அவர்கள் அன்பின் காரணமாக அதை செய்தனர்
கனடாவில் வசிக்கும் உண்மைத்தன்மையுள்ள, உபசார குணமுள்ள ஒரு விதவை நான்கு இளம் மகள்களை மெய்க் கிறிஸ்தவர்களாக வளர்த்து வந்தார்கள். அவர்களுடைய வீடு அதிகமாக பழுதுபார்க்கப்பட வேண்டிய நிலையில் இருந்ததை அந்த சபையில் இருந்த மூப்பர்கள் கவனித்தனர். அந்த வேலையை தன்னால் செய்வதற்கு அந்த விதவையிடம் பணமும் இல்லை. திறமையும் இல்லை. ஆகையால் 1 தீமோத்தேயு 5:9, 10-ல் கொடுக்கப்பட்டிருக்கும் நியமத்துக்கு இசைவாக மூப்பர்கள் அவர்களுடைய தேவையை அறிந்து அவர்களுக்காக அந்த வேலையை செய்துமுடிப்பதற்கு ஏற்பாடு செய்தனர் எவ்வாறு?
அந்த விதவையும் அவர்களுடைய பிள்ளைகளும் ஐந்து நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி திட்டங்கள் போட்டன. சபையில் உள்ள 80-க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் மனமுவந்த ஆதரவை கொடுத்து, பொருள்கள், நிதி. நேரம் ஆகியவற்றை அளித்து உதவினர். குடும்பத்தார் புறப்பட்டவுடனேயே ஆர்வமிக்க வேலையாட்கள் தேனீக்களைப் போன்று வீடு முழுவதும் கூட்டமாக கூடினர். அந்த வீட்டின் வெளிப்பகுதி முழுவதும் பழுதுபார்க்கப்பட்டது. சுவர்கள் பூசப்பட்டு வர்ணம் அடிக்கப்பட்டன. தரைகள் வழவழப்பாக்கப்பட்டு மறுபடியுமாக போடப்பட்டன. தேவைப்பட்ட எல்லா மின் இணைப்புகள் மற்றும் மின் விளக்குகளின் தரம் உயர்த்தப்பட்டன. பழையதாய் போன ஃபர்னிச்சர்களுக்கு பதிலாக புதியவை வைக்கப்பட்டன. வெறும் ஐந்து நாட்களில் முழு வீடும் புதுப்பிக்கப்பட்டது!
வேலையும் பரபரப்பும் நிறைந்த இந்தச் சூழ்நிலை சுற்று வட்டாரத்தில் அதிக சலசலப்பை ஏற்படுத்தியது. சாட்சிகள் எடுத்த முயற்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு 80-வயது பக்கத்து வீட்டுக்காரர் அவ்வளவாக கவரப்பட்டதால், அவர் தன் பெயின்ட் பிரஷ்ஷைக் கொண்டுவந்து அவர்களுக்கு கட்டாயம் உதவி செய்வேன் என்று கூறினார். ஒரு வாலண்டியருடைய எஜமானர் சமையலறை அடுப்பு ஒன்றுக்கு புகைப்போக்கி மூடி ஒன்றை இலவசமாக அளித்தார். மற்றொரு எஜமானர் புதிய சமயலறை நிலையடுக்குகளை நன்கொடையாக அளித்தார் ஒரு நபர் அவ்வளவாக கவரப்பட்டதன் காரணமாக யெகோவாவின் சாட்சிகளைக் குறித்து அதிகமாக கற்றுக்கொள்ள விரும்பினார். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற பிரசுரத்தை அவர் ஆவலோடு ஏற்றுக்கொண்டார்.
அந்த விதவையும் அவர்களுடைய மகள்களும் திரும்பி வந்தபோது அவர்கள் அதிகமாக ஆச்சரியமடைந்திருந்தது அவர்களுடைய முகங்களில் தெளிவாக தெரிந்தது. அங்கு கண்ணீருக்கும், சிரிப்பொலிகளுக்கும், கட்டித்தழுவுதல்களுக்கும் அளவே இல்லை—கிறிஸ்தவ அன்பும் உணர்ச்சியும் நிறைந்த மறக்கமுடியாத ஒரு சமயமாக அது இருந்தது. சபையில் இருக்கும் தேவையிலுள்ள அங்கத்தினர்கள் சார்பாக மெய்யான அன்பும் அக்கறையும் காண்பிப்பது உண்மையிலேயே மெய் கிறிஸ்தவத்தின் அடையாளமாய் இருக்கிறது, ஏனென்றால் பவுல் எழுதினார் “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்.”-கலாத்தியர் 6:10.