அழுத்தத்திற்கு உட்படும் பிள்ளைகளின் ஒரு திடீர் அதிகரிப்பு
“ரேண்டி!” ரீடா கத்தினாள். தன்னுடைய வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது அவள் தூரத்திலிருந்து கண்ட காட்சியால் திகிலூட்டப்பட்டாள். தன்னுடைய மகன் ரேண்டி மேல்மாடி படுக்கையறையின் ஜன்னலுக்குப் பாதி வெளியே கான்க்ரீட் உள்முற்றத்திலிருந்து 8 மீட்டர் உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்தான். வீட்டிற்குள் லேரி தன்னுடைய மனைவி பைத்தியக்காரிபோல அலறுவதைக் கேட்டுத் தூக்கிவாரிப்போடப்பட்டுச் செயல்பட தொடங்கினான். விரைந்து படியில் ஏறிச்சென்று, படுக்கையறைக்குள் நுழைந்து, ரேண்டியைப் பிடித்துப் பத்திரமாக உள்ளே இழுத்தான். ரேண்டியின் பெற்றோருக்கு உடனடி பதில்கள் தேவைப்பட்டன. “ஏன் இவ்வாறு செய்தாய்? ஏன்?” அவனை நம்பாமல் கேட்டனர். “நீ காயமடைந்திருப்பாய்; நீ செத்துப்போயிருப்பாய்!” “நான் சாக விரும்பினேன்,” அலட்சியமாகப் பதில் சொன்னான் ரேண்டி. ரேண்டிக்கு ஐந்து வயதுதான் ஆகியிருந்தது.
வெளித் தோற்றத்திற்கு ரேண்டி ஒரு சாதாரண, ஆரோக்கியமான பையனாகத்தான் இருந்தான். அவன் சாகவேண்டுமென்று மனதுக்குள் விரும்பினான் என்று யாருமே சந்தேகிக்கவில்லை. எனினும், பின்தொடர்ந்த சோதனை ரேண்டி கடுமையான அழுத்தத்தில் இருந்த ஒரு பிள்ளை என்பதை வெளிப்படுத்திற்று.
ரேண்டியைப்போல எண்ணிலடங்கா பிள்ளைகள் இன்று பெருங்குழப்பத்திற்குப் பலியாகி இருக்கின்றனர். தங்களுடைய துயரத்தைக் கையாளுவதற்கு ஆரோக்கியமான வழிகளைக் கண்டுபிடிக்கமுடியாமல், சிலர் தங்களுடைய கவலையை மறைக்க வீணாக முயற்சிசெய்கின்றனர். ஆனால் அடக்கி வைக்கப்பட்ட அழுத்தம் இறுதியில் வெளிப்படுகிறது. தங்களால் வெளியே சொல்லி தீர்த்துக் கொள்ளமுடியாத கவலை சிலருக்குச் சரீரப்பிரகார நோயை ஏற்படுத்தும், அல்லது கடமைதவறும் நடத்தையில் விளைவடையும். வேறு சிலரில் அழுத்தம், தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்ளுதல், சாப்பிடுவதில் ஒழுங்கின்மை, போதைப் பொருட்கள் துர்ப்பிரயோகம், ஏன், தற்கொலை போன்றவற்றை உட்படுத்தும் தன்னழிவு ஏற்படுத்திக்கொள்ளும் காரியங்களைச் செய்வதன்மூலம் உள்ளுக்குள்ளே கிரியை செய்யும். நெருக்கடியில் பிள்ளை (The Child in Crisis) கூறுகிறது: “இந்தப் பிரச்னைகளில் அநேகம்—முக்கியமாகத் தற்கொலை—ஒரு காலத்தில் வயது வந்தவர்கள் மற்றும் வளர்ந்த வளரிளமைப் பருவத்தினரிடையே மட்டும் நடக்கக்கூடியவையாக இருந்தன. இப்பொழுது அவை படிப்படியாக மிகச் சிறியவர்களிடையேயும்கூட ஊடுருவிப் பரவிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றன.”
‘இது எப்படி நடக்கலாம்?’ எனக் குழப்பத்திலிருக்கும் வயதுவந்தோர் கேட்கின்றனர். ‘பிள்ளைப்பருவம் விளையாட்டுப் பொருட்களும் விளையாட்டும் நிறைந்த ஒரு பருவமாகவும், சிரிப்பும் வேடிக்கைகளும் நிறைந்த ஒரு பருவமாகவும் இருக்கவேண்டாமா?’ அநேக பிள்ளைகளுக்கு விடை இல்லை என்பதாகவே இருக்கிறது. “பிள்ளைப்பருவம் நிறைவான மகிழ்ச்சிக்கு ஒரு நேரம் என்பதெல்லாம் வயதுவந்தோர் கற்பனை செய்துகொள்ளும் கட்டுக்கதையாகும்,” என்று டாக்டர் ஜூலியஸ் செகல் கூறுகிறார். வருத்தம் தரும் இந்த உண்மையைக் குழந்தை மருத்துவர் ஜோஸப் லுபோ இவ்வாறு உறுதிப்படுத்தினார்: “நான் இருபத்தைந்து வருடங்கள் மருத்துவம் பார்த்து வந்திருக்கிறேன். சோர்வடைந்த குழந்தை மற்றும் வளரிளமைப்பருவ நோயாளிகள் நான்கு மடங்கு அதிகரித்திருப்பதை இன்று காண்கிறேன்.”
முன்னொருபோதும் ஏற்பட்டிராத அத்தகைய அழுத்தத்தைக் குழந்தைகளில் ஏற்படுத்துவது எது? எச்சரிப்பு அடையாளங்கள் யாவை? அழுத்தத்திற்கு உட்படும் பிள்ளைகள் எவ்வாறு உதவப்படலாம்? பின்வரும் கட்டுரைகளில் இக்கேள்விகள் ஆராயப்படும்.