நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க நல்ல ஆலோசனை
என்ன டிரஸ் போடணும், எந்த மியூசிக் கேட்கணும்னு எல்லாத்தையும் இந்தக் காலத்து இளசுகள், நண்பர்கள் பட்டாளத்திடமே கேட்கிறார்கள். பெற்றவர்கள் சொல்வதை காதில் போட்டுக்கொள்வதில்லை என்கிறது ரீடர்ஸ் டைஜஸ்ட். அப்படியென்றால் பிள்ளைகள் எங்கே, யாருடன் பழகுகிறார்கள் என்பது பெற்றோர்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
அவர்களுடைய நண்பர்களை பற்றி “துருவித்துருவி கேட்கவேண்டியது உங்களுடைய பொறுப்பு. முதலில் உங்கள் பிள்ளைக்கு கோபம் வரலாம், ஆனால் பிறகு அமைதியாகிவிடுவான்” என்கிறார் இஸ்மே ஃபான் ரென்ஸ்பர்க். இவர் தென் ஆப்பிரிக்க பல்கலைக்கழகத்தில், சைக்காலஜி துறையில், சீனியர் லெக்சரராக இருக்கிறார். பெற்றோர்களுக்கு அவர் உதிர்த்த ஒருசில டிப்ஸ்: கட்டுப்பாடுகள் அறிவுக்கு ஏற்றவையாக, சரியான காரணங்களுடன் இருக்க வேண்டும். உங்கள் பிள்ளை சொல்வதை முழுமையாக கேளுங்கள். வள்ளென்று பாயாதீர்கள். அமைதியாக இருங்கள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை யோசித்து வைத்திருங்கள். ஒருவேளை உங்கள் பிள்ளை ஏற்கெனவே கெட்ட பசங்களோடு சேர்ந்திருக்கிறான் என்றால், அதனால் அவன் கற்றுக்கொண்ட கெட்ட பழக்கங்களை மாத்திரம் சுட்டிக்காட்டுங்கள். அந்தப் பசங்களோடு சேரவேண்டாம் என்று மொட்டையாக சொன்னால் போதாது.
அந்தக் காலத்திலிருந்தே பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்களுக்கு தேவையான நல்ல அறிவுரைகள் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு பின்வரும் அறிவுரையை கவனியுங்கள்: “கேட்பதில் வேகமும் பேசுவதிலும் சினங்கொள்வதிலும் தாமதமும் காட்ட வேண்டும்.” (யாக்கோபு 1:19, பொ.மொ.) நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க பைபிள் தரும் நல்ல ஆலோசனை இதோ: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) பைபிளை மதித்து, படித்து, அதை தினந்தோறும் வாழ்க்கையில் பொருத்தும் மக்களுக்கு அதிலிருக்கும் ஞானம் விளங்கும் என்பதை இந்த இரண்டு உதாரணங்களும் எடுத்துரைக்கின்றன.