெகோவாவே தாழ்மையானவர்களை விசேஷமாகப் பார்க்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய கௌரவம்! பல நூற்றாண்டுகளாக, தாழ்மையானவர்களை யெகோவா அப்படிப் பார்த்திருக்கிறார் என்பதற்கு சில உதாரணங்களைக் கவனியுங்கள். அவர்களில் சிலருடைய பெயர்கூட நமக்கு ஞாபகம் இருக்காது, ஆனால் அவர்களைப் பற்றி யெகோவா பைபிளில் பதிவு செய்து வைத்திருக்கிறார். உதாரணத்துக்கு, மோசேயைப் பயன்படுத்தி தெபொராள் என்ற ஒரு தாதியின் பெயரை பைபிளில் பதிவு செய்திருக்கிறார். அவள் ஈசாக்கின் குடும்பத்துக்கும் யாக்கோபின் குடும்பத்துக்கும் கிட்டத்தட்ட 125 வருஷங்கள் உண்மையாகச் சேவை செய்தாள். இந்த உண்மையுள்ள பெண்ணைப் பற்றி பைபிளில் நிறைய பதிவுகள் இல்லை என்றாலும், அவள் எந்தளவுக்கு எல்லாராலும் நேசிக்கப்பட்டாள் என்பதை யெகோவா பைபிளில் பதிவு செய்திருக்கிறார். (ஆதி. 24:59; 35:8, அடிக்குறிப்பு) பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு சாதாரண பையனை யெகோவா இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாக ஆக்கினார். (2 சா. 22:1, 36) இயேசு பிறந்த சமயத்தில், பக்கத்திலுள்ள பெத்லகேமில் மேசியா பிறந்திருக்கிறார் என்ற செய்தியை முதலில் சாதாரண மேய்ப்பர்களிடம் தேவதூதர்கள் மூலம் சொன்னார். இப்படி அவர்களைக் கௌரவப்படுத்தினார். (லூக். 2:8-11) பின்பு குழந்தையாக இருந்த இயேசுவை, யோசேப்பும் மரியாளும் ஆலயத்துக்குத் தூக்கிக்கொண்டு போனபோது அங்கிருந்த வயதான சிமியோனுக்கும் அன்னாளுக்கும் தன் மகனை யெகோவா காட்டினார். இப்படி அவர்களையும் கௌரவப்படுத்தினார். (லூக். 2:25-30, 36-38) “யெகோவா மிகவும் உயர்ந்தவராக இருந்தாலும், தாழ்மையானவர்களைக் கண்ணோக்கிப் பார்க்கிறார்” என்பது எவ்வளவு உண்மை!

16. மற்றவர்களை நடத்துகிற விதத்தில் இயேசு எப்படி அவருடைய அப்பா மாதிரியே நடந்துகொண்டார்?

16 இயேசு எப்படி யெகோவா மாதிரி நடந்துகொண்டார்? இயேசு அவருடைய அப்பா மாதிரியே, தாழ்மையானவர்களைக் கௌரவப்படுத்தினார். உதாரணத்துக்கு, ‘கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்களுக்கு’ கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொன்னார். (அப். 4:13; மத். 11:25) உடம்பு முடியாதவர்களைக் குணப்படுத்தினார். அப்படிக் குணப்படுத்தியபோது, அவர்களை அன்பாகவும் கௌரவமாகவும் நடத்தினார். (லூக். 5:13) இறப்பதற்கு முந்தினநாள் ராத்திரி, இயேசு ஒரு வேலைக்காரனைப் போல தன் அப்போஸ்தலர்களுடைய பாதங்களைக் கழுவினார். (யோவா. 13:5) பரலோகத்துக்குப் போவதற்கு முன்பு அவருடைய சீஷர்களுக்கு ஒரு முக்கியமான வேலையைக் கொடுத்தார். அதாவது, முடிவில்லாத வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுகிற வேலையைக் கொடுத்தார். இந்த விதத்தில் அன்று வாழ்ந்தவர்களையும் இன்று வாழ்கிற நம்மையும் கௌரவப்படுத்தியிருக்கிறார்.—மத். 28:19, 20.

17. நாம் எப்படி மற்றவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்தலாம்? (படத்தையும் பாருங்கள்.)

17 நாம் எப்படி யெகோவா மாதிரி நடந்துகொள்ளலாம்? மக்களுடைய நிறம், தோற்றம், பின்னணி, படிப்பறிவு எப்படி இருந்தாலும் சரி, ஆர்வம் காட்டும் எல்லாருக்குமே நல்ல செய்தியைச் சொல்வது மூலமாக அவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்துகிறோம். நமக்கு என்ன மாதிரி திறமைகளோ பொறுப்புகளோ இருந்தாலும் சரி, சகோதர சகோதரிகள் எல்லாரையுமே நம்மைவிட உயர்ந்தவர்களாக நினைப்பது மூலம் அவர்களை நாம் கௌரவப்படுத்துகிறோம். (பிலி. 2:3) இப்படியெல்லாம் மற்றவர்களுக்கு ‘மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளும்போதும்,’ மனத்தாழ்மையாக நடந்துகொள்ளும்போதும் யெகோவா ரொம்ப சந்தோஷப்படுகிறார்.—ரோ. 12:10; செப். 3:12.

சிறையில் இருக்கும் ஒரு பெண் கைதிக்கு இரண்டு சகோதரிகள் பைபிள் படிப்பை நடத்துகிறார்கள்.

எல்லாவிதமான மக்களுக்கும் நல்ல செய்தியைச் சொல்வதன் மூலம் நாம் யெகோவாவைப் போல் மனத்தாழ்மையாக நடந்துகொள்கிறோம் (பாரா 17)a


18. நீங்கள் ஏன் யெகோவா மாதிரியே மனத்தாழ்மையாக நடந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள்?

18 நம் அன்பான அப்பா யெகோவா மாதிரியே நாமும் மனத்தாழ்மையாக நடந்துகொள்ளும்போது, சுலபமாக அணுக முடிந்தவர்களாக இருப்போம்; நியாயமானவர்களாகவும் பொறுமை உள்ளவர்களாகவும் இருப்போம். அதுமட்டுமல்ல, யெகோவா மாதிரியே மற்றவர்களைக் கௌரவமாக நடத்துவோம். நம் மனத்தாழ்மையான அப்பாவிடம் நெருங்கிப்போக இப்படி முயற்சி செய்துகொண்டே இருந்தால் என்றுமே அவருக்குத் தங்கங்களாக இருப்போம்!—ஏசா. 43:4.

மனத்தாழ்மை எப்படி . . .

  • அணுக முடிந்தவர்களாக நடந்துகொள்ள உதவும்?

  • இன்னும் நியாயமானவர்களாக இருக்க உதவும்?

  • பொறுமை உள்ளவர்களாக இருக்க உதவும்?

பாட்டு 159 யெகோவாவுக்கு மகிமை கொடுங்கள்

a படவிளக்கம்: சிறையில் இருக்கிறவர்களுக்கு பைபிளைப் பற்றிச் சொல்லிக்கொடுப்பதன் மூலம் சகோதரிகள் யெகோவா மாதிரியே மனத்தாழ்மையாக நடந்துகொள்கிறார்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்