‘தொப்புளுக்கு ஆரோக்கியம்’
பயம், துக்கம், பொறாமை, மனக்கசப்பு, பகைமை, குற்றவுணர்வு போன்ற உணர்ச்சி ரீதியிலான மன அழுத்தங்களால்தான் மனிதனுக்கு பேரளவான நோய்கள் உண்டாகின்றன என்பதாக நம்பப்படுகிறது. இதை பார்க்கையில், ‘யெகோவாவுக்கு பயப்படுகிற பயம்,’ ‘உங்கள் தொப்புளுக்கு ஆரோக்கியத்தையும், உங்கள் எலும்புகளுக்கு புத்துணர்ச்சியையும் தரும்’ என்ற பைபிளின் கூற்று எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது!—நீதிமொழிகள் 3:7, 8, NW.
எலும்புகளே உடலுக்கு ஊன்றுகோல்களாக விளங்கும் கட்டமைப்பு. எனவே, ஒருவரை—முக்கியமாக ஆழமான உணர்ச்சிகளால் பாதிக்கப்படுபவரை—அடையாளப்படுத்துவதற்கு ‘எலும்புகள்’ என்ற வார்த்தையை பைபிள் உருவகமாக பயன்படுத்துகிறது. ஆனால் யெகோவாவுக்கு பயப்படுவது எப்படி ‘உங்களுடைய தொப்புளுக்கு ஆரோக்கியமளிக்கிறது’?
இந்த இடத்தில் ‘தொப்புள்’ என்பது எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதன் சம்பந்தமாக பைபிள் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. “இது உடலின் மத்திப பகுதியில் இருப்பதால்” “தொப்புள்” என்பது முக்கிய உறுப்புகள் எல்லாவற்றையும் குறிக்கலாம் என ஒரு விளக்கவுரையாளர் கூறுகிறார். “தொப்புள்” என்ற வார்த்தை, எசேக்கியேல் 16:4-ல் (NW) பயன்படுத்தப்பட்டுள்ளபடி, ஒருவேளை “தொப்புள் கொடியை” குறிக்கலாம் என மற்றொரு அறிஞர் கருத்துத் தெரிவிக்கிறார். அப்படியானால், நாம் கடவுள் மீது முழுமையாக சார்ந்திருப்பதன் அவசியத்தை நீதிமொழிகள் 3:8 வலியுறுத்தலாம். அதாவது, வயிற்றிலுள்ள சிசு, தாய் தரும் ஊட்டச்சத்தின் மீது முழுக்க முழுக்க சார்ந்திருப்பது போல கடவுள் மீது முழுமையாக சார்ந்திருப்பதைக் குறிக்கலாம். இங்கு “தொப்புள்” என்பது உடலிலுள்ள தசைகளையும் நார்களையும் குறிக்கலாம் என்பது மற்றொரு கருத்து. இந்த வசனத்தின் சூழமைவின்படி, உடலின் இந்தப் பாகங்கள் ‘எலும்புகளிலிருந்து’—அதாவது, உறுதியான உடற்கூறுகளிலிருந்து—வேறுபடுத்திக் காட்டப்படுவதால் அப்படி இருக்கலாம்.
அது எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் ஒரு காரியம் நிச்சயம்: யெகோவாவுக்கு பயபக்தியை காட்டுவதே ஞானமான செயல். கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக வாழ்வது இப்பொழுதே நம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். அதைவிட முக்கியமாக, யெகோவாவின் தயவை நாம் பெறுவோம். அது புதிய உலகில் பூரண ஆரோக்கியத்துடன்—உடல் ரீதியிலாக இருந்தாலும்சரி உணர்ச்சி ரீதியிலாக இருந்தாலும்சரி—முடிவில்லா வாழ்க்கை வாழ வழிநடத்தும்.—ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:4; 22:2.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
Dr. G. Moscoso/SPL/Photo Researchers