பசும் பொன்னைவிட நீடித்து உழைப்பது
அழகுக்காகவும் நீடித்த உழைப்பிற்காகவும் மக்களால் தங்கம் பெரிதும் விரும்பப்படுகிறது. அது ஒருபோதும் கருக்காமல் தகதகவென ஜொலிப்பதே இதற்கு காரணம். தண்ணீராலோ ஆக்ஸிஜனாலோ கந்தகத்தாலோ அல்லது வேறெதுவாலும் அது பாதிக்கப்படாதது. தங்கத்தாலான கைவினைப் பொருட்கள் பல, புதையுண்ட பாண்டங்களிலும் வேறு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிறகும் இவற்றின் பளபளப்பு மங்காமல் அப்படியே இருக்கிறது.
ஆனால், நீடித்து உழைக்கிற, ‘அக்கினியினாலே சோதிக்கப்படுகிறபோதிலும் அழிந்துபோகிற பொன்னைப் பார்க்கிலும் அதிக விலையேறப் பெற்ற’ ஒன்றைப் பற்றி பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 1:7) நெருப்பினாலும் மற்ற முறைகளாலும் ‘சோதிக்கப்பட்ட’ அல்லது புடமிடப்பட்ட தங்கம் 99.9 சதவீதம் சுத்தமாக இருக்கும். என்றாலும், புடமிடப்பட்ட தங்கமும் அழிந்துபோகிறது, அல்லது இராஜ திராவகத்தில்—மூன்று பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும் ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும் சேர்ந்த கலவையில்—கரைந்துபோகிறது. ஆகவே, “அழிந்துபோகிற பொன்” என்று பைபிள் குறிப்பிடுவது அறிவியல்பூர்வமாக சரியே.
ஆனால் உண்மையான கிறிஸ்தவ விசுவாசமோ ‘ஆன்மாவை காத்துக்கொள்கிறது.’ (எபிரெயர் 10:39, தமிழ் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு) பலமான விசுவாசமுடைய ஒருவரை மனிதர் கொலை செய்துவிடலாம், இயேசுவின் விஷயத்தில் இதுவே சம்பவித்தது. ஆனால் உண்மையான விசுவாசமுடையோருக்கு பின்வரும் நம்பிக்கை அளிக்கப்படுகிறது: “நீ மரணபரியந்தம் உண்மையாயிரு. அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.” (வெளிப்படுத்துதல் 2:10) விசுவாசத்தோடு மரிப்போர் கடவுளுடைய நினைவில் நிலைத்திருக்கிறார்கள், அவர்களை அவர் உயிர்த்தெழுப்புவார். (யோவான் 5:28, 29) எவ்வளவுதான் பொன் இருந்தாலும் இதை சாதிக்க முடியாது. இந்த விஷயத்தில், தங்கத்தைவிட விசுவாசம் உண்மையிலேயே விலையேறப் பெற்றது. என்றபோதிலும், விசுவாசம் இப்பேர்ப்பட்ட பெரும் மதிப்பை பெறுவதற்கு, அதுவும் சோதிக்கப்பட வேண்டும். சொல்லப்போனால், பேதுரு கூறிய ‘சோதிக்கப்பட்ட விசுவாசமே’ தங்கத்தைவிட விலையேறப் பெற்றது. மெய் தேவனாகிய யெகோவா மீதும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து மீதும் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்வதற்கும் அதை காத்துக்கொள்வதற்கும் உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் ஆவலோடு இருக்கிறார்கள். இயேசு கூறுகிறபடி, இதுவே “நித்திய ஜீவன்.”—யோவான் 17:3.