கடவுளின் அன்பிற்கு அழியாச் சான்று
பூர்வ உலகின் ஏழு அதிசயங்கள் மக்கள் மனதில் பிரமிப்பை ஏற்படுத்தியதால் அதிசயங்கள் என்று அழைக்கப்பட்டன. ஆனால், இந்தப் பிரமாண்டமான அதிசய கட்டமைப்புகளில் இன்று பிரமிடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. மற்றவை எல்லாம் அழிந்துவிட்டன. மறுபட்சத்தில் பைபிளோ, தோல், நாணற்புல் போன்ற அழியும் தன்மையுள்ள பொருள்களில் சாதாரண மனிதர்களால் எழுதிவைக்கப்பட்டிருந்தாலும் அதிலுள்ள விஷயங்களில் ஒன்றுகூட மாறாமல் இந்நாள் வரைக்கும் அப்படியே நிலைத்து நிற்கின்றன. தனிச்சிறப்பு வாய்ந்த இந்தப் புத்தகத்தை நாம் முழுக்க முழுக்க நம்பலாம்.—ஏசாயா 40:8; 2 தீமோத்தேயு 3:16, 17.
யெகோவா தேவனுடைய எண்ணங்கள் வாய்மொழியாய் கடத்தப்பட்டிருந்தால் அவை மனிதரின் ஞாபக மறதிக்கு இரையாகியிருக்கலாம். எனவே, அவற்றை எழுத்து வடிவில் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்வதன்மூலம் தம்முடைய செய்தி மாறிவிடாதபடி யெகோவா பார்த்துக்கொண்டார். அதோடுகூட, கடவுள் பயன்படுத்திய எழுத்தாளர்கள் பைபிளை எளிய நடையில் எழுதியதால் அதிகம் படிக்காதவர்கள்கூட அதை வாசித்து புரிந்துகொள்ள முடிகிறது. (அப்போஸ்தலர் 4:13) சிருஷ்டிகரிடமிருந்தும் அவருடைய ஆவியால் தூண்டப்பட்ட செயலர்களிடமிருந்தும் இதைத்தான் எதிர்பார்ப்பீர்கள் அல்லவா! மனிதர்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி எந்த மொழியைப் பேசினாலும் சரி, அவர்கள்மீது கடவுள் எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறார் என்பதற்கும் பைபிளின் பரவலான வினியோகிப்பு அத்தாட்சி அளிக்கிறது. (1 யோவான் 4:19) உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இன்று பைபிள் பரவலாகக் கிடைப்பதால் அதனுடைய மதிப்பு கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை!
கடவுள் நம்மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதற்கு பைபிளிலுள்ள விஷயங்கள் இன்னும் கூடுதலான அத்தாட்சி அளிக்கின்றன. நாம் எங்கிருந்து வந்தோம், ஏன் சிலகாலம் மட்டுமே உயிர்வாழ்கிறோம், வாழ்க்கை ஏன் பிரச்சினை நிறைந்ததாய் இருக்கிறது, இந்தப் பிரச்சினைகளை எல்லாம் கடவுளுடைய அரசாங்கம் எப்படி முடிவுக்குக் கொண்டுவரப் போகிறது போன்ற கேள்விகளுக்குக் கடவுளுடைய வார்த்தை அளிக்கும் விளக்கத்தை முந்தைய கட்டுரைகளில் நாம் பார்த்தோம். இப்போதே சந்தோஷமும் திருப்தியும் நிறைந்த வாழ்க்கையை அனுபவிப்பது எப்படி என்பதற்கும் பைபிளிலிருந்து சில பொன்னான அறிவுரைகளை நாம் அவற்றில் சிந்தித்தோம். (சங்கீதம் 19:7-11; ஏசாயா 48:17, 18) மிக முக்கியமாக, சாத்தானுடைய பொய்களால் சிருஷ்டிகருடைய பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை அவர் எவ்வாறு நீக்கப்போகிறார் என்பதையும் நாம் கற்றுக்கொண்டோம்.—மத்தேயு 6:9.
பைபிள் மதிப்புமிக்கது, நம் காலத்திற்கும் பயனுள்ளது, மிகவும் நடைமுறையானது, துவண்டிருக்கும் மனிதகுலத்திற்கு நம்பிக்கை கீற்றாக ஒளிர்கிறது. இவை அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள வேறு புத்தகம் ஏதேனும் உண்டோ! பூர்வ உலகத்தின் ஏழு அதிசயங்கள் பெரும்பாலும் பொய் கடவுட்களையோ செல்வாக்குமிக்க மனிதர்களையோ புகழ்வதற்காகக் கட்டப்பட்டன. பைபிளோ, மனிதர்கள்மீது யெகோவா வைத்திருக்கும் தன்னலமற்ற அன்பிற்கு அழியாச் சான்றாக இருக்கிறது.
இதுவரை நீங்கள் பைபிளை ஆராய்ந்து பார்த்ததில்லை என்றால் இனிவரும் நாட்களிலாவது அதை செய்துபாருங்களேன். இன்று யெகோவாவின் சாட்சிகள், அறுபது லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு இலவசமாக பைபிள் படிப்பு நடத்திவருகிறார்கள். கடவுளுடைய பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்ட பைபிள் உண்மையிலேயே நம்பகமானது என்பதை நேர்மை உள்ளம் படைத்தவர்கள் புரிந்துகொள்ள இவர்கள் உதவுகிறார்கள், அதை பெரும் பாக்கியமாகவும் கருதுகிறார்கள்.—1 தெசலோனிக்கேயர் 2:13.