அவர்கள் ‘மெய் தேவனுக்கு பயந்து நடந்தார்கள்’
இஸ்ரவேலர் எகிப்தில் அடிமை வாழ்க்கை வாழ்ந்தனர். அந்தச் சமயத்தில், எபிரேய மருத்துவச்சிகளான சிப்பிராளும் பூவாளும் ஓர் இக்கட்டான நிலையில் இருந்தார்கள். அந்நிய ஜனத்தொகை பெருகிக்கொண்டு போவதை கட்டுப்படுத்த இந்தப் பெண்களிடம் பார்வோன் இவ்வாறு கட்டளையிட்டான்: “நீங்கள் எபிரேய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, . . . ஆண் பிள்ளையானால் கொன்று போடுங்கள்.”—யாத்திராகமம் 1:15, 16.
சிப்பிராளும் பூவாளும் ‘மெய் தேவனுக்கு பயந்தார்கள்.’ அதனால் தைரியத்தோடிருந்து, ‘எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யவில்லை.’ இது அவர்களை ஆபத்திற்குள்ளாக்கியபோதிலும், ஆண் பிள்ளைகளை உயிரோடு காப்பாற்றினார்கள். யெகோவா, “மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார்.” உயிர்காக்கும் வேலைக்காக அவர்கள் பலனளிக்கப்பட்டார்கள்.—யாத்திராகமம் 1:17-21.
இந்தப் பதிவு, தம்மை சேவிப்போரிடம் யெகோவா காட்டும் போற்றுதலை வலியுறுத்திக் காட்டுகிறது. சிப்பிராளும் பூவாளும் தைரியத்துடன் செய்தபோதிலும், அதை வெறுமனே மனிதாபிமான செயலாக யெகோவா கருதியிருக்கலாம். என்னவானாலும், நல்ல மனநிலையிலுள்ள எந்த ஒரு ஸ்திரீயும் குழந்தைகளை கொல்ல மாட்டாள்! இருப்பினும், மனித பயத்தின் காரணமாக சிலர் கொடிய செயல்களை செய்திருப்பதை சந்தேகமின்றி யெகோவா கவனித்துள்ளார். இந்த மருத்துவச்சிகள் மனித நேயத்தால் மட்டுமல்ல, ஆனால் தெய்வீக பயத்தினாலும் பக்தியினாலும் உந்துவிக்கப்பட்டார்கள் என்பதை அவர் அறிந்தார்.
நம்முடைய விசுவாசமுள்ள செயல்களைப் போற்றும் கடவுளை சேவிப்பதில் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்! சிப்பிராளையும் பூவாளையும் நெருக்கினதைப் போன்ற விசுவாசத்தின் பரீட்சையை ஒருவேளை நம்மில் ஒருவரும் எதிர்ப்பட்டிருக்க மாட்டோம் என்பது மெய்யே. என்றபோதிலும், பள்ளியிலோ வேலை செய்யும் இடத்திலோ அல்லது வேறெந்த சூழ்நிலையிலோ சரியான காரியத்திற்காக உறுதியாக இருக்கும்போது நம்முடைய உண்மையான அன்பை யெகோவா கவனியாது விடமாட்டார். மாறாக, ‘தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறார்.’ (எபிரெயர் 11:6) ஆம், “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.”—எபிரெயர் 6:10.