ஒழுக்கமுள்ள பிள்ளைகளை வளர்த்தல்—அது இன்னமும் சாத்தியமா?
“நாம் இப்பொழுது ஒரு சிக்கலான சமுதாயத்தில், கலப்புமிக்க கலாச்சாரத்தில் வாழ்கிறோம்; இங்கே சீரான ஒழுக்கநெறி சட்டமே கிடையாது” என கருத்துரைக்கிறார் கனடாவிலுள்ள ஒட்டாவாவில் இருக்கும் குடும்பத்திற்கான வான்யா நிறுவனத்தைச் சேர்ந்த ராபர்ட் கிளாசப். அதனால் ஏற்பட்ட விளைவென்ன? த டோரன்டோ ஸ்டார் செய்தித்தாளில் வெளிவந்த ஓர் அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “பருவ வயது கருத்தரிப்புகள், இளைஞர்கள் வன்முறை, பருவ வயது தற்கொலை ஆகியவை எல்லாம் அதிகரித்து வருகின்றன.”
இந்தப் பிரச்சினை வட அமெரிக்காவிற்கும் அப்பால் செல்கிறது. அ.ஐ.மா., ரோட் ஐலண்டில் இருக்கும் பிரெளன் யூனிவர்சிட்டியிலுள்ள மனித மேம்பாட்டு மையத்தின் இயக்குநராகிய பில் டேமன் என்பவர், பிரிட்டனிலும் மற்ற ஐரோப்பிய தேசங்களிலும், ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற தேசங்களிலும் உள்ள இப்படிப்பட்ட பிரச்சினைகளை ஆராய்ந்திருக்கிறார். இளைஞர்களுக்கு வழிநடத்துதல் தருவதில் சர்ச்சுகளும் பள்ளிகளும் மற்ற நிறுவனங்களும் தவறியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். நம்முடைய கலாச்சாரம், “நல்லொழுக்கத்தையும் திறமையையும் உருவாக்க பிள்ளைகளுக்கு எது தேவை என்பதை அறியத் தவறிவிட்டது” என அவர் கருதுகிறார். “கண்டித்து வளர்ப்பது பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் உடல்நலத்திற்கும் தீங்கானது” என்று கற்பிக்கிற பிள்ளை வளர்ப்பு நிபுணர்களின் கருத்தைப் பற்றி குறிப்பிடுகையில், இது, “பிடிவாதமுள்ள, கீழ்ப்படியாத பிள்ளைகளை உருவாக்கவே தூண்டுகோலாய்” இருக்கிறது என டேமன் அடித்துக் கூறுகிறார்.
இன்றைய இளைஞர்களுக்குத் தேவைப்படுவது என்ன? மனதையும் இருதயத்தையும் திருத்துகிற அன்பான பயிற்றுவிப்பே அவர்களுக்குத் தொடர்ந்து தேவை. வித்தியாசப்பட்ட இளைஞர்களுக்கு வித்தியாசமான கண்டிப்பு தேவை. அன்பால் தூண்டப்பட்டு, அடிக்கடி காரணங்காட்டி பேசுவதன் மூலம் கண்டிக்கலாம். அதனால்தான் நீதிமொழிகள் 8:33 (NW), “கண்டிப்புக்கு செவிகொடு”க்கும்படி நமக்கு சொல்கிறது. ஆனால், சிலர், ‘வார்த்தைகளினாலே அடங்க’ மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, கீழ்ப்படியாமைக்காக தகுந்த அளவில் பொருத்தமான தண்டனை கொடுப்பது தேவைப்படலாம். (நீதிமொழிகள் 17:10; 23:13, 14; 29:19) இதைச் சிபாரிசு செய்கையில், கோபத்தால் சவுக்கடி கொடுப்பதையோ செமத்தியாக அடிப்பதையோ பைபிள் ஆதரிப்பதில்லை; அவை ஒரு பிள்ளையின் உடம்பை கன்றிப்போகச் செய்யலாம், மேலும் காயப்படுத்தலாம். (நீதிமொழிகள் 16:32) அதற்குப் பதிலாக, ஒரு பிள்ளை தான் திருத்தப்படுவதற்கான காரணத்தைப் புரிந்துகொண்டு, பெற்றோர் உண்மையில் தன்னுடைய நலனில் அக்கறைகொள்வதாலேயே அவ்வாறு செய்கிறார் என்பதை உணர வேண்டும்.—எபிரெயர் 12:6, 11-ஐ ஒப்பிடுக.
இப்படிப்பட்ட நடைமுறையான, சிறந்த பைபிள் அறிவுரைகள், குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளன.