வாழ்க்கை எனும் சாலையில் கைகாட்டி மரங்கள்
பழக்கப்படாத ஒரு சாலையிலோ நடைபாதையிலோ நீங்கள் பயணம் செய்கையில், கைகாட்டி மரங்களை ஒரு தடையாக கருதுவீர்களா? நிச்சயமாகவே கருத மாட்டீர்கள்! பாதை மாறி போய்விடாமல் நீங்கள் போய்சேர வேண்டிய இடத்திற்கு வழிநடத்த உதவும் வழிகாட்டியாகவே அதைக் கருதுவீர்கள் அல்லவா?
ஆனால், வாழ்க்கை எனும் சாலையைப் பற்றியென்ன? கைகாட்டி மரங்கள் இன்றி வெற்றிகரமாக அதில் செல்ல முடியுமா? இதன் சம்பந்தமாக மனிதனுக்கு இருக்கும் வரம்புகளை கடவுளுடைய பூர்வகால தீர்க்கதரிசி ஒருவர் ஒத்துக்கொண்டார். அவர் சொன்னார்: “ஆண்டவரே! நான் அறிவேன்: மனிதர் செல்ல வேண்டிய வழி அவர்களின் கையில் இல்லை; நடப்பவன் காலடிப் போக்கும் அவர்களின் அதிகாரத்தில் இல்லை.”—எரேமியா 10:23, பொ.மொ.
அப்படியானால், தேவையான வழிநடத்துதலை எங்கே கண்டடையலாம்? மனிதனின் படைப்பாளரே இப்படிப்பட்ட வழிநடத்துதலைத் தருவதில் நம்பகமானவர். உருவகமான கைகாட்டி மரங்கள் பைபிளில் உள்ளன. தம்முடைய வார்த்தைகள் அடங்கிய இந்தப் புத்தகத்தில் யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள்கேட்கும்.”—ஏசாயா 30:21.
ஆம், கடவுளுடைய வார்த்தை நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் நம்பத்தக்க வழிநடத்துதலை தருகிறது. (ஏசாயா 48:17; 2 தீமோத்தேயு 3:16, 17) ஆனால், மனிதவர்க்கத்தில் பெரும்பான்மையோர் தெய்வீக வழிநடத்துதலின்றி கால்போன போக்கிலேயே வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்கின்றனர். (மத்தேயு 7:13) இருப்பினும், கைகாட்டி மரங்களுக்கு குறைச்சலே இல்லை, அவை அந்தந்த இடத்தில் அசைக்க முடியாதவாறு உறுதியாக நாட்டப்பட்டுள்ளன! ஆனால் கேள்வி என்னவெனில், வாழ்க்கை எனும் சாலையில் செல்கையில் நீங்கள் அவற்றிற்கு கவனம் செலுத்துவீர்களா?