மத ஒற்றுமை சாத்தியமா?
“சர்ச்சின் வரலாற்றிலேயே இது மிக முக்கியமான நாள்” என்றார் கிறிஸ்டியன் குரௌஸ். இவர் புராட்டஸ்டன்ட் சர்ச்சைச் சேர்ந்த லூத்தரன் உலக அமைப்பின் தலைவராவார். அதேபோல, கத்தோலிக்க சர்ச்சின் தலைவரான இரண்டாம் போப் ஜான் பாலும் கூறினார். “திசைக்கொரு பக்கமாக பிரிந்திருக்கும் கிறிஸ்தவர்களை எல்லாம் ஒன்றிணைக்கும் கடினமான மாபெரும் பாதையில், இன்று காலடி எடுத்து வைத்திருக்கிறோம்” என அவர் சொன்னார்.
லூத்தரன் மற்றும் கத்தோலிக்க சர்ச்சை சேர்ந்த அந்த இரு பிரதிநிதிகளும் தங்களுடைய மத நம்பிக்கைகளில் சிலவற்றை பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோதே இவ்வாறு சொன்னார்கள். அந்த நிகழ்ச்சி 1999, அக்டோபர் 31-ம் தேதி ஜெர்மனியிலுள்ள ஆக்ஸ்பர்க் என்ற இடத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கான நாளும் இடமும் சரியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ஏனென்றால், 1517-ம் ஆண்டு அதே அக்டோபர் 31-ம் தேதியில்தான் புராட்டஸ்டன்ட் சர்ச் உருவாவதற்கு காரணமான மார்ட்டின் லூத்தர், கத்தோலிக்க சர்ச் நம்பிக்கைகளில் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத 95 நம்பிக்கைகளை விடன்பர்க் என்ற இடத்திலுள்ள ஒரு சர்ச்சின் கதவில் மாட்டினார். ஏன் ஆக்ஸ்பர்கில் நடத்தப்பட்டது? ஏனெனில் ஆக்ஸ்பர்கில்தான் 1530-ல் லூத்தரனை பின்பற்றியவர்கள் தங்களுடைய நம்பிக்கைகளை ஒரு ஆவணத்தில் எழுதி அதை கத்தோலிக்க சர்ச்சிடம் சமர்ப்பித்தனர். அந்த ஆவணம் ஆக்ஸ்பர்க் கன்ஃபெஷன் என அழைக்கப்பட்டது. அதை ஒரு கத்தோலிக்கக் குழு பரிசீலனை செய்து அவர்களுடைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது. இது அவர்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தியது. இதிலிருந்தே இவ்விரு தொகுதியினரும் எதிரும் புதிருமாக ஆனார்கள்.
இந்த நடவடிக்கை சர்ச்சிலுள்ள பிரிவினைகளை சரிசெய்வதற்கான ஒரு முக்கிய படி என அந்த ஒப்பந்தம் சொன்னது. ஆனால் இதை உண்மையில் எல்லோரும் ஏற்றுக்கொண்டு ஒன்று சேர்ந்துவிடுவார்களா? இல்லை என்பதே பதில். புராட்டஸ்டன்ட் மதத்தை சேர்ந்த 250-க்கும் அதிகமான குருமார்கள் இதை எதிர்த்து ஒரு ஆவணம் தயாரித்தனர். அதில் அந்த கத்தோலிக்கர், சமரசமாகப்போகும் புராட்டஸ்டன்டினரை மதம் மாற்றிவிடுவார்கள் அல்லது அவர்களுடைய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளச் செய்வார்கள் என எச்சரித்தனர். அவர்கள் இவ்வாறு கோபப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பணம் கொடுத்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற கோட்பாடுதான் சுமார் 500 வருடங்களுக்கு முன்பு மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்க சர்ச்சிலிருந்து பிரிந்து செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அதே போன்ற ஒரு கருத்து சமீபத்தில் கத்தோலிக்க சர்ச்சால் வெளிப்படுத்தப்பட்டது. 2000-மாவது ஆண்டு ஒரு புனித ஆண்டு என்றும், அந்த ஆண்டில் விசேஷ மன்னிப்பு வழங்கப்படுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கத்தோலிக்க சர்ச் அறிவித்தது. இது அந்த புராட்டஸ்டன்டினரின் கோபத்தை கிளறிவிட்டது. அத்துடன், 1530-ல் புராட்டஸ்டன்டினர் கொடுத்த ஆவணத்தை மறுத்த கவுன்சில் ஆஃப் ட்ரென்ட் என்ற அந்த கத்தோலிக்க குழு இதுவரை அவர்களின் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இவர்களுக்கும் ஒற்றுமைக்கும் வெகுதூரம்.
இவர்களிடையே பிளவுகள் இவ்வளவு பெரியதாக இருப்பதால் வெறும் ஆவணங்களில் கையெழுத்திடுவது ஒற்றுமையை கொண்டுவந்துவிடாது. அத்துடன், விசுவாசத்தில் ஒற்றுமை என்பது கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் சார்ந்த நம்பிக்கைகளில் ஒன்றுபடுவதிலேயே இருக்கிறது; இது இல்லை என்றால் ஒற்றுமை எங்கிருந்து வரும்! (எபேசியர் 4:3-6) உண்மையான ஒற்றுமை, கடவுள் நம்மிடம் என்ன தேவைப்படுத்துகிறார் என்பதை கற்று அதன்படி நம் வாழ்க்கையில் நடப்பதன் மூலமாகவே கிடைக்கும்; ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலமாக அல்ல. இதையேதான் மீகா தீர்க்கதரிசியும் சொன்னார்: “சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.”—மீகா 4:5.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
© Ralph Orlowski/REUTERS/Archive Photos