பூமியின் கடைமுனைகளுக்கு கடவுளைப் பற்றிய அறிவை கொண்டுசெல்லுதல்
[Note: Synchronization will not work because this article has not been made available in the English Watchtower Library]
இந்தியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிக்கு சுமார் 1,200 கிலோமீட்டர் தொலைவில், அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியப் பெருங்கடலில் கண்கவரும் ஒரு தீவுக்கூட்டமாக அமைந்திருக்கின்றன. அங்கே 572 தீவுகளும் சிறுதீவுகளும் கடல் பாறைத்தொடர்களும் பாறைகளும் இருக்கின்றன; 8,249 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைப் பெற்றிருந்தாலும் 38 தீவுகளில் மாத்திரம்தான் ஆட்கள் குடியிருக்கின்றனர்.
அவ்வழியாக செல்லும் கடற்பிரயாணிகளுக்கு அக்குடிமக்கள் பல நூற்றாண்டுகளாக ஆதரவு காண்பிக்கவில்லை. அநேக ஐரோப்பிய தேசங்களின் தோல்விக்குப் பிறகு, இத்தீவுகளில் முதலில் குடியேறியவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் ஆவர். அவ்வாறு அவர்கள் 19-வது நூற்றாண்டில் குடியேறினர், இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்தபோது மிகப் பிரபலமானவற்றில் ஒன்றான தென் அந்தமான் தீவை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கான ஓர் இடமாக அவர்கள் பயன்படுத்தினர். இரண்டாவது உலகப் போரின்போது ஜப்பானால் சிறிது காலம் ஆதிக்கம் செலுத்தப்பட்ட பிறகு, இந்தியக் குடியரசின் ஆளுகையின்கீழ் இத்தீவுகள் வந்தன. கப்பல் மூலமாகவும் விமானம் மூலமாகவும் சுலபமாக சென்றடைய முடிந்ததாய், இவை இன்று சுமார் 3,00,000 ஆட்களின்—சிறு தொகையினரான பழங்குடியினரின், மேலும் முக்கியமாக இந்திய கிழக்குக் கரையோரப் பகுதிகளிலிருந்து வந்தவர்களான மற்றவர்களின்—குடியிருப்பாக இருக்கின்றன.
பெங்காலி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் பரவலாக பேசப்படுகின்றன. மலையாளம் பேசும் ஜனங்களும் கணிசமான அளவில் இருக்கின்றனர், ஆனால் ஹிந்தி இத்தீவுகளின் பொதுமொழியாக இருக்கிறது. பூமியின் தலைக்கோடியிலுள்ள இந்தப் பகுதியில் யெகோவாவின் சாட்சிகளுடைய நான்கு சபைகள் இருப்பதுமாத்திரமல்லாமல் இரண்டு தனிப்பிராந்திய தொகுதிகளும் தொலைதூர தீவுகளில் மற்ற தனிப்பட்ட சாட்சிகள் இங்குமங்குமாகவும்கூட இருக்கின்றனர். எல்லா வகையான ஜனங்களையும் சென்றெட்ட வேண்டும் என்ற அவர்களது ஆவலின் வெளிக்காட்டாக, அத்தீவுகளிலேயே உள்ள இரண்டு மிகப் பெரிய சபைகளின் ராஜ்ய மன்றங்களில் இவ்வாண்டுக்குரிய வருடாந்தர வசனம் ஐந்து மொழிகளில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அது இவ்வாறு வாசிக்கிறது: “வார்த்தையின்படி செய்வோராகுங்கள்.”—யாக்கோபு 1:22, NW.
1995-96-ல் இந்தியாவில் “சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட்ட 16 இடங்களில் ஓர் இடமாக ஆட்சித் தலைநகரான போர்ட்பிளேர் இருந்தது. டிசம்பர் 22-லிருந்து 24 வரையாக அங்கு அந்த மாநாடு நடைபெற்றது. வந்திருந்தோரின் உச்ச எண்ணிக்கை 290-ஐ எட்டியது, 11 பேர் யெகோவாவிற்கான தங்கள் ஒப்புக்கொடுத்தலை வெளிப்படையாகக் காண்பித்தனர். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தை ஆங்கிலத்தில் மாத்திரம் அல்லாமல் ஹிந்தியிலும் பொதுவாகப் பேசப்படும் எல்லா முக்கிய மொழிகளிலும் பெற்றுக்கொள்வதில் மாநாட்டுக்கு வந்திருந்தோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஆங்கிலமொழியின் பதிப்பு வெளியிடப்படும் அதே சமயத்தில் ஒன்பது இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கும் முதல் புத்தகம் இதுதான்.
பொது விடுமுறையாக இருந்த அடுத்த நாளே, யெகோவாவைச் சந்தோஷமாய் துதிக்கும் சுமார் 60 பேர், மற்றவர்களோடு கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்கு தீவுகளில் ஒன்றின் தொலைக்கோடிப் பகுதிக்கு பயணம் செய்தனர். சாட்சிகள் சிறு குழுக்களாக பிரிந்து, வெளிப்படையாக தெரியும் தூசி படிந்த தடங்களிலும், வயல்வெளிகளின் வழியாகவும், மேடுகளின் மீதும் நடந்து சென்றனர். தொலைதூர குக்கிராமங்களிலும் அடர்த்தியான காடுகளுள்ள பகுதிகளிலும் உள்ள தாழ்மையான விவசாயிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. விவசாயிகளின் சொந்த மொழியிலேயே ஓரிரண்டு வசனங்களை அவர்களுக்குப் படித்துக் காண்பித்து, அவர்களது தாய் மொழியில் உள்ள ஒரு துண்டுப்பிரதியை, ஒரு பத்திரிகையை அல்லது அறிவு புத்தகத்தை அவர்களுக்கு அளித்தனர். பீச்சில் பிக்னிக் மதிய உணவிற்கு பிற்பாடு, சாட்சிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். யெகோவாவின் சேவையில், ‘பூமியின் கடைமுனைகளில்’ உள்ள இடங்களில் ஒன்றிற்கு கடவுளைப் பற்றிய அறிவைக் கொண்டுசெல்வதில், தங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிட்டதைக் குறித்து அவர்கள் எவ்வளவு சந்தோஷமுள்ளவர்களாக இருந்தனர்.—அப்போஸ்தலர் 1:8, NW.