நன்றியுள்ளவர்களாய் இருங்கள், சந்தோஷத்தை பெறுங்கள்
“நன்றியுள்ளவர்களாய் இருப்பது, மனிதனுக்குள் இருக்கும் ஓர் அடிப்படை உணர்வு” என கனடாவைச் சேர்ந்த செய்தித்தாள் கால்கரி ஹெரால்ட் கூறியது. ஒன்பது வயது தொடக்கப் பள்ளி மாணவர்களிடம், அவர்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்க விரும்பும் எல்லாவற்றையும் பட்டியலிடும்படி அவர்களுடைய ஆசிரியர் கூறினார்; அந்த மாணவர்களில் சிலர் கூறியதையே ஹெரால்ட் மேற்கோள் காட்டியது. ஒரு சிறுவன், ‘தன் குடும்பத்தினர் தன்னை கவனித்துக் கொண்டதற்காக’ அவர்களுக்கு நன்றியுள்ளவனாய் இருப்பதாக கூறினான். ஒரு சிறுமியும்கூட தன் குடும்பத்திற்கு நன்றியுள்ளவளாய் இருப்பதை இவ்வாறு கூறினாள்: “அவர்கள் என்னை பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்து, பேணிப் பராமரித்து, அன்பு காட்டி, ஊட்டி வளர்க்கிறார்கள். என் பெற்றோர் இல்லையெனில் நான் பிறந்திருக்கவே மாட்டேன்.”
நன்றிகெட்டத்தனமோ நிலையான அதிருப்திக்கே வழிவகுக்கிறது. “நாம் கடவுளையும், ஒருவரையொருவரும் சார்ந்து வாழும்படியே படைக்கப்பட்டிருக்கிறோம்” என தத்துவ ஞானியும் இறையியல் வல்லுனருமான ஜே. ஐ. பாக்கர் கூறுகிறார். இது பல நூற்றாண்டுகளுக்கு முன் பைபிள் கூறிய பின்வரும் ஞானமான ஆலோசனையை நினைவிற்கு கொண்டு வருகிறது: “நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.” (கொலோசெயர் 3:15) நன்றி தெரிவிப்பதும் மற்றவர்களிடம் இருதயப்பூர்வமான நன்றியுணர்வை காண்பிப்பதும் அர்த்தமுள்ள உறவுகளை வளர்க்க உதவுகின்றன.
மேலுமாக, நாம் ஒருவருக்கொருவர் நன்றியுணர்வை காண்பித்து, மதித்து நடக்கையில் யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதையும் காண்பிக்கிறோம். அவரும் அதை கவனிக்கிறார். “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” என பைபிள் கூறுகிறது. (2 நாளாகமம் 16:9) கடவுளுடைய நாமத்திற்காக மனிதர்கள் காண்பிக்கும் அன்பை அவர் நினைவில் வைத்து, பாராட்டுவதாக உறுதியளிக்கிறார். (எபிரெயர் 6:10) ஆம், நன்றியுள்ளவர்களாய் இருக்க நமக்கு நல்ல காரணங்கள் உள்ளன. ஏனெனில், இந்த தெய்வீக பண்பை தினந்தோறும் காண்பிக்கையில் அது யெகோவாவை பிரியப்படுத்துகிறது, நமக்கும் சந்தோஷத்தை தருகிறது. நீதிமொழிகள் 15:13 கூறுவதற்கு இசைவாகவே அது உள்ளது: “மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்.”