உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் நியூ ஜீலாந்து
தீவுகள் யெகோவாவைத் துதிக்க முடியுமா? ஆம், ஏசாயா 42:10-ன் படி அவை துதிக்க முடியும்: “தீவுகளே, அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.” நியூ ஜீலாந்தை உண்டுபண்ணும் தீவுகள் நிச்சயமாகவே யெகோவாவைத் துதிக்கின்றன. ஏரிகள், குடாக்கடல்கள், கம்பீரமான மலைகள், பனிக்கட்டிக் குவியல்கள், கடற்கரைகள், பெரணி-படர்ந்து கிடக்கும் மழைக்காடுகள், வளமிக்க பசும்புல் நிறைந்த மேய்ச்சல் நிலங்கள் ஆகியவற்றுக்காக உலகமுழுவதும் புகழ் பெற்றிருக்கும் நியூ ஜீலாந்து, பூமியையும் வானத்தையும் சிருஷ்டித்த படைப்பாளரின் மாட்சிமையையும் பேராற்றலையும் மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்துகிறது.
இந்த இருபதாம் நூற்றாண்டு ஆரம்பித்த சமயத்திலிருந்து அதிகமதிகமான நியூ ஜீலாந்து குடிமக்கள், தூய வணக்கத்தில் யெகோவாவிடம் திரும்புவதன் மூலமும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதன் மூலமும் யெகோவாவைத் துதிப்பதற்கு தங்கள் குரல்களை ஒன்று சேர்த்திருக்கின்றனர். சமீபத்தில், உறவினர்களுக்கு சாட்சி கொடுப்பதைக் குறித்து ஒரு நல்ல அனுபவத்தைக் கேட்ட சாட்சி தன் குடும்பத்தினருக்கு சாட்சி கொடுக்கத் தீர்மானித்தார். அவர் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தின் பிரதிகளைத் தன் குடும்ப அங்கத்தினர்கள் பலருக்கு வெகுமதியாகக் கொடுத்தார். இந்நாள் வரையாக அதன் பலன்கள்? ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் இப்போது பைபிளைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள், உடன்பிறந்தாரின் மகன் ஒருவர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுக்காட்டப்பட்டிருக்கிறார், மற்றவர்கள் இப்போது கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை செவிகொடுத்துக் கேட்க அதிக மனமுள்ளவர்களாய் இருக்கின்றனர். அவருக்கு வேலை செய்வதற்கு இன்னும் பெரிய பிராந்தியம் உள்ளது; அவருடைய பெற்றோர் மட்டுமன்றி, அவருக்கு ஆறு சகோதரர்களும் ஒன்பது சகோதரிகளும் இருக்கின்றனர்!
சாட்சிகள் தங்கள் உழைப்புகளை எல்லாம் ஒன்றுசேர்த்து ராஜ்ய மன்றங்களைக் கட்டும்போதும்கூட, யெகோவாவுக்குத் துதி உண்டாகிறது. உதாரணமாக, ராய் பெர்க்கின்ஸ் என்ற செய்தித்தாள் எழுத்தாளர் ஓப்போட்டிக்கி நியூஸ் 1994, மே 17 அன்று வெளிவந்த செய்தித்தாளில் இவ்வாறு எழுதினார்: “நான் ஒரு அவிசுவாசியாக இருந்தபோதிலும், ஒப்புக்கொடுத்த வேலையாட்கள் அனைவரும் தங்கள் கடவுள் பேரிலுள்ள அன்பின் காரணமாக அந்தக் கட்டுமானப் பணியில் செலவழித்த அவ்வளவு நேரத்தையும் முயற்சியையும் பார்த்து மிகவும் கவரப்பட்டேன்.
“வார இறுதி நாட்களில் இத்தனை அநேக மணிநேரங்கள் வேலை செய்தபோதிலும், நான் ஒரு யூனியன் சண்டையைக்கூட பார்க்கவோ கேட்கவோ இல்லை . . . பெண்கள் ஆண்களோடு சேர்ந்து சாரக்கட்டுகளில் ஏறி வேலை செய்தனர். அவர்கள் கட்டுமான இணைப்புகளுக்கு காரை பூசிக்கொண்டும், கட்டுமானப் பொருட்களைத் தூக்கிக்கொண்டும், அவற்றை சுமந்துகொண்டும், அனைவரும் சந்தோஷமான மனநிலையில் வேலை செய்துகொண்டிருந்தனர்.
“எந்தவொரு வேலையாளும் சிகரெட் பிடித்ததினால் வேலை செய்ய வேண்டிய நேரத்தை இழந்து விடவில்லை. அங்கிருந்தவர்கள் எல்லாரும் எந்த வேலையைச் செய்துகொண்டிருந்தாலும், அங்கிருந்த காற்றில் பெயின்ட் புகையும் செங்கல் தூசியும் தவிர வேறு எந்தத் தூய்மைக்கேடும் இல்லை.”
ஓப்போட்டிக்கி சபையின் மூப்பர் குழு இவ்வாறு எழுதியது: “இந்த முழு கட்டுமானப் பணியும் நகரவாசிகள் மீது பெரும் பதிவை ஏற்படுத்தியிருக்கிறது. அதைக் குறித்து எல்லாரும் பேசிக்கொண்டிருப்பதைப் போல் தோன்றுகிறது. அநேக பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாங்கள் அதிகக் கிளர்ச்சியூட்டுவதாய்க் கண்ட ஒரு அனுபவம் பின்வருமாறு: அதிக மதப்பற்றுள்ள ஒரு தம்பதி, அநேக ஆண்டுகள் நாங்கள் அவர்களைச் சென்று பார்க்க வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் கட்டட வேலை நடந்துகொண்டிருந்த இடத்துக்கும் பின்னர் கூட்டத்துக்கும் வந்தனர். அதற்குப் பிறகு கணவர் சொன்னார், ‘நீங்கள் கடவுளுடைய ஜனங்கள் என்பதை என்னால் பார்க்கமுடிகிறது. இப்படிப்பட்ட ஜனங்களோடு கூட்டுறவு கொள்ள வேண்டும் என்று என் வாழ்நாள் முழுவதும் நான் மனதுக்குள்ளே ஏங்கிக்கொண்டிருந்தேன்.’”
ட்யூனெடின் என்ற இடத்தில் அதிவிரைவாகக் கட்டப்பட்ட ராஜ்ய மன்றத்தைப் பற்றி அதற்கு முந்தின வருடம், ஒட்டாகோ டெய்லி டைம்ஸ் என்ற பத்திரிகையின் எழுத்தாளர் பின்வருபவற்றைக் கூறினார்: “அது ஒரு செயற்கரிய செயல், உந்துவிக்கும் சக்திக்கும் சுய-உதவிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முன்மாதிரி.” அதே செய்தித்தாள் குறிப்பிட்டது: “அந்நகரத்து மக்கள் தங்கள் கண்களுக்கு முன்பாக ஒரு பெரிய கட்டடம் எழும்புவதைக் கண்டு வியந்து பாராட்டினார்கள், அதைப் போன்ற மனமுவந்த உழைப்பும் ஒத்துழைக்கும் ஆர்வமும் ஏராளமாக கிடைக்கக்கூடியதாக இருந்தால் வேறு என்ன மாற்றங்களும் நன்மை பயக்கக்கூடிய திட்டங்களும் சாதிக்கப்படலாம் என்று அநேகர் நினைத்துக் கொண்டிருப்பர். ராஜ்ய மன்றம் ஆக்கப்பூர்வமான முயற்சி உண்டாக்கும் விளைவுகளுக்கு ஒரு பெருமை தரும் அடையாளமாக உள்ளது.”
கட்டட வேலை நடந்த இடத்தைச் சென்று பார்த்த நூற்றுக்கணக்கானோரில் ஒரு பெருந்தன்மையான மனிதர் சொன்னார், சாட்சிகள் “சர்ச்சுகளை” கட்டிக்கொண்டிருந்தனர், சர்ச் அங்கத்தினர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே சென்றதால் அவருடைய மதப் பிரிவு சர்ச்சுகளை விற்றுக்கொண்டிருந்தது. “நீங்கள் இன்னும் சுமார் பன்னிரண்டு மாதங்கள் காத்திருந்தீர்கள் என்றால், எங்களுடைய சர்ச்சுகளில் ஒன்றை வாங்கியிருக்கலாம்” என்று அவர் பயப்படாமல் துணிந்து சொன்னார். “எங்களுடைய சர்ச் ஒன்றை நாங்கள் விற்க வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் செலவுகளை எங்களால் சமாளிக்க முடியவில்லை. ஆனால், நீங்கள் ஊதியம் பெறும் குருமார்களைக் கொண்டிருப்பதில்லை. . . . மேலும் உங்களுடைய கட்டடங்களைப் பராமரிப்பது சுலபம், ஏனென்றால் அவை பராமரிப்பதற்குக் கடினமாயிருக்கும் ஊசிக்கோபுரங்களையுடைய உயரமான கட்டடங்கள் அல்ல.”
தீவுகள் நிச்சயமாகவே கடவுளைத் துதிக்கக்கூடும் என்பது தெளிவாயிருக்கிறது. யெகோவாவின் துதிகள் இந்த அழகான பசிபிக் தேசத்திலும் உலகமுழுவதிலும் தொடர்ந்து எதிரொலிக்கட்டும்!
[பக்கம் 9-ன் பெட்டி]
நாட்டு விவரங்கள்:
1994 ஊழிய ஆண்டு
சாட்சிபகருவோரின் உச்ச எண்ணிக்கை: 12,867
வீதம்: 271-க்கு 1 சாட்சி
நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தோர்: 24,436
சராசரி பயனியர் பிரஸ்தாபிகள்: 1,386
சராசரி பைபிள் படிப்புகள்: 7,519
முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை: 568
சபைகளின் எண்ணிக்கை: 158
கிளை அலுவலகம்: மான்யுருவா
[பக்கம் 9-ன் படம்]
சுமார் 1930-ல் பயனியர்கள் வெளி ஊழியத்துக்குப் புறப்படுகின்றனர்
[பக்கம் 9-ன் படம்]
மான்யுருவாவில் கிளை அலுவலக வசதிகள்
[பக்கம் 9-ன் படம்]
ஆக்லாண்டில் உள்ள டேவன்போர்ட்டில் ராஜ்ய செய்தியை பிரசங்கித்தல்