“ஒற்றை-விரல் பைபிள்”
வியாதியாய் இருந்ததற்குப்பின் உடலுறுப்பு ஆற்றல் இழந்த ஜோசஃப் சாரெஷிவிஸ்கி என்பவருக்கு, டைப் அடிப்பதன் மூலமாக மட்டுமே எழுத முடியும்; அதுவும், ஒரு விரலை மாத்திரமே பயன்படுத்த முடியும். எனினும், பைபிளை சீன மொழியில் மொழிபெயர்க்கும்படியானத் தன் இலக்கை அவர் எட்டினார். இது, அயல் நாட்டினர் கற்பதற்கு வெகு கடினமான மொழிகளில் ஒன்று.
பிறப்பின்படி ஒரு யூதனாக இருந்த சாரெஷிவிஸ்கி, வளர்ந்தபோது, கிறிஸ்தவத்தை ஆராய்ந்து பார்த்து அதை ஏற்றார். கடைசியாக சீனாவில் ஒரு மிஷனரியானார். அங்கு 1866-ல், வெகு காலத்துக்கு முன்பே தொடங்கி, 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகள் வரையாகத் தொடர்ந்து, பல மொழிபெயர்ப்பு திட்டங்களில் பங்கேற்றார். முன்பு யூதனாக இருந்ததன் காரணமாக, சாரெஷிவிஸ்கி, தன் உடன் தோழரான அறிஞர்களைப் பார்க்கிலும் எபிரெயுவில் மிக அதிகமாய் தேர்ந்தவராக இருந்தார். ஆகவே, எபிரெய வேதவாக்கியங்கள் முழுவதையும் மொழிபெயர்க்கும்படியான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தன்னுடைய நெடுநாள் வேலை முடிவுறும் சமயத்தில், துணைக்குறிப்புகளுள்ள முழு பைபிளையுங்கூட அவர் சீன மொழியில் மொழிபெயர்த்தார்.
பைபிள் மொழிபெயர்ப்பாளராக, ஜோசஃப் சாரெஷிவிஸ்கி, பொதுமொழியில் பைபிள் இருப்பதை ஆர்வத்துடன் ஆதரித்துப் பேசுபவராக இருந்தார். ஆனால் அவருடைய வேலை எளிதானதாக இல்லை. சீன பைபிள் உருவாக அவர் எடுத்த முயற்சி ஈடிணையற்றது, “ஏனெனில் அது புரிந்துகொள்வதற்கு அவ்வளவு சுலபமாய் இருந்தது, பல இடையூறுகளுக்கு மத்தியிலும் மொழிபெயர்த்து முடிக்கப்பட்டது” என்று த புக் ஆஃப் எ தௌஸன்ட் டங்ஸ் கூறுகிறது.
சாரெஷிவிஸ்கியின் கைகள் பக்கவாதத்தால் செயல் இழந்துவிட்ட பின்பும், அவர் தன் வேலையை விடாது தொடர்ந்தார். தன் கைகளின் இயல்பான உபயோகத்தை அவர் இழந்துவிட்டதால், டைப் அடிப்பதற்கு பெரும் முயற்சி தேவைப்பட்டது. ஆகையால், அவர் இந்த மொழிபெயர்ப்பை ஒற்றை-விரல் பைபிள் என்று அழைத்தார். ஊனமுற்ற நிலையிலும் இதைச் செய்துமுடிப்பதற்கு சாரெஷிவிஸ்கி, 25 ஆண்டுகள் விடாமுயற்சியுடன் செயல்பட்டார். சோர்ந்துவிடாமல் அவர், வேறு எந்த மொழியைப் பார்க்கிலும் அதிக ஜனங்களால் பேசப்படுகிற சீன மொழியில் கடவுளுடைய வார்த்தையை புரியச்செய்வதில் பங்குகொண்டார்.
[பக்கம் 11-ன் படத்திற்கான நன்றி]
இரண்டு படங்களும்: Courtesy of American Bible Society Archives