உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 டிசம்பர் பக். 26-30
  • வயதானவர்களே—நீங்கள் சபைக்கு ஒரு சொத்து!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வயதானவர்களே—நீங்கள் சபைக்கு ஒரு சொத்து!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவா உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்
  • உங்களால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்க முடியும்
  • உங்கள் சேவையை யெகோவா உயர்வாக நினைக்கிறார்
  • மற்றவர்களுக்கு உதவுவதில் மும்முரமாக இருங்கள்
  • வயதானவர்களே, சந்தோஷத்தை இழந்துவிடாதீர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 டிசம்பர் பக். 26-30
படத்தொகுப்பு: வயதான சகோதர சகோதரிகள் சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள். 1. ஒரு சகோதரர் நம்பிக்கையோடு இருக்கிறார், சந்தோஷமாக முன்னே பார்க்கிறார். 2. வீல்-சேரில் இருக்கும் ஒரு சகோதரி மருத்துவமனையில் வேலை செய்யும் ஒருவருக்கு ஒரு துண்டுப்பிரதியைக் கொடுக்கிறார். 3. ஒரு சகோதரி கூட்டத்தில் பதில் சொல்கிறார். 4. வயதான ஒரு சகோதரி ஒரு இளம் சகோதரரோடு ஊழியம் செய்கிறார், அந்தச் சகோதரருடைய கையை பிடித்து நடக்கிறார். 5. ராஜ்ய மன்றத்தில், ஒரு சகோதரர் இரண்டு பிள்ளைகளோடும் அவர்களுடைய அம்மாவோடும் பேசிக்கொண்டிருக்கிறார்.

வயதானவர்களே—நீங்கள் சபைக்கு ஒரு சொத்து!

“சின்ன வயதில் என்னால் எத்தனையோ விஷயங்களைச் செய்ய முடிந்தது. அதையெல்லாம் நினைக்கும்போது எனக்கே ரொம்ப வியப்பாக இருக்கிறது. ஆனால், இப்போது வயதானதால் என்னால் அந்தளவுக்கு செய்ய முடியவில்லை.”—கான்னி, 83 வயது.

ஒருவேளை, உங்களுக்கும் வயதானதால் முன்பு போல் ஓடியாடி நிறைய செய்ய முடியாமல் இருக்கலாம். பல வருஷங்களாக நீங்கள் யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்திருந்தாலும், இப்போது உங்களுக்கு இருக்கும் வரம்புகளை நினைக்கும்போது ரொம்ப சோர்வாக இருக்கலாம், மனசு வலிக்கலாம். ‘முன்பு செய்ததோடு ஒப்பிடும்போது இப்போது நான் செய்வதெல்லாம் ஒன்றுமே இல்லை!’ என்று நீங்கள் யோசிக்கலாம். அப்படியென்றால், உங்களுக்கு எது உதவி செய்யும்?

யெகோவா உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்

‘யெகோவா என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உபாகமம் 6:5-ல் இருக்கும் வார்த்தைகள் ஒரு ஆறுதலான பதிலைக் கொடுக்கிறது. “உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் [உங்களுடைய] முழு இதயத்தோடும் [உங்களுடைய] முழு மூச்சோடும் [உங்களுடைய] முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்” என்று அது சொல்கிறது.

இந்த வசனத்தில் பார்க்கிற மாதிரி, நீங்கள் உங்களுடைய முழு இதயத்தோடும் மூச்சோடும் பலத்தோடும் சேவை செய்ய வேண்டும் என்றுதான் யெகோவா எதிர்பார்க்கிறார். அப்படியென்றால், நீங்கள் செய்யும் சேவையை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதோடு, முன்பு நீங்கள் செய்த சேவையோடும் அதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

இதை யோசித்துப் பாருங்கள்: நீங்கள் இளம் வயதில் இருந்தபோது யெகோவாவுக்கு எப்படிச் சேவை செய்துகொண்டு இருந்தீர்கள்? நிறைய பேர், ‘நாங்கள் யெகோவாவுக்கு எங்களுடைய சிறந்ததைக் கொடுத்தோம்’ என்று சொல்வார்கள். நீங்களும் அப்படித்தான் சொல்வீர்கள். அப்போது இருந்த சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி உங்களுடைய சிறந்ததைக் கொடுத்திருப்பீர்கள். சரி, இப்போது நீங்கள் யெகோவாவுக்கு எப்படிச் சேவை செய்கிறீர்கள்? இப்போது உங்களுக்கு இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி உங்களால் முடிந்த சிறந்ததைக் கொடுக்கிறீர்கள். அப்படிப் பார்த்தால், நீங்கள் முன்பு என்ன செய்தீர்களோ அதைத்தான் இப்போதும் செய்கிறீர்கள். அதாவது, நீங்கள் முன்பும் சிறந்ததைத்தான் கொடுத்தீர்கள், இப்போதும் உங்கள் சிறந்ததைத்தான் கொடுக்கிறீர்கள்.

படத்தொகுப்பு: ஒரு சகோதரி பல வருஷங்களாக யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்துவருகிறார். 1. பல வருஷங்களுக்கு முன்பு, இளம் வயதில் அவர் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஒரு பெண்ணிடம் பேசுகிறார். 2. இப்போது வயதாகி இருக்கும் அந்தச் சகோதரி, ஒரு இளம் சகோதரியோடு ஃபோன் மூலம் ஊழியம் செய்கிறார்.

இளம் வயதில் உங்களுடைய சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுத்தீர்கள்; இப்போது வயதான காலத்திலும், உங்களால் முடிந்த சிறந்ததைத்தான் கொடுக்கிறீர்கள்

உங்களால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்க முடியும்

இந்த விஷயத்தையும் யோசித்துப் பாருங்கள்: உங்கள் வயதை ஒரு தடைக்கல்லாகப் பார்க்காமல், ஒரு படிக்கல்லாகப் பாருங்கள். சொல்லப்போனால், உங்களால் சின்ன வயதில் செய்ய முடியாத சில விஷயங்களை வயதான காலத்தில் செய்ய முடியும். அதற்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

உங்கள் அனுபவத்தை மற்றவர்களிடம் சொல்லுங்கள். பைபிள் காலத்தில் வாழ்ந்த சிலர் என்ன சொன்னார்கள் என்று கவனியுங்கள்:

தாவீது ராஜா: “நான் வாலிபனாக இருந்தேன், இப்போது முதியவனாகவும் ஆகிவிட்டேன். ஆனால், நீதிமானைக் கடவுள் கைவிட்டதையோ, அவனுடைய பிள்ளைகள் உணவுக்காகக் கையேந்துவதையோ இதுவரை நான் பார்த்ததில்லை.”—சங். 37:25.

யோசுவா: “எனக்குச் சாவு நெருங்கிவிட்டது. உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறாமல் போகவில்லை என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். அவை எல்லாமே நிறைவேறியிருக்கின்றன, அவற்றில் ஒரு வார்த்தைகூட பொய்த்துப்போகவில்லை.”—யோசு. 23:14.

ஒருவேளை நீங்களும் வாழ்க்கையில் ஏதோவொரு கட்டத்தில் தாவீது மாதிரியோ யோசுவா மாதிரியோ சொல்லியிருக்கலாம். இந்த உண்மையுள்ள ஊழியர்கள், பல வருஷங்களாக தங்களுடைய வாழ்க்கையில் பார்த்ததையும் கேட்டதையும் வைத்து அந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்; அதை அனுபவப்பூர்வமாக சொன்னார்கள். அதனால், அவர்களுடைய வார்த்தைகளுக்கு ஆழமான அர்த்தம் இருக்கிறது என்று சொல்லலாம்.

நீங்கள் பல வருஷங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்திருந்தால், அப்படிச் செய்வதால் எவ்வளவு ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதை மற்றவர்களுக்குச் சொல்லலாம். யெகோவா தன்னுடைய மக்களை ஆசீர்வதித்த ஏதோவொரு சந்தோஷமான தருணத்தை நீங்கள் கண்ணாரப் பார்த்திருக்கிறீர்களா? அப்படியென்றால், அதைத் தாராளமாக மற்றவர்களிடம் சொல்லுங்கள். அந்தச் சமயத்தில் உங்களுக்கு எவ்வளவு உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருந்ததோ, அதே அனுபவம் அவர்களுக்கும் கிடைக்கும். யெகோவாவுடைய சேவையில் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை மற்றவர்களுக்குச் சொல்லும்போது, கண்டிப்பாக நீங்கள் மற்றவர்களுக்கு உற்சாகம் தரும் ஊற்றாக இருப்பீர்கள்.—ரோ. 1:11, 12.

கூட்டங்களில் முடிந்தளவுக்கு நேரில் கலந்துகொள்ள முயற்சி செய்வதன் மூலமும் நீங்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம். அங்கே நீங்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்துவது மட்டுமல்ல, உங்களுக்கும் உற்சாகம் கிடைக்கும். முன்பு பார்த்த கான்னி இப்படிச் சொல்கிறார்: “கூட்டங்களில் நேரில் கலந்துகொள்வதால் நான் சோர்ந்துபோகாமல் இருக்கிறேன். ராஜ்ய மன்றத்தில் எல்லாரும் என்மேல் அன்பைப் பொழிவதைப் பார்க்கும்போது என்னால் எப்படிச் சோர்ந்துபோக முடியும்?! அதேசமயத்தில் மற்றவர்களுக்கு நன்றியோடு இருப்பதைக் காட்டுவதற்கு நானும் சின்னச் சின்ன பரிசுகளை எடுத்துக்கொண்டு போவேன். அதோடு, சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஆன்மீக விஷயங்களை என்னால் முடிந்த அளவுக்கு செய்கிறேன்.”

உங்கள் சேவையை யெகோவா உயர்வாக நினைக்கிறார்

சூழ்நிலை காரணமாக நிறைய சேவை செய்ய முடியாதவர்களை யெகோவா எவ்வளவு நேசித்தார் என்பதற்கு நிறைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. சிமியோனின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இயேசு பிறந்த சமயத்தில் வாழ்ந்த வயதான ஒரு இஸ்ரவேலர்தான் சிமியோன். ஆலயத்துக்குப் போகும்போதெல்லாம் அங்கே இருக்கிற இளம் ஆண்கள் முக்கியமான வேலைகளைச் செய்வதை அவர் பார்த்திருக்கலாம். ஒருவேளை சிமியோன் இப்படி யோசித்திருக்கலாம்: ‘இந்த இளம் ஆண்களை மாதிரியெல்லாம் என்னால் இப்போது சேவை செய்ய முடியவில்லை. இந்த வயதானவனை வைத்து யெகோவா என்ன செய்யப் போகிறார்?’ ஆனால் யெகோவா அப்படிப் பார்க்கவில்லை. அவர் சிமியோனை ‘நீதிமானாகவும் பக்தியுள்ளவராகவும்’ பார்த்தார். குழந்தையாக இருந்த இயேசுவைப் பார்க்கும் ஒரு அற்புதமான வாய்ப்பை அவருக்குக் கொடுத்தார். சொல்லப்போனால், எதிர்கால மேசியாவைப் பற்றி ஒரு தீர்க்கதரிசனத்தைச் சொல்வதற்குக்கூட யெகோவா சிமியோனைப் பயன்படுத்தினார். (லூக். 2:25-35) உண்மையில், சிமியோனின் வயதான, தளர்ந்துபோன உடலை யெகோவா பார்க்கவில்லை; அவருக்குள் இருந்த பலமான விசுவாசத்தைப் பார்த்தார். ‘தன்னுடைய சக்தியை’ அவருக்குக் கொடுத்திருந்தார்.

யோசேப்பும் மரியாளும் குழந்தையாக இருக்கும் இயேசுவை சிமியோனுக்கு சந்தோஷமாகக் காட்டுகிறார்கள்.

குழந்தையாக இருந்த இயேசுவைப் பார்க்கும் ஆசீர்வாதத்தையும், அவர்தான் எதிர்கால மேசியா என்று தீர்க்கதரிசனம் சொல்லும் ஆசீர்வாதத்தையும் சிமியோனுக்கு யெகோவா கொடுத்தார்

உங்களால் நிறைய செய்ய முடியாமல் இருந்தாலும், முடிந்ததை யெகோவாவுக்கு செய்யும்போது அவர் அதை உயர்வாக நினைப்பார் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். சொல்லப்போனால், ஒருவர் “தன்னிடம் இருப்பதற்கு ஏற்றபடி எதைக் கொடுத்தாலும் அதைக் கடவுள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். இல்லாததைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை.”—2 கொ. 8:12.

அதனால், உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசியுங்கள். உதாரணத்துக்கு, ஏதோவொரு விதமான ஊழியத்தை இப்போதும் உங்களால் செய்ய முடியுமா? கொஞ்சம் நேரமாவது செய்ய முடியுமா? யாருக்காவது ஃபோன் செய்தோ கார்டு எழுதியோ அவர்களை உற்சாகப்படுத்த முடியுமா? நீங்கள் சின்னதாக செய்கிற விஷயங்கள்கூட சகோதர சகோதரிகளின் பார்வையில் ரொம்ப பெரிதாக இருக்கும். அதுவும், ரொம்ப காலமாக யெகோவாவுக்குச் சேவை செய்த ஒருவரிடமிருந்து அது வரும்போது, அதன் மதிப்பே வேறு!

உடல்நல பிரச்சினைகள் இருந்தாலும் உங்களால் யெகோவாவுக்குப் பிரயோஜனமாக இருக்க முடியும். கிழக்கு ஆப்பிரிக்காவில் நடந்த ஒரு அனுபவம் அதைக் காட்டுகிறது. “அது அவருடைய உயிரையே பாதுகாத்தது!” என்ற தலைப்பில் அடுத்து வரும் பெட்டியில் அதைப் பார்க்கலாம்.

பல வருஷங்களாக நீங்கள் யெகோவாவுக்குச் சேவை செய்திருப்பதும் அவருக்கு உண்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு ரொம்பவே உற்சாகமாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். எப்படிச் சகித்திருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு உயிருள்ள சாட்சியாக இருக்கிறீர்கள். நிச்சயமாகவே, “பரிசுத்தவான்களுக்காக நீங்கள் சேவை செய்திருக்கிறீர்கள், சேவை செய்தும் வருகிறீர்கள்; அதனால், உங்களுடைய உழைப்பையும் தன்னுடைய பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும் மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் கிடையாது.”—எபி. 6:10.

மற்றவர்களுக்கு உதவுவதில் மும்முரமாக இருங்கள்

மற்றவர்களுக்கு உதவுவதில் வயதானவர்கள் மும்முரமாக இருந்தால் அவர்களுடைய ஆரோக்கியம் நன்றாக இருக்கும்... தெளிவாக யோசிக்க முடியும்... வாழ்நாள் காலம் கூடும்... என்றெல்லாம் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

அதற்காக, நல்ல விஷயங்களைச் செய்தால், வயதாவதால் வருகிற பாதிப்புகள் போய்விடும் என்று கிடையாது. வயதாகி இறந்துபோவதற்கான உண்மையான காரணத்தை, அதாவது பாவ இயல்பை, கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் முழுமையாகச் சரிசெய்ய முடியும்.—ரோ. 5:12.

இருந்தாலும், இப்போதே யெகோவா உங்களிடம் எதிர்பார்ப்பதைச் செய்யும்போதும், அவரைப் பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்வதற்கு உதவும்போதும், உங்களுடைய நம்பிக்கை பலமாக இருக்கும்; உங்களால் ஓரளவுக்கு ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். வயதானவர்களே, யெகோவா உங்களுடைய சேவையை உயர்வாக நினைக்கிறார் என்பதை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய விசுவாசத்தையும் முன்மாதிரியையும் சபையில் இருக்கிறவர்கள் ஒரு பொக்கிஷமாக நினைக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்!

வயதான ஒரு சகோதரி வீல் ஸ்டாண்டு ஊழியம் செய்கிறார். அழுதுகொண்டு இருக்கும் இரு இளம் பெண்ணுக்கு அவர் ஒரு வசனத்தைக் காட்டுகிறார்.

அது அவருடைய உயிரையே பாதுகாத்தது!

நம் சகோதரிகள் வைத்திருந்த வீல் ஸ்டாண்டு பக்கமாக ஒரு இளம் பெண் நடந்துவந்தார். அந்தப் பெண்ணுக்கு வாழ்த்து சொன்ன பிறகு, அவரிடம் ஒரு ஆறுதலான வசனத்தைக் காட்டலாமா என்று அங்கே இருந்த வயதான சகோதரி கேட்டார். பிறகு, எரேமியா 29:11-ஐ வாசித்துக் காட்டினார். நாம் அழிந்துபோக வேண்டும் என்றல்ல, நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் யெகோவா ஆசைப்படுகிறார் என்று அந்த வசனம் சொல்கிறது. பிறகு நம் சகோதரி இப்படிக் கேட்டார்: “எந்த மாதிரி எதிர்காலத்தை உங்களுக்குக் கடவுள் கொடுக்க ஆசையாக இருக்கிறார் என்று கவனித்தீர்களா?”

அந்த இளம் பெண் அதைக் கேட்டு அப்படியே நெகிழ்ந்துபோய்விட்டார். அவர் கண்கலங்கி இப்படிப் பதில் சொன்னார்: “ஒரு நிம்மதியான, நல்ல எதிர்காலத்தை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று கடவுள் ஆசைப்படுகிறார். இந்த வசனத்தை காட்டியதற்கு ரொம்ப நன்றி! இது என்னுடைய ஜெபத்துக்கு கிடைத்த பதில் என்று நம்புகிறேன். கொஞ்ச நாட்களாகவே எனக்கு அடுத்தடுத்து நிறைய கஷ்டங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. என்னால் சுத்தமாகத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. பேசாமல் செத்துவிடலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். ‘உங்களுக்கு என்மேல் அக்கறை இருந்தால், அதை நான் தெரிந்துகொள்வதற்கு ஒரு அடையாளத்தைக் காட்டுங்கள்’ என்று இன்று காலையில்தான் நான் கடவுளிடம் ஜெபம் செய்தேன். பிறகு பார்த்தால் நீங்கள், அதுவும் முன்பின் தெரியாத ஒருவர், என்னை நிறுத்தி இந்த வசனத்தைக் காட்டி, கடவுள் என்னைப் பற்றி இப்படித்தான் நினைக்கிறார் என்று சொல்கிறீர்கள். இது நிச்சயம் எதேச்சையாக நடந்த ஒன்று இல்லை!”

பிறகு அந்தச் சகோதரி, தற்கொலை செய்யும் எண்ணங்களைச் சமாளிக்க உதவும் நிறைய கட்டுரைகளை நம் வெப்சைட்டில் இருந்து அந்தப் பெண்ணுக்குக் காட்டினார். பைபிள் படிப்பு எப்படி இருக்கும் என்று விளக்கினார்; நம் கூட்டங்களுக்கும் வரச் சொன்னார். அடுத்த வாரமே அந்தப் பெண் வாரயிறுதியில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். இன்றும் என்றும் சந்தோஷம்! சிறுபுத்தகத்திலிருந்து இப்போது பைபிளைப் படிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்.

உங்கள் வயது என்னவாக இருந்தாலும் சரி, உங்களாலும் வீல் ஸ்டாண்டு ஊழியத்தில் கலந்துகொள்ள முடியும்!

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்