எமது வாசகரிடமிருந்து
வயதான பெற்றோர் என்னுடைய மாமனார் படுத்தபடுக்கையாக இருப்பதால், அவருக்கு எல்லாமே செய்யப்பட வேண்டும். மனதும் உடலும் தளர்ந்தவளாய் இருப்பதால், நான் சில சமயங்களில் பொறுமையிழந்து, சில காரியங்களைச் சொல்லிவிட்டு பின்னர் வருத்தப்பட்டேன். ஆகவே, “வயதான பெற்றோரைக் கவனிக்கும் சவால்” (பிப்ரவரி 8, 1994, ஆங்கிலம்) என்பதன்பேரிலான கட்டுரைகளை வாசித்தபோது, என் இருதயமே வெடித்துவிடும்போல் இருந்தது! இந்தப் பொருளைத் தயாரித்ததற்காக உங்களுக்கு உள்ளார்ந்த நன்றி. என்னுடைய கடமைகளை நான் தொடர்ந்து செய்கையில் அந்தக் கட்டுரைகள் எனக்கு ஆதரவளிக்கும்.
T. H., ஜப்பான்
எனக்கு 16 வயதாகிறது; என் பாட்டியம்மாவுக்கு இப்போது 24-மணிநேர கவனிப்பு தேவை. அவர்கள் சுமார் 160 கிலோமீட்டருக்கு அப்பால் வசிக்கிறார்கள். இதன் காரணமாக, என்னுடைய குடும்பத்தின்மேல் கடுமையான அழுத்தம் இருக்கிறது. ஆகவே அந்தக் கட்டுரைகளுக்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன். அவை மிகவும் கட்டியெழுப்புகிறவையாக இருந்தன.
M. R., ஐக்கிய மாகாணங்கள்
வயதான பெற்றோரைக் கவனிப்பவர்களுக்கு உதவிகளை வழங்கும் ஒரு சமூக சேவை அமைப்பில் நான் வேலை செய்கிறேன். பெரும்பாலும், நான் கொடுக்கும் பைபிள்-அடிப்படையிலான எந்தப் பிரசுரத்தையும் என் சகவேலையாட்கள் மறுக்கிறார்கள். என்றபோதிலும், சமீபத்தில், பணியாளர் கூட்டம் ஒன்றில், அந்த வெளியீட்டின் ஒரு பிரதியை ஒவ்வொருவருக்கும் நான் கொடுத்தேன். ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்டனர்! ஒரு பணியாளர் அதைத் தன்னுடைய இடத்திலிருந்து வாசிப்பதை நான் கண்டேன்.
B. H., ஐக்கிய மாகாணங்கள்
கவனிப்பை அளிப்பதற்கு ஒருவருடைய உடன்பிறந்த சகோதர சகோதரிகளை உதவிக்காக நேரடியாகக் கேட்கும்படி நீங்கள் ஆலோசனை கொடுத்திருந்தீர்கள். கேட்டுவிட்டோமென்றால் எவரும் ஒருபோதும் மறுக்கமாட்டார்கள் என்று நான் நம்பினேன். என்றாலும், நான் என்னுடைய பெற்றோரை பத்து வருடங்களுக்கும் மேலாகக் கவனித்து வந்திருக்கிறேன்; என்னுடைய உடன்பிறந்தாரை உதவிக்காகக் கேட்டபோது, அவர்கள் மறுத்துவிட்டார்கள் என்பதற்குச் சான்றுபகர நான் இருக்கிறேன். நாம் ஒரு அன்பற்ற, அக்கறையற்ற உலகில் வாழ்கிறோம். மக்கள் விழித்தெழுந்து, பெற்றோரைக் கவனிப்பது ஒரு வேலையல்ல—அது ஒரு சிலாக்கியம்—என்பதை உணரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்!
M. D., ஐக்கிய மாகாணங்கள்
குடும்ப அங்கத்தினர்களைக் கவனிப்பது ஒரு கிறிஸ்தவ கடமை என்பதாக வேத எழுத்துக்கள் சொல்லுகின்றன. “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” (1 தீமோத்தேயு 5:8)—ED.
உங்களுக்கும் உங்கள் துணைக்கும் நேரத்தைக் கொண்டிருங்கள் என்ற புத்திமதியை நான் நிஜமாகவே போற்றினேன். என் கணவனுடன் அல்லது எனக்காகச் செலவிடும் நேரத்தைவிட பெற்றோரைக் கவனிப்பதே முன்னாலிருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு, கடந்த காலத்தில் நான் அதைச் செய்ய தவறியிருந்தேன். என்றபோதிலும், இந்த அறிவுரையிலுள்ள ஞானத்தை நான் காண்கிறேன்; இதைக் குறித்ததில் நான் அதிக சமநிலையுள்ளவளாய் இருக்க முயற்சிசெய்யப்போகிறேன்.
M. O., ஐக்கிய மாகாணங்கள்
குடிபெயர்தல் எனக்கு வயது 14; “இளைஞர் கேட்கின்றனர் . . . நாங்கள் ஏன் குடிபெயர்ந்து செல்ல வேண்டும்?” (பிப்ரவரி 22, 1994, ஆங்கிலம்) என்ற கட்டுரைக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, சபை மூப்பராக இருந்த என் அப்பா, பக்கத்து சபைக்கு குடிபெயர்ந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். நாங்கள் இங்கு நான்கு வருடங்களுக்கு மேலாக இருந்திருக்கிறோம்; இந்தச் சபையை மிக அதிகமாக நேசித்து வந்திருக்கிறோம். இப்போது என்னுடைய அப்பா மற்றொரு சபைக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். நாங்கள் செல்லும்படியாக கேட்டுக்கொள்ளப்பட்ட அன்று, இந்தப் பத்திரிகையைப் பெற்றுக்கொண்டோம். என் சகோதரனும் நானும் இதை நல்லபடியாக சமாளித்துக்கொள்ள அது எங்களுக்கு உதவியது. குடிபெயர்ந்து செல்லும்படி கேட்கப்படுவது ஒரு சிலாக்கியமாக இருக்கிறது; ஆனால் நாம் அன்போடு பழகி வந்திருக்கிறவர்களை விட்டுச்செல்வது மிகவும் கடினமாக இருக்கிறது.
L. B., இங்கிலாந்து
இனப்பாகுபாடு “எல்லா இனத்தவரும் எப்பொழுதாவது ஐக்கியப்படுத்தப்படுவரா?” என்ற தொடர் கட்டுரையைக் கொண்டிருந்த டிசம்பர் 8, 1993 பிரதியை வாசிக்க எனக்கு இப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது. இந்தச் சிக்கலான பிரச்சினையைப் பற்றிய உங்களுடைய திறந்த மனப்பான்மையுள்ள, உட்பார்வையுள்ள புரிந்துகொள்ளுதலால் நான் வியப்பூட்டப்பட்டு, கவர்ந்து ஈர்க்கப்பட்டேன். சமீபத்தில், வரலாற்றில் ஒரு கல்லூரிப் படிப்பை முடித்தேன். ஆனால் ஒன்பதே பக்கங்களில், உங்களுடைய பத்திரிகை சுருக்கமான வரலாற்றையும், விளக்கத்தையும், தீர்வையும் அளித்தது! பாடப் புத்தகங்கள் மற்றும் விரிவுரைகளாலான ஒரு முழு செமஸ்டரையும் அது விஞ்சியது.
R. J., ஐக்கிய மாகாணங்கள்