“ஈடிணையற்ற ஒரு புத்தகம்”
ரஷ்யாவிலுள்ள மாஸ்கோவில் வாழும் 70 வயது பெண்மணி, எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தை வாசித்தார். பைபிளிலுள்ள நான்கு சுவிசேஷங்களில் குறிப்பிட்டபடி, இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கை சரிதையை விலாவாரியாக விளக்குகிற இந்தப் புத்தகத்தை வாசித்த பிறகு, வியப்பு மேலிட இவ்வாறு விவரித்தார்: “தேனாய் இனித்த இப்படியொரு புத்தகத்தை நான் பார்த்ததே இல்லை. கடவுளையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள எனக்கு அளவில்லா ஆசை. அதோடு பைபிளைப் படிக்கவும் அலாதி விருப்பம்.”
பைபிள் பிரசுரங்களைப் பற்றி இத்தகைய கருத்துக்களை தெரிவிக்கும் கடிதங்கள் ரஷ்யாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்கு வந்தவண்ணம் இருக்கின்றன. மாஸ்கோவுக்கு சுமார் 1,500 கிலோமீட்டர் தென்கிழக்கே பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் நகர்தான் செலியாபின்ஸ்க். அங்கு வசிக்கும் ஒரு பெண்மணியும் இதேபோன்ற ஒரு கடிதத்தை எழுதினார்.
அவர் குறிப்பிட்டதும் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தைத்தான்: “இது ஈடிணையற்ற ஒரு புத்தகம். மக்கள் மனதில் ஒளிமயமான எதிர்கால நம்பிக்கையை துளிர்விடச் செய்கிறது. பூர்வ சரித்திரத்தை அப்படியே பிட்டுபிட்டு வைக்கிறது. இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன்பெல்லாம் கடவுளைப் பற்றிய எண்ணம் எனக்கு துளிகூட இருந்ததில்லை. மதத்தில் எவ்வித பிடிப்பும் இல்லை. இப்போதோ, முழுக்காட்டுதல் பெற மனதில் ஆசை பொங்குகிறது. உங்களுடைய புத்தகங்களை படிக்கவும் கொள்ளை ஆசை. நான் படித்ததையெல்லாம் ஃபிரெண்ட்ஸுகளிடமும் தெரிந்தவர்களிடமும், சொந்தபந்தங்களிடமும் சொல்லத் துடிக்கிறேன்.”
இயேசுவைப் பற்றியும் புதிய உலகில் வாழ்வதைப் பற்றிய பைபிள் நம்பிக்கையையும் கற்றுக் கொடுக்கிற பிரசுரங்களை நீங்களும்கூட பெற்றுக் கொள்ளலாம். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பினால் அல்லது ஒரு யெகோவாவின் சாட்சி உங்கள் வீட்டிற்கே வந்து, பைபிளைப் பற்றி உங்களோடு இலவசமாய் கலந்துரையாட நீங்கள் விரும்பினால் தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410401, Mah., India, என்ற விலாசத்திற்கோ பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் பொருத்தமான விலாசத்திற்கோ எழுதுங்கள்.