கிறிஸ்தவ அன்பு பேச்சில் மட்டும் அல்ல
டிரினிடாட்டிலுள்ள பார்தாலேமியூ வீட்டை தீ கபளீகரம் செய்தபோது, அந்தக் குடும்பம் உயிரைத் தவிர உள்ளதை எல்லாம் பறிகொடுத்துவிட்டது. பக்கத்தில் குடியிருந்த உறவுக்காரர் ஒருவர் இவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார், ஆனால் அவ்வளவுதான் என எண்ணிவிடாதீர்கள்.
ஆலிவ் பார்தாலேமியூ யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர். இவரும் இவருடைய குடும்பத்தாரும் இழந்த வீட்டை மீண்டும் கட்டுவதற்கு இவருடைய சபையாரும் அக்கம்பக்கத்து சபைகளில் இருப்பவர்களும் நன்கொடை வழங்க ஆரம்பித்தார்கள். கட்டுமான திட்டத்தை கண்காணிக்க ஒரு குழு அமர்த்தப்பட்டது, வேலையும் சூடுபிடித்தது. 20 யெகோவாவின் சாட்சிகளும் அக்கம் பக்கத்தார் சிலரும் களத்தில் இறங்கினார்கள். இளைஞர்களும் கைகொடுக்க முன்வந்தார்கள், மற்றவர்களோ சிற்றுண்டி தயாரித்து பரிமாறினார்கள்.
“அவுங்க செய்த உதவியைப் பார்த்து, எங்க வீட்ல உள்ளவங்க திக்குமுக்காடி போயிட்டாங்க” என்று சொன்னார் ஆலிவ். “எங்க வீட்ல உள்ளவங்க யெகோவாவின் சாட்சிங்க அல்ல, என்னுடைய கணவர் இதைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டார்” என அவர் கூறியதை சன்டே கார்டியன் அறிக்கை செய்தது.
இந்த முயற்சியைப் பற்றி தொகுத்துரைக்கையில், உண்மையில் இப்படிப்பட்ட செயல்கள் மெய்யான கிறிஸ்தவத்தை அடையாளம் காட்டுகின்றன என்பதாக கட்டுமான திட்டத்தின் ஒருங்கமைப்பாளர் வலியுறுத்தினார். “வாயளவில அன்பை பற்றி நாங்க பேசறத்துக்காக மட்டும் வீடுவீடாக போகல, நாங்க பிரசங்கிக்கிறத செயல்ல காட்றதற்கு முயற்சி செய்றோம்” என்று கூறினார்.—யோவான் 13:34, 35.
[பக்கம் 32-ன் படம்]
ஆலிவ் பார்தாலேமியூவும் அவர் கணவரும்