அவர்கள் அசெளகரியத்தையும் ஆபத்தையும் பொருட்படுத்தாது வந்தார்கள்
தேதி 1992, ஜனவரி 2. இடம்—இனம்பேன் மாநிலத்தில் மேக்சிக்ஸ். வானொலியைத் திருப்பினபோது மொஸாம்பிக்கின் ஆப்பிரிக்க இரவுநேர சப்தங்கள் திடுக்கிடும்படி தடைப்பட்டன. “யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய ‘சுயாதீனப் பிரியர்’ மாநாட்டை நம்முடைய மாநிலத்தில் நடத்துகிறார்கள்,” என்று செய்தி வாசிப்பவர் அறிவித்தார். “இன்றைய உலகில் மெய்யான சுயாதீனத்தை எவ்வாறு கண்டடைய முடியும் என்பது குறித்து மக்களுக்குப் போதிப்பதே அவர்களுடைய நோக்கமாகும். அனைவருக்கும் நல்வரவு.”
அங்கே ஆப்பிரிக்காவின் அந்தத் தொலைவான மூலையில், பதிவு செய்யவேண்டிய ஒரு முக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது! முதல் முறையாக, யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு ஒன்று நடத்தப்படுகிறது, அங்கே அதை அனுபவித்து மகிழ 1,024 பேர் இருந்தார்கள். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, மொஸாம்பிக்கில் இப்படியொரு நிகழ்ச்சி வெளிப்படையாக ஒருபோதும் நடைபெற்றிருக்க முடியாது, ஏனென்றால் அப்போது யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை தடைசெய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டுக்கு வருவதற்காக துணிவுடன் செய்யப்பட்ட தியாகங்களைக் குறித்து நீங்கள் கேட்க விரும்புகிறீர்களா?
இனம்பேன் மாநிலம், ஆப்பிரிக்காவின் மற்ற அநேகப் பகுதிகளைப் போலவே, எழில் மிகுந்ததாகும். முக்கோணப் பாய்மரமுள்ள மீன்பிடிக்கும் படகுகள் சமுத்திரத்தின் கரையோரங்களில் மிதந்து செல்லும். தென்னை மரங்கள் மிகுதியாகக் காணப்படும். ஆனால் அருவருப்பான கோரக் காட்சி நாட்டுப்புறத்தில் பரவி வருகிறது: உள்நாட்டுப் போர்!
புல்லின மர ஓலைக் குடிசையில் விடியற்காலையில் இன்னும் உறங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு, சிறிது தொலைவில் இரவு முழுவதும் சண்டை நடந்துகொண்டிருக்கும் நாட்டுப்புறப் பகுதியிலிருந்து வரும் பாரமான பீரங்கிப்படையின் மங்கலான முழக்கத்தைக் கேட்டு விழித்துக்கொள்வது வழக்கத்துக்கு மாறாக இல்லை. அநேகமாக துன்புறுவது அப்பாவி குடிமக்களே. சிலசமயங்களில் இழந்துவிட்ட அல்லது உருக்குலைந்துபோன கைக்கால்களோடு பிள்ளைகள் நொண்டி நடப்பதைக் காண்கிறோம். யெகோவாவின் சாட்சிகளில் சிலரும்கூட அவர்கள் அனுபவித்த கொடுமைகளினால் தங்கள் முகங்களிலும் உடல்களிலும் வடுக்களைப் பெற்றிருக்கின்றனர்.
இந்த நிலைமைகளின் கீழ் “சுயாதீனப் பிரியர்” மாநாடு அதற்கு வருகைதந்த அனைவராலும் வெகுவாகப் போற்றப்பட்டது. மாநாட்டுக்குப் போகும் வழியில் வழிபறிச் செய்யப்படும் சாத்தியம் இருந்தபோதிலும், நாட்டுப்புறப் பகுதிகளிலிருந்த அநேக குடும்பத் தொகுதிகள் வருவதற்கு தீர்மானமாயிருந்தார்கள். பொது போக்குவரத்து பெரும்பாலும் பெரிய திறந்தவெளி பார வண்டிகளின் பின்புறத்தில் ஏறிச்செல்ல வேண்டியிருப்பதால் அங்கே செளகரியமாகவும்கூடச் செல்ல முடியவில்லை. சிலசமயங்களில் 400 பிரயாணிகள் வரை ஒரு பாரவண்டியில் நெருக்கிக்கொண்டு செல்வார்கள்! இந்தப் பார வண்டிகள் ஆயுதந்தரித்த இராணுவ வழித்துணைகளுடன் பாதுகாப்புக்காக ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாகச் செல்கின்றன.
நோராவும், ஒன்று, மூன்று மற்றும் ஆறு வயதுகளிலிருந்த அவளுடைய மூன்று பெண் பிள்ளைகளும் ஆபத்தைப் பொருட்படுத்தாது இவ்வகையில் பிரயாணம் செய்த ஒரு குடும்பமாக இருந்தனர். பல மாதங்களுக்கு முன்பிருந்தே இந்தப் பயணத்துக்காக அவள் பணம் சேமித்து வைத்திருந்தாள். நிலையான தங்கும் இடவசதிகள் மாநாட்டில் இல்லை என்ற உண்மையும்கூட அவளைத் தடைசெய்யவில்லை. மற்ற அநேகரோடுகூட, நோராவும் அவளுடைய குடும்பத்தாரும் அசெம்பிளி நடைபெற்ற இடத்தில் திறந்த வெளியிலேயே சமைத்து, சாப்பிட்டு தூங்கினார்கள்.
உக்கிரமான வெப்பமண்டல உஷ்ணமும் அதைத் தொடர்ந்து பெய்த அடைமழையும்கூட ஒன்றாகச் சேர்ந்து ஆவிக்குரிய விருந்தை அனுபவித்துக் களித்துக்கொண்டிருந்த சகோதரர்களின் எல்லையற்ற மகிழ்ச்சியைக் குறைத்துவிட முடியவில்லை. அந்த மாநாட்டில் இருப்பதைக் காட்டிலும் வேறு எதுவும் அதிக முக்கியத்துவமுள்ளதாய் இல்லை என்பதாக அவர்கள் நினைத்தார்கள். மொத்தமாக 17 பேர் இந்திய பெருங்கடலின் அனலானத் தண்ணீர்களில் தங்கள் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தினார்கள். முழுக்காட்டுதல் நடைபெற்றபோது, சந்தோஷமுள்ள பார்வையாளர்களின் ஒரு பெரிய கூட்டம் இயல்பாக கிளர்ச்சியுற்று யெகோவாவுக்குத் துதிப்பாடல்களைப் பாடத் தூண்டப்பட்டார்கள்.
இந்த வணக்கத்தாரின் தொகுதி தெய்வீக சுயாதீனத்தின் பிரியர்களாக ஆவது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை உண்மையிலேயே கண்டுபிடித்துவிட்டார்கள். மபூடோ தலைநகரின் ஒரு பிரதிநிதியாகிய ஹான்ஸ் குறிப்பிட்டவண்ணமாகவே: “ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையில் புதிய ஓர் அத்தியாயத்தின் ஆரம்பத்தை நாம் இப்போது பார்த்திருக்கிறோம்.”