உங்களுக்குத் தேவை பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி
அன்டார்க்டிகாவுக்கு பறந்து செல்லும் நியூஜீலாந்து விமானம் 901-ல் அமர்ந்திருந்த பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடைய நெஞ்சில் நீங்காத இடம்பிடிக்கப்போகும் நாள் அது. கேமராக்கள் ரெடியாக இருந்தன, அந்த டிஸி-10 விமானம் வெண்ணிற கண்டத்தை நெருங்கியபோது அனைவரும் சந்தோஷ வானில் மிதந்துகொண்டிருந்தார்கள். அன்டார்க்டிகாவின் அற்புத அழகை கண்கள் காண்பதற்கு அந்த விமானம் தாழ்வாக பறந்து சென்றுகொண்டிருந்தது.
அந்த கேப்டன்—15 வருடங்களில் 11,000 மணிநேரங்கள் பறந்தவர்—மேலே கிளம்புவதற்கு முன்பு தன்னுடைய விமான கம்ப்யூட்டரில் பறக்கும் திட்டத்தை கவனமாக பதிவு செய்திருந்தார். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த எண்கள்—அச்சுத் தூரங்கள்—தவறானது என்பதை அவர் அறியவில்லை. 2,000 அடி உயரத்திற்கு சற்று தாழ மேகத்தின் ஸ்பரிசத்தில் டிஸி-10 பறந்து கொண்டிருந்தபோது எரிபஸ் மலையின் கீழ் சரிவுகளில் டமாலென மோதியது. விமானத்தில் இருந்த 257 பேரும் காலி.
ஆகாயத்தில் பறக்க விமானங்களுக்கு இன்று கம்ப்யூட்டர்கள் வழிகாட்டியாக இருப்பதுபோல, வாழ்க்கை பாதையில் பயணிக்க வழிகாட்டியாக மனிதர்களுக்கு மனசாட்சி கொடுக்கப்பட்டுள்ளது. விமானம் 901-க்கு ஏற்பட்ட கோர விபத்து, நம்முடைய மனசாட்சி சம்பந்தமாக வலிமைமிக்க பாடங்களை கற்பிக்கலாம். உதாரணமாக, பாதுகாப்பான பயணம் சரியாக இயங்கும் வழிகாட்டி அமைப்பை (navigational system) சார்ந்திருப்பது போலவே, நம்முடைய ஆன்மீக, ஒழுக்க, சரீர ஆரோக்கியமும்கூட சரியான ஒழுக்கநெறி வழிகாட்டியால் வழிநடத்தப்படும் மனசாட்சியை சார்ந்திருக்கிறது.
ஆனால் வருத்தகரமான விஷயம் என்னவென்றால், இன்றைய உலகில் இந்த வழிகாட்டிகள் வேகமாக மறைந்துவருகின்றன அல்லது அசட்டை செய்யப்படுகின்றன. “ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒரு சராசரி பள்ளி மாணவனுக்கு வாசிக்கவோ எழுதவோ தெரிவதில்லை, வரைபடத்தில் பிரான்ஸ் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கவும் திணறுகிறான் என்பதைப் பற்றியெல்லாம் இன்றைக்கு நாம் நிறைய கேள்விப்படுகிறோம்” என அமெரிக்க கல்வியாளர் ஒருவர் கூறினார். “எது சரி எது தவறு என்பதை கண்டுபிடிப்பதிலும் அந்த மாணவனுக்கு கஷ்டம். எழுதப் படிக்கவோ கணக்கு போடவோ தெரியாமல் இருப்பது மட்டுமல்ல, ஒழுக்கநெறி விஷயங்களிலும் குழப்பமாகத்தான் இருக்கிறான்.” அவர் மேலும் கூறினார்: “ஒழுக்க ரீதியில் தெளிவற்று இருக்கும் ஒரு சூழலில் இன்றைய இளைஞர்கள் வாழ்கிறார்கள். ‘எது சரி எது தவறு’ என எதாவது இருக்கிறதா என்று அவர்களில் ஒருவரை கேட்டுப் பாருங்கள், உடனே குழப்பத்தோடும் நடுக்கத்தோடும் வாயடைத்துப்போயும் இருக்கும் இளைஞரைத்தான் நீங்கள் காண்பீர்கள். . . . கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்த பிறகும் இந்தக் குழப்பம் நீங்குவதற்குப் பதிலாக இன்னும் மோசமாகத்தான் ஆகிறது.”
இந்தக் குழப்பத்திற்கு ஒரு காரணம் ஒழுக்கநெறி சார்பியல் கொள்கை (moral relativism), அதாவது தனிப்பட்ட அல்லது கலாச்சார விருப்பங்களுக்கு ஏற்ப தராதரங்களும் மாறுகின்றன என்ற பரவலான கருத்து. விமானிகளுக்கு அதிகாரப்பூர்வமான வழிகாட்டி இல்லையென்றால், அல்லது எதையும் நிதானிக்க முடியாதபடி சமிக்கைகள் வந்துகொண்டிருந்தால் அல்லது அவை அடியோடு மறைந்துவிட்டால் என்ன ஏற்படும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! எரிபஸ் மலையில் ஏற்பட்டது போன்ற விபரீதங்கள் சகஜமாகிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. அதைப் போலவே, நிர்ணயிக்கப்பட்ட ஒழுக்க தராதரங்களைப் பின்பற்ற தவறியதால், பயங்கரமான துயரத்தையும் மரணத்தையும் இந்த உலகம் அறுவடை செய்கிறது. கற்பை காத்துக்கொள்ளாததால் குடும்பங்கள் பிளவுறுகின்றன, கோடிக்கணக்கானோர் எய்ட்ஸ் வியாதியால் அல்லது வேறுசில பால்வினை நோய்களால் அவதியுறுகின்றனர்.
ஒழுக்கநெறி சார்பியல் கொள்கை ஞானமானதாக தோன்றலாம். ஆனால் நிஜத்தில் பார்த்தால், அதை பின்பற்றுகிறவர்கள் “வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத” பூர்வ நினிவே மக்களைப் போலவே இருக்கிறார்கள். ஒழுக்கநெறி சார்பியல் கொள்கையை கடைப்பிடிப்பவர்கள், “தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும்” சொன்ன விசுவாச துரோக இஸ்ரவேலரைப் போல் இருக்கிறார்கள்.—யோனா 4:11; ஏசாயா 5:20.
ஆகவே, நம்முடைய மனசாட்சியை பாதுகாப்பான ஒரு வழிகாட்டியாக பயிற்றுவிப்பதற்கு தெளிவான, குழப்பமற்ற சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் நாம் எங்கே போவது? இந்தத் தேவையை பைபிள் நிறைவாக பூர்த்தி செய்கிறது என்பதை லட்சக்கணக்கானோர் கண்டிருக்கின்றனர். ஒழுக்க நெறிமுறை முதல் வேலை நெறிமுறை வரை, பிள்ளைகளைப் பயிற்றுவிப்பது முதல் கடவுளை வணங்குவது வரை முக்கியமான எதையும் பைபிள் விட்டுவிடுவதில்லை. (2 தீமோத்தேயு 3:16, 17) நூற்றாண்டுகளாக இது முற்றிலும் நம்பகமானதாக நிரூபித்திருக்கிறது. பைபிளின் ஒழுக்க தராதரங்கள் மிக உயர்ந்த அதிகாரத்தால், அதாவது நம்முடைய படைப்பாளரால் ஏற்படுத்தப்பட்டிருப்பதால், அவை எல்லா மனிதருக்கும் பொருந்தக்கூடியவை. ஆகவே, ஒழுக்கநெறியில் நிச்சயமற்றவர்களாய் வாழ வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.
ஆனால் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு இன்று உங்களுடைய மனசாட்சி அதிக தாக்குதலின்கீழ் இருக்கிறது. அது எப்படி சாத்தியம்? உங்களுடைய மனசாட்சியை நீங்கள் எப்படி காத்துக்கொள்ளலாம்? முதலாவதாக, இந்தத் தாக்குதலுக்கு மூலகாரணமாக இருப்பவனையும் அவனுடைய சூழ்ச்சி முறைகளையும் தெரிந்துகொள்வதே ஞானமான வழி. இவை அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.