படிப்பு 34
நம்பிக்கையூட்டும் விதமாக பேசுதல்
பிரசங்கிப்பதற்கு நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள செய்தி நற்செய்தி. “சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் [“நற்செய்தி,” NW] முந்திப் பிரசங்கிக்கப்பட வேண்டும்” என இயேசு கூறினார். (மாற். 13:10) ‘தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை’ முதன்மைப்படுத்திக் காட்டுவதில் இயேசுதாமே சிறந்த முன்மாதிரியாக விளங்கினார். (லூக். 4:43, NW) அப்போஸ்தலர்கள் பிரசங்கித்த செய்தியும் “தேவனுடைய நற்செய்தி,” “கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி” என வருணிக்கப்படுகிறது. (1 தெ. 2:2; 2 கொ. 2:12; NW) இப்படிப்பட்ட செய்தி நம்பிக்கையூட்டுகிறது.
“வானத்தின் மத்தியிலே பறந்துகொண்டிருக்கிற தூதனுடைய” “நித்திய நற்செய்தி”க்கு இசைவாக மக்களை நாம் இவ்வாறு உந்துவிக்கிறோம்: “தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்.” (வெளி. 14:6, 7, NW) எல்லா இடங்களிலும் வாழும் ஜனங்களுக்கு மெய்க் கடவுளைப் பற்றியும், அவரது பெயர், மகத்தான குணங்கள், வியத்தகு செயல்கள், அன்பான நோக்கம், அவருக்கு கணக்கு கொடுக்க வேண்டிய நம் பொறுப்பு, அவர் நம்மிடம் எதிர்பார்ப்பவை ஆகியவற்றைப் பற்றியும் சொல்கிறோம். துன்மார்க்கரை யெகோவா தேவன் அழிப்பார் என்பதும் இந்த நற்செய்தியில் அடங்கியிருக்கிறது. இந்த துன்மார்க்கர் அவரை அவமதித்து பிறருடைய வாழ்க்கையை நாசமாக்குவது உண்மைதான். ஆனால் மற்றவர்களை நியாயந்தீர்ப்பது நம்முடைய பொறுப்பல்ல. முடிந்தவரை அநேகர் பைபிளின் செய்தியைக் கேட்க வேண்டும் என்பதும், அது அவர்களுக்கு உண்மையிலேயே நற்செய்தியாக இருக்க வேண்டும் என்பதுமே நம்முடைய உள்ளப்பூர்வமான ஆவல்.—நீதி. 2:20-22; யோவா. 5:22.
எதிர்மறையான விஷயங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கைக்கு எதிர்மறையான அம்சங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றிற்கு நம்முடைய கண்களை நாம் மூடிக்கொள்வதில்லை. உரையாடலை ஆரம்பிப்பதற்கு, உங்கள் பிராந்தியத்தில் வசிக்கும் மக்களுடைய மனதை நெருடிக் கொண்டிருக்கும் ஏதாவதொரு பிரச்சினைக்கு கவனத்தைத் திருப்பி அதைப் பற்றி சுருக்கமாக பேசலாம். ஆனால் அதைப் பற்றியே விலாவாரியாக பேசிக்கொண்டிருப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. வேதனை தரும் செய்திகளையே மக்கள் சதா கேள்விப்படுகிறார்கள், ஆகவே கவலைக்குரிய விஷயங்களைப் பற்றி பேசினால் அவர்கள் வெறுப்பில் கதவை அடைத்துவிடலாம் அல்லது காதை பொத்திக்கொள்ளலாம். உங்களுடைய உரையாடலின் ஆரம்பத்திலேயே கடவுளுடைய வார்த்தையில் உள்ள புத்துணர்ச்சியூட்டும் சத்தியங்கள் மீது அவர்களுடைய கவனத்தை திருப்புங்கள். (வெளி. 22:17) பிறகு, உரையாடலை தொடர அவர்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும்கூட, சிந்தித்துப் பார்ப்பதற்கு ஏற்ற விஷயத்தை அவர்கள் மனதில் விதைத்து வந்திருப்பீர்கள். இது ஒருவேளை அடுத்த முறை ஆவலோடு கேட்பதற்கு அவரை தூண்டலாம்.
இது போலவே, ஒரு பேச்சு கொடுப்பதற்கு நீங்கள் அழைக்கப்பட்டால், எதிர்மறையான விஷயங்களுக்கு பஞ்சமே இல்லாததால் சபையாரிடம் அவற்றையே பேசி அவர்களை திணறடிக்காதீர்கள். மனித ஆட்சியின் தோல்வி, குற்றச்செயல் மற்றும் வன்முறை பற்றிய அறிக்கைகள், படுமோசமாக பரவிவரும் ஒழுக்கக்கேடு ஆகியவற்றைப் பற்றியே பேச்சாளர் பேசிக்கொண்டு போனால் அது உற்சாகமிழக்க வைக்கும். பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே எதிர்மறையான அம்சங்களைப் பற்றி பேசுங்கள். அப்படிப்பட்ட விஷயங்களை குறைவாக பயன்படுத்துவது உங்களுடைய பேச்சு காலத்திற்கேற்ற ஒன்று என்பதை வலியுறுத்தலாம். ஒரு பிரச்சினைக்குரிய முக்கிய காரணங்களையும் இது சுட்டிக் காட்டலாம். இவ்வாறு, அதற்கு பைபிள் தரும் பரிகாரம் ஏன் நடைமுறையானது என்பதை காண்பிக்க பயன்படுத்தப்படலாம். பிரச்சினைகளையே அடுக்கிக்கொண்டு போகாமல் முடிந்தவரை குறிப்பாக சொல்லுங்கள்.
பொதுவாக, எதிர்மறையான தகவலை பேச்சிலிருந்து அடியோடு நீக்கிவிடுவது சாத்தியமுமல்ல, சரியானதுமல்ல. நம்பிக்கைக்குரிய விஷயங்களையும் கவலைக்குரிய விஷயங்களையும் கலந்து, மொத்தத்தில் நம்பிக்கையூட்டும் விஷயங்கள் மேலோங்கி இருக்கும்படி பேச்சு கொடுப்பதே உங்களுடைய சவால். இதற்காக எதை சேர்ப்பது, எதை விட்டுவிடுவது, எந்த இடத்தில் வலியுறுத்துவது என்பதையெல்லாம் நீங்கள் தீர்மானிக்க வேண்டும். பரிசேயரும் சதுசேயரும் மனுஷருடைய பார்வைக்காக செய்த முறைமைகளை தவிர்க்கும்படி இயேசு மலைப் பிரசங்கத்தில் புத்திமதி கூறினார்; இதற்கு சில உதாரணங்களையும் கொடுத்து விளக்கினார். (மத். 6:1, 2, 6, 16) என்றாலும், மதத் தலைவர்களுடைய கெட்ட முன்மாதிரிகளைப் பற்றியே பேசிக்கொண்டிராமல் கடவுளுடைய உண்மையான வழிகளைப் புரிந்துகொண்டு, அதற்கு இசைவாக வாழ்வதை இயேசு வலியுறுத்திக் காட்டினார். (மத். 6:3, 4, 6-15, 17-34) அது மிகுந்த பலனை தந்தது.
நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசுதல். கிறிஸ்தவ நடவடிக்கையின் ஓர் அம்சத்தைப் பற்றி சபையில் பேசுவதற்கு நியமிப்பு கிடைத்தால், குறைகூறும் விதமாக பேசாமல் நம்பிக்கையூட்டும் விதமாக பேச முயலுங்கள். மற்றவர்களை என்ன செய்ய சொல்கிறீர்களோ அதை முதலில் நீங்கள் செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். (ரோ. 2:21, 22; எபி. 13:7) அதை எரிச்சலுடன் கூறாமல் அன்புடன் கூறுங்கள். (2 கொ. 2:4) சக விசுவாசிகள் யெகோவாவை பிரியப்படுத்தவே விரும்புகிறார்கள் என்ற உறுதியான நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், அது உங்களுடைய பேச்சில் வெளிப்படும், சிறந்த பலனையும் தரும். அப்படிப்பட்ட உறுதியான நம்பிக்கையை அப்போஸ்தலன் பவுல் எப்படி வெளிப்படுத்தினார் என்பதை பின்வரும் வசனங்களில் கவனியுங்கள்: 1 தெசலோனிக்கேயர் 4:1-12; 2 தெசலோனிக்கேயர் 3:4, 5; பிலேமோன் 4, 8-14, 21.
சில சமயங்களில், ஞானமற்ற நடத்தையைக் குறித்து மூப்பர்கள் எச்சரிப்பது அவசியம். ஆனால் அதை சகோதரர்களிடம் சாந்தமாக எடுத்துச் சொல்ல மனத்தாழ்மை அவர்களுக்கு உதவி செய்யும். (கலா. 6:1) நீங்கள் விஷயங்களை சொல்லும் விதம் சபையாரை மரியாதையுடன் பாவிப்பதை காண்பிக்க வேண்டும். (1 பே. 5:2, 3) முக்கியமாக இளைஞர் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கும்படி பைபிள் ஆலோசனை தருகிறது. (1 தீ. 4:12; 5:1, 2; 1 பே. 5:5) கடிந்துகொள்ளவும் சிட்சிக்கவும் சீர்திருத்தவும் வேண்டிய அவசியம் ஏற்படுகையில் அதை பைபிளின் அடிப்படையில் செய்ய வேண்டும். (2 தீ. 3:17) ஏதாவதொரு விஷயத்தின் பேரில் பேச்சாளர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு ஆதரவாக வேதவசனங்களைப் பொருத்தவோ திரித்துக்கூறவோ ஒருபோதும் முயலக் கூடாது. திருத்துவதற்கு ஏதாவது ஆலோசனை கொடுக்க வேண்டியிருந்தாலும், தவறான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது எப்படி, பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி, கஷ்டங்களை சமாளிப்பது எப்படி, தவறான போக்கை சரிசெய்வது எப்படி, யெகோவா எதிர்பார்க்கும் காரியங்கள் நம்மை பாதுகாப்பது எப்படி போன்றவற்றை வலியுறுத்தினால் பேச்சு நம்பிக்கையூட்டுவதாக அமையும்.—சங். 119:1, 9-16.
உங்களுடைய பேச்சை தயாரிக்கும்போது, ஒவ்வொரு முக்கிய குறிப்பையும் முழு பேச்சையும்கூட எப்படி முடிப்பீர்கள் என்பதற்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் கடைசியாக சொல்வதே பெரும்பாலும் என்றும் நினைவில் நிற்கும். அது நம்பிக்கையூட்டுவதாக இருக்குமா?
உடன் விசுவாசிகளிடம் உரையாடுகையில். கிறிஸ்தவ கூட்டங்களில் சகோதரர்களோடு கூட்டுறவு கொள்ளும் வாய்ப்புகளை யெகோவாவின் ஊழியர்கள் உயர்வாக கருதுகிறார்கள். அவை ஆவிக்குரிய புத்துணர்ச்சியை தரும் தருணங்கள். வணக்கத்திற்காக கூடிவருகையில் ‘ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தும்படி’ பைபிள் நம்மை உந்துவிக்கிறது. (எபி. 10:25, NW) கூட்டங்களில் பேச்சுக்கள் கொடுப்பது மற்றும் குறிப்புகள் சொல்வதன் மூலம் மட்டுமல்ல, கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் ஒருவரோடொருவர் உரையாடுவதன் மூலமும் உற்சாகம் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.
அன்றாட வாழ்க்கையைப் பற்றிய விஷயங்களைப் பேசுவது இயல்பாக இருந்தாலும், ஆவிக்குரிய விஷயங்களைப் பேசுவதன் மூலமே மிகுந்த ஊக்குவிப்பு கிடைக்கிறது. பரிசுத்த சேவையில் நமக்கு கிடைக்கும் அனுபவங்களும் இவற்றில் உட்படுகின்றன. ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான அக்கறை காட்டுவதும் அதிக ஊக்கமளிக்கிறது.
நம்மை சுற்றியுள்ள உலகத்தாரின் செல்வாக்கிற்குள் வீழ்ந்துவிடாதபடி கவனமாக இருப்பது அவசியம். எபேசுவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதும்போது பவுல் இவ்வாறு கூறினார்: “பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.” (எபே. 4:25) உலகத்தார் பூஜிக்கும் பொருட்களையோ ஆட்களையோ பற்றி உயர்வாக பேசாமலிருப்பதும் உண்மையை பேசுவதில் உட்படுகிறது. இயேசுவும் ‘செல்வத்தின் வஞ்சனையை’ குறித்து எச்சரித்தார். (மத். 13:22, NW) ஆகவே ஒருவரோடொருவர் உரையாடும்போது பொருளுடைமைகளைப் பற்றி பெருமையோடு பேசி அந்த வஞ்சனையை அதிக கவர்ச்சிக்குரிய ஒன்றாக ஆக்கிவிடாதபடி நாம் கவனமாக இருக்க வேண்டும்.—1 தீ. 6:9, 10.
‘விசுவாசத்தில் பலவீனமுள்ளவராக’ இருப்பதால், அதாவது கிறிஸ்தவ சுதந்திரத்தைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்ளாததால், ஒரு சகோதரர் சில விஷயங்களைத் தவிர்க்கலாம். அப்படிப்பட்டவரை ஊக்கப்படுத்துவதற்காக ஆலோசனை அளிக்கையில் அவரை நியாயந்தீர்க்கவோ சிறுமைப்படுத்தவோ கூடாது என அப்போஸ்தலன் பவுல் நம்மை உந்துவிக்கிறார். சொல்லப்போனால், நம்முடைய உரையாடல் பிறருக்கு நம்பிக்கையூட்டுவதாக இருப்பதற்கு, அவர்களுடைய பின்னணியையும் ஆவிக்குரிய வளர்ச்சியையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ‘ஒரு சகோதரனுக்கு [அல்லது சகோதரிக்கு] முன்பாக தடுக்கலையோ இடறலையோ போடுவது’ எவ்வளவு வருந்தத்தக்க விஷயம்!—ரோ. 14:1-4, 13, 19.
மிகவும் கடுமையான பிரச்சினைகளோடு—உதாரணமாக, தீரா வியாதியோடு—போராடிக் கொண்டிருப்பவர்களிடம் நம்பிக்கையூட்டும் விதத்தில் உரையாடுவது மெச்சத்தகுந்தது. அப்படிப்பட்ட ஒருவர் கூட்டங்களுக்கு வர அதிக முயற்சி எடுக்கலாம். அவருடைய சூழ்நிலையை அறிந்த ஒருவர், “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்கலாம். தன்மீது அக்கறை காட்டுவதை நினைத்து அவர் நிச்சயம் சந்தோஷப்படுவார். என்றாலும், தன்னுடைய சுகவீனத்தைப் பற்றி பேசுவதை அவர் விரும்ப மாட்டார். பாராட்டுவதும் மெச்சிப் பேசுவதுமே அவருடைய இருதயத்திற்கு இதமளிக்கலாம். கஷ்டமான சூழ்நிலையிலும் அவர் சகித்திருந்து யெகோவாவை தொடர்ந்து நேசிப்பதை நீங்கள் காண்கிறீர்களா? அவர் குறிப்புகள் சொல்லும்போது நீங்கள் உற்சாகப்படுத்தப்பட்டதாக உணர்கிறீர்களா? அவருடைய பலவீனமான அம்சங்களுக்குப் பதிலாக, அவருடைய பலத்திற்கும் சபைக்கு அவர் எவ்விதத்தில் உதவியாக இருக்கிறார் என்பதற்கும் கவனம் செலுத்துவது அதிக ஊக்கமூட்டுவதாக இருக்குமல்லவா?—1 தெ. 5:11.
நம்முடைய உரையாடல் நம்பிக்கையூட்டுவதாய் இருப்பதற்கு, பேசப்படும் விஷயத்தைப் பற்றி யெகோவாவின் நோக்குநிலையை கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம். பூர்வ இஸ்ரவேலில், யெகோவாவின் பிரதிநிதிகளுக்கு விரோதமாக பேசி, மன்னாவை குறைகூறியவர்கள் அவருடைய கடுங்கோபத்திற்கு ஆளானார்கள். (எண். 12:1-16; 21:5, 6) மூப்பர்களுக்கு மரியாதையையும், உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் வாயிலாக வழங்கப்படும் ஆவிக்குரிய உணவுக்கு போற்றுதலையும் காட்டும்போது நாம் அந்த உதாரணங்களிலிருந்து நன்மை அடைந்திருக்கிறோம் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறோம்.—1 தீ. 5:17.
கிறிஸ்தவ சகோதரரிடத்தில் பேசுவதற்கு ஏற்ற பிரயோஜனமான விஷயங்களுக்கு பஞ்சமே இல்லை. ஆகவே ஒருவருடைய பேச்சு மிகவும் குறைகூறுவதாக இருக்கும்போது, அந்த உரையாடலை திசைதிருப்பி கட்டியெழுப்பும் ஒன்றாக்குவதற்கு முயலுங்கள்.
பிறரிடம் சாட்சி கொடுப்பதாக இருந்தாலும், மேடையில் பேசுவதாக இருந்தாலும், சக விசுவாசிகளிடத்தில் பேசுவதாக இருந்தாலும், நம்முடைய இருதயத்தின் பொக்கிஷத்திலிருந்து “பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி” பேசுவதற்கு பகுத்துணர்வை பயன்படுத்துவோமாக.—எபே. 4:29.