கிறிஸ்தவமண்டலத்தின் பரிசுத்த ஸ்தலங்களுக்கு என்ன நேரிடும்?
தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஸ்டூவர்ட் பெரோன் இயற்றிய, கிறிஸ்தவமண்டலத்தின் பரிசுத்த ஸ்தலங்கள் என்ற புத்தகத்தைப் பிரசுரித்தவர்கள் பின்வருமாறு கேட்கின்றனர்: “ஒருவர் எந்தக் கிறிஸ்தவ பாரம்பரியத்தைச் சேர்ந்தவராயினும் சரி, எருசலேமிலுள்ள கல்வாரியில் உயிர்த்தெழுதலின் சர்ச்சில் [அல்லது, பரிசுத்தக் கல்லறை சர்ச்சில்] பயபக்திக்குரிய ஓர் உணர்ச்சியில்லாமல் யார் நிற்கமுடியும்: ஏனெனில் இங்கேதான் நூற்றாண்டுகளாக வணக்க பக்தி செலுத்தப்பட்ட மற்றும் அதற்காகப் போரிடவும் செய்த, ஸ்தலத்தில், கிறிஸ்தவமண்டலத்தின் மையமே உள்ளது.”
இந்தச் சர்ச், இயேசு கிறிஸ்து மரித்த கல்வாரியில் கட்டப்பட்டதென்று நிரூபிக்க ஒருவராலும் முடியவில்லை. உண்மையில், ரோமப் பேரரசன் கான்ஸ்டன்டைன் அங்கே ஒரு சர்ச்சைக் கட்ட தீர்மானிப்பதற்கு முன்பாக, அந்த இடத்தில் ஒரு புறமத கோயில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், இயேசு பின்வருமாறு கூறினார்: “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.” (யோவான் 4:24) இம்முறையில் வணங்குவோர் சடப்பொருளான “பரிசுத்த” ஸ்தலங்களை உயர்வாக மதித்துப் பூஜிப்பதில்லை.
ஒரு காலத்தில், எருசலேம் கடவுளுடைய ஆலயத்துக்குரிய இடமாக இருந்தது, இவ்வாறு தூய்மையான வணக்கத்தின் மையமாக இருந்தது. எனினும், அந்த நகரத்தின் குடிமக்களுடைய உண்மையற்றத்தன்மையின் காரணமாக, கடவுள் அதைக் கைவிடுவாரென்று இயேசு முன்னறிவித்தபடியே, யெகோவா தேவன் அதைக் கைவிட்டார். (மத்தேயு 23:37, 38) பரிசுத்த ஸ்தலம் என பலர் தொடர்ந்து கருதின, அந்த மத மையம் பாழாக்கப்படப்போவதையும் இயேசு முன்னறிவித்தார். ரோமர் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் பொ.ச. 70-ல் அழித்தபோது அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றமடைந்தன.—மத்தேயு 24:15, 21.
பரிசுத்த ஸ்தலம் என கிறிஸ்தவமண்டலம் உரிமைபாராட்டும், கிறிஸ்தவமண்டலத்தின் மத ஆட்சி எல்லை முழுவதன்மீதும் இயேசுவின் தீர்க்கதரிசனம் சீக்கிரத்தில் மிகப்பெரும் நிறைவேற்றத்தை அடையும். கிறிஸ்தவமண்டலமும் அதன் பரிசுத்த ஸ்தலங்களும், “பாழாக்கும் அருவருப்பு” என்றழைக்கப்படும் ஒரு மதஎதிர்ப்பு வல்லமையால் கொண்டுவரப்படும் அழிவை இப்பொழுது எதிர்ப்படுகின்றன. (தானியேல் 11:31) இந்தத் திடுக்கிடச் செய்யும் சம்பவம் எவ்வாறு நடந்தேறுமென்பதைப்பற்றி மேலுமான தகவலைத் தெரிவிக்க யெகோவாவின் சாட்சிகள் ஆயத்தமாயுள்ளனர்.
பக்கம் 32-ன் படம்]
பரிசுத்த கல்லறை சர்ச்சின் உட்புறத்தில் ஒரு ஜெப அறை
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.