பொல்லாத ஆவி ஆட்களில் யார் நம்பிக்கை வைக்கின்றனர்?
காணக்கூடாத ஆவி ஆட்கள் உங்கள் வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்தமுடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நிச்சயமாகவே இல்லை என்று பலர் பதிலளிக்கக்கூடும். கடவுள் இருக்கிறார் என்பதை ஒத்துக்கொள்கின்ற போதிலும், மீமானிட கெட்ட வேலையாட்கள் இருக்கின்றனர் என்ற கருத்தை கேலிசெய்கின்றனர்.
மேற்கத்திய உலகில், காணக்கூடாத ஆவி ஆட்களின் மீதான பரவலான அவநம்பிக்கைக்குப் பகுதி காரணம் கிறிஸ்தவ மண்டலத்தின் செல்வாக்காகும். இது பல நூற்றாண்டுகளாகப் பிரபஞ்சத்தின் மையம் பூமி என்றும் இது பரலோகத்திற்கும் எரிநரகத்திற்கும் இடையே இருக்கிறது என்றும் கற்பித்தது. இந்தப் போதனையின் பிரகாரம், பிசாசுகள் நரகத்தின் செயல்களை செயல்படுத்தியபோது, தேவதூதர்கள் பரலோகத்தின் பேரின்பங்களை அனுபவித்தனர்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் பிரபஞ்சத்தின் வடிவமைப்பு பற்றிய தவறான கருத்துக்களை மக்கள் நிராகரிக்கும்படி செய்ததால், ஆவி சிருஷ்டிகள் இருக்கின்றனர் என்பது பழங்கால நம்பிக்கையாகியது. தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு சொல்கிறது: “16-ம் நூற்றாண்டின் கோப்பர்னிக்கன் புரட்சியின் (போலிஷ் வானவியல் ஆராய்ச்சியாளர் கோப்பர்னிக்கஸினுடைய கோட்பாடுகளின் அடிப்படையில்) பின்விளைவுகளில் பூமி இனிமேலும் அண்டத்தின் மையமாகக் கருதப்படவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக, தெளிவாகவே எல்லையில்லா பிரபஞ்சத்திலுள்ள பால்மண்டலத்தின் மிகச் சிறிய பாகமாகிய சூரிய மண்டலத்தின் ஒரு கோள்தான் அது என்று கருதப்பட்டது—தேவதூதர்கள், பிசாசுகள் என்ற கருத்துக்கள் இனிமேலும் பொருத்தமானதாய் தோன்றவில்லை.”
பலர் பொல்லாத ஆவி ஆட்களில் நம்பிக்கை வைக்காமல் இருந்தாலும், லட்சக்கணக்கானவர்கள் அதில் நம்பிக்கை வைக்கின்றனர். கடந்தகால மற்றும் தற்கால மதங்கள் பலவற்றில் விழுந்துபோன தூதர்கள் முக்கியமான அம்சத்தை வகிக்கின்றனர். ஆவிக்குரிய தன்மையை கறைப்படுத்துகிறவர்கள் என்ற அவர்களுடைய பங்குடன், இந்தக் கெட்ட தூதர்கள் பேரழிவுகளின் பிரதிநிதிகளாக அதாவது போர், பஞ்சம், பூகம்பங்கள், மேலும் நோய், மனக் கோளாறுகள், மரணம் போன்றவற்றை கொண்டுவருபவர்களாகக் காணப்படுகின்றனர்.
கிறிஸ்தவத்திலும் யூத மதத்திலும் உள்ள பிரதான கெட்ட ஆவி ஆளாகிய பிசாசாகிய சாத்தான், முஸ்லீம்களால் எப்லிஸ் என்றழைக்கப்படுகிறான். பூர்வீக பெர்ஸிய மதமாகிய ஸோரவாஸ்ட்ரியனிஸத்தில் ஆங்கிர மைன்யூ என்பவனாக அவன் தோற்றமளிக்கிறான். பொ.ச. இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் தழைத்தோங்கிய சமரச மறையியல் ஞானக்கோட்பாட்டு (Gnostic) மதத்தில், இரண்டாந்தர தெய்வமாகக் கருதப்பட்டான்; இந்த வார்த்தை, திரளான மனிதகுலத்தினர் அறியாமையினால் வணக்கம் செலுத்திவந்த ஒரு பொறாமையுள்ள, கீழான தெய்வத்திற்கு சூட்டப்பட்டது.
கீழ்நிலையிலுள்ள தீய ஆவி ஆட்கள் கிழக்கத்திய மதங்களில் முக்கிய ஸ்தானங்களை வகிக்கின்றனர். அசுரர்கள் (பேய்கள்), தேவர்களை (தெய்வங்களை) எதிர்க்கிறார்கள் என்று இந்துக்கள் நம்புகின்றனர். அசுரர்களில் விசேஷமாக அஞ்சப்படுகிறவர்கள் ராட்சசர்கள். இவர்கள் சுடுகாடுகளில் நடமாடும் கொடூரமான ஆட்கள்.
ஆசை அறவே ஒழிக்கப்பட்ட நிர்வாணாநிலையை மனிதன் அடைவதிலிருந்து தடைசெய்யும் ஆளுருவாக்கப்பட்ட சக்திகளாகப் பேய்களை புத்தமதத்தினர் கற்பனைசெய்கின்றனர். அவர்களில் பிரதான சோதனைக்காரன் மாரா; இவனின் மூன்று குமாரத்திகள் ரதி (ஆசை), ராகா (இன்பம்), டான்ஹா (அமைதியின்மை).
சீனநாட்டு வணக்கத்தார் சொக்கப்பனைகள், கைப்பந்தங்கள், பட்டாசுகள் போன்றவற்றை க்வேவிடமிருந்து அல்லது இயற்கை பேய்களிடமிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்குப் பயன்படுத்துகின்றனர். பயங்கரமான டென்கூ உட்பட பல பேய்கள், ஒரு பூசாரியால் பேயோட்டப்படும்வரை மக்களை ஆட்கொள்ளும் ஆவி ஆட்களாக இருக்கின்றனர் என்று ஜப்பானிய மதங்களும் நம்புகின்றன.
ஆசியா, ஆப்பிரிக்கா, ஓஷியானியா, அமெரிக்காக்கள் ஆகிய இடங்களிலுள்ள மூடநம்பிக்கையான மதங்களில், சூழ்நிலைகள் மற்றும் அவற்றின் மேலோங்கி நிற்கும் மனநிலைக்கு ஏற்ப ஆவி சிருஷ்டிகள், உதவிசெய்பவர்களாகவோ தீங்குவிளைவிப்பவர்களாகவோ இருப்பவர்களாய் நம்பப்படுகின்றனர். துன்பத்தைத் தடுக்கவும் ஆதரவைப் பெறவும் மக்கள் இப்படிப்பட்ட ஆவி ஆட்களை வணங்குகின்றனர்.
இந்த எல்லாவற்றோடும்கூட மாயமந்திரம், ஆவிக்கொள்கை ஆகியவற்றின் பிரபலமான கவர்ச்சியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பொல்லாத ஆவி ஆட்கள் இருக்கின்றனர் என்ற நம்பிக்கை, நீண்ட, மிகப் பரவலான வரலாற்றை உடையதாக இருக்கிறது என்பது தெளிவாய் இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட சிருஷ்டிகள் இருக்கிறார்கள் என்று நம்புவது நியாயமானதா? அவர்கள் இருக்கின்றனர் என்று பைபிள் சொல்கிறது. அப்படியே அவர்கள் இருந்தாலும், மனிதன் தனக்கே தீங்குண்டாக்கும்படி அவர்கள் அவனை வசப்படுத்த கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?