தோற்றங்கள் ஏமாற்றுபவையாக இருக்கலாம்
“நம்பத்தக்க தோற்றங்களே இல்லை,” என்பதாக ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்த நாடகாசிரியரான ரிச்சர்ட் ஷெரிடன் கூறினார். இது மரங்களைக் குறித்ததிலும் மக்களைக் குறித்ததிலும் உண்மையாக இருக்கிறது.
பொ.ச. 33-ம் வருடம், மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் ஒருநாள், இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்கு நடந்துவரும்போது, இயேசு ஓர் அத்திமரத்தைக் கண்டார். அந்த மரம் முழுவதும் இலைகள் இருந்தன; ஆனால் அதை நெருங்கிச் சென்று கவனிக்கையில் அதில் பழம் என்பதற்கு எதுவுமில்லை என்பது வெளிப்பட்டது. எனவே, இயேசு சொன்னார்: “இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன்.”—மாற்கு 11:12-14.
‘அது அத்திப்பழக் காலமாக இல்லை,’ என்று மாற்கு விவரிக்கையில், இயேசு அந்த மரத்தை ஏன் சபித்தார்? (மாற்கு 11:13) பொதுவாக, ஓர் அத்திமரம் இலைகளைக் கொண்டிருந்தால், அது விரைவில் அத்திப்பழங்களையும் கொடுக்கிறது. ஒரு வருடத்தின் அந்தக் காலப்பகுதியில் ஓர் அத்திமரம் இலைகளைக் கொண்டிருப்பது வழக்கத்திற்கு மாறானதாக இருந்தது. ஆனால் அது இலைகளைக் கொண்டிருந்தபடியால், இயேசு சரியாகவே அதில் அத்திப்பழங்களை காணும்படி எதிர்பார்த்தார். (மேலுள்ள படத்தைப் பாருங்கள்.) அந்த மரம் இலைகளை மட்டும் கொண்டிருக்கும் உண்மை அது விளைச்சலற்றதாக இருக்கும் என்பதை அர்த்தப்படுத்தியது. அதன் தோற்றம் ஏமாற்றுவதாக இருந்தது. கனிகொடுக்கும் மரங்களுக்கு வரிவிதிக்கப்பட்டதால், ஒரு கனிகொடாத மரம் ஒரு பொருளாதார பாரமாக இருந்தது; ஆகவே அது வெட்டிவிடப்பட வேண்டும்.
இயேசு அந்தக் கனிகொடாத அத்திமரத்தை, விசுவாசத்தைக்குறித்து ஒரு முக்கிய பாடத்தை விளக்குவதற்குப் பயன்படுத்தினார். மறுநாள், ஏற்கெனவே அந்த மரம் பட்டுப்போயிருப்பதைக் காண அவருடைய சீஷர்கள் ஆச்சரியப்பட்டார்கள். “தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். . . . நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்,” என்று இயேசு விவரித்தார். (மாற்கு 11:22-24) விசுவாசத்துடன் ஜெபிப்பதன் அவசியத்தை விளக்குவதோடுகூட, விசுவாசத்தில் குறைவுபடும் ஒரு ஜனத்திற்கு என்ன சம்பவிக்கும் என்பதையும் பட்டுப்போன அத்திமரம் படமாகக் காண்பித்தது.
சில மாதங்களுக்கு முன்பு, இயேசு, மூன்று வருடங்கள் கனிகொடாமல் இருந்து, அது தொடர்ந்து விளைச்சலின்றி இருந்தால் வெட்டிப்போடப்படும் ஓர் அத்திமரத்திற்கு யூத ஜனத்தை ஒப்பிட்டார். (லூக்கா 13:6-9) தம்முடைய மரணத்திற்கு நான்கே நாட்களுக்கு முன்னர் அத்திமரத்தை சபிப்பதன்மூலம், எவ்வாறு யூத ஜனம் மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுக்கவில்லை என்பதையும் அதன் காரணமாக அழிவுக்கான பாதையில் இருக்கிறது என்றும் இயேசு காண்பித்தார். அந்த ஜனம்—அந்த அத்திமரத்தைப்போலவே—வெளித்தோற்றத்திற்கு ஆரோக்கியமாகத் தோன்றினாலும், உற்றுநோக்கும்போது, மேசியாவை ஏற்றுக்கொள்ளாததுடன் முடிவடைந்த அவர்களுடைய விசுவாசக்குறைவை வெளிப்படுத்தியது.—லூக்கா 3:8, 9.
அவருடைய மலை பிரசங்கத்தில், இயேசு “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு” எதிராக எச்சரித்து, “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்,” என்றார். (மத்தேயு 7:15-20) இயேசுவின் இந்த வார்த்தைகளும், சபிக்கப்பட்ட அத்தி மரத்தைப்பற்றிய விவரப்பதிவும் ஆவிக்குரியவிதத்தில் நாம் விழிப்பாயிருக்கவேண்டிய அவசியத்தைத் தெளிவாகக் காண்பிக்கிறது; ஏனென்றால் மதத்தின் தோற்றங்களும்கூட ஏமாற்றுவதாக இருக்கலாம். (w92 11/15)