மத சகிப்புத்தன்மை 500 ஆண்டுகளுக்குப் பிறகு!
கிறிஸ்டோஃபர் கொலம்பஸ், ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்பெய்னிலிருந்து கடற்பிரயாணம் செய்தார். கொலம்பஸ் புறப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாகத்தானே, மற்றொரு கப்பற்படை ஸ்பெய்னைவிட்டுக் கிளம்பி வித்தியாசமான ஒரு திசையை நோக்கிச் சென்றது. புதிய நிலப்பரப்புகளைக் கண்டுபிடித்தப் பிறகு கொலம்பஸும் அவருடைய ஆட்களும் வெற்றியுடன் திரும்பினர். ஆனால் அதிர்ஷ்டமற்ற மற்ற கடற்பிரயாணிகள், தங்களுடைய சொந்த நாட்டை மீண்டுமாக ஒருபோதும் காணவில்லை.
யார் இந்த மக்கள், மற்றும் ஏன் அவர்கள் தங்களுடைய நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டார்கள்? அவர்கள் ஸ்பானிய யூதர்களாக இருந்தார்கள். கொலம்பஸ் புதுநிலத்தேட்டம் கருதிய தன் கடற்பயணத்திற்காக அரச ஆதரவைப் பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஸ்பெய்ன் தேசத்து கத்தோலிக்க பேரரசர் பெர்டினான்டும் பேரரசி இசபெல்லாவும் ஸ்பெய்னில் உள்ள யூதர்கள் அனைவரையும் வெளியேற்றி “மீண்டும் ஒருபோதும் திரும்பிவரக்கூடாது” என்ற ஓர் ஆணையைப் பிறப்பித்தனர். பரிசுத்த கத்தோலிக்க விசுவாசத்திற்கு எதிராக குற்றச்செயல்கள் செய்ததாக ஸ்பானிய யூதர்களை அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்தத் தீர்ப்பாணை, அதோடுகூட சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட கடும் மத சம்பந்தமான விசாரணை, ஸ்பெய்னைப் பிரத்தியேக கத்தோலிக்க மதமாகச் செய்வதற்கு ஒரு சிலுவைப் போரின் ஆரம்பத்தைக் குறித்தது. யூதர்களின் வெளியேற்றத்திற்கு பத்தாண்டுக்குப் பிறகு, இஸ்லாமிய விசுவாசத்தைக் கடைப்பிடித்த மூர் இனத்தவரையும் நாடுகடத்தினர். வளரத் தொடங்கிய புராட்டஸ்டன்ட் தொகுதிகளை கத்தோலிக்க மத சம்பந்தமான சமய கடும் விசாரணை விரைவில் ஒழித்தது. கொலம்பஸ் தன்னுடைய அரச மரபாதரவுப் புனிதர்களின் சகிப்புத்தன்மையற்ற ஆவியை எதிரொலித்து, தான் கண்டுபிடிக்கக்கூடிய எந்த நிலப்பரப்புகளிலிருந்தும் யூதர்களை வெளியேற்றுவதைப் பற்றி பேசினார்.
ஸ்பெய்னிலுள்ள மத சகிப்பின்மை ஆவி இந்த நூற்றாண்டு வரையாகவுங்கூட செல்வாக்குப் பெற்றிருந்தது. ஃபிரான்ஸிஸ்கோ ஃபிரான்கோ சர்வாதிகாரத்தின்கீழ், கத்தோலிக்க மதம் மட்டுமே “அதிகாரப்பூர்வமான பாதுகாப்பை” அநுபவித்தது. மற்றொரு மத விசுவாசத்தைக் கைக்கொள்ள விரும்பின அநேகர் விதிக்கட்டுப்பாடின்றி கைதுசெய்யப்பட்டார்கள். ஸ்பெய்னின் ஆவிக்குரிய ஐக்கியத்திற்கு தீங்கிழைப்பதாகக் குற்றஞ்சாட்டியதன்பேரில் ஸ்பெய்னிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் சிறையிலடைக்கப்பட்டார்கள். அரசாங்க அமைச்சர் காமீலோ ஆலன்ஸோ வேகா, 1959-ல் சாட்சிகளின் செயல்நடவடிக்கைகளை “பூண்டோடகற்ற” சட்ட நடவடிக்கையெடுக்குமாறு போலீஸ் துறையை அறிவுறுத்தினார். ஆனால் மகிழ்ச்சிகரமாக, காலங்கள் மாறிவிட்டன.
யூதர்களை வெளியேற்றுவதற்காகக் கையெழுத்திட்ட தன்னுடைய முற்பதவியாளர்களின் தீர்ப்பாணைக்குச் சரியாக ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, மார்ச் 31, 1992-ல், ஸ்பெய்னின் தற்போதைய அரசராகிய ஜுவான் கார்லஸ் நாடுகடத்தப்பட்ட அந்த ஸ்பானிய யூத வம்சத்தினருடன் ஸ்பானிய முடியாட்சியின் அடையாளப்பூர்வமான கூட்டத்தில் ஒரு மாட்ரிட் யூதர் ஆலயத்தைப் பார்வையிட்டார்.
“ஸ்பெய்னின் சகிப்பின்மையை நாங்கள் சீர்திருத்திவிட்டோம்,” என்று ஸ்பானிய நீதித்துறை அமைச்சர் தோமாஸ் டே லா குவாட்ரா-ஸால்சிடோ அறிவித்தார். யூதர்கள், முஸ்லீம்கள், புராட்டஸ்டன்டினர் ஆகியோர் இப்பொழுது தடையில்லாமல் வழிபடுகிறார்கள். மேலும், யெகோவாவின் சாட்சிகள் இனிமேலும் தடையுத்தரவின்கீழ் இல்லை. ஒரு புதிய மசூதியையும் ஒரு யூத ஆலயத்தையும், அதோடுகூட ஸ்பெய்னிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தையும் குறித்து மாட்ரிட் நகரம் பெருமைப்படுகிறது. சுறுசுறுப்பான 90,000-க்கும் மேலான அங்கத்தினர்களோடு, ஸ்பெய்னிலுள்ள கத்தோலிக்கமல்லாத மதத்தில் மிகப்பெரியதாக சாட்சிகளின் மதம் கருதப்படுகிறது.
யெகோவாவின் சாட்சிகளையும் அவர்களுடைய நம்பிக்கைகளையும் குறித்து அதிகமான விவரங்களை நீங்கள் பெற விரும்பினால், Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah. India, அல்லது பக்கம் 5-ல் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் மிக அருகாமையிலுள்ள விலாசத்திற்கு தயவுசெய்து எழுதுங்கள். (g93 1/8)
[பக்கம் 32-ன் படம்]
உவாட்ச் டவர் சொஸையிட்டியின் ஸ்பெய்ன் கிளை