வேலை செய்யும் பெண்கள்—வளர்ச்சியடையாத தேசத்திலிருந்து ஒரு நோட்டம்
நைஜீரியாவிலுள்ள “விழித்தெழு!” நிருபர் எழுதியது
1950 முதற்கொண்டு, ஊதியத்துக்கு வேலை செய்யும் தொழிலாளர் படையில், பெண்களின் எண்ணிக்கை உலகம் முழுவதிலும் இரண்டு மடங்கு அதிகமாகிவிட்டது. விவாகத்திலும் குடும்ப வாழ்க்கையிலும் புரட்சிகரமான இந்தப் போக்கின் பாதிப்புகளைக் குறித்து அதிகம் எழுதப்பட்டிருக்கிறது. என்றபோதிலும் வளர்ச்சியடையாத தேசங்கள் என்றழைக்கப்படும் தேசங்களில் இது ஒன்றும் புதிய ஒரு நிலை இல்லை. இந்தத் தேசங்களில், ஆண்களும் பெண்களும் நீண்ட காலமாகவே பொருளாதார பங்காளிகளாக சேர்ந்து வேலை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் வளர்ச்சியடையாத தேசத்தில் வேலை பார்க்கும் பெண்களின் பிரச்னைகளும், தொழில்மயமான தேசங்களிலுள்ள அவர்களுடைய கூட்டாளிகளினுடைய பிரச்னைகளும் எவ்வளவாக ஒத்திருக்கின்றன? இப்படிச் சுமையாக இருக்கும் ஒரு தொழிலை எடுத்துக்கொள்வதற்கு அவர்களைத் தூண்டுவது எது? சுவாரசியமான இந்தக் கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்ள, விழித்தெழு! இங்கே நைஜீரியாவில் வேலை செய்யும் மூன்று பெண்களைப் பேட்டி கண்டதை கீழே தருகிறது: எலிசபெத், உல்ரிக் மற்றும் லோலா, லேலாவின் கணவர் ஷோலா.
விழித்தெழு!: ஆப்பிரிக்கப் பெண்கள் ஏன் வேலை செய்கிறார்கள்?a
எலிசபெத்: நைஜீரியாவின் மத்திப மேற்கத்திய பகுதிகளில் பெண்கள், வருமானத்துக்குள் வாழ்வதற்காகவோ அல்லது கூடுதலான ஆதாயத்துக்காகவோ வேலை செய்வதில்லை. அனேக குடும்பங்களில், மனைவி பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறாள். கணவன் அல்ல, அவள்தானே—அனேகமாக அவளுடைய உறவினர்களை அதாவது உடன் பிறந்தாரின் பிள்ளைகள், மற்றும் அத்தை மாமன் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும்.
உல்ரிக்: நான் ஜெர்மனியில் பிறந்தவள். ஆனால் நைஜீரியாவில் குடி உரிமைப் பெற்று இந்நாட்டவளாகவே இருக்கிறேன். இங்கே வேலை செய்வது என்பது இவர்களுடைய கலாச்சாரத்தின் ஒரு பாகமாக இருப்பதை நான் கவனிக்கிறேன். ஒரு கணவன் அவனுடைய மனைவி உழைப்பதில் திறமையுள்ளவளாக இருந்தால் மட்டுமே அவளை ஒரு சொத்தாக கருதுகிறான். அனேகமாக அது வெறுமென பிள்ளைகளைக் கொண்டிருப்பதையும், உணவு தயாரிப்பதைக் காட்டிலும் அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. பெரும்பாலானவர்களின் விஷயத்தில் பிள்ளைகளின் பொருள் சம்பந்தமான தேவைகளைப் பூர்த்தி செய்வது இன்னும் பெரும் அளவு தாயின் கடமையாகவே இருந்து வருகிறது.
லோலா: யோரூபாb மக்களின் மத்தியில் கணவர்கள் தங்களுடைய மனைவிகளுக்கு வியாபாரம் செய்வதில் திறமையிருப்பதை வெகு காலமாகவே அறிந்திருக்கிறார்கள். ஆகவே கணவர்கள் பொருட்களை உற்பத்தி செய்கையில், மனைவிகள் அதை விற்பனை செய்கிறார்கள். இது திறம்பட்ட உழைப்புப் பங்கீடாக இருக்கிறது. கணவன், பண்ணையில் ஆரம்பித்ததை, வெற்றிகரமாக ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதில், அவனுக்கு ஆதரவாக இருந்து இவள் தன்னுடைய பங்கைச் செய்கிறாள். வீட்டை நிர்வகிப்பதோடுகூட ஒரு தொழில் அல்லது வியாபாரத்தையும் சேர்த்து செய்வது, கடின உழைப்புக்கு ஒரு அடையாளமாக இருக்கிறது. பைபிளில் நீதிமொழிகள் 31-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள குணசாலியான மனைவியைப் போல, அவள் அதிகாலமே எழுந்து, தன்னுடைய வீட்டைக் கவனித்து குடும்பத்துக்கு உணவு தயாரிக்கிறாள். இது, தோட்டத்தை நாட்டுவது வியாபாரிகளுக்கு தைத்துகொடுப்பது அல்லது ஒரு சிறிய வியாபாரத்தை நடத்துவது போன்ற மற்ற காரியங்களைச் செய்வதில், அவளுடைய நாளின் மீதமுள்ள நேரத்தை செலவிடுவதற்கு அனுமதிக்கிறது.
எலிசபெத்: குடும்பத்துக்கு வெளியே உள்ள உலகத்தைப் பார்ப்பது அவசியம் என்பதாக அனேக பெண்கள் நினைக்கிறார்கள். அனேக சமயங்களில் வாணிகத்தையோ அல்லது மற்ற வேலைகளையோ செய்வதன் மூலமாகவே அவர்கள் உண்மையான கல்வியைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
விழித்தெழு!: அது எப்படி?
எலிசபெத்: வாணிகம் செய்வது அவர்களுடைய கணக்கறிவையும் அடிப்படை பேச்சு முறையையும் அபிவிருத்தி செய்கிறது. இது அவர்களுடைய வீடுகளையும் குடும்பங்களையும் மேம்பட்ட விதத்தில் நிர்வகிக்க உதவி செய்கிறது. மேலுமாக வேலை செய்வது பெண்களுக்கு தன்னம்பிக்கையையும் மரியாதையையும் கொடுக்கிறது.
ஷோலா: பெண்கள் வேலை செய்வதற்கு மற்றொரு பலமான காரணம், பல மனைவியரை மணக்கும் அங்குள்ள பழக்கமாக இருக்கிறது. பல மனைவியர் உள்ள குடும்பங்களில், மனைவிகள், தங்கள் கணவன் தங்களின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்வான் என்று எதிர்பார்க்க இயலாது. பிழைப்பதற்கு ஒரு வழியை தான் பார்த்துக் கொள்ளாவிட்டால், தனக்குத் தொந்தரவுதான் என்பதாக ஒரு மனைவி நினைக்கிறாள். பல மனைவிகளையுடைய குடும்பத்தின் உறவுகள் அநிச்சயமாக இருப்பது, பொருளாதரவுக்குத் தங்களுடைய கணவர்களை சார்ந்திராமல் இருக்க அனேக இளம் மனைவிகளை வற்புறுத்துகிறது. மேலுமாக, அனேக பெண்கள் தங்களுடைய பிள்ளைகள் மிகச்சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். கணவனின் வருவாய், மற்ற பெண்களுடைய பிள்ளைகளுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டியதாய் இருக்கிறபடியால், மனைவி வேலை செய்கிறாள். தன்னுடைய பிள்ளைகளின் கல்விக்காகவும், ஒருவேளை அவர்களுக்கு ஒரு சுதந்தரத்தை விட்டுச் செல்வதற்காகவும் கடினமாக வேலை செய்கிறாள்.
விழித்தெழு!: என்ன விதமான வேலைகளை பெண்கள் செய்கிறார்கள்?
எலிசபெத்: பெரும்பாலும் வாணிகம்.
ஷோலா: பல்வேறு இனத்தவரின் மத்தியில் இது வித்தியாசப்படுகிறது. சிலர் பயிர் செய்கிறார்கள். மற்றவர்கள் வாணிகம் செய்கிறார்கள்.
உல்ரிக்: ஆண்கள் செய்ய விரும்பாத வேலைகளை அனேகமாக பெண்கள் செய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். சாலையோரம் அமர்ந்து வள்ளிக்கிழங்கு அல்லது மக்காச் சோளம் வறுப்பது, குளிர்ந்த நீர் விற்பது, அல்லது சிறிய தையல் கடைகளை நடத்துவது போன்ற வேலைகளைச் செய்கிறார்கள். ஆம், இவை அதிக லாபத்தைச் சம்பாதிக்கக்கூடிய சிறு தொழில்களாக இருக்கக்கூடும்!
லோலா: கிராமப்புறங்களை விட்டு குடும்பங்கள் இடம்பெயர்ந்து செல்லுகையில், மனைவிகள் அனேகமாக நிலைகொள்ளாமல் தவிப்பது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஒன்றுமே செய்யாமலிருப்பது அவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. வேலை செய்ய அவர்கள் விரும்புவதற்கு வெறும் பொருளாதாரம் மட்டுமே காரணமாக இல்லை என்பதை இது காண்பிக்கிறது. ஏனென்றால் கடந்த காலங்களில், தேவைகள் குறைவாக இருந்தன. வேலைக்குப் போவதைப் பற்றி ஜனங்கள் முகம் சுளித்தார்கள்.
விழித்தெழு!: ஒரு மனைவியின் வருவாய் எந்த அளவுக்கு கணவனுக்கு உண்மையில் முக்கியமாக இருக்கிறது?
உல்ரிக்: ஆப்பிரிக்காவில் பொருளாதார நிலைமை ஸ்திரமற்றதாக இருப்பதால் மனைவியின் வருமானம் அதிக முக்கியமாக இருக்கிறது. கம்பெனிகள் அடிக்கடி தொழிலாளிகளைத் தற்காலிகமாக வேலையினின்று விலக்கி வைக்கிறது. ஏன், அரசாங்க ஊழியர்களுங்கூட தங்களுடைய சம்பள பணத்தைப் பெற்றுக்கொள்ள பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலுமாக கிறிஸ்தவ ஆண்கள் உலகப்பிரகாரமான அழுத்தங்களுக்கு விட்டு கொடுக்கவும் பைபிளின் நியமங்களின் பேரில் ஒத்திணங்கிப் போக மறுப்பதன் காரணமாகவும் அடிக்கடி வேலைகளை இழந்துவிடுகிறார்கள். ஆனால் வாணிகம் செய்யும் பெண், இவள் திறமையுள்ளவளாக இருந்தால், சுலபமாக அவள் வேலையை இழக்க நேரிடாது. அனேக சமயங்களில் அவள்— குறைந்த பட்சம் தற்காலிகமாவது—குடும்பத்தில் பணம் சம்பாதிக்கும் ஒரே நபராக இருக்கிறாள்!
ஷோலா: சமுதாய அமைப்பு மாறிவிட்டிருப்பதால், தேவைகள் அதிக சிக்கலானதாகிவிட்டிருக்கின்றன. எதிர்பார்ப்புகள் உயர்ந்துவிட்டிருக்கின்றன. பொருளாதார அழுத்தங்கள் வளர்ந்துவிட்டிருக்கின்றன. ஆகவே குடும்ப வரவு செலவு திட்டத்தில் மனைவியின் பங்கு அதிக முக்கியமானதாகிவிட்டிருக்கிறது. கணவன் வாடகைக்கும் மின்சாரத்துக்கும், பணம் கொடுத்து உணவுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையையும் கொடுக்கலாம், மனைவி, உணவுக்கும் உடைக்கும் பள்ளி கட்டணத்துக்கும் பணம் செலுத்தலாம்.
விழித்தெழு!: வேலை செய்யும் மனைவிகள் எதிர்படும் சில பிரச்னைகள் யாவை?
எலிசபெத்: வேலை செய்வது அதிகமாக சரீர முயற்சியை தேவைப்படுத்துவதாக இருக்கிறது. அனேகமாக வேலை செய்யும் மனைவி வீடு திரும்பும்போது விறைப்பாகவும் எரிச்சலாகவும் இருக்கிறாள். இது விவாகத்தில் ஒரு அழுத்தத்தை உண்டு பண்ணக்கூடும். மனைவிகள் நியாயமாக ஓரளவு முன்னேறுவதை ஆண்கள் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அவள் அதிகமாக முன்னேறிவிடுவாளேயானால், கணவன் பொறாமைக்கொண்டு, அது கேட்டுக்கு அறிகுறியாக இருப்பதாக உணரக்கூடும்.
லோலா: மனைவி, பிள்ளைகளைக் கவனியாமலும் கணவனைப் புறக்கணிக்கவும் கூடும். இது அவன் பொறாமைக் கொள்ளவும் பகைமை உணர்ச்சியைக் காட்டவும் காரணமாக இருக்கலாம்.
ஷோலா: ஆனால் ஒரு கிறிஸ்தவ மனைவிக்கு அவளுடைய ஆவிக்குரிய தன்மை பாதிக்கப்படுவதே பெரிய ஆபத்தாக இருக்கிறது.
லோலா: ஆம், வேலையில் முன்னேறுவதற்காக அவ்வளவு அதிகமான நேரம் செலவழிக்கப்படுவதால், கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பது போன்ற ஆவிக்குரிய நடவடிக்கைகள் இரண்டாம் தரமானதாகிவிடக்கூடும். கிறிஸ்தவ கூட்டங்கள் தவறவிடப்படலாம். தனிப்பட்ட பைபிள் படிப்புக்கு நேரமில்லாமல் போய்விடலாம். இவர்கள் வேலையில் முன்னேற படும் பாட்டை அவர்களுடைய பிள்ளைகள் பார்த்து, அதையே இவர்களும் தங்களுடைய இலக்காக ஆக்கிக்கொள்ளக்கூடும்.
விழித்தெழு!: வேலை செய்யும் கிறிஸ்தவ பெண், இது நேரிடாதபடி எவ்விதமாக தவிர்க்கலாம்?
லோலா: அவளுடைய குடும்பமும் அவளுடைய ஆவிக்குரிய வாழ்க்கையும் பாதிக்கப்படாதபடி அவள் எல்லா காரியங்களிலும் தன்னுடைய சமநிலையைக் காத்துக்கொள்ள வேண்டும்.
ஷோலா: அதைச் செய்ய முடியும். இப்படிப்பட்ட சமநிலைக்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்கும் அனேக கிறிஸ்தவ பெண்கள் இருக்கிறார்கள்.
ஆப்பிரிக்காவிலுள்ள பொருளாதார மற்றும் கலாச்சார சக்திகள் தொழிற்துறையில் முன்னேறியுள்ள தேசங்களினுடையதைவிட வித்தியாசமாக இருந்தபோதிலும், இங்கே வேலை செய்யும் பெண்கள் தெரிவித்த தேவைகளும் நாட்டங்களும் உலகம் முழுவதிலுள்ளவர்களுடையதாகவே இருக்கிறது.
உண்மைத்தான். பைபிள் நியமங்களைப் பின்பற்றுவது, உலகப் பிரகாரமான ஒரு வேலையினால் வரும் அழுத்தங்கள் சிலவற்றிலிருந்து பெண்களை விடுவிக்கக்கூடும். என்றபோதிலும் அநேக கிறிஸ்தவ தம்பதிகள், இரண்டு வருமானங்களைக் கொண்டிருப்பது அவசியமாக இருப்பதைக் காண்கிறார்கள். இந்தத் தம்பதிகள் உலகப்பிரகாரமான வேலையின் லாப நஷ்டங்களைக் கணக்கிட வேண்டும்: (லூக்கா 14:28 பார்க்கவும்) பொருளாதாரத் தேவை இருக்குமானால், “குணசாலியான ஸ்திரி” குடும்பத்தின் நலனுக்காக பொருளாதார ரீதியில் தன்னால் உதவ முடிவது குறித்து பெருமிதம் கொள்ளலாம்.—நீதிமொழிகள் 31:10, 13, 16, 24 ஒப்பிடவும்.
மறுபட்சத்தில் வளர்ச்சியடையாத தேசங்களிலுள்ள குடும்பங்கள்—மற்ற குடும்பங்களைப் போலவே—பொருள் சம்பந்தமான வசதிகளைக் காட்டிலும் விவாக ஒத்திசைவும் ஆவிக்குரிய நடவடிக்கைகளும் அதிக மதிப்புள்ளவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். (நீதிமொழிகள் 15:17; மத்தேயு 6:19-21) ஒரு மனைவி வீட்டு வேலைகளைக் காட்டிலும் அதிகமாக நிறைவளிக்கும் ஒரு வேலை தனக்குத் தேவை என்று உணருவாளேயானால், “கர்த்தருடைய கிரியையிலே பெருகு”கிறவளாக இருக்கும்படியாக பைபிள் உற்சாகப்படுத்துவதை அவள் நினைவில் கொள்வது பிரயோஜனமாக இருக்கும். (1 கொரிந்தியர் 15:58) லோலாவைப் போல சிலர் யெகோவாவின் சாட்சிகளுடைய முழு நேர பிரசங்க வேலையில் ஈடுபட ஏற்பாடு செய்யலாம். அனால் பெரும்பாலும் வளர்ச்சியடையாத தேசங்களிலுள்ள கிறிஸ்தவ மனைவிகள், குடும்பத்தலைவியாகவும் பிழைப்புக்காக வேலை செய்கிறவளாயும் இருக்க வேண்டிய சவாலை எதிர்பட வேண்டும். சமநிலையே முக்கியமாக இருக்கிறது. லோலாவின் கணவர் ஷோலா நமக்கு நினைப்பூட்டும் விதமாகவே, “அதைச் செய்ய முடியும்!” (g86 5/22)
[அடிக்குறிப்புகள்]
a “வேலை” என்று சொல்லும்போது ஊதியத்துக்காக வேலை செய்வதை நாங்கள் அர்த்தப்படுத்துகிறோம். குடும்பத் தலைவிகள், வேலை செய்பவர்கள் அல்ல என்று நாங்கள் சொல்லவில்லை.
b நைஜீரியாவிலுள்ள ஒரு இனத்தவர்.
[பக்கம் 9-ன் படம்]
எலிசபெத்
[பக்கம் 10-ன் படம்]
உல்ரிக்
[பக்கம் 11-ன் படம்]
லோலா