ஆசிரியரின் தப்பெண்ணத்துக்கு பெற்றோர் கண்டனம்
இத்தாலியிலுள்ள கசானோ முர்ஜியைச் சேர்ந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்கள் சிலருக்கு ஸ்டிக்கர்களை கொடுத்தனுப்பினார். வீட்டு வாசற்கதவில் ஒட்டிவைப்பதற்கு கொடுக்கப்பட்ட இந்த ஸ்டிக்கர்களில் என்ன எழுதப்பட்டிருந்தது? “நாங்கள் கத்தோலிக்கர். யெகோவாவின் சாட்சிகளே கதவை தட்டாதீர்!”
இந்த மாணவர்களின் பெற்றோரில் சிலர் யெகோவாவின் சாட்சிகளாக இல்லாவிட்டாலும் ஆசிரியரின் இந்தச் செயலுக்கு வன்மையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ‘இதுபோன்ற செய்திகளை பிள்ளைகளிடம் தெரிவிப்பது, அவர்களுடைய கருத்துகளுக்கு ஒத்துவராத வேறொருவரை வெறுத்துவிடும்படி, அல்லது “வித்தியாசப்பட்ட” ஒரு மதத்தினரோடு சேராதபடி சொல்வதற்கு சமமாக இருக்கிறது’ என்று பெற்றோர் குற்றஞ்சாட்டியதாக மோவிட்டி மோவிட்டி என்ற செய்தி பத்திரிகை கூறியது. இந்தப் பத்திரிகைக்கு எழுதிய ஒரு தாய், இந்த ஸ்டிக்கர், “களையின் விதை” என்றும் “அறியாமை, முட்டாள்தனத்தின் விளைபொருள்” என்றும் கூறினார்.
இந்த அறிக்கை காண்பிக்கிறபடி, தப்பெண்ணத்தின் விதைகளை விதைப்பது எவ்வளவு ஆபத்து என்பதை நேர்மையான மனமுள்ள ஆட்கள் அறிந்துள்ளனர். இத்தாலியில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகள் செய்துவரும் கிறிஸ்தவ ஊழியத்தை அவர்கள் மதிக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளிடமே சென்று ‘அவர்களுடைய நம்பிக்கைக்கான காரணத்தை’ ஏன் கேட்டறியக்கூடாது? அவர்கள் அதை சொல்ல ஆவலாக இருப்பார்கள். அதை ‘ஆழ்ந்த மரியாதையோடு’ செய்வார்கள்.—1 பேதுரு 3:15.