இரட்சிப்புக்கு ஏதாவது நம்பிக்கை உண்டா?
மனித வரலாற்றிலேயே 20-ம் நூற்றாண்டில்தான் இரத்த வெள்ளம் கரைபுரண்டு ஓடியிருக்கிறது. குற்றச்செயல்கள், போர்கள், இன சண்டைகள், போதைப்பொருள் துஷ்பிரயோகம், அநீதி, அக்கிரமம் ஆகியவை கடந்த சில பத்தாண்டுகளாக தலைவிரித்தாடுகின்றன. நோய், முதுமை, மரணம் தந்த துன்பத்தையும் துயரத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இன்று உலகில் காணப்படும் எண்ணற்ற பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற யாருக்குத்தான் ஏக்கமில்லை? எதிர்காலத்தில், இரட்சிப்புக்கு ஏதாவது நம்பிக்கை உண்டா?
சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அப்போஸ்தலன் யோவானுக்கு அருளப்பட்ட தரிசனத்தை சற்று எண்ணிப் பாருங்கள். அவர் இவ்வாறு எழுதினார்: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:3, 4) இதே போன்று ஏசாயா தீர்க்கதரிசியும் முன்னுரைத்தார்: “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய [“யெகோவா,” NW] தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.”—ஏசாயா 25:8.
கடவுள் தந்த இந்த வாக்குறுதிகள் நிஜமாகும்போது நிலைமைகள் எப்படியிருக்கும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்! கண்ணீருக்கும் கம்பலைக்கும் காரணமான எல்லா காரணிகளிலிருந்தும், ஒடுக்குதலிலிருந்தும், வன்முறையிலிருந்தும் மனிதகுலம் விடுவிக்கப்படும் அல்லது காப்பாற்றப்படும். ஏன், வியாதியோ வயோதிபமோ மரணமோ நம்மை தொல்லைபடுத்தாதே! பூரண நிலைமைகள் கொண்ட பூமியில் அளவற்ற ஆயுசுடன் வாழும் வாழ்க்கையை கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. (லூக்கா 23:43; யோவான் 17:3) அதை விருப்பமுள்ள அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் [கடவுள்] சித்தமுள்ளவராயிருக்கிறார்.”—1 தீமோத்தேயு 2:3, 4.
ஆனால் கடவுள் தரும் வாக்குறுதிகளிலிருந்து நன்மை பெற நம் இரட்சிப்பில் இயேசு கிறிஸ்து வகிக்கும் பங்கை புரிந்துகொண்டு அவரில் விசுவாசத்தை காட்ட வேண்டும். இயேசுவே இவ்வாறு சொன்னார்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) இந்த விஷயத்தில் இயேசு கிறிஸ்து வகிக்கும் முக்கிய பங்கை குறிப்பிட்டு அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு கூறினார்: “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” (அப்போஸ்தலர் 4:12) ஒரு சமயம் உள்ளார்ந்த மனதோடு விசாரித்த ஒரு மனிதனிடம், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று சொல்லி அப்போஸ்தலன் பவுலும் அவருடைய கூட்டாளி சீலாவும் உந்துவித்தார்கள்.—அப்போஸ்தலர் 16:30, 31.
ஆம், இயேசு கிறிஸ்து “ஜீவாதிபதி,” அவர் மூலமாக மாத்திரமே இரட்சிக்கப்படுவது சாத்தியம். (அப்போஸ்தலர் 3:15) ஆனால் எப்படி ஒரேவொரு மனிதன் நம்மை இரட்சிப்பதில் அந்தளவு முக்கிய பங்கு வகிக்க முடியும்? இந்த விஷயத்தில் அவருடைய பங்கைப் பற்றி நாம் தெளிவாக புரிந்துகொண்டால் இரட்சிப்புக்கான நம்முடைய நம்பிக்கை நங்கூரமாகும்.
[பக்கம் 2-ன் படங்களுக்கான நன்றி]
பக்கம் 3: போர் விமானங்கள்: USAF photo; பட்டினியால் வாடும் பிள்ளைகள்: UNITED NATIONS/J. FRAND; எரியும் போர்க் கப்பல்: U.S. Navy photo▸