பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த போர்
1914
புதியநூற்றாண்டைப் பற்றி கருத்து தெரிவிப்பவராக, தி ஒர்லேன்டோ சென்டினெல் செய்தித்தாள் பத்தியெழுத்தாளர் சார்லி ரீஸ் இவ்வாறு எழுதினார்: “19-ம் நூற்றாண்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த, 1914-18 வரையாக நடந்த போர் ஓயவில்லை.” அவர் சொல்ல வருவது என்ன? அவரே விளக்கினார்: “சரித்திரத்துக்கும் காலண்டருக்கும் சம்பந்தமில்லை. நம்பிக்கைகள், ஊகங்கள், மனோபாவங்கள், ஒழுக்கம் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக வைத்து 19-ம் நூற்றாண்டை வரையறுத்தால் அது ஜனவரி 1, 1901-ம் ஆண்டு நிறைவடையவில்லை. அந்த நூற்றாண்டு 1914-ல்தான் நிறைவடைந்தது. இந்த விளக்கத்தின்படி 20-ம் நூற்றாண்டு தொடங்கியதும் அன்றுதான். . . .
“நம் வாழ்நாளில் நம்மை பாதித்திருக்கிற கிட்டத்தட்ட எல்லா சண்டைச் சச்சரவுகளுக்கும் அந்தப் போரே பிறப்பிடம். அறிவுப்பூர்வமான, கலாச்சார முன்னேற்றங்கள் என கிட்டத்தட்ட அனைத்துக்குமே அந்தப் போர்தான் வித்திட்டது. . . .
“அது அந்தளவுக்கு சேதம் விளைவித்தது என நான் நினைக்கிறேன். ஏனென்றால் தாங்களே விதியை கட்டுப்படுத்த முடியும் என்ற மனிதரின் நம்பிக்கையை அது தகர்த்தெறிந்தது. . . . அந்த போர் மக்களின் அத்தகைய நம்பிக்கையை தவிடுபொடியாக்கியது. போரிட்ட இரு தரப்பினருமே அது அவ்வாறு நடக்கும் என நினைக்கவில்லை. அது ஆங்கிலேய, பிரெஞ்சு சாம்ராஜ்யங்களை கவிழ்த்தது. ஆங்கிலேய, பிரெஞ்சு, ஜெர்மன் வீரர்களில் கட்டிளம் காளைகளை பலி கொண்டது. . . . குறுகிய காலத்தில், 1.1 கோடி மக்களைக் கல்லறைக்கு அனுப்பியது.”
120 ஆண்டுகளுக்கும் மேலாக, “தேசங்களுக்கு குறிக்கப்பட்ட காலம்” என்று இயேசு அழைத்த காலப்பகுதி 1914-ல் முடிவடைந்தது என யெகோவாவின் சாட்சிகள் சொல்லி வந்திருக்கின்றனர். (லூக்கா 21:24, NW) அந்த ஆண்டில், உயிர்த்தெழுப்பப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து பரலோக அரசாங்கத்தின் அரசராக அரியணை ஏறினார். அந்த அரசாங்கத்தின் மூலமாகத்தான் இந்த நூற்றாண்டுக்கே உரித்தான இந்த எல்லா துன்பங்களையும் யெகோவா தேவன் நிரந்தரமாக தீர்ப்பார்.—சங்கீதம் 37:10, 11; பிரசங்கி 8:9; வெளிப்படுத்துதல் 21:3, 4.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo