உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 20 பக். 147-பக். 149 பாரா. 2
  • வசனங்களைத் திறம்பட அறிமுகப்படுத்துதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வசனங்களைத் திறம்பட அறிமுகப்படுத்துதல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • பைபிளுக்குக் கவனத்தைத் திருப்புதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • பைபிளை எடுத்துப் பார்க்க உற்சாகப்படுத்துதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • ஆர்வத்தைத் தூண்டும் முன்னுரை
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • வசனங்களைச் சரியாக அறிமுகப்படுத்துவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 20 பக். 147-பக். 149 பாரா. 2

படிப்பு 20

வசனங்களைத் திறம்பட அறிமுகப்படுத்துதல்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒரு வசனத்தை வாசிப்பதற்கு முன்பு கேட்போருடைய மனதை தயார்படுத்துங்கள்.

ஏன் முக்கியம்?

ஒரு வசனத்தை திறம்பட அறிமுகப்படுத்துவது அந்த வசனம் என்ன சொல்கிறதோ அதன் முக்கியத்துவத்தை சபையார் புரிந்துகொள்ள உதவும்.

நம்முடைய சபைக் கூட்டங்களில் வழங்கப்படும் போதனைக்கு பைபிளே அஸ்திவாரமாக அமைகிறது. நாம் வெளி ஊழியத்தில் சொல்லும் விஷயங்களுக்கும் வேதவசனங்களே முக்கிய மையமாக திகழ்கின்றன. ஆனால் நம்முடைய கலந்தாலோசிப்பிற்கு இவை எந்தளவு பங்களிக்கின்றன என்பது இவற்றை நாம் எந்தளவுக்கு திறம்பட அறிமுகப்படுத்துகிறோம் என்பதையும் ஓரளவு சார்ந்திருக்கிறது.

வெறுமனே வேதவசனத்தைக் குறிப்பிட்டு அதை உங்களோடு சேர்ந்து வாசிக்கும்படி ஒருவரை கேட்டுக்கொள்வது போதாது. ஒரு வசனத்தை அறிமுகப்படுத்தும்போது, பின்வரும் இரண்டு இலக்குகளை அடைய முயலுங்கள்: (1) எதிர்பார்ப்பை ஏற்படுத்துங்கள், (2) அந்த வசனத்தைப் பயன்படுத்துவதற்குரிய காரணத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். இந்த இலக்குகளை பல்வேறு வழிகளில் அடையலாம்.

ஒரு கேள்வி கேளுங்கள். உங்களுடைய சபையாருக்கு ஏற்கெனவே பதில் தெளிவாக தெரியாமல் இருந்தால் இந்த முறை மிகவும் பயனுள்ளது. ஆட்களை சிந்திக்க வைக்கிற முறையில் கேள்வியை அமைக்க முயலுங்கள். இயேசு இதைச் செய்தார். ஆலயத்தில் பரிசேயர்கள் அவரை அணுகி வேதாகமத்தைப் பற்றிய அவருடைய புலமையை வெளிப்படையாக சோதித்தபோது, இயேசு அவர்களிடம் இவ்வாறு கேட்டார்: “கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்?” இதற்கு அவர்கள், “தாவீதின் குமாரன்” என பதிலளித்தார்கள். பின்பு இயேசு அவர்களிடம், “அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?” என கேட்டார். பின்பு அவர் சங்கீதம் 110:1-ஐ மேற்கோள் காட்டினார். பரிசேயர்கள் ஊமையாகிவிட்டார்கள். ஆனால் அங்கிருந்த கூட்டத்தாரோ சந்தோஷத்தோடு இயேசுவுக்கு செவிகொடுத்துக் கேட்டார்கள்.​—⁠மத். 22:41-46.

வெளி ஊழியத்தில் நீங்கள் இதைப் போன்ற அறிமுக கேள்விகளை பயன்படுத்தலாம்: “உங்களுக்கும் எனக்கும் ஒரு தனிப்பட்ட பெயர் இருக்கிறது. கடவுளுக்கு தனிப்பட்ட பெயர் இருக்கிறதா? இதற்குரிய பதிலை நாம் சங்கீதம் 83:17-⁠ல் பார்க்கலாம்.” “முழு உலகத்திற்கும் ஒரே அரசாங்கம் என்றாவது வருமா? இதற்கு தானியேல் 2:44 எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை கவனியுங்கள்.” “நம்முடைய நாளில் இருக்கிற நிலைமைகளைப் பற்றி பைபிள் உண்மையிலேயே சொல்கிறதா? 2 தீமோத்தேயு 3:1-5-⁠ல் சொல்லப்பட்டுள்ளதை உங்களுக்கு நன்றாக தெரிந்த நிலைமைகளோடு ஒத்துப் பாருங்கள்.” “வேதனைகளுக்கும் மரணத்திற்கும் என்றைக்காவது முடிவு வருமா? பைபிளில் வெளிப்படுத்துதல் 21:4, 5-⁠ல் இதற்குரிய பதிலை பார்க்கலாம்.”

பேச்சு கொடுக்கும்போது நீங்கள் பயன்படுத்தும் வசனங்கள் சபையாருக்கு நன்கு தெரிந்தவையாக இருந்தாலும்கூட, அவற்றை அறிமுகப்படுத்துவதற்கு கேள்விகளை கவனமாக பயன்படுத்தினால் அவற்றை அதிக ஆர்வத்தோடு எடுத்துப் பார்க்க அவர்கள் தூண்டப்படலாம். ஆனால் அவர்கள் உண்மையிலேயே எடுத்துப் பார்ப்பார்களா? அது, நீங்கள் கேட்கும் கேள்விகள் அக்கறையூட்டுபவையா இல்லையா என்பதைப் பொறுத்திருக்கலாம். நீங்கள் பேசும் விஷயம் சபையாருக்கு ஆர்வமூட்டுவதாக இருந்தாலும், அவர்கள் பல தடவை கேட்ட வசனங்களை நீங்கள் வாசிக்கும்போது அவர்களுடைய மனம் அலைபாயலாம். இதைத் தடுப்பதற்கு, கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அவற்றை அறிமுகப்படுத்த போதிய கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு பிரச்சினையை முன்வையுங்கள். ஒரு பிரச்சினையைப் பற்றி சொல்லி, பின்பு அதற்கு பரிகாரத்தை சுட்டிக்காட்டும் ஒரு வசனத்திற்கு கவனத்தைத் திருப்பலாம். சபையாரின் எதிர்பார்ப்பை அளவுக்கு அதிகமாக தூண்டாதீர்கள். எந்தவொரு வசனமும் பரிகாரத்தின் ஒரு அம்சத்தை மட்டுமே பெரும்பாலும் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் நீங்கள் அந்த வசனத்தை வாசிக்கும்போது, ஒரு சூழ்நிலையை சமாளிக்க அது எவ்வாறு வழிகாட்டுகிறது என்பதை சிந்தித்துப் பார்க்கும்படி சபையாரை கேட்டுக்கொள்ளலாம்.

இது போலவே, தேவபக்திக்கேற்ற நடத்தைக்குரிய ஒரு நியமத்தை குறிப்பிட்டு, அதை பின்பற்றுவது எவ்வளவு ஞானமானது என்பதை காண்பிப்பதற்கு ஒரு பைபிள் விவரப்பதிவை பயன்படுத்தலாம். ஒரு வசனத்தில், சிந்திக்கப்படும் விஷயத்தோடு தொடர்புடைய இரண்டு (அல்லது அதற்கும் அதிகமான) முக்கிய குறிப்புகள் இருந்தால், இவற்றை கவனிக்கும்படி பேச்சாளர்கள் சிலர் சபையாரை கேட்டுக்கொள்கிறார்கள். சபையாருக்கு ஒரு பிரச்சினை மிகவும் கடினமாக தோன்றினால், அதை சமாளிப்பதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதைக் காட்டி அவர்களுடைய சிந்தையைத் தூண்டலாம், பின்பு அந்த வசனமும் அதற்குரிய பொருத்தமும் வழிகாட்டுவதற்கு அனுமதிக்கலாம்.

பைபிளை அதிகாரப்பூர்வமான ஒன்றாக குறிப்பிடுங்கள். பேசும் விஷயத்தின் மீது கேட்போரின் ஆர்வத்தை நீங்கள் ஏற்கெனவே தூண்டி அதைப் பற்றி ஓரிரண்டு கருத்துக்களை குறிப்பிட்டிருந்தால், “இந்தக் குறிப்பின் பேரில் கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள்” என்று சொல்லி ஒரு வசனத்தை அறிமுகப்படுத்துவதே போதுமானது. இது, நீங்கள் வாசிக்கப்போகும் தகவல் ஏன் அதிகாரப்பூர்வமானது என்பதை உணர்த்தும்.

பைபிளின் சில பாகங்களை எழுதுவதற்கு யோவான், லூக்கா, பவுல், பேதுரு போன்ற மனிதரை யெகோவா பயன்படுத்தினார். ஆனால் அவர்கள் வெறுமனே எழுத்தாளர்களே; யெகோவாவே அதன் நூலாசிரியர். முக்கியமாக பைபிளைப் பற்றி அறியாத ஒருவரிடம் பேசும்போது, “பேதுரு எழுதினார்” அல்லது “பவுல் சொன்னார்” என சொல்லி ஒரு வசனத்தை அறிமுகப்படுத்துவது, கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது என அறிமுகப்படுத்துவதைப் போல வலிமைமிக்கதாக இருக்காது. சில சந்தர்ப்பங்களில், “யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்” என சொல்லி பிரகடனங்களை அறிமுகப்படுத்தும்படி எரேமியாவுக்கு யெகோவா கட்டளையிட்டது கவனிக்கத்தக்கதாகும். (எரே. 7:2; 17:20; 19:3; 22:2; NW) வசனங்களை அறிமுகப்படுத்தும்போது நாம் யெகோவாவின் பெயரை பயன்படுத்துகிறோமோ இல்லையோ, உரையாடலை முடிப்பதற்கு முன்பு, பைபிளில் சொல்லப்பட்டுள்ளது கடவுளுடைய வார்த்தை என்பதை சுட்டிக்காட்ட முயற்சி செய்ய வேண்டும்.

சூழமைவை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வசனத்தை எப்படி அறிமுகப்படுத்துவது என்பதை தீர்மானிக்கும்போது அந்த வசனத்தின் சூழமைவை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் நீங்கள் நேரடியாக சூழமைவை குறிப்பிடலாம்; என்றபோதிலும், நீங்கள் சொல்வதை சூழமைவு வேறு விதங்களில் பாதிக்கலாம். உதாரணமாக, கடவுள் பயமுள்ள யோபு சொன்ன வார்த்தைகளை அறிமுகப்படுத்துவதைப் போலவே அவருடைய போலி தேற்றரவாளர்களில் ஒருவர் சொன்னதையும் அறிமுகப்படுத்துவீர்களா? அப்போஸ்தலர் புத்தகம் லூக்காவால் எழுதப்பட்டது, ஆனால் யாக்கோபு, பேதுரு, பவுல், பிலிப்பு, ஸ்தேவான், தேவதூதர்கள், கமாலியேல், கிறிஸ்தவரல்லாத வேறு சில யூதர்கள் ஆகியோர் சொன்னதையும் அவர் மேற்கோள் காட்டுகிறார். நீங்கள் மேற்கோள் காட்டும் வசனத்தை யார் சொன்னதாக குறிப்பிடுவீர்கள்? உதாரணமாக, எல்லா சங்கீதங்களும் தாவீதால் எழுதப்படவில்லை, நீதிமொழிகளில் உள்ள அனைத்தையும் சாலொமோன் எழுதவில்லை என்பதை நினைவில் வையுங்கள். பைபிள் எழுத்தாளர் யாரிடம் பேசிக்கொண்டிருந்தார், எந்தப் பொதுவான விஷயத்தை விவாதித்துக் கொண்டிருந்தார் என்பவற்றை அறிந்திருப்பதும் பயனுள்ளது.

பின்னணி தகவல்களைப் பயன்படுத்துங்கள். பைபிள் விவரப்பதிவின் காலத்தில் நிலவிய சூழ்நிலைகளும் நீங்கள் கலந்தாலோசிக்கும் இன்றைய சூழ்நிலைகளும் ஒன்றுபோலவே இருப்பதை பின்னணி தகவல்கள் மூலம் காண்பிக்க முடிந்தால் மிகுந்த பலன்தரும். வேறு சில சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட ஒரு வசனத்தைப் புரிந்துகொள்வதற்கு பின்னணி தகவல்கள் அவசியமாக இருக்கின்றன. உதாரணமாக, மீட்கும்பொருள் சம்பந்தமாக பேசும்போது எபிரெயர் 9:12, 24-ஐ பயன்படுத்த வேண்டியதாக இருந்தால், இந்த வசனங்களை வாசிப்பதற்கு முன்பு ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள உட்புற அறையைப் பற்றி சுருக்கமான விளக்கம் தருவதை நீங்கள் அவசியமாக காணலாம்; இயேசு பரலோகத்திற்கு சென்றபோது நுழைந்த இடத்தை இது படமாக குறிக்கிறது என அந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் நீங்கள் அறிமுகப்படுத்தும் வசனத்தின் முக்கியத்துவத்தை மறைத்துவிடும் அளவுக்கு ஏராளமான பின்னணி தகவல்களை சேர்க்காதீர்கள்.

நீங்கள் வேதவசனங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னேறுவதற்கு, அனுபவமிக்க பேச்சாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆராயுங்கள். அவர்கள் பயன்படுத்தும் பல்வேறு முறைகளை கவனியுங்கள். இந்த முறைகள் எந்தளவு பலன்தரத்தக்கவை என்பதை பகுத்தறியுங்கள். பிறகு உங்களுடைய பேச்சை தயாரிக்கும்போது, முக்கிய வசனங்களை கண்டுணர்ந்து, ஒவ்வொரு வசனமும் எதை சாதிக்க வேண்டும் என்பதற்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு முக்கிய வசனமும் சிறந்த பலனைத் தருவதற்கு அதை எவ்வாறு அறிமுகப்படுத்தலாம் என கவனமாக திட்டமிடுங்கள். பிற்பாடு, நீங்கள் பயன்படுத்தும் எல்லா வசனங்களுக்கும் இவ்வாறு செய்யுங்கள். இந்த அம்சத்தில் நீங்கள் முன்னேறும்போது, கடவுளுடைய வார்த்தையின் மீது அதிக கவனத்தை ஒருமுகப்படுத்துவீர்கள்.

எப்படி செய்வது

  • ஆர்வத்தைத் தூண்டும் ஒரு முறையை தேர்ந்தெடுக்கையில், அந்தப் பொருளைப் பற்றி உங்களுடைய சபையார் ஏற்கெனவே என்ன அறிந்திருக்கிறார்கள், அதைப் பற்றி எப்படி உணர்கிறார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

  • ஒவ்வொரு வசனமும் எதை சாதிக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருங்கள், அதை உங்களுடைய அறிமுக குறிப்புகள் பிரதிபலிப்பதாக.

பயிற்சி: உங்களுடைய பிராந்தியத்தில் திறம்பட பயன்படுத்த முடியும் என நீங்கள் நினைக்கும் ஒரு வசனத்தை தேர்ந்தெடுங்கள். (1) வீட்டுக்காரருடைய ஆர்வத்தைத் தூண்டுவதற்கு என்ன கேள்வியை அல்லது பிரச்சினையை நீங்கள் முன்வைப்பீர்கள் என்பதையும், (2) நீங்கள் அந்த வசனத்தை வாசிப்பதற்குரிய காரணத்தின் மீது எவ்வாறு அவரது கவனத்தை ஒருமுகப்படுத்துவீர்கள் என்பதையும் திட்டமிடுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்