யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிரான வழக்கு தீர்ப்பளிக்கப்பட்டது
பல தடவைகள் திரும்பத் திரும்ப தள்ளிவைக்கப்பட்ட பிறகு, கிரீஸில் உள்ள தெசலோனைக்கா மேல் முறையீட்டு நீதிமன்றம் இறுதியில் 1995, ஜூன் 8 அன்று, யெகோவாவின் சாட்சிகளாய் இருந்த நான்கு பெண்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு கூடியது. அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு? மதமாற்றம் செய்வது, இதை கிரேக்க சட்டம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தடைவிதித்திருக்கிறது.
இருப்பினும், நீதிமன்றம் கூடுவதற்கு முன், குற்றவழக்குக்கு முக்கிய சாட்சியாக இருந்தவர்—அந்த நான்கு பெண்களுக்கு எதிராக வழக்கைத் தூண்டிய பாதிரி—உயிரோடு இல்லை. அவருக்கு பதிலாக மற்றொரு பாதிரி சாட்சிகொடுக்க முயன்றார், ஆனால் நீதிமன்றம் அவருடைய வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அந்த வழக்கு விசாரணை வெறும் 15 நிமிடங்களே நீடித்திருந்தது என்பது ஆச்சரியமாயில்லை! குற்றஞ்சாட்டின மற்ற சாட்சிகளை நீதிபதி விசாரணை செய்தார், சட்டப்படி குற்றமான மதமாற்றுதலை எதிர்வாதிகள் அப்பியாசிக்கவில்லை என்பதை கண்டுபிடித்தார். 1993-ல் மனித உரிமைகளின் ஐரோப்பிய நீதிமன்றம் எட்டிய தீர்மானத்தை கிரேக்க நீதிமன்றங்கள் மதிக்கவும் பின்பற்றவும் விருப்பமுள்ளவையாய் இருக்கின்றன என்பதை இந்தத் தீர்மானம் காண்பிக்கிறது.
குற்றஞ்சாட்டுவதற்காக சாட்சிகொடுத்த மூன்று பெண்களும் எதிர்வாதிகளான யெகோவாவின் சாட்சிகளை அணுகி இருதயப்பூர்வமாக மகிழ்ச்சி தெரிவித்தது விசேஷமாக ஆச்சரியமாய் இருந்தது. “நடந்த எல்லாவற்றுக்காகவும் நாங்கள் மனமார வருந்துகிறோம்,” என்று அவர்களில் ஒருவர் கூறினார். அவள் கூடுதலாக சொன்னாள்: “அது எங்களுடைய குற்றமல்ல. அந்தப் பாதிரி உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கும்படி எங்களை வற்புறுத்தினார். அவர் இப்போது உயிரோடு இல்லாததன் காரணமாக, நீங்கள் எங்களுடைய கிராமத்துக்கும் எங்களுடைய வீடுகளுக்கும் வரும்படி நாங்கள் விரும்புகிறோம்.”
இவ்வாறு, யெகோவா மறுபடியும் கிரீஸில் உள்ள தம்முடைய ஜனங்களுக்கு ஒரு ஆச்சரியமான வெற்றியைத் தந்திருக்கிறார். கிரீஸில் மதமாற்றும் சட்டங்கள் 1938-லும் 1939-லும் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டத்தை உபயோகித்து யெகோவாவின் சாட்சிகளை துன்புறுத்துவது தவறு என்று மனித உரிமைகளின் ஐரோப்பிய நீதிமன்றம் 1993-ல் ஆணையிட்டது.—காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1993, பக்கங்கள் 27-31-ஐ காண்க.