‘மற்றவர்களைப் போல துக்கித்துக்கொண்டிராதேயுங்கள்’
ஒரு சூறாவளிக் காற்று கடந்துபோனபின் ஒரு மலர் சோர்வுற்றது போல வளைந்து தொங்கிக்கொண்டிருக்கும் விதத்தை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஒரு வகையில் அது மனதை நெகிழச்செய்யும் காட்சியாக இருக்கிறது. மொத்தத்தில், கடுமையான இடி மின்னல் மழை எந்த ஒரு மலரையும்விட அதிக வலிமையுள்ள எண்ணற்ற விலங்குகளையும் மனிதர்களையும் மறைவிடம் நோக்கி விரைவாக ஓட வைத்திருக்கும். என்றாலும், அந்த மலர் அங்கே வேரூன்றியதாய், வானிலையின் முழு ஆவேசத்தையும் எதிர்த்து, நின்றுகொண்டிருக்கிறது. இப்பொழுது, இங்கே சேதமடையாமல், வளைந்தாலும் முறிந்துவிடாமல், அதனுடைய மென்மையான தோற்றத்துக்கு முரணாக இருக்கும் வலிமையைக் காண்பித்துக்கொண்டிருக்கிறது. அதை வியந்து நோக்கும் போது, அது மீண்டும் வலிமைப் பெற்று மறுபடியுமாக ஒரு முறை அதன் அழகான தலையை ஆகாயத்தை நோக்கி உயர்த்துமா என்பதாக நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம்.
மனிதர்களைப் பொறுத்ததிலும் இப்படியே இருக்கிறது. இந்தத் துன்பமான காலங்களில், நாம் எல்லா வகையான சூறாவளிகளையும் எதிர்ப்படுகின்றோம். பொருளாதார கஷ்டங்கள், மனச்சோர்வு, உடல்நலக் குறைவு, மரணத்தில் அன்பான ஒருவரின் இழப்பு—இப்படிப்பட்ட மனக் கொந்தளிப்புகள் ஏதாவது ஒரு சமயத்தில் நம் அனைவரையும் தாக்கத்தான் செய்கின்றன, சில சமயங்களில் மலர் எவ்விதமாக வேரோடு தன்னைப் பிடுங்கிக்கொண்டு மறைவிடம் நோக்கி ஓடமுடியாதோ அவ்விதமாவே அவற்றை நம்மால் தவிர்க்க முடியாது. மிகவும் பலவீனமாகத் தோற்றமளிக்கும் தனிநபர்கள் ஆச்சரியமான பலத்தைக் காண்பித்து இப்படிப்பட்ட பலமான தாக்குதல்களைச் சகித்துக்கொண்டிருப்பதைக் காண்பது மனதை நெகிழச்செய்கிறது. அவர்கள் எவ்விதமாக அதைச் செய்கிறார்கள்? அநேகமாக இதற்கு இன்றியமையாதது விசுவாசமாகும். இயேசு கிறிஸ்துவின் ஒன்று விட்ட சகோதரன் யாக்கோபு எழுதினார்: “உங்கள் விசுவாசம் இப்படிப்பட்ட சோதனைகளை எதிர்ப்படுவதில் வெற்றிப்பெறுகையில், சகித்திருப்பதற்கு ஆற்றல் உண்டாவதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.”—யாக்கோபு 1:3, இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு.
இன்றியமையாத மற்றொரு காரியம் நம்பிக்கையாகும். உதாரணமாக மரணம் அன்பான ஒருவரைத் தாக்கும்போது, உயிர்வாழ்பவர்களுக்கு நம்பிக்கை பெரும் வித்தியாசத்தை உண்டுபண்ணமுடியும். அப்போஸ்தலன் பவுல் தெசலோனிக்கேயாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பின்வருமாறு எழுதினார்: “நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.” (1 தெசலோனிக்கேயர் 4:13) மரணத்தின் காரணமாக கிறிஸ்தவர்கள் நிச்சயமாகவே துக்கப்பட்டாலும், ஒரு வித்தியாசம் இருக்கிறது. மரித்தோரின் நிலையைப் பற்றியும் உயிர்த்தெழுதல் நம்பிக்கைப் பற்றியும் அவர்களுக்குத் திருத்தமான அறிவு இருக்கிறது.—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15.
இந்த அறிவு அவர்களுக்கு நம்பிக்கைத் தருகிறது. அந்த நம்பிக்கை படிப்படியாக அவர்களுடைய துக்கத்தைத் தணிக்கிறது. அது சகித்திருக்கவும் இன்னும் அதிகமாகவும் அவர்களுக்கு உதவிசெய்கிறது. காலப்போக்கில், சூறாவளிக் காற்றுக்குப் பின் ஒரு மலரைப் போன்று, அவர்கள் துக்கத்திலிருந்து தங்கள் தலைகளை உயர்த்தி வாழ்க்கையில் மறுபடியுமாக சந்தோஷத்தையும் மனநிறைவையும் காணமுடியும்.