பிரசங்கி
1 தாவீதின் மகனும் எருசலேமின் ராஜாவுமான+ பிரசங்கியின்*+ வார்த்தைகள்.
3 சூரியனுக்குக் கீழே* மனுஷன் எவ்வளவுதான் பாடுபட்டு வேலை செய்தாலும்,
எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் என்ன பிரயோஜனம்?+
5 சூரியன் உதிக்கிறது, பின்பு மறைகிறது.
தான் புறப்பட்ட இடத்துக்கே அது வேகமாகப் போய் மறுபடியும் உதிக்கிறது.+
6 காற்று தெற்கே வீசுகிறது, மறுபடியும் சுற்றிவந்து வடக்கே வீசுகிறது.
சுற்றிச் சுற்றி வீசிக்கொண்டே இருக்கிறது, அது நிற்பதே இல்லை.
7 எல்லா ஆறுகளும்* கடலில் போய்க் கலந்தாலும், கடல் நிரம்பி வழிவதில்லை.+
உற்பத்தியான இடத்துக்கே ஆறுகள் போகின்றன, அங்கிருந்து மறுபடியும் ஓடிவருகின்றன.+
8 எல்லாமே சலிப்பைத்தான் தருகின்றன.
அவற்றையெல்லாம் யாராலும் விளக்க முடியாது.
எவ்வளவுதான் பார்த்தாலும் கண்கள் திருப்தி அடைவதில்லை.
எவ்வளவுதான் கேட்டாலும் காதுகள் திருப்தி அடைவதில்லை.
9 இதுவரை இருந்ததுதான் இனிமேலும் இருக்கும்.
இதுவரை செய்யப்பட்டதுதான் இனிமேலும் செய்யப்படும்.
சூரியனுக்குக் கீழே புதியது ஒன்றுமே இல்லை.+
10 “இதோ பாருங்கள், இது புதியது!” என்று சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா?
எல்லாமே காலம்காலமாக இருப்பதுதான்.
நாம் பிறப்பதற்கு முன்பிருந்தே இருப்பதுதான்.
11 முற்காலத்தில் வாழ்ந்தவர்களை யாரும் ஞாபகம் வைப்பதில்லை.
பிற்காலத்தில் வருகிறவர்களையும் யாரும் ஞாபகம் வைக்கப்போவதில்லை.
அவர்களுக்குப் பின்பு வரப்போகிறவர்களும் அவர்களை ஞாபகம் வைக்கப்போவதில்லை.+
12 பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலர்களின் ராஜாவாக இருந்திருக்கிறேன்.+ 13 வானத்தின் கீழே செய்யப்படுகிற எல்லா காரியங்களையும் ஞானமாக+ ஆராய்ந்து பார்ப்பதற்கு நான் முடிவு செய்தேன்.+ மனுஷர்கள் மும்முரமாய்ச் செய்வதற்காகக் கடவுள் கொடுத்திருக்கிற விரக்தியான வேலைகளை நான் ஆராய்ந்து பார்த்தேன்.
14 சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற எல்லாவற்றையும் பார்த்தேன்.
எல்லாமே வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.+
15 கோணலாக இருப்பதை நேராக்க முடியாது.
இல்லாத ஒன்றை எண்ணி வைக்க முடியாது.
16 “இதுவரை எருசலேமில் வாழ்ந்த எவரையும்விட நான் அதிகமான ஞானத்தைச் சம்பாதித்துவிட்டேன்.+ என் இதயத்தில் ஞானமும் அறிவும் நிரம்பி வழிகிறது”+ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். 17 எது ஞானம், எது பைத்தியக்காரத்தனம், எது முட்டாள்தனம் என்பதைத் தெரிந்துகொள்ள கவனம் செலுத்தினேன்.+ இதுவும் காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.
2 “வா, சந்தோஷமாகப் பொழுது போக்கலாம், அதனால் என்ன பயன் கிடைக்கிறதென்று பார்க்கலாம்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஆனால், அதுவும் வீண்தான் என்று புரிந்தது.
2 சிரிப்பைப் பற்றி, “அது பைத்தியக்காரத்தனம்!” என்று சொல்லிக்கொண்டேன்.
சந்தோஷமாகப் பொழுது போக்குவதைப் பற்றி, “அதனால் என்ன பிரயோஜனம்?” என்று சொல்லிக்கொண்டேன்.
3 திராட்சமது குடிப்பதில் என்ன பயன் என்று தெரிந்துகொள்ள நினைத்து, அதைக் குடித்துக் குடித்துப் பார்த்தேன்.+ அதேசமயத்தில், என் ஞானம் மழுங்கிவிடாதபடியும் பார்த்துக்கொண்டேன். இந்தப் பூமியில் வாழ்கிற கொஞ்சக் காலத்தில் மனுஷர்கள் என்ன செய்வது சிறந்தது என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு, புத்தியில்லாத காரியங்களையும்கூட செய்து பார்த்தேன். 4 நான் பெரிய பெரிய காரியங்களைச் செய்தேன்.+ எனக்காக மாளிகைகளைக் கட்டினேன்.+ எனக்காகத் திராட்சைத் தோட்டங்களைப் போட்டேன்.+ 5 எனக்காகத் தோட்டங்களையும் பூங்காக்களையும் அமைத்தேன். எல்லா விதமான பழ மரங்களையும் அவற்றில் நட்டு வைத்தேன். 6 தோப்பில்* வளர்ந்துவந்த மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச குளங்களை வெட்டினேன். 7 நிறைய வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் வைத்துக்கொண்டேன்.+ அவர்களில் சிலர் என் வீட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். இதுவரை எருசலேமில் யாரிடமும் இல்லாத அளவுக்கு ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தேன்.+ 8 எனக்காக வெள்ளியையும் தங்கத்தையும் குவித்து வைத்தேன்.+ ராஜாக்களின் பொக்கிஷங்களையும் மாகாணங்களின் பொக்கிஷங்களையும் குவித்து வைத்தேன்.+ எனக்காக நிறைய பாடகர்களையும் பாடகிகளையும் வைத்துக்கொண்டேன். ஆண்களுக்கு மிகவும் சந்தோஷம் தருகிற பெண் சகவாசத்தையும் வைத்துக்கொண்டேன். அதுவும், நிறைய பெண்களோடு சகவாசம் வைத்துக்கொண்டேன். 9 எருசலேமில் எனக்கு முன்பு வாழ்ந்த எவரையும்விட அதிக செல்வமும் செல்வாக்கும் பெற்றவனாக ஆனேன்.+ அதேசமயத்தில், ஞானமாகவும் நடந்துகொண்டேன்.
10 ஆசைப்பட்ட எதையுமே நான் விட்டுவைக்கவில்லை,+ சந்தோஷம் தரும் எதையுமே நான் அனுபவிக்காமல் இருக்கவில்லை. நான் கடினமாக உழைத்ததால் என் இதயத்துக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இது என்னுடைய கடின உழைப்புக்குக் கிடைத்த பலன்.+ 11 ஆனால், என் கைகளால் செய்த எல்லா வேலைகளையும், அவற்றைச் செய்து முடிக்க நான் உழைத்த உழைப்பையும்+ யோசித்துப் பார்த்தபோது, அவை எல்லாமே வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்+ என்பதைப் புரிந்துகொண்டேன். உண்மையிலேயே பிரயோஜனமான எதுவுமே சூரியனுக்குக் கீழே இல்லை.+
12 பிறகு, நான் ஞானமும் பைத்தியக்காரத்தனமும் முட்டாள்தனமுமான செயல்கள் எவை என்று யோசித்துப் பார்த்தேன்.+ (ராஜாவுக்குப் பின்பு வருகிறவனால் என்ன செய்ய முடியும்? ஏற்கெனவே செய்யப்பட்டதைத்தானே செய்ய முடியும்!) 13 இருட்டைவிட வெளிச்சம் எப்படிப் பிரயோஜனமானதோ அப்படியே முட்டாள்தனத்தைவிட ஞானம் பிரயோஜனமானது+ என்று புரிந்துகொண்டேன்.
14 ஞானமுள்ளவன் தெளிவாகப் பார்த்து நடக்கிறான்.+ முட்டாளோ இருட்டில் நடக்கிறான்.+ கடைசியில் அவர்கள் எல்லாருக்கும் ஒரே முடிவுதான் என்பதையும் புரிந்துகொண்டேன்.+ 15 அதனால், “முட்டாளுக்கு நடப்பதுதான் எனக்கும் நடக்கும்”+ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அப்படியானால், நான் இவ்வளவு பெரிய ஞானியாகி என்ன லாபம்? “இதுவும் வீண்தான்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். 16 ஞானியோ, முட்டாளோ, யாருமே மக்களுடைய மனதில் நிரந்தரமாக இருப்பதில்லை.+ காலப்போக்கில், எல்லாருமே மறக்கப்படுவார்கள். ஞானி எப்படிச் சாவான்? முட்டாள் எப்படிச் சாகிறானோ அப்படித்தானே.+
17 அதனால், எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.+ சூரியனுக்குக் கீழே நடக்கிற எல்லாமே எனக்கு வேதனையைத்தான் தந்தது. அவை எல்லாமே வீண்தான்,+ காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.+ 18 சூரியனுக்குக் கீழே எதையெல்லாம் பாடுபட்டுச் சேர்த்தேனோ அதையெல்லாம் வெறுத்தேன்,+ ஏனென்றால் எனக்குப் பின்னால் வருகிறவனுக்குத்தானே அதையெல்லாம் விட்டுவிட்டுப் போக வேண்டும்!+ 19 அவன் ஞானமுள்ளவனாக இருப்பானா முட்டாளாக இருப்பானா என்று யாருக்குத் தெரியும்?+ எப்படியிருந்தாலும், சூரியனுக்குக் கீழே நான் ஞானத்தோடு பாடுபட்டுச் சம்பாதித்த எல்லாவற்றையும் அவன்தான் ஆண்டு அனுபவிப்பான். இதுவும் வீண்தான். 20 அதனால், சூரியனுக்குக் கீழே நான் கஷ்டப்பட்டுச் செய்த வேலைகளையெல்லாம் நினைத்துத் தவிக்க ஆரம்பித்தேன். 21 ஒருவன் கடினமாக உழைக்கலாம், ஞானத்தோடும் அறிவோடும் திறமையோடும் வேலை செய்யலாம். ஆனால், அவன் சேர்த்து வைப்பதையெல்லாம் அதற்காகக் கொஞ்சமும் பாடுபடாத ஒருவனுக்குத்தானே விட்டுவிட்டுப் போக வேண்டும்!+ இதுவும் வீண்தான், சோகத்திலும் சோகம்தான்.
22 ஒருவன் சூரியனுக்குக் கீழே பாடுபட்டு வேலை செய்வதாலும், அப்படி வேலை செய்ய அவனைத் தூண்டுகிற லட்சிய வெறியினாலும் என்ன லாபம்?+ 23 அவனுடைய வேலையினால் வாழ்நாளெல்லாம் வேதனையும் விரக்தியும்தான் மிஞ்சுகிறது.+ ராத்திரியில்கூட அவனுடைய இதயத்தில் அமைதியில்லை.+ இதுவும் வீண்தான்.
24 சாப்பிட்டு, குடித்து, கடின உழைப்பால் வரும் சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட மேலானது எதுவுமே இல்லை.+ இதுவும் உண்மைக் கடவுளுடைய கையிலிருந்துதான் வருகிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.+ 25 என்னைவிட நன்றாகச் சாப்பிடுகிறவனும் குடிக்கிறவனும் யார்?+
26 உண்மைக் கடவுள் தனக்குப் பிரியமாக நடக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் சந்தோஷத்தையும் தருகிறார்.+ ஆனால், அவனுக்குக் கொடுக்க வேண்டியதையெல்லாம் சேர்த்து வைக்கிற வேலையைப் பாவிக்குக் கொடுக்கிறார்.+ இதுவும் வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.
3 எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது.
இந்த உலகத்தில் நடக்கிற ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது.
2 பிறப்பதற்கு* ஒரு நேரம் இருக்கிறது, இறப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
நடுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, நட்டதைப் பிடுங்குவதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
3 கொல்வதற்கு ஒரு நேரம் இருக்கிறது, குணமாக்குவதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
இடிப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது, கட்டுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
4 அழுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, சிரிப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
ஒப்பாரி வைப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது, நடனம் ஆடுவதற்கு* ஒரு நேரம் இருக்கிறது.
5 கற்களைத் தூக்கியெறிவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, அவற்றை எடுத்து வைப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
கட்டித்தழுவுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, கட்டித்தழுவாமல் இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
6 தேடுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, கிடைக்காது என்று விட்டுவிடுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
வைத்துக்கொள்வதற்கு ஒரு நேரம் இருக்கிறது, வீசியெறிவதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
7 கிழிப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது,+ தைப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
பேசுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது,+ பேசாமல் இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.+
8 நேசிப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது, வெறுப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.+
போர் செய்வதற்கு ஒரு நேரம் இருக்கிறது, சமாதானம் செய்வதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
9 ஒருவன் கஷ்டப்பட்டுச் செய்கிற வேலைகளுக்கெல்லாம் என்ன லாபம் கிடைக்கிறது?+ 10 மனுஷர்கள் மும்முரமாகச் செய்வதற்கென்று கடவுள் கொடுத்திருக்கிற வேலைகளைக் கவனித்தேன். 11 கடவுள் எல்லாவற்றையும் அந்தந்த நேரத்தில் அழகாக* செய்திருக்கிறார்.+ என்றென்றும் வாழும் எண்ணத்தையும் மனுஷர்களின் இதயத்தில் வைத்திருக்கிறார். இருந்தாலும், ஆரம்பம்முதல் முடிவுவரை உண்மைக் கடவுள் செய்திருக்கிற எல்லாவற்றையும் மனுஷர்களால் முழுமையாகத் தெரிந்துகொள்ளவே முடியாது.
12 மனுஷர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து, நல்ல காரியங்களைச் செய்து,+ 13 சாப்பிட்டு, குடித்து, தங்கள் கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். இதைவிட மேலானது வேறு எதுவுமே இல்லை என்று புரிந்துகொண்டேன். இது கடவுள் தரும் பரிசு.+
14 உண்மைக் கடவுள் செய்வதெல்லாம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். அதில் கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ ஒன்றுமில்லை. மக்கள் தனக்குப் பயந்து நடக்க வேண்டும் என்பதற்காக உண்மைக் கடவுள் இப்படிச் செய்திருக்கிறார்.+
15 இப்போது நடப்பதெல்லாம் ஏற்கெனவே நடந்ததுதான், இனி நடக்கப்போவதும் ஏற்கெனவே நடந்ததுதான்.+ ஆனால், நாடித் தேடப்படுவதை* உண்மைக் கடவுள் தேடுகிறார்.
16 நான் வேறொன்றையும் சூரியனுக்குக் கீழே பார்த்தேன். நியாயம் இருக்க வேண்டிய இடத்தில் அநியாயமும், நீதி இருக்க வேண்டிய இடத்தில் அநீதியும் இருக்கிறது.+ 17 “நீதிமான்களுக்கும் பொல்லாதவர்களுக்கும் கடவுள் தீர்ப்பு வழங்குவார்.+ ஏனென்றால், ஒவ்வொரு செயலுக்கும் நடவடிக்கைக்கும் ஒரு நேரம் இருக்கிறது” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
18 உண்மைக் கடவுள் மனுஷர்களைச் சோதித்துப் பார்த்து, அவர்கள் விலங்குகளைப் போலத்தான் இருக்கிறார்கள் என்பதைப் புரிய வைப்பார் என்றும் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். 19 ஏனென்றால், மனுஷர்களுக்கும் முடிவு வருகிறது, விலங்குகளுக்கும் முடிவு வருகிறது. எல்லா உயிர்களின் முடிவும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.+ விலங்குகள் சாவது போலத்தான் மனுஷர்களும் சாகிறார்கள். எல்லா உயிர்களுக்கும் உயிர்சக்தி ஒன்றுதான்.+ அதனால், விலங்குகளைவிட மனுஷன் உயர்ந்தவன் கிடையாது, எல்லாமே வீண்தான். 20 எல்லா உயிர்களும் ஒரே இடத்துக்குத்தான் போகின்றன.+ எல்லாம் மண்ணிலிருந்து வந்தன,+ எல்லாம் மண்ணுக்கே திரும்புகின்றன.+ 21 மனுஷர்களின் உயிர்சக்தி மேலே போகிறதா, விலங்குகளின் உயிர்சக்தி கீழே போகிறதா என்று யாருக்குத் தெரியும்?+ 22 வேலையில் சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட மேலானது வேறு எதுவும் இல்லை+ என்பதை நான் கவனித்தேன். அதுதான் மனுஷனுக்குக் கிடைக்கும் பலன். அவன் இறந்த பிறகு என்ன நடக்குமென்று பார்க்கும் திறனை அவனுக்கு யாரால் கொடுக்க முடியும்?+
4 சூரியனுக்குக் கீழே நடக்கிற எல்லா கொடுமைகளையும் நான் மறுபடியும் கவனித்தேன். அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைப் பார்த்தேன்; அவர்களுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை.+ அவர்களை அடக்கி ஒடுக்கியவர்களுக்கு அதிகாரம் இருந்ததால் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை. 2 உயிரோடு வாழ்ந்துவந்தவர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாக ஏற்கெனவே செத்துப்போயிருந்தவர்களைப் பாராட்டினேன்.+ 3 இவர்கள் எல்லாரையும்விட இன்னும் பிறக்காதவர்களுடைய நிலைமை எவ்வளவோ மேல்.+ ஏனென்றால், சூரியனுக்குக் கீழே நடக்கிற கொடுமைகளை அவர்கள் பார்க்கவில்லை.+
4 போட்டி பொறாமையென்று வந்துவிட்டால்+ மனுஷர்கள் எந்தளவுக்கு முயற்சி எடுத்து* திறமையாக வேலை செய்கிறார்கள் என்று பார்த்திருக்கிறேன். இதுவும் வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.
5 முட்டாள் தன் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்து, தனக்கே அழிவைத் தேடிக்கொள்கிறான்.+
6 ரொம்பவும் கஷ்டப்பட்டு* வேலை செய்து காற்றைப் பிடிக்க ஓடுவதைவிட கொஞ்சம்* ஓய்வெடுப்பது மேல்.+
7 சூரியனுக்குக் கீழே நடக்கிற இன்னொரு வீணான காரியத்தையும் கவனித்தேன்: 8 ஒருவன் தன்னந்தனியாக இருக்கிறான், அவனுக்கு நண்பனும் இல்லை, மகனும் இல்லை, சகோதரனும் இல்லை. ஆனாலும், ராத்திரி பகலாக உழைக்கிறான். எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் அவனுடைய கண்கள் திருப்தி அடைவதில்லை.+ ‘நல்லது எதையும் அனுபவிக்காமல் யாருக்காக இப்படி ஓடி ஓடி உழைக்கிறேன்?’+ என்று அவன் எப்போதாவது யோசிக்கிறானா? இதுவும் வீண்தான், வேதனையான வேலைதான்.+
9 தனியாக இருப்பதைவிட இரண்டு பேராகச் சேர்ந்திருப்பது நல்லது.+ அப்போது, அவர்களுடைய கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். 10 ஒருவன் விழுந்தால் இன்னொருவன் தூக்கிவிட முடியும். ஆனால், தனியாக இருப்பவன் கீழே விழுந்தால் அவனை யார் தூக்கிவிடுவது?
11 இரண்டு பேர் சேர்ந்து படுத்துக்கொண்டால் கதகதப்பாக இருக்கும். தனியாக இருப்பவனால் எப்படிக் கதகதப்பாக இருக்க முடியும்? 12 தனியாக இருப்பவனை ஒருவன் சுலபமாக வீழ்த்திவிடலாம். ஆனால், இரண்டு பேராக இருந்தால் அவனை எதிர்த்து நிற்க முடியும். மூன்று இழைகள் சேர்ந்த கயிற்றைச் சீக்கிரத்தில் அறுக்க முடியாது.
13 வயதானவராக இருந்தாலும் எச்சரிக்கையைக் கேட்டு நடக்கிற அளவுக்குக்கூட புத்தி இல்லாத முட்டாள் ராஜாவைவிட,+ ஏழையாக இருந்தாலும் ஞானமாக நடக்கிற இளைஞனே மேல்.+ 14 ஏனென்றால், அந்த ராஜாவின் ஆட்சியில் அவன்* ஏழையாகப் பிறந்திருந்தாலும்,+ சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்து ராஜாவாக ஆனான்.+ 15 சூரியனுக்குக் கீழே நடமாடுகிற எல்லாரையும் பற்றி யோசித்துப் பார்த்தேன். ராஜாவுக்கு அடுத்தபடியாகச் சிம்மாசனத்தில் உட்காரும் வாரிசைப் பற்றியும் யோசித்துப் பார்த்தேன். 16 அவனுக்கு ஏகப்பட்ட ஆதரவாளர்கள் இருந்தாலும், பிற்பாடு வருகிறவர்களுக்கு அவனைப் பிடிக்காது.+ இதுவும் வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.
5 உண்மைக் கடவுளின் ஆலயத்துக்குப் போகும்போதெல்லாம் கவனமாக நடந்துகொள்.+ முட்டாள்கள் பலி செலுத்துவதுபோல் பலி செலுத்தப் போவதைவிட,+ காதுகொடுத்துக் கேட்பதற்காகப்+ போவது நல்லது. ஏனென்றால், முட்டாள்கள் தாங்கள் செய்வது தவறு என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.
2 உண்மைக் கடவுளுக்கு முன்னால் அவசரப்பட்டு எதையும் பேசிவிடாதே, உள்ளம் பதறி எதையாவது சொல்லிவிடாதே.+ ஏனென்றால், உண்மைக் கடவுள் பரலோகத்தில் இருக்கிறார். ஆனால், நீ பூமியில் இருக்கிறாய். அதனால், அளவாகப் பேசு.+ 3 ஏகப்பட்ட யோசனைகளால்* கனவு வரும்.+ ஏகப்பட்ட வார்த்தைகளால் முட்டாள்தனமான பேச்சு வரும்.+ 4 நீ கடவுளிடம் எதையாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்றத் தாமதிக்காதே.+ ஏனென்றால், நேர்ந்துகொண்டதை நிறைவேற்றாத முட்டாள்களைக் கடவுளுக்குப் பிடிக்காது.+ நீ ஏதாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்று.+ 5 நேர்ந்துகொண்டதை நிறைவேற்றாமல் இருப்பதைவிட நேர்ந்துகொள்ளாமல் இருப்பதே மேல்.+ 6 உன் வாயினால் பாவம் செய்யாதபடி பார்த்துக்கொள்.+ தெரியாமல் சொல்லிவிட்டதாகத்+ தேவதூதர் முன்னால் சொல்லாதே. நீ சொன்னதைக் கேட்டு உண்மைக் கடவுள் ஏன் கோபப்பட்டு, உன் கைகளின் வேலையை அழிக்க வேண்டும்?+ 7 ஏகப்பட்ட விஷயங்களை யோசிப்பதால் கனவுகள் வருவதுபோல்,+ ஏகப்பட்ட வார்த்தைகளைப் பேசுவதால் வீணான விளைவுகள்தான் ஏற்படும். அதனால், உண்மைக் கடவுளுக்குப் பயப்படு.+
8 ஏழைகள் ஒடுக்கப்படுவதையும் நீதி நியாயம் புரட்டப்படுவதையும் எங்கேயாவது பார்த்தால் அதிர்ச்சி அடையாதே.+ அப்படிச் செய்கிற அதிகாரியை அவருடைய உயர் அதிகாரி கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவர்கள் இரண்டு பேருக்கு மேலேயும் உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள்.
9 நிலத்தின் விளைச்சலில் கிடைக்கிற லாபத்தை அவர்கள் எல்லாரும் பங்குபோட்டுக்கொள்கிறார்கள். வயலின் விளைச்சலால்தான் ராஜாவும்கூட சாப்பிடுகிறார்.+
10 வெள்ளியை நேசிக்கிறவன் எவ்வளவு வெள்ளி கிடைத்தாலும் திருப்தியடைய மாட்டான். சொத்துகளை விரும்புகிறவன் எவ்வளவு வருமானம் வந்தாலும் திருப்தியடைய மாட்டான்.+ இதுவும் வீண்தான்.+
11 சொத்துகள்* சேரச் சேர அதை அனுபவிக்கிற ஆட்களும் அதிகமாகிறார்கள்.+ அந்தச் சொத்துகளைக் கண்ணால் பார்ப்பதைத் தவிர அதன் சொந்தக்காரருக்கு வேறென்ன பிரயோஜனம் இருக்கிறது?+
12 வேலை செய்கிறவன் கொஞ்சம் சாப்பிட்டாலும் சரி, நிறைய சாப்பிட்டாலும் சரி, நிம்மதியாகத் தூங்குவான். ஆனால், ஏராளமாகச் சொத்து சேர்த்து வைத்திருப்பவன் தூங்க முடியாமல் தவிப்பான்.
13 சூரியனுக்குக் கீழே நடக்கிற ஒரு பெரிய கொடுமையைப் பார்த்தேன். சொத்துகளைக் குவித்து வைக்கிறவனுக்கு அந்தச் சொத்துகளாலேயே கேடு உண்டாகிறது. 14 தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அந்தச் சொத்துகளெல்லாம் பறிபோய்விடுகிறது. அவனுக்குப் பிள்ளை பிறக்கும்போது அந்தப் பிள்ளைக்குக் கொடுக்க எந்தச் சொத்தும் இருப்பதில்லை.+
15 ஒருவன் தாயின் வயிற்றிலிருந்து வரும்போது நிர்வாணமாக வருவது போலவே, போகும்போதும் நிர்வாணமாகத்தான் போகிறான்.+ பாடுபட்டுச் சம்பாதித்த எதையும் அவனால் கொண்டுபோக முடியாது.+
16 இதுவும் சோகத்திலும் சோகம்தான். அவன் எப்படி வந்தானோ அப்படியே போவான். அதனால், காற்றைப் பிடிக்க ஓடி ஓடி உழைப்பதில் என்ன லாபம்?+ 17 அதோடு, ஒவ்வொரு நாளும் அவன் இருட்டில்தான் சாப்பிடுகிறான்; விரக்தியோடும் வியாதியோடும் எரிச்சலோடும்தான் சாப்பிடுகிறான்.+
18 மனுஷன் எதைச் செய்வது நல்லது என்றும் தகுந்தது என்றும் நான் புரிந்துகொண்டேன்: சாப்பிட்டு, குடித்து, சூரியனுக்குக் கீழே உண்மைக் கடவுள் கொடுத்திருக்கிற குறுகிய வாழ்நாளில் தன் உழைப்புக்கெல்லாம் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும்.+ இதுதான் அவனுக்குக் கிடைக்கும் பலன்.+ 19 அதுமட்டுமல்ல, உண்மைக் கடவுள் ஒருவனுக்குச் சொத்துப்பத்துகளையும்+ அவற்றை அனுபவிக்கிற திறனையும் கொடுக்கும்போது, அதைத் தனக்குக் கிடைக்கும் பலனாக அவன் நினைக்க வேண்டும்; தன் கடின உழைப்பைக் குறித்து சந்தோஷப்பட வேண்டும். இது கடவுள் தரும் பரிசு.+ 20 அவனுடைய வாழ்நாள் காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதைக்கூட அவன் கவனிப்பதில்லை.* ஏனென்றால், உண்மைக் கடவுள் அவனுடைய உள்ளத்தை அந்தளவு சந்தோஷத்தால் நிரப்புகிறார்.+
6 இன்னொரு சோகமான காரியத்தையும் சூரியனுக்குக் கீழே பார்த்தேன். இது மனுஷர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக நடக்கிறது: 2 உண்மைக் கடவுள் ஒருவனுக்குச் செல்வத்தையும் சொத்துசுகத்தையும் பேர்புகழையும் கொடுக்கிறார். அவன் ஆசைப்பட்டதெல்லாம் அவனுக்குக் கிடைக்கிறது. ஆனால், அதையெல்லாம் அவன் அனுபவிக்க முடியாதபடி உண்மைக் கடவுள் செய்துவிடுகிறார். யாரோ ஒருவன்தான் அதையெல்லாம் அனுபவிக்கிறான். இதுவும் வீண்தான், கொடுமையிலும் கொடுமைதான்! 3 ஒரு மனுஷன் நூறு பிள்ளைகளைப் பெற்று, நீண்ட காலம் வாழ்ந்து, முதுமை அடைந்தாலும், கல்லறைக்குப் போவதற்கு முன்பு தன் சொத்துகளை அவன் திருப்தியாக அனுபவிப்பதில்லை. செத்துப் பிறக்கும் குழந்தையே அவனைவிட மேல் என்றுதான் சொல்வேன்.+ 4 அந்தக் குழந்தை வீணாகப் பிறக்கிறது, இருட்டோடு இருட்டாக மறைந்துபோகிறது, பெயர் இல்லாமலேயே புதைந்துபோகிறது. 5 அது சூரியனைப் பார்ப்பதும் இல்லை, எதைப் பற்றியும் தெரிந்துகொள்வதும் இல்லை. ஆனாலும், அந்த மனுஷனைவிட அது எவ்வளவோ மேல்.+ 6 ஒருவன் இரண்டாயிரம் வருஷம் வாழ்ந்தும் எதையுமே அனுபவிக்கவில்லை என்றால் என்ன லாபம்? எல்லாரும் ஒரே இடத்துக்குத்தானே போகிறார்கள்?+
7 மனுஷன் பாடுபட்டு வேலை செய்வதெல்லாம் வயிற்றை நிரப்புவதற்காகத்தான்.+ ஆனால், அவனுடைய ஆசைகள் நிறைவேறுவதே இல்லை. 8 முட்டாளாக இருப்பதைவிட ஞானியாக இருப்பதில் என்ன நன்மை?+ வாழ்க்கையை எப்படி ஓட்டுவது என்று ஏழைக்குத் தெரிந்திருந்தும் என்ன பிரயோஜனம்? 9 ஆசைப்பட்டதை அடைவதற்காக அலைந்து திரிவதைவிட கண் முன்னால் இருப்பதை அனுபவிப்பது நல்லது. இதுவும் வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.
10 உலகத்தில் இருக்கிற எல்லாவற்றுக்கும் ஏற்கெனவே பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மனுஷன் எப்படிப்பட்டவன் என்பதும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தன்னைவிட சக்தியுள்ள ஒருவரிடம் அவனால் வாக்குவாதம் செய்ய* முடியாது. 11 எந்தளவுக்கு வார்த்தைகள்* கூடுகிறதோ அந்தளவுக்கு அவை வீணானவை. அவற்றால் மனுஷனுக்கு என்ன நன்மை? 12 மனுஷனின் வாழ்நாள் வீணானது, நிழல்போல் சீக்கிரம் மறைந்துவிடுகிறது.+ அந்தக் குறுகிய காலத்தில் அவன் எப்படி வாழ்ந்தால் நல்லது என்று யாருக்குத் தெரியும்? அவன் இறந்த பிறகு சூரியனுக்குக் கீழே என்ன நடக்கும் என்று அவனுக்கு யாரால் சொல்ல முடியும்?
7 விலைமதிப்புள்ள எண்ணெயைவிட நல்ல பெயர் சிறந்தது.+ ஒருவருடைய பிறந்த நாளைவிட இறந்த நாள் நல்லது. 2 விருந்து வீட்டுக்குப் போவதைவிட துக்க வீட்டுக்குப் போவது நல்லது.+ ஏனென்றால், எல்லாருக்கும் சாவுதான் முடிவு; உயிரோடு இருப்பவர்கள் இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். 3 சிரிப்பதைவிட வருத்தமாக இருப்பது நல்லது.+ முகம் வாடினால் இதயம் பக்குவப்படும்.+ 4 ஞானமுள்ளவரின் இதயம் துக்க வீட்டில் இருக்கும். ஆனால், முட்டாளின் இதயம் விருந்து* வீட்டில் இருக்கும்.+
5 முட்டாள்களின் பாடல்களைக் கேட்பதைவிட ஞானமுள்ளவரின் கண்டிப்பைக் கேட்பது நல்லது.+ 6 பானைக்கு அடியில் எரிகிற முட்களின் சத்தத்தைப் போலத்தான் முட்டாளின் சிரிப்புச் சத்தமும் இருக்கிறது,+ இதுவும் வீண்தான். 7 ஒடுக்குதல் ஞானமுள்ளவரைக்கூட பைத்தியக்காரத்தனமாக நடக்க வைக்கும். லஞ்சம் உள்ளத்தைக் கெடுக்கும்.+
8 ஒரு செயலின் ஆரம்பத்தைவிட அதன் முடிவு நல்லது. பெருமையைவிட பொறுமை நல்லது.+ 9 சட்டென்று கோபப்படாதே;+ முட்டாள்களின் நெஞ்சில்தான் கோபம் குடியிருக்கும்.*+
10 “இந்தக் காலத்தைவிட அந்தக் காலம் எவ்வளவு நன்றாக இருந்தது!” என்று சொல்லாதே. அப்படிச் சொல்வது ஞானம் அல்ல.+
11 சொத்துசுகத்தோடு ஞானமும் இருந்தால் நல்லது. உயிரோடு இருக்கிறவர்களுக்கு* ஞானம் பிரயோஜனமாக இருக்கும். 12 ஏனென்றால், பணம் பாதுகாப்பு தருவதுபோல்+ ஞானமும் பாதுகாப்பு தரும்.+ ஆனால், பணத்தைவிட சிறந்தது அறிவும் ஞானமும்தான். ஏனென்றால், அவை ஒருவருடைய உயிரையே காப்பாற்றும்.+
13 உண்மைக் கடவுளின் செயல்களை யோசித்துப் பாருங்கள். அவர் கோணலாக்கியதை யாரால் நேராக்க முடியும்?+ 14 சந்தோஷமான நாளில், அந்தச் சந்தோஷத்தை அனுபவியுங்கள்.+ ஆனால் கஷ்டமான நாளில், அந்த இரண்டு நாட்களையும் கடவுள்தான் அனுமதித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.+ எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று மனுஷர்கள் தெரிந்துகொள்ளாமல்*+ இருப்பதற்காகத்தான் அவர் அப்படிச் செய்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
15 வீணான இந்த வாழ்க்கையில்+ நான் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். நீதிமானாக இருந்தும் சீக்கிரத்தில் இறந்துபோகிறவனும் உண்டு,+ பொல்லாதவனாக இருந்தும் ரொம்பக் காலம் வாழ்கிறவனும் உண்டு.+
16 உன்னைப் பெரிய நீதிமானாகவோ+ பெரிய ஞானியாகவோ+ காட்டிக்கொள்ளாதே, உன்னை நீயே ஏன் அழித்துக்கொள்ள வேண்டும்?+ 17 நீ படுமோசமானவனாகவோ படுமுட்டாளாகவோ நடந்துகொள்ளாதே.+ உன் காலத்துக்கு முன்பே நீ ஏன் சாக வேண்டும்?+ 18 முதலாவதாகச் சொல்லப்பட்ட ஆலோசனையை* கேட்டு நடந்து, இரண்டாவதாகச் சொல்லப்பட்ட ஆலோசனையையும்* விட்டுவிடாமல் இருப்பதுதான் மிகவும் நல்லது.+ கடவுளுக்குப் பயந்து நடக்கிறவன் இந்த இரண்டையுமே செய்வான்.
19 ஓர் ஊரிலுள்ள பத்துப் பலசாலிகளைவிட ஞானம் ஒரு ஞானியை அதிக பலசாலியாக ஆக்கும்.+ 20 பாவமே செய்யாமல் நல்லதே செய்கிற நீதிமான் இந்தப் பூமியில் ஒருவன்கூட இல்லை.+
21 மற்றவர்கள் சொல்கிற ஒவ்வொரு வார்த்தையையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே.+ இல்லாவிட்டால், உன் வேலைக்காரன் உன்னைப் பற்றி மோசமாகப் பேசுவதைக்கூட நீ கேட்க வேண்டியிருக்கும். 22 நீயும்கூட பல தடவை மற்றவர்களைப் பற்றி மோசமாகப் பேசியிருக்கிறாய் என்பது உன் உள்ளத்துக்கு நன்றாகத் தெரியுமே.+
23 இதையெல்லாம் நான் ஞானத்தோடு சீர்தூக்கிப் பார்த்தேன். “நான் ஞானி ஆவேன்” என்று சொன்னேன். ஆனால், அது முடியாத காரியமாகிவிட்டது. 24 இதுவரை நடந்திருப்பதெல்லாம் அறிவுக்கு எட்டாதவை, மிக மிக ஆழமானவை. இதை யாரால்தான் புரிந்துகொள்ள முடியும்?+ 25 ஞானத்தையும் ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னால் இருக்கிற காரணங்களையும் பற்றித் தேடிப் பார்ப்பதற்கும் அலசி ஆராய்வதற்கும் நான் கவனம் செலுத்தினேன். முட்டாள்தனம் எவ்வளவு பொல்லாதது என்பதையும், பைத்தியக்காரத்தனம் எவ்வளவு மடத்தனமானது என்பதையும் புரிந்துகொள்ள முயற்சி செய்தேன்.+ 26 அப்போது, இதைத் தெரிந்துகொண்டேன்: ஒழுக்கங்கெட்ட பெண் மரணத்தைவிட கொடூரமானவள். வேடன் விரிக்கிற வலையைப் போல அவள் இருக்கிறாள்; அவளுடைய இதயம் மீன்பிடிக்கிற வலையைப் போல இருக்கிறது, அவளுடைய கைகள் கைதிகளைக் கட்டிவைக்கும் சங்கிலிகளைப் போல இருக்கின்றன. உண்மைக் கடவுளுக்குப் பிரியமாக நடக்கிறவன் அவளிடமிருந்து தப்பித்துக்கொள்வான்.+ ஆனால், பாவி அவளுடைய வலையில் சிக்கிக்கொள்வான்.+
27 “இதோ, இதைத்தான் நான் தெரிந்துகொண்டேன்” என்று பிரசங்கி+ சொல்கிறார். “ஒரு முடிவுக்கு வருவதற்காக ஒவ்வொரு விஷயமாய் ஆராய்ச்சி செய்தேன். 28 அப்படி ஆராய்ச்சி செய்துகொண்டே இருந்தும், என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆயிரம் பேரில் ஒருவனை* பார்த்தேன், ஆனால் ஒருத்தியைக்கூட பார்க்கவில்லை. 29 ஒன்றை மட்டும் தெரிந்துகொண்டேன்: உண்மைக் கடவுள் மனுஷர்களை நேர்மையான ஆட்களாகத்தான் படைத்தார்,+ அவர்கள்தான் நிறைய திட்டங்களைத் தீட்டியிருக்கிறார்கள்.”+
8 ஞானமுள்ளவனுக்கு நிகரானவன் யார்? பிரச்சினைக்குத் தீர்வு* தெரிந்தவன் யார்? ஒருவனுடைய ஞானம் அவனுடைய முகத்தைப் பிரகாசமாக்கும், அவனுடைய கடுகடுப்பான முகத்தைக்கூட சாந்தமாக்கும்.
2 நான் சொல்வது இதுதான்: “நீ கடவுளுக்குக் கொடுத்திருக்கும் உறுதிமொழியை+ மதித்து, ராஜாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி.+ 3 அவசரப்பட்டு அவர் முன்னாலிருந்து போய்விடாதே.+ கெட்ட காரியத்தைச் செய்வதில் பிடிவாதமாக இருக்காதே.+ அவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். 4 ராஜா சொன்னால் சொன்னதுதான்.+ ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று யாரும் அவரிடம் கேட்க முடியாது.”
5 கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவனுக்கு எந்தக் கெடுதலும் வராது.+ சரியான நேரமும் வழிமுறையும்* ஞானமுள்ளவனின் இதயத்துக்குத் தெரியும்.+ 6 மனுஷர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. எல்லா காரியத்துக்குமே ஒரு நேரமும் வழிமுறையும் உண்டு.+ 7 என்ன நடக்கும் ஏது நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படியிருக்கும்போது, அது எப்படி நடக்கும் என்று யாரால் சொல்ல முடியும்?
8 உயிர்சக்தியை* கட்டுப்படுத்தவோ பிடித்து வைக்கவோ எந்த மனுஷனாலும் முடியாது. அதேபோல், சாவு நாளை மாற்றுகிற அதிகாரமும் யாருக்குமே கிடையாது.+ போர்வீரனுக்குப் போர்க்களத்தைவிட்டுப் போக எப்படி அனுமதி கிடைக்காதோ அப்படித்தான் அக்கிரமக்காரர்களையும் அக்கிரமம் தப்பிக்க விடாது.*
9 இதையெல்லாம் நான் பார்த்தேன். சூரியனுக்குக் கீழே நடக்கிற எல்லாவற்றையும் கவனித்தேன். இவ்வளவு காலமாக மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது.+ 10 பரிசுத்த இடத்துக்குப் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்த பொல்லாதவர்கள் அடக்கம் செய்யப்பட்டதை நான் பார்த்தேன். அவர்கள் அக்கிரமம் செய்த நகரத்தில் சீக்கிரமாக மறக்கப்பட்டுப்போனார்கள்.+ இதுவும் வீண்தான்.
11 கெட்ட காரியத்தைச் செய்தவனுக்கு உடனடியாகத் தண்டனை கிடைக்காததால்,+ மனுஷர்களின் இதயம் கெட்ட காரியங்களைச் செய்யத் துணிந்துவிடுகிறது.+ 12 பாவி ஒருவன் கெட்ட காரியங்களை நூறு தடவை செய்திருந்தும் ரொம்பக் காலம் வாழலாம். ஆனாலும், உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத்தான் எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், அவர்கள் உண்மையிலேயே கடவுளுக்குப் பயந்து நடக்கிறார்கள்.+ 13 பொல்லாதவனுக்கு எதுவும் நல்லபடியாக நடக்காது.+ நிழல் போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடிக்காது.+ ஏனென்றால், அவன் கடவுளுக்குப் பயந்து நடப்பதே இல்லை.
14 இந்தப் பூமியில் வீணான* ஒரு காரியம் நடக்கிறது: நீதிமான்கள் பொல்லாதவர்களைப் போலவும்,+ பொல்லாதவர்கள் நீதிமான்களைப் போலவும் நடத்தப்படுகிறார்கள்.+ இதுவும் வீண்தான் என்று நான் சொல்கிறேன்.
15 அதனால், என் சிபாரிசு இதுதான்: சந்தோஷமாக இருங்கள்.+ சாப்பிட்டு, குடித்து, சந்தோஷமாக இருப்பதைவிட சிறந்தது சூரியனுக்குக் கீழே வேறெதுவும் இல்லை. சூரியனுக்குக் கீழே உண்மைக் கடவுள் கொடுத்திருக்கிற வாழ்நாளில் கடினமாக வேலை செய்யும்போது சந்தோஷமாக இருக்க வேண்டும்.+
16 ஞானத்தைச் சம்பாதிக்கவும் இந்தப் பூமியில் நடக்கிற காரியங்களையெல்லாம் பார்க்கவும் நான் கவனம் செலுத்தினேன்.+ அதற்காக ராத்திரி பகலாக நான் தூங்காமல் இருந்தேன்.* 17 பிறகு, உண்மைக் கடவுள் செய்கிற எல்லாவற்றையும் பற்றி யோசித்துப் பார்த்தேன். சூரியனுக்குக் கீழே நடக்கிற விஷயங்களை மனுஷர்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதைத் தெரிந்துகொண்டேன்.+ என்னதான் முயற்சி செய்தாலும், அவர்களால் அவற்றைப் புரிந்துகொள்ளவே முடியாது. அவற்றைத் தெரிந்துகொள்கிற அளவுக்கு ஞானம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டாலும், அவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது.+
9 அதனால், இதையெல்லாம் ஆழமாக யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தேன்: நீதிமான்களும் ஞானமுள்ளவர்களும் உண்மைக் கடவுளுடைய கையில் இருக்கிறார்கள். அவர்களுடைய செயல்களும் அவருடைய கையில்தான் இருக்கின்றன.+ தங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் காட்டிய அன்பையும் வெறுப்பையும் பற்றி மனுஷர்களுக்குத் தெரியாது. 2 நீதிமான்களோ பொல்லாதவர்களோ,+ நல்ல குணமும் பரிசுத்தமும் உள்ளவர்களோ பரிசுத்தம் இல்லாதவர்களோ, பலி செலுத்துகிறவர்களோ பலி செலுத்தாதவர்களோ, எல்லாருக்கும் ஒரே கதிதான்.+ நல்லவனுக்கும் சரி, பாவிக்கும் சரி, உறுதிமொழி கொடுக்கிறவனுக்கும் சரி, உறுதிமொழி கொடுக்க யோசிக்கிறவனுக்கும் சரி, ஒரே முடிவுதான். 3 சூரியனுக்குக் கீழே நடக்கிற இன்னொரு கொடுமை இதுதான்: எல்லாருக்கும் ஒரே கதி+ ஏற்படுவதால் மனுஷர்களுடைய இதயம் தீமையால் நிறைந்திருக்கிறது. உயிரோடிருக்கிற காலத்தில் அவர்களுடைய இதயத்தில் பைத்தியக்காரத்தனம் குடியிருக்கிறது. கடைசியில், அவர்கள் செத்துப்போகிறார்கள்.
4 உயிரோடு இருக்கிற எல்லாருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால், செத்த சிங்கத்தைவிட உயிருள்ள நாயே மேல்.+ 5 உயிரோடு இருக்கிறவர்களுக்குத் தாங்கள் என்றாவது ஒருநாள் சாக வேண்டியிருக்கும் என்பது தெரியும்.+ ஆனால், இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது,+ அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால், அவர்களைப் பற்றிய நினைவே யாருக்கும் இல்லை.+ 6 அவர்கள் காட்டிய அன்பும், வெறுப்பும், பொறாமையும் ஏற்கெனவே அழிந்துவிட்டன. சூரியனுக்குக் கீழே நடக்கிற காரியங்களில் இனி அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.+
7 நீ போய் சந்தோஷமாகச் சாப்பிட்டு, ஆனந்தமாகத் திராட்சமது குடி.+ ஏனென்றால், உன் செயல்கள் உண்மைக் கடவுளுக்குப் பிரியமானவையாக இருக்கின்றன.+ 8 எப்போதும் வெள்ளை உடையை* உடுத்திக்கொள், உன் தலைக்குத் தவறாமல் எண்ணெய் வைத்துக்கொள்.+ 9 சூரியனுக்குக் கீழே கடவுள் உனக்குக் கொடுத்திருக்கிற நிலையில்லாத* வாழ்நாளெல்லாம், உன் அருமை மனைவியோடு சேர்ந்து வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவி.+ உன்னுடைய நிலையில்லாத* வாழ்நாளெல்லாம் அவளோடு சந்தோஷமாக இரு. ஏனென்றால், உன் வாழ்க்கைக்கும் சூரியனுக்குக் கீழே நீ உழைக்கிற உழைப்புக்கும் கிடைக்கிற பலன் இதுதான்.+ 10 உன் கைகளால் எதைச் செய்தாலும் அதை முழு பலத்தோடு செய். ஏனென்றால், நீ போய்ச்சேரும் கல்லறையில்* வேலை செய்யவோ திட்டம் போடவோ முடியாது; அங்கே அறிவோ ஞானமோ இல்லை.+
11 சூரியனுக்குக் கீழே நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். வேகமாக ஓடுகிறவர்கள் எல்லா சமயத்திலும் முதலில் வருவதில்லை, பலசாலிகள் எல்லா சமயத்திலும் போரில் ஜெயிப்பதில்லை,+ ஞானமுள்ளவர்களிடம் எல்லா சமயத்திலும் உணவு இருப்பதில்லை, புத்திசாலிகளிடம் எல்லா சமயத்திலும் சொத்து குவிந்திருப்பதில்லை,+ அறிவாளிகளுக்கு எல்லா சமயத்திலும் வெற்றி கிடைப்பதில்லை.+ ஏனென்றால், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கின்றன. 12 எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று மனுஷர்களுக்குத் தெரியாது.+ மீன்கள் கொடிய வலையில் மாட்டிக்கொள்வது போலவும், பறவைகள் கண்ணியில் சிக்கிக்கொள்வது போலவும், மனுஷர்கள் திடீரென்று அழிவில் சிக்கிக்கொள்கிறார்கள்.
13 சூரியனுக்குக் கீழே நான் ஞானத்தைப் பற்றி ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டேன், அது என் மனதில் ஆழமாகப் பதிந்தது: 14 ஒரு சின்ன ஊரில் சில ஆட்கள் இருந்தார்கள். பலமுள்ள ஒரு ராஜா படையெடுத்து வந்து அதைச் சுற்றிவளைத்தான். அதைப் பிடிப்பதற்காகப் பெரிய மண்மேடுகளை அமைத்தான். 15 அந்த ஊரில் ஒரு ஏழை இருந்தான். அவன் ஞானமுள்ளவன். தன்னுடைய ஞானத்தால் அந்த ஊரைக் காப்பாற்றினான். ஆனால், அந்த ஏழையை எல்லாரும் மறந்துவிட்டார்கள்.+ 16 அதனால், நான் இப்படி நினைத்துக்கொண்டேன்: ‘பலத்தைவிட ஞானம் சிறந்தது.+ ஆனாலும், ஏழையின் ஞானத்தை யாரும் மதிப்பதில்லை. அவனுடைய வார்த்தைகளை யாரும் காதில் வாங்குவதில்லை.’+
17 முட்டாள்களை ஆளுகிறவன் போடுகிற கூச்சலைக் கேட்பதைவிட, ஞானமுள்ளவன் அமைதியாகச் சொல்கிற வார்த்தைகளைக் கேட்பது நல்லது.
18 போர் ஆயுதங்களைவிட ஞானம் சிறந்தது. ஆனால், ஒரேவொரு பாவியால் எத்தனையோ நல்ல காரியங்களைக் கெடுத்துப்போட முடியும்.+
10 செத்த ஈக்களால் வாசனைத் தைலம் கெட்டுப்போய் நாற்றமெடுக்க ஆரம்பித்துவிடும். அதேபோல், சின்ன முட்டாள்தனத்தால் ஒருவரின் ஞானமும் மதிப்பு மரியாதையும் கெட்டுவிடும்.+
2 ஞானமுள்ளவரின் இதயம் அவரை நேர் வழியில் கொண்டுபோகும், ஆனால் முட்டாளின் இதயம் அவனைக் குறுக்கு வழியில் கொண்டுபோகும்.+ 3 முட்டாள் எந்த வழியில் போனாலும் புத்தி இல்லாமல்தான் நடக்கிறான்.+ தான் ஒரு முட்டாள் என்பதை எல்லாருக்கும் காட்டிவிடுகிறான்.+
4 ராஜா உன்மேல் கோபத்தில் சீறினால், உன்னுடைய இடத்தைவிட்டுப் போய்விடாதே.+ சாந்தமாக நடந்துகொண்டால், பெரிய பாவங்களைக்கூட தடுத்துவிடலாம்.+
5 சூரியனுக்குக் கீழே நடக்கிற ஒரு வேதனையான விஷயத்தைக் கவனித்தேன். அதிகாரத்தில் இருக்கிறவர்கள் செய்கிற இந்தத் தவறைப்+ பார்த்தேன்: 6 முட்டாள்களை அவர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் வைக்கிறார்கள், ஆனால் திறமைசாலிகளை* தாழ்ந்த நிலையிலேயே விட்டுவிடுகிறார்கள்.
7 வேலைக்காரர்கள் குதிரைமேல் உட்கார்ந்து போவதையும், இளவரசர்கள் வேலைக்காரர்களைப் போல் நடந்துபோவதையும் பார்த்தேன்.+
8 குழி வெட்டுகிறவன் அதே குழியில் விழுந்துவிடலாம்.+ கற்சுவரை உடைக்கிறவனைப் பாம்பு கொத்திவிடலாம்.
9 கற்களை உடைக்கிறவன் அவற்றால் காயப்படலாம், மரம் வெட்டுகிறவனுக்கு அதனால் ஆபத்து ஏற்படலாம்.*
10 மழுங்கிப்போன கோடாலியைத் தீட்டாவிட்டால், ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால், ஞானமாக நடந்தால் எல்லாவற்றையும் நல்லபடியாகச் செய்ய முடியும்.
11 மகுடி ஊதுவதற்கு முன்பே பாம்பாட்டியைப் பாம்பு கடித்துவிட்டால், அவன் திறமையான பாம்பாட்டியாக இருந்தும் என்ன பிரயோஜனம்?
12 ஞானமுள்ளவரின் வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் நல்லது செய்யும்,+ ஆனால் முட்டாளின் உதடுகள் அவனை அழித்துவிடும்.+ 13 முதலில் அவன் பேசுகிற வார்த்தைகள் முட்டாள்தனமான வார்த்தைகள்;+ கடைசியில் அவன் பேசுகிற வார்த்தைகள் விபரீதத்தில் முடிகிற பைத்தியக்காரத்தனமான வார்த்தைகள். 14 முட்டாள் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பான்.+
அடுத்து என்ன நடக்கும் என்பது ஒரு மனுஷனுக்குத் தெரியாது; அப்படியானால், அவன் இறந்த பின்பு என்ன நடக்கும் என்பதை அவனுக்கு யாரால் சொல்ல முடியும்?+
15 முட்டாள் கடினமாக உழைத்துக் களைத்துப்போகிறான், ஆனால் ஊருக்குப் போகும் வழியைக்கூட கண்டுபிடிக்கத் தெரியாமல் திணறுகிறான்.
16 ராஜா சிறுபிள்ளையாக இருந்தால்+ நாடு எந்தளவுக்குச் சீரழியும்! அதிகாரிகள் காலையிலேயே விருந்து சாப்பிடுகிறவர்களாக இருந்தால் நாடு எந்தளவுக்குக் கெட்டுவிடும்! 17 ஆனால், ராஜா அரச குடும்பத்தில் பிறந்தவராக இருந்தால், நாடு எந்தளவுக்குச் செழிக்கும்! அதிகாரிகள் அளவுக்குமீறி குடிக்காமல்+ வேளாவேளைக்குச் சாப்பிட்டுத் தெம்புள்ளவர்களாக இருந்தால் நாடு எந்தளவுக்கு முன்னேறும்!
18 ஒருவன் படுசோம்பேறியாக இருந்தால் அவனுடைய வீட்டுக்கூரை சாய்ந்து தொங்கும், ஒருவன் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்தால் வீடு ஒழுகும்.+
19 உணவு சிரித்து மகிழ்வதற்கு உதவும், திராட்சமது சந்தோஷமாக வாழ்வதற்கு உதவும்;+ ஆனால், பணம் எல்லாவற்றுக்குமே உதவும்.+
20 உன் உள்ளத்தில்கூட* ராஜாவைச் சபிக்காதே.+ உன் படுக்கை அறையில்கூட பணக்காரனைப் பழிக்காதே. நீ பேசியதை ஒரு பறவை போய் அவனிடம் சொல்லிவிடலாம், ஒரு சின்னப் பறவைகூட அதை அப்படியே அவனிடம் ஒப்பித்துவிடலாம்.
11 உன் ரொட்டியைத் தண்ணீரின் மேல் தூக்கிப் போடு,+ நிறைய நாட்களுக்குப் பிறகு அது மறுபடியும் உனக்குக் கிடைக்கும்.+ 2 உன்னிடம் இருப்பதை ஏழு பேருக்குக் கொடு, எட்டுப் பேருக்குக்கூட கொடு.+ ஏனென்றால், இந்த உலகத்துக்கு எப்படிப்பட்ட பேராபத்து வருமென்று உனக்குத் தெரியாதே.
3 மேகங்களில் தண்ணீர் நிறைந்திருந்தால், அது பூமியில் மழையாகக் கொட்டும். மரம் வடக்கே விழுந்தாலும் தெற்கே விழுந்தாலும், விழுந்த இடத்தில்தான் கிடக்கும்.
4 காற்றையே பார்த்துக்கொண்டிருக்கிறவன் விதைக்க மாட்டான், மேகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறவன் அறுவடை செய்ய மாட்டான்.+
5 கர்ப்பிணியின் வயிற்றிலுள்ள குழந்தையின் எலும்புகளில் உயிர்சக்தி* எப்படிச் செயல்படுகிறது என்று உனக்குத் தெரியாது;+ அது போலவே, எல்லாவற்றையும் செய்கிற உண்மைக் கடவுள் எப்படிச் செயல்படுகிறார் என்று உனக்குத் தெரியாது.+
6 காலையில் விதை விதைக்கத் தொடங்கு, சாயங்காலம்வரை கை ஓயாமல் விதைத்துக்கொண்டே இரு.+ ஏனென்றால், எது முளைக்கும் என்று உனக்குத் தெரியாது. இதுவா, அதுவா, அல்லது இரண்டுமா என்று உனக்குத் தெரியாது.
7 வெளிச்சம் அருமையானது, கண்கள் சூரியனைப் பார்ப்பது நல்லது. 8 ஒருவன் ஆண்டாண்டு காலம் வாழ்ந்தாலும் ஆனந்தமாக வாழ வேண்டும்.+ அதேசமயத்தில், இருண்ட காலம் வரும் என்பதையும் அவன் ஞாபகத்தில் வைக்க வேண்டும். இனி வரப்போவதெல்லாம் வீண்தான்.+
9 இளைஞனே, இளமைக் காலத்தில் சந்தோஷமாக இரு. வாலிப வயதில் உன் இதயம் சந்தோஷத்தால் நிறைந்திருக்கட்டும். உன் இதயம் சொல்கிற வழிகளில் போ, உன் கண் போகிற போக்கில் போ. ஆனால், அதற்கெல்லாம் நீ உண்மைக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதே.+ 10 அதனால், பிரச்சினைக்குரிய விஷயங்களை உன் இதயத்திலிருந்து எடுத்துவிடு. தீய காரியங்களை உன் உடலிலிருந்து நீக்கிவிடு. ஏனென்றால், இளமைத் துடிப்பும் இளமைப் பருவமும் சீக்கிரத்தில் மறைந்துவிடும்.*+
12 உன்னுடைய மகத்தான படைப்பாளரை இளமைப் பருவத்திலேயே நினை.+ வேதனையான காலம் வருவதற்கு முன்னால்,+ “எனக்கு வாழவே பிடிக்கவில்லை” என்று நீ சொல்லும் காலம் வருவதற்கு முன்னால், அவரை நினை. 2 சூரியனும் வெளிச்சமும் சந்திரனும் நட்சத்திரங்களும் இருண்டுபோவதற்கு+ முன்னால், மழைக்குப் பின்பு* மேகங்கள் திரும்பி வருவதற்கு முன்னால், 3 வீட்டுக் காவலாளிகள் நடுநடுங்கும் நாளுக்கு முன்னால், பலசாலிகள் தளர்ந்துபோவதற்கு முன்னால், பெண்கள் எண்ணிக்கையில் குறைந்துபோய் அரைக்கும் வேலையை நிறுத்திவிடுவதற்கு முன்னால், ஜன்னல் வழியாகப் பார்க்கிற பெண்களுக்கு எல்லாமே இருட்டாகத் தெரிவதற்கு+ முன்னால், 4 தெருவாசலின் கதவுகள் மூடப்படுவதற்கு முன்னால், மாவு அரைக்கிற கல்லின் சத்தம் குறைந்துவிடுவதற்கு முன்னால், பறவையின் சத்தம்கூட தூக்கத்தைக் கலைப்பதற்கு முன்னால், பாடல் சத்தமெல்லாம்* அடங்குவதற்கு+ முன்னால், 5 உயரங்கள் பயத்தை ஏற்படுத்துவதற்கு முன்னால், தெருவில் நடப்பது திகிலூட்டுவதற்கு முன்னால், வாதுமை மரம் பூப்பூப்பதற்கு+ முன்னால், வெட்டுக்கிளி ஊர்ந்து ஊர்ந்து போவதற்கு முன்னால், பசியைத் தூண்டுகிற பழத்தைச் சாப்பிட்டால்கூட பசியெடுக்காமல் போவதற்கு முன்னால், மனுஷன் தன்னுடைய நிரந்தர வீட்டுக்குப் போவதற்கு முன்னால்,+ துக்கம் அனுசரிக்கிறவர்கள் வீதியில் நடந்துபோவதற்கு முன்னால்,+ 6 வெள்ளிக்கயிறு அறுந்துவிடுவதற்கு முன்னால், தங்கக் கிண்ணம் நொறுங்குவதற்கு முன்னால், நீரூற்றின் பக்கத்திலே ஜாடி உடைந்துவிடுவதற்கு முன்னால், கிணற்றின் உருளை* நொறுங்குவதற்கு முன்னால் அவரை நினை. 7 மண்ணிலிருந்து வந்த மனிதன் மண்ணுக்கே திரும்புவான்,+ அவனுடைய உயிர்சக்தி அதைக் கொடுத்த உண்மைக் கடவுளிடமே திரும்பிவிடும்.+
8 “வீணிலும் வீண்!” என்று பிரசங்கி+ சொல்கிறார். “எல்லாமே வீண்!”+
9 பிரசங்கி ஞானமுள்ளவராக இருந்ததோடு, தனக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்குக் கற்பித்துக்கொண்டும் இருந்தார்.+ நிறைய பழமொழிகளை*+ தொகுப்பதற்காக* விஷயங்களை ஆழமாக யோசித்தார், அவற்றை அலசி ஆராய்ந்தார். 10 இனிமையான வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும்,+ உண்மையான வார்த்தைகளைத் திருத்தமாக எழுதுவதற்கும் முயற்சி செய்தார்.
11 ஞானமுள்ளவர்களின் வார்த்தைகள் தார்க்கோல்களுக்கு* சமம்.+ அவர்களுடைய பொன்மொழிகள் பசுமரத்தில் பதிந்த ஆணிகளுக்குச் சமம். அவையெல்லாம் ஒரே மேய்ப்பரிடமிருந்து வந்திருக்கின்றன. 12 என் மகனே, மற்றவர்கள் இவற்றைத் தவிர வேறு ஏதாவது சொன்னால், இந்த எச்சரிப்பை மனதில் வை: புத்தகங்கள் எழுதுவதற்கு முடிவே இல்லை. ஆனால், அதிக படிப்பு உடலுக்குக் களைப்பு.+
13 இதுவரை சொன்ன விஷயங்களின் சாராம்சம் என்னவென்றால், உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்து,+ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ இதைவிட முக்கியமான கடமை மனுஷனுக்கு வேறு இல்லை.+ 14 மனுஷனின் ஒவ்வொரு செயலையும், அவன் மறைவாகச் செய்கிற செயல்களையும்கூட, நல்லதா கெட்டதா என்று உண்மைக் கடவுள் நியாயந்தீர்ப்பார்.+
நே.மொ., “ஒன்றுகூட்டுகிறவரின்; ஒன்றுதிரட்டுகிறவரின்.”
இந்த வார்த்தைகள் பிரசங்கி புத்தகத்தில் 29 தடவை வருகின்றன.
வே.வா., “குளிர்கால நீரோடைகளும்; பருவகால நீரோடைகளும்.”
வே.வா., “காட்டில்.”
வே.வா., “பெற்றெடுப்பதற்கு.”
நே.மொ., “துள்ளிக் குதிப்பதற்கு.”
வே.வா., “ஒழுங்காக; பொருத்தமாக; கச்சிதமாக.”
அல்லது, “கடந்துபோனதை.”
வே.வா., “கடினமாக உழைத்து.”
நே.மொ., “இரண்டு கைப்பிடி அளவு.”
நே.மொ., “ஒரு கைப்பிடி அளவு.”
ஒருவேளை, அந்த ஞானமான இளைஞனைக் குறிக்கலாம்.
வே.வா., “கவலைகளால்.”
வே.வா., “நல்ல பொருள்கள்.”
வே.வா., “நினைப்பதில்லை.”
வே.வா., “அவனால் தன் தரப்பில் வாதாட.”
அல்லது, “பொருள்கள்.”
வே.வா., “கொண்டாட்டமான.”
அல்லது, “இது முட்டாளின் அடையாளம்.”
நே.மொ., “சூரியனைப் பார்க்கிறவர்களுக்கு.”
வே.வா., “கண்டுபிடிக்காமல்.”
இது 16-வது வசனத்தில் சொல்லப்பட்ட ஆலோசனையைக் குறிக்கிறது.
இது 17-வது வசனத்தில் சொல்லப்பட்ட ஆலோசனையைக் குறிக்கிறது.
வே.வா., “நேர்மையான ஒருவனை.”
வே.வா., “ஒரு விஷயத்துக்கு அர்த்தம்.”
வே.வா., “தீர்ப்பும்.”
வே.வா., “உயிர்மூச்சை; காற்றை.”
அல்லது, “அக்கிரமத்தால் காப்பாற்ற முடியாது.”
வே.வா., “விரக்தியடைய வைக்கும்.”
அல்லது, “மக்கள் ராத்திரி பகலாகத் தூங்காமல் இருப்பதைப் பார்த்தேன்.”
இது சந்தோஷத்தை வெளிக்காட்டும் பளிச்சென்ற உடையைக் குறிக்கிறது.
வே.வா., “வீணான.”
வே.வா., “வீணான.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
நே.மொ., “பணக்காரர்களை.”
அல்லது, “மரம் வெட்டுகிறவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”
அல்லது, “படுக்கையில்கூட.”
கடவுளுடைய சக்தியையும் குறிக்கலாம்.
வே.வா., “பருவமும் வீணானவை.”
அல்லது, “மழையோடு.”
நே.மொ., “பாடலின் மகள்களெல்லாம்.”
வே.வா., “கப்பி.”
வே.வா., “நீதிமொழிகளை.”
வே.வா., “வரிசைப்படுத்துவதற்காக.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.