மீண்டும் கடவுளுடைய பெயர்
“அநேக வருடங்களாக, ஏன் அநேக நூற்றாண்டுகளாகவே கடவுளுடைய பெயரை எந்தப் பைபிள்களிலும் பார்க்கவே முடியவில்லை. ஆனால், அவருடைய நவீன நாளைய சாட்சிகளே விட்டுக்கொடுக்காமல் டெட்ராகிராமட்டனை மறுபடியும் உபயோகத்திற்கு கொண்டுவந்த ஒரே கிறிஸ்தவ தொகுதி ஆவர்.”a
பிரேஸிலைச் சேர்ந்த எழுத்தாளர் அசீஸ் பிராசீல் எழுதிய ஜியோவா டென்ட்ரு டூ ஷுடாயீஸ்மு ஈ டூ கிரிஸ்டியானீஸ்மு (யூத மதத்திலும் கிறிஸ்தவ மதத்திலும் யெகோவா) என்ற புத்தகத்தில்தான் இவ்வார்த்தைகள் காணப்படுகின்றன. ஆனால், சில பைபிள் மொழிபெயர்ப்புகள் ஏதாவது ஒரு விதத்தில் கடவுளுடைய பெயரை உபயோகிக்கையில் மற்ற மதங்கள் தங்கள் பைபிள்களிலிருந்து அதை ஏன் நீக்கிவிட்டன என்ற கேள்வி எழும்புகிறது அல்லவா? அதைப் பற்றி பிராசீல் இவ்வாறு கூறுகிறார்: “கடவுளுடைய பெயரை நீக்க காரணம், மூடநம்பிக்கை . . . மறைமுகமான நோக்கங்கள் அல்லது இயேசு மற்றும் அவருடைய தாய் மரியாளின் பெயர்களை உயர்த்த வேண்டும் என்ற விருப்பம்.”
இருந்தாலும், “நீக்கப்பட்டிருந்த [கடவுளுடைய] பெயர், போர்த்துகீஸிய மொழி பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பில் முழுமையாக சரி செய்யப்பட்டிருக்கிறது” என்று திரு. பிராசீல் கூறுவது முற்றிலும் உண்மை. ஏன்? ஏனென்றால், யெகோவா என்ற பெயர் பைபிளில் எங்கெல்லாம் இருக்கவேண்டுமோ அங்கெல்லாம் மறுபடியும் சேர்க்கப்பட்டிருக்கிறது. புதிய உலக மொழிபெயர்ப்பில் (ஆங்கிலம்) யெகோவா என்ற பெயர் 7,200-க்கும் அதிகமான முறைகள் தோன்றுகிறது.
நவீனகால போர்த்துகீஸில் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்தப் பைபிள் முதன்முதல் வெளியிடப்பட்டதிலிருந்து 65 லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. ஆகவேதான், டீயாரியு டூ நார்டெஸ்டீ (வடகிழக்கு தினசரி) என்ற பிரேஸிலைச் சேர்ந்த செய்தித்தாளில் ஒரு பத்திரிகை எழுத்தாளர் இவ்வாறு கேட்க தூண்டப்பட்டார்: “கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறதென்று உங்களுக்கு தெரியுமா?” இந்த நவீனகால பைபிள் மொழிபெயர்ப்பின் காரணமாக லட்சக்கணக்கானோர் இவ்வாறு சொல்ல முடியும்: “ஓ, தெரியுமே! கடவுளுடைய பெயர் யெகோவா.”
[அடிக்குறிப்புகள்]
a எபிரெய மொழியில் கடவுளுடைய பெயரை יהוה என்று எழுதுவர். (வலமிருந்து இடமாக வாசிக்கப்படும்) இந்த நான்கு எழுத்துக்களையே பொதுவாக டெட்ராகிராமட்டன் என்று அழைப்பர்.