திங்கள், ஜூலை 28
‘உலகத்தோடு ஒன்றுபட்டிருக்கிற பிசாசைவிட உங்களோடு ஒன்றுபட்டிருக்கிற கடவுள் உயர்ந்தவராக இருக்கிறார்.’ —1 யோ. 4:4.
உங்களுக்குப் பயமாக இருக்கும்போது, சாத்தான் இல்லாத காலத்தில் யெகோவா என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்பதைப் பற்றி யோசியுங்கள். 2014 மண்டல மாநாட்டில் ஒரு நடிப்பு இருந்தது. அதில் ஒரு அப்பா தன் குடும்பத்தோடு 2 தீமோத்தேயு 3:1-5-ல் இருப்பதைக் கலந்துபேசுவார். புதிய உலகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி அந்த வசனங்கள் சொல்லியிருந்தால், அது எப்படி இருந்திருக்கும் என்று அவர்கள் வாசிப்பார்கள்: “புதிய உலகத்தில் மிகவும் சந்தோஷமான காலம் வரும் என்று தெரிந்துகொள். ஏனென்றால், மனிதர்கள் மற்றவர்களை நேசிப்பவர்களாக, ஆன்மீக காரியங்களை விரும்புகிறவர்களாக, அடக்கமுள்ளவர்களாக, மனத்தாழ்மையுள்ளவர்களாக, கடவுளைத் துதிக்கிறவர்களாக, அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிகிறவர்களாக, நன்றியுள்ளவர்களாக, உண்மையுள்ளவர்களாக, பந்தபாசமுள்ளவர்களாக, ஒத்துப்போகிறவர்களாக, மற்றவர்களைப் பற்றி எப்போதும் நல்ல விதமாக பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாக, மென்மையானவர்களாக, நல்ல காரியங்களை விரும்புகிறவர்களாக, நம்பகமானவர்களாக, வளைந்துகொடுப்பவர்களாக, தலைக்கனம் இல்லாதவர்களாக, சுகபோக வாழ்க்கையை நேசிக்காமல் கடவுளை நேசிக்கிறவர்களாக, கடவுள் பக்தியுள்ளவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களோடு நீ நெருங்கி இரு.” புதிய உலகத்தில் நம் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைப் பற்றிக் குடும்பத்தில் இருக்கிறவர்களிடமும் சகோதர சகோதரிகளிடமும் அடிக்கடி பேசுகிறீர்களா? w24.01 6 ¶13-14
செவ்வாய், ஜூலை 29
நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன். —லூக். 3:22.
ஒரு தொகுதியாக யெகோவா தன்னுடைய மக்களை ஏற்றுக்கொள்கிறார். அவர்களை “பார்த்து சந்தோஷப்படுகிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங். 149:4) ‘ஆனால் என்னைப் பார்த்து அவர் சந்தோஷப்படுவாரா? என்னை ஏற்றுக்கொள்வாரா?’ என்ற சந்தேகம் சிலசமயம் நமக்கு வரலாம். பைபிள் காலங்களில் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்த நிறைய பேருக்குக்கூட இப்படிப்பட்ட சந்தேகம் வந்திருக்கிறது. (1 சா. 1:6-10; யோபு 29:2, 4; சங். 51:11) பாவ இயல்புள்ள மனிதர்களை யெகோவா ஏற்றுக்கொள்கிறார் என்று பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால், யெகோவா நம்மை ஏற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசுமேல் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். (யோவா. 3:16) ஞானஸ்நானம் எடுக்கும்போது, நாம் செய்த பாவங்களிலிருந்து மனம் திருந்தி இருக்கிறோம் என்பதையும் யெகோவாவின் விருப்பத்தை செய்ய வாக்கு கொடுத்திருக்கிறோம் என்பதையும் வெளிப்படையாக காட்டுகிறோம். (அப். 2:38; 3:19) இப்படி, யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள நாம் முயற்சிகள் எடுக்கும்போது அவர் அதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார். அர்ப்பணித்த சமயத்தில் நாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சி செய்தால் யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வார், நம்மை அவருடைய நெருங்கிய நண்பராக பார்ப்பார்.—சங். 25:14. w24.03 26 ¶1-2
புதன், ஜூலை 30
நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது.—அப். 4:20.
பிரசங்கிக்கக் கூடாதென்று அரசாங்க அதிகாரிகள் சொன்னாலும் தொடர்ந்து பிரசங்கிப்பதன் மூலம், முதல் நூற்றாண்டு சீஷர்களைப் போலவே நாமும் நடந்துகொள்ளலாம். ஊழியத்தை நல்லபடியாகச் செய்து முடிக்க யெகோவா உதவி செய்வார் என்று நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். அதனால் தைரியத்துக்காகவும் ஞானத்துக்காகவும் ஜெபம் செய்யலாம். பிரச்சினைகளைச் சமாளிக்க யெகோவாவிடம் உதவி கேளுங்கள். நம்மில் நிறைய பேருடைய உடல் அல்லது மனம் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம்... அன்பானவர்களை மரணத்தில் இழந்து நாம் தவித்துக்கொண்டு இருக்கலாம்... குடும்பப் பிரச்சினைகளால், துன்புறுத்தலால், அல்லது வேறு சில பிரச்சினைகளால்கூட நாம் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கலாம். அதுவும், கொள்ளைநோய், போர் போன்றவை வந்துவிட்டால் ஏற்கெனவே இருக்கும் பிரச்சினைகளைச் சமாளிப்பது நமக்கு இன்னும் கஷ்டமாகிவிடலாம். அந்த மாதிரி சூழ்நிலையில், ஒரு நெருக்கமான நண்பரிடம் பேசுவதுபோல் அவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். யெகோவா ‘உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வார்’ என்று நம்பிக்கையோடு இருங்கள். (சங். 37:3, 5) விடாமல் ஜெபம் செய்வது, ‘உபத்திரவத்தில் சகித்திருக்க’ நமக்கு உதவும். (ரோ. 12:12) நாம் படும் பாடுகள் யெகோவாவுக்குத் தெரியும், ‘உதவிக்காக நாம் கதறுவதை அவர் கேட்கிறார்.’—சங். 145:18, 19. w23.05 5-6 ¶12-15