பிசாசு இருக்கிறானா?
“‘கடவுள்’ என்ற ஒருவரை இன்னும் சில ஜனங்கள் நிஜமானவராகவும் சக்திவாய்ந்தவராகவும் நம்புவது போலவே பிசாசு, பெயெல்செபூல் அல்லது தீமைகளுக்கெல்லாம் அரசனாகிய சாத்தான் என்ற ஒருவனையும் நிஜமானவன், சக்திவாய்ந்தவன் என கிறிஸ்தவ சர்ச் ஒருகாலத்தில் நம்பி வந்தது; தங்களை சுற்றிலும் நிலவிய கொடுமைகளை வர்ணிப்பதற்கு யூதர்களும் பூர்வ கிறிஸ்தவர்களும் கண்டுபிடித்த ஒன்றுதான் பாதி மனித உருவமும் பாதி மிருக உருவமும் கொண்ட பிசாசு. உண்மையில் ஆதாரமே இல்லாத ஒரு கற்பனை தோற்றம்தான் பிசாசு என்பதை பிற்பாடு கிறிஸ்தவர்கள் உணர ஆரம்பித்து அவனை இரகசியமாக தள்ளிவிட்டார்கள்.”—‘எல்லாம் கற்பனையே—கடவுளுக்கு பிரியாவிடை’ (ஆங்கிலம்), லூடோவிக் கென்னடி என்பவரால் எழுதப்பட்டது.
எழுத்தாளரும் ஒலி/ஒளி பரப்பாளருமாகிய லூடோவிக் கென்னடி குறிப்பிடுகிறபடியே, பிசாசு நிஜமாகவே இருக்கிறான் என்பதைக் குறித்து கிறிஸ்தவமண்டலத்தில் பல நூற்றாண்டுகளாக யாரும் சந்தேகிக்கவில்லை. மாறாக, “சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின் வல்லமை [சிலசமயங்களில் கிறிஸ்தவர்களுடைய] மனதை ஆக்கிரமித்திருந்தது” என பேராசிரியர் நார்மன் கோன் கூறுகிறார். (ஐரோப்பாவின் உட்பிசாசுகள் [ஆங்கிலம்]) படிப்பறிவற்ற பாமர மக்களுடைய மனதை மட்டுமே அது ஆக்கிரமிக்கவில்லை. உதாரணமாக, தீமையான வெறுப்பூட்டும் சடங்குகளுக்கு தலைமைதாங்க ஒரு மிருகத்தின் வடிவில் பிசாசு உருவெடுத்து வந்தான் என்ற நம்பிக்கை “படிப்பறிவற்ற பெரும்பான்மையோரின் மரபுக் கதைகளிலிருந்து உருவாகவில்லை, ஆனால் உயர் வகுப்பைச் சேர்ந்த அறிவுஜீவிகளின் உலகளாவிய கருத்திலிருந்தே உருவெடுத்தது” என பேராசிரியர் கோன் கூறுகிறார். படித்த குருவர்க்கத்தாரை உள்ளிட்ட இந்த ‘உயர்தர அறிவுஜீவிகளே’ 15-ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு வரை ஐரோப்பா எங்கும் பில்லிசூனியக்காரரை வேட்டையாடியதற்கு பொறுப்புள்ளவர்கள்; அந்தச் சமயத்தில் சர்ச் மற்றும் சிவில் அதிகாரிகள், சூனியக்காரர் என குற்றஞ்சாட்டப்பட்ட சுமார் 50,000 பேரை சித்திரவதை செய்து கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.
பிசாசை பற்றிய மூடநம்பிக்கைகள் என அவர்கள் கருதியதை அநேகர் ஒதுக்கித் தள்ளியிருப்பதில் ஆச்சரியமில்லை. பிசாசு என்பது “வௌவால் இறக்கைகளும் கொம்புகளும் பிளவுபட்ட பாதங்களும் நீண்ட வாலும் கவைபோன்ற நாக்கும் இதுபோன்ற பிற அம்சங்களும் கொண்ட” பயங்கர அரக்கன் என்ற மக்களுடைய நம்பிக்கையை 1726-லேயே டானியல் டிஃபோ ஏளனம் செய்தார். இப்படிப்பட்ட எண்ணங்கள் “அறிவற்ற கற்பனைகள்” என்றும், “பிசாசு என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாலும்” “பிசாசு என்ற உருவத்தை கண்டுபிடித்தவர்களாலும்” புனையப்பட்டவை என்றும், இவர்கள் “தாங்கள் கண்டுபிடித்த பிசாசைக்கொண்டு, அறியாமையில் கிடந்த உலகை ஏமாற்றினார்கள்” என்றும் அவர் கூறினார்.
உங்களுடைய கருத்தும் இதுதானா? “உண்மையில் தன் பாவத்திற்கு பழிபோடுவதற்கான மனிதனுடைய கண்டுபிடிப்பே இந்தப் பிசாசு” என்பதை நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்களா? இந்தக் கருத்து சான்டர்வன் பிக்டோரியல் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் த பைபிளில் காணப்படுகிறது. கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்ளும் பலரும் இப்படித்தான் நினைக்கிறார்கள். மொத்தத்தில், கிறிஸ்தவமண்டல இறையியலாளர்கள், “பிசாசு, பேய்கள் ஆகியவற்றை மூடநம்பிக்கையின் எச்சங்கள் என ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள்” என்று ஜெஃப்ரி பர்ட்டன் ரஸல் கூறுகிறார்.
ஆனால் சிலருக்கோ பிசாசு என்பவன் மிகவும் நிஜமானவன். மனித சரித்திரத்தில் மீண்டும் மீண்டும் பரவலாக நிகழ்ந்துவரும் கெட்ட செயல்களுக்குப் பின்னால் ஏதோ ஒருவித மீமானிட சக்தி, தீய சக்தி இருக்க வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். “நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பிசாசு மீது நம்பிக்கை மீண்டும் வேகமாக வளர்ந்துவருவதற்கு” ஒரு காரணம், “இந்த 20-ம் நூற்றாண்டில் சம்பவித்திருக்கும் பயங்கரங்கள்” என ரஸல் கூறுகிறார். “படிப்பறிவற்ற மூதாதையர்களின்” மூடநம்பிக்கைகளையும் பயத்தையும் குறித்து “கேலி செய்த” கல்விகற்ற நவீனகால மக்களே “மறுபடியும் இயற்கைக்கு அப்பாற்பட்ட தீய அம்சத்தால் கவர்ந்திழுக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று நூலாசிரியர் டான் லூயிஸ் கூறுகிறார்.—காலங்காலமாக மதத்தின் மூடநம்பிக்கை (ஆங்கிலம்).
அப்படியானால், இந்த விஷயத்தில் உண்மை எது? பிசாசு என்பது முட்டாள்தனமான மூடநம்பிக்கையா? அல்லது இந்த 21-ம் நூற்றாண்டிலும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒருவனா?
[பக்கம் 4-ன் படம்]
இங்கே காண்பிக்கப்பட்டுள்ள குஸ்டாவ் டாரேயின் செதுக்கு ஓவியத்தைப் போல், பழங்கால மூடநம்பிக்கைகள் பிசாசை பாதி மனிதனாகவும் பாதி மிருகமாகவும் சித்தரித்தன
[படத்திற்கான நன்றி]
The Judecca—Lucifer/The Doré Illustrations For Dante’s Divine Comedy/Dover Publications Inc.