உண்டாக்கும் திறமை கடவுளிடமிருந்து வரும் தாராளமான வெகுமதி
யெகோவா தம் படைப்பு வேலைகளில் மகிழ்ச்சியடைகிறார். (சங்கீதம் 104:31) படைக்கும் செயலிலிருந்து அவருக்குக் கிடைக்கும் ஆழ்ந்த திருப்தி ஆதியாகமம் 1:31-ல் சொல்லப்பட்டுள்ளது: “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.”
யெகோவா இந்த மகிழ்ச்சியை தன்னோடு மட்டும் வைத்துக்கொள்ளவில்லை. அவர் இயேசுவுக்கு பிரதிநிதியாக அல்லது ஏஜென்ட்டாக இருக்கும் சிலாக்கியத்தைக் கொடுத்தார், அவர் மூலமாய் மற்ற காரியங்கள் படைக்கப்பட்டன. (யோவான் 1:3; கொலோசெயர் 1:16, 17) இயேசு ‘கைத்தேர்ந்த வேலையாளாக, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தார்.’—நீதிமொழிகள் 8:30, 31, NW.
ஆனால் உண்டாக்கும் திறமை பரலோகத்தில் மட்டும் இல்லை. “அது மனித இனத்துக்குள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது” என்று யூஜன் ரவுட்செப் என்பவர் எந்த அளவுக்கு நீங்கள் உண்டாக்கும் திறமையுடையவர்களாய் இருக்கிறீர்கள்? (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் எழுதுகிறார். இது ஒரு தற்செயல் இணைவு அல்ல, ஏனென்றால் மனிதன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டான். (ஆதியாகமம் 1:26) இவ்வாறு யெகோவா மனிதவர்க்கத்துக்கு திருப்தியளிக்கும் உண்டாக்கும் திறமைகளை வழங்கினார்.—யாக்கோபு 1:17.
பாடுவது, நடனமாடுவது, பின்னுவது, சமையல் செய்வது, கைத்தொழில் செய்வது, இன்னும் மற்ற உண்டாக்கும் திறமைகளைக் குறித்து பைபிள் உயர்வாகப் பேசுவது ஆச்சரியமாயில்லை. (யாத்திராகமம் 35:25, 26; 1 சாமுவேல் 8:13; 18:6, 7; 2 நாளாகமம் 2:13, 14) ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டுவதற்கு உதவி செய்ய பெசலெயேல் என்ற கைத்தொழிலாளி ‘விநோதமான வேலைகளை யோசித்துச்’ செய்வதற்கு தன் திறமையை பயன்படுத்தினார். (யாத்திராகமம் 31:3, 4) யாபால் என்ற மேய்ப்பன் கூடாரம் செய்வதைக் கண்டுபிடித்திருக்கலாம், அது நாடோடி வாழ்க்கைக்கு வசதியாயிருந்தது. (ஆதியாகமம் 4:20) தாவீது பாடல்களை இயற்றுபவரும் சங்கீதக்காரருமாக மட்டும் இல்லை, ஆனால் புதிய இசைக்கருவிகளை உண்டாக்கும் திறமையையும் கொண்டிருந்தார். (2 நாளாகமம் 7:6; சங்கீதம் 7:17; ஆமோஸ் 6:5) சிவந்த சமுத்திரத்தின் வழியாய் இஸ்ரவேலர்களை அற்புதமாய் விடுவித்த போது நடந்த கொண்டாட்டத்தில் மிரியாம் கூடியாட்ட ஆடல் வகையை அமைத்திருக்கலாம்.—யாத்திராகமம் 15:20.
மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதில் உண்டாக்கும் திறமை அதிக மதிப்பு வாய்ந்ததாய் உள்ளது. இயேசு திறமையோடு உவமைகளையும், காட்சிப்பொருள்களை வைத்து பாடங்களை கற்பிக்கும் முறைகளையும் உபயோகித்து தம் செய்தியை அறிவித்தார். அதே போலவே அவரைப் பின்பற்றுபவர்கள் ‘திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்பட’ வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறார்கள். (1 தீமோத்தேயு 5:17) ஆம், அவர்களுடைய பிரசங்க வேலை வெறும் வழக்கமாக செய்யப்படும் ஒரு காரியமல்ல. உண்டாக்கும் திறமையுடைய கற்பிக்கும் முறைகளைத் தேவைப்படுத்தும் ஒரு கலையாக இருக்கிறது. (கொலோசெயர் 4:6) ஒருவர் தன் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் போது இது விசேஷமாய் முக்கியமாய் இருக்கிறது.—உபாகமம் 6:6, 7; எபேசியர் 6:4.
இவ்வாறு யெகோவா, உண்டாக்கும் திறமை தமக்குக் கொடுக்கும் சந்தோஷத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறார். என்னே ஓர் தாராளமான வெகுமதி!