ஒரு விசேஷ நிகழ்ச்சி—நீங்கள் அங்கு இருப்பீர்களா?
அது மறக்கமுடியாத நாள். 3,500 வருடங்களுக்குமுன், இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர்; ஒவ்வொரு குடும்பத்தாரும் ஓர் இளம் செம்மறியாட்டை அல்லது வெள்ளாட்டை கொன்று அதன் இரத்தத்தை தங்கள் வீட்டுவாசல்களின் நிலைக்கால்களிலும் மேற்சட்டங்களிலும் தெளிக்கும்படி யெகோவா சொன்னார். இப்படி அடையாளம் போடப்பட்ட வீடுகளை அதே இரவில் கடவுளுடைய தூதன் கடந்துசென்றார். ஆனால் எகிப்தியரின் வீடுகளில் இருந்த முதற்பேறான மகன்கள் அனைவரையும் கொன்றுபோட்டார். பின்னர் இஸ்ரவேலர் விடுதலை செய்யப்பட்டனர். அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து யூதர்கள் வருடாவருடம் பஸ்காவை ஆசரித்தனர்.
இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலருடன் கடைசி பஸ்காவை ஆசரித்து முடித்தவுடனே, தம்முடைய பலிக்குரிய மரணத்தை நினைவுகூரும் ஒரு போஜன ஏற்பாட்டை தொடங்கி வைத்தார். உண்மையுள்ள அப்போஸ்தலரிடம் புளிப்பில்லாத அப்பத்தைக் கொடுத்து, இவ்வாறு சொன்னார்: “நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது.” பின்னர் ஒரு திராட்சரச பாத்திரத்தையும் அவர்களிடம் கொடுத்து, இவ்வாறு சொன்னார்: “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.” இயேசு மேலும் சொன்னார்: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” (மத்தேயு 26:26-28; லூக்கா 22:19, 20) ஆகவே, இந்த மரண ஆசரிப்பை தொடர்ந்து செய்யும்படி தம்மை பின்பற்றுகிறவர்களிடம் இயேசு கட்டளையிட்டார்.
இயேசுவின் மரண நாள் இந்த வருடம் ஏப்ரல் 19, புதன்கிழமை வருகிறது. இது சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பு ஆசரிக்கப்படும். இயேசு கட்டளையிட்ட விதமாக, உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் இந்த மரண நினைவு ஆசரிப்பை அனுசரிப்பதற்கு இந்த விசேஷ நாளின் இரவில் ஒன்றுகூடி வருவார்கள். எங்களோடு சேர்ந்துகொள்ளும்படி உங்களை மிகவும் அன்புடன் அழைக்கிறோம். இந்த விசேஷ நிகழ்ச்சி நடைபெறும் சரியான இடத்தையும் நேரத்தையும் தெரிந்துகொள்ள தயவுசெய்து உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்பு கொள்ளவும்.